Friday, April 09, 2004

ருக்மணி தேவி அருண்டேல்


கலைத் துறையில் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பெண்மணி


நூற்றாண்டு விழா (1904 _ 2004)
பரத நாட்டியத்திற்கு இன்று நல்ல கௌரவம் கிடைக்கிறதென்றால், அது அவருடைய புண்ணியம்தான் என்று நாட்டில் பேசுவதுண்டு. பரத நாட்டியத்திற்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தவர் அவர். கலைத் துறையில் 20ஆம் நூற்றாண்டில் சிறந்த பெண்மணியாக கௌரவம் பெற்றவர் அவர். அவர் வேறு யாருமல்ல! ருக்மணி அருண்டேல்!

கால«க்ஷத்ரா பெயரைக் கேட்டவுடனே நினைவிற்கு வரும் பெயர் ருக்மணி அருண்டேல். கலா«க்ஷத்ராவுக்கு ஒரு உருவத்தைக் கொடுத்தவர். ருக்மணி அருண்டேலையும், கலா«க்ஷத்ராவையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கமுடியாதுதான். கலைத்துறையில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் புரட்சிகரமான பாதையில் நடந்த புரட்சிப்பெண் ருக்மணி அருண்டேல். இந்த வருடம் பிப்ரவரி 29ஆம் தேதியிலிருந்து ருக்மணி அருண்டேல் நூற்றாண்டு விழா (1904_2004) நடைபெறுகிறது. அதற்காக இந்த வருடம் முழுவதும் நாட்டில் பல்வேறு நகரங்களில் நாட்டிய, இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவ்விழா 2005 பிப்ரவரியில் நிறைவுபெறும்.

பரத நாட்டியக் கலைஞர்களுக்கு நாட்டில் மிகப்பெரிய கௌரவத்தைப் பெற்றுத் தந்தவர் ருக்மணி அருண்டேல். அவர் பரதக் கலையை தன்னுடைய 30_வது வயதில் கற்றுக் கொண்டாரென்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். கலைக்கு வயது ஒரு வரம்பில்லை என்பது ருக்மணி அரண்டேலின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். நாட்டியம் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் அவருடைய கணவர் ஜார்ஜ் சிட்னி அருண்டேலின் பங்கும் எவ்வளவோ இருக்கிறது.

சென்னை தியோசாபிகல் சொசைட்டி முதல்வர் சிட்னி அருண்டேல், ருக்மணி அருண்டேலை விட வயதில் மூத்தவர். வெளிநாட்டுக்காரர் (பிரிட்டன்).

அச்சாரமுள்ள பிராமண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண், அக்காலத்தில் ஒரு வெளிநாட்டுக்காரரை மணப்பதென்பது சாதாரண விஷயமல்ல. அக்காலத்தில் “தேவதாசி நாட்டியம்” என்று கருதப்பட்ட நாட்டியக் கலையை கற்றுக் கொள்வதில் அவர் அதே தைரியத்தைக் காண்பித்தார். இந்தியாவில் மட்டுமன்றி, உலக அளவில் பரதக் கலைக்கு ஒரு கௌரவத்தைப் பெற்றுத் தந்தார்.

ருக்மணி அருண்டேல் பரதக் கலையைக் கற்றுக் கொள்வதற்குக் காரணம் ரஷ்யன் பாலே டான்ஸர் அன்னா பாவ்லோவா(1882_1931). ருக்மணி அருண்டேல் அவரிடம் பாலே நாட்டியத்தைக் கற்றுக் கொண்டிருக்கும்போது, உன் தோற்றம் பரதக் கலைக்கு மிக எடுப்பாக இருக்குமென்று ஊக்குவித்தார். அவருடைய யோசனை ருக்மணி அருண்டேலின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘கலா«க்ஷத்ரா’ எனும் ஒரு கலைக்கூடம் உருவாவதற்கு மூலகாரணமாய் இருந்தது.

ருக்மணி தேவியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி மிகப்பெரிய வேத பண்டிதர். தாய் சேஷம்மாள் சங்கீதக் கலைக்கு ஒரு மையமான திருவையாறைச் சேர்ந்தவர். தந்தை தியோசாபிகல் சொசைட்டியுடன் தொடர்புள்ளவர். ஆகையால் ருக்மணிதேவிக்கு சிறு வயதிலிருந்தே அந்த அமைப்புடன் ஒரு தொடர்பு உண்டு. 16 வயதில் சிட்னி அரண்டேலை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ருக்மணி பல நாடுகளுக்குச் சென்று வந்தார். அப்படித்தான் அவருக்கு ரஷ்யன் பாலே டான்ஸர் அன்னா பாவ்லோவாவுடன் நட்பு தொடங்கியது.

1933_ல் மியூஸிக் அகாடமியில் பாண்டநல்லுர் சகோதரிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியை ருக்மணி பார்க்க நேர்ந்தது. அந்த பரத நாட்டிய நிகழ்ச்சி ருக்மணி தேவிக்கு மிகவும் பிடித்தது. உடனே அந்தக் கலையை பாண்டநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார்.

ஆனால், முதலில் மீனாட்சிசுந்தரம் அவருக்குக் கற்றுத்தர சம்மதிக்கவில்லை. பிறகு எவ்வளவோ வற்புறுத்தல்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார்.

ருக்மணி அருண்டேல் தன்னுடைய அரங்கேற்றத்தை தியோசாபிகல் சொசைட்டியில் செய்தார். அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. அவர் உருவாக்கிய வால்மீகி ராமாயண நாட்டிய நிகழ்ச்சி பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.

அவர் தன்னுடைய 82_வது வயதில் 1986 பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார். அவர் இறப்பதற்கு முன் ஒரு நிருபரிடம் வேதனையுடன் கூறியதாவது, “நாட்டில் மக்களுடைய யோசனை மாறி வருகிறது. எல்லோருக்கும் பணம்தான் முக்கியம் ஆகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். கலைஞர்கள் தங்களுடைய மனதையும், ஆன்மாவையும் கலைக்குத்தான் அர்ப்பணம் செய்யவேண்டும்” என்றார்.

கடைசி நிமிடங்களிலும் கலையைப் பற்றி நினைத்த அவரின் கலை உணர்வுகள் பற்றி வேறு ஏதும் சொல்லவா வேண்டும்?

-அருண்-
nantri.kumutham
Photos - Kumutham

Tuesday, April 06, 2004

மேரி க்யூரி!


இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரிய பெண்மணி

நமக்கு ஏற்படும் பல நோய்களைக் கண்டறிந்து அவற்றைக் குணப்படுத்துவதற்கு உதவும் ‘ரேடியம்’ என்ற மாபெரும் விஷயத்தையே கண்டுபிடித்தவர் ஒரு பெண்!

பெயர் மேரி க்யூரி!

வாழ்வில் ஒரே ஒரு முறையாவது உலகின் சிறந்த விருதான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டுமென்று உலகம் முழுக்க பலர் வெறித்தனமாக ஏங்கிக் கொண்டிருக்கும் போது, தன் வாழ்வில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரிய பெண்மணி இவர். ஆனால் இந்தப் பெண் விஞ்ஞானி இந்தச் சாதனையை அடைவதற்காக தன் உடல் நலன், குழந்தைகள், காதல் என்று எத்தனை விஷயங்களை இழக்க வேண்டி வந்தது என்பதெல்லாம் ஒரு உருக்கமான சோகக் கதை!

போலந்து நாட்டின் வார்ஸா நகரில் வசித்த ஒரு ஆசிரியர் குடும்பம் அது...

மேரியின் அப்பா சீர்திருத்தப் பள்ளி உட்பட பல பள்ளிகளை நடத்தி வந்தார். குழந்தைகள் அத்தனை பேருக்கும் அவர் ஒரு நடமாடும் கலைக் களஞ்சியம். மேரியின் அம்மா பெண்கள் பள்ளி ஒன்றில் தலைமையாசிரியர்.

இவர்களுக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில், மேரிதான் கடைக்குட்டி.

மேரிக்கு நான்கு வயதானபோது, அவளது சித்தப்பா அந்தக் குடும்பத்தோடு வந்து தங்க விரும்புவதாக ஒரு கடிதம் போட்டார். அந்தக் கடிதம் தான் மேரியின் இந்தச் சாதனைக்கே ஒரு ஆரம்பமாக அமைந்தது.

‘தாராளமாக வந்து தங்குங்கள்’ என்று அந்த சித்தப்பாவுக்கு பதில் கடிதம் எழுதியபோது மேரியின் குடும்பத்துக்கு அவரைப் பற்றிய ஒரு முக்கிய விஷயம் தெரியாது. கடுமையான காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த சித்தப்பா! இப்போது எய்ட்ஸ் மற்றும் சார்ஸ் போன்ற நோய்களைக் கண்டு நாம் பயன்படுவது போலவே அந்தக் காலத்தில் காசநோய்க்கு பயப்பட்டார்கள். பயந்தது போலவே மேரியின் அம்மாவுக்கும் அவரிடமிருந்து காசநோய் தொற்றிக் கொண்டது.

இந்த நோயின் காரணத்தால் போலந்தில் இருந்து அவ்வபோது தெற்கு பிரான்ஸில் இருந்த வெப்பப் பகுதிகளுக்கு சென்று நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டியநிலை மேரியின் அம்மாவுக்கு. சொந்த வீட்டிலேயே தனி அறையில் வாழவேண்டிய கட்டாயம் வேறு. ஒரே கூரையின்கீழ் இருந்தும் அம்மாவை பிரிந்து வாழ்ந்ததுதான் மேரி சந்தித்த முதல் சோகம்.

அதோடு தீரவில்லை... மேரிக்கு ஒன்பது வயதானபோது அவரது தாய் இறந்துவிட்டார். மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அப்போதுதான் மேரியின் மனதில் ஒரு உறுதி ஏற்பட்டது.

மேரி மட்டுமல்ல... அவரது தாய்நாடான போலந்தும் ஒரு பெரிய சோதனையை அப்போது சந்தித்துக் கொண்டிருந்தது. தாய் நாட்டை கைப்பற்றிய ரஷ்யாவிற்கு எதிரான புரட்சியில் மேரியின் தாத்தா, அப்பா எனக் குடும்பமே பங்கேற்க, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டது.

நல்ல வேளையாக வாத்தியார் வீட்டுப் பிள்ளைகள் என்பதாலேயே மேரியோடு பிறந்தவர்கள் அனைவருமே, அவரவர் வகுப்புகளில் முதல் ரேங்க் எடுத்தார்கள். ஆனால் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், பள்ளி முடித்துவிட்டுக் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெண்களுக்கு எந்த வசதியும் அந்த ஊரில் இல்லை. அதிகபட்சம் பள்ளி இறுதி வகுப்பு முடித்துவிட்டு உள்ளூரில் ஒரு டீச்சராக வேலை செய்யலாம் என்கிற நிலைதான் பெண்களுக்கு! மேரிக்கு எப்படியும் மேற்கொண்டு படிக்க வேண்டும்... மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் ஏதாவது, புதிதாக கண்டு பிடித்து, மனித குலத்துக்கு உதவவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. தவிர, பள்ளி இறுதிப் படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றிருந்தார் மேரி. முடிவாக மேரியும் அவளது அக்கா ப்ரோனியாவும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். அதன்படி முதலில் மேரி ஒரு வீட்டில் வேலைக்குச் சேரவேண்டும். இந்த வேலையில் கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு அவள் அக்கா, பாரீஸ் நகரில் தங்கி மருத்துவம் படிப்பார். அக்கா மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தவுடனே, தங்கை மேரியின் பட்டப்படிப்புக்கு அவர் பண உதவி செய்ய வேண்டும்!

இந்தத் திட்டத்தின்படி ஒரு வீட்டில் வேலை செய்து அந்தப் பணத்தை தன் அக்காவுக்கு அனுப்பி வந்தார் மேரி. கடமையோடு காதலும் வந்தது. அந்த வீட்டின் முதலாளியின் மகனும் மேரியும் ஒருவரையருவர் நேசிக்கத் தொடங்கினார்கள். ஆனால் இந்தக் காதல், கல்யாணத்தில் முடியவில்லை. காரணம் மேரி ஒரு பணக்காரி இல்லையே!

தனது முதல் காதல் இப்படி பொடிப்பொடியானதும் மேரி மனதளவில் உடைந்துவிட்டாள். இனி படிப்புதான் தனக்கு எல்லாமே என்று முடிவெடுத்தாள். சொன்ன வாக்குப்படியே அக்கா, தன் படிப்பு முடித்தவுடனே மேரி படிக்க உதவினாள். மேரியும் பாரிஸ் நகருக்குச் சென்று ஆறு வருடங்கள் கொண்ட பட்டப்படிப்பை படிக்க ஆரம்பித்தாள். அங்கும் கூட, கல்லூரியில் படித்த இரண்டாயிரம் பேரில் வெறும் இருபத்து மூன்று பேர்தான் பெண்கள்! அக்காவுக்குத் திருமணமான பின்பு ஒரு ஃப்ளாட்டில் தனியேதான் வசித்துக் கொண்டிருந்தார் மேரி.

அந்த நாட்களில்தான் துடிப்பான இளைஞனான பியரி க்யூரியைச் சந்தித்தாள் மேரி. ஏற்கெனவே பீலோ எலக்ட்ரிசிட்டியைக் கண்டுபிடித்தப் பெருமை அந்த இளைஞனுக்கு இருந்தது. இருவருமே அவரவர் காதலில் தோல்வியுற்று இருந்த நேரம் அது. ஒரே மாதிரி நிலை... தவிர இருவருக்குமே விஞ்ஞானத்தில் பெரும் விருப்பம். ‘நாம் கல்யாணம் செஞ்சுக்கலாமா?’ என்று கேட்டான் அந்த இளைஞன்.

கல்யாணம் என்றதுமே மேரிக்கு இயல்பான குடும்ப வாழ்க்கையால் தன் லட்சியம் பாதிக்கப்படுமே என்ற தயக்கம் வந்தது. ‘‘அதனால் என்ன? அடுத்தடுத்த ப்ளாட்களில் தனித்தனியாக வசிப்போம். மற்றபடி கணவன் மனைவியாக இருப்போம்’’ என்று சொன்னார் பியரி.

இவர்கள் கல்யாணம் செய்துகொள்வதில் வேறொரு சிக்கலும் இருந்தது. பியரி போலந்து நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. மேரி அவரைத் திருமணம் செய்துகொண்டால் மீண்டும் போலந்துக்குத் திரும்பி, அங்கேயே நிரந்தரமாகத் தங்கி மக்களுக்கு சேவை செய்வது என்பது முடியாத காரியமாகிவிடும். ஆனால் பியரியோ இதை ஒரு பிரச்னையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ‘‘அதனாலென்ன... நான் போலந்துக்கு வருகிறேன். அங்கு உன்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறேன்’’ என்றார்.

தொடர்ந்து சில மாதங்களில் இருவருக்குமே ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து வாழ முடியாது என்று புரிந்து விட்டது. எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

காதலால் இணைந்த அந்த ஜோடி அடுத்த பதினான்கு வருடங்களும் கதிரியக்கப் பொருள்களைப் பற்றியே ஆராய்ச்சி செய்தார்கள். அதற்கு முந்தைய ஒரு வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியத்தைச் சுற்றியே அவர்களது பல ஆராய்ச்சிகளும் நடைபெற்றன. எப்போதுமே எந்தவொரு சாதனையிலுமே ஒரு ஆணை ஒத்துக்கொள்ளும் அளவுக்கு சிலர் பெண்களை ஒத்துக் கொள்வதில்லை. மேரியின் ஆராய்ச்சி விஷயத்திலும் இது நடந்தது. எல்லாமே கணவர் பியரியின் ஐடியாக்கள்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் வாய் அடைபடும்படி, தான் அவ்வப்போது எழுதி வைத்திருந்த பல விஞ்ஞானக் குறிப்புகள் அடங்கிய நோட்டுப் புத்தகம் ஒன்றை வெளியிட்டார் மேரி க்யூரி.

அணுக்கள் உள்ளன என்பதையே கி.பி.1900 வரை எல்லா விஞ்ஞானிகளும் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அணுக்களுக்குள்ளே நடைபெறும் கதிரியக்கம் குறித்து மேரி சொன்னபோது சக விஞ்ஞானிகள் அதை வெறும் கேலியாகவே பார்த்தார்கள். ஏற்கவும் மறுத்தனர். ஆனால் கடைசியில் மேரி க்யூரியின் முடிவுதான் சரியானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

தோரியம் என்ற கதிரியக்க இயல்பு கொண்ட பொருளைக் கண்டுபிடித்தார் மேரி.

கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வேறொரு பெரிய ரகசியத்தையும் கண்டுபிடித்தார்கள். என்ன அது? கதிரியக்கம் என்பது ரசாயனப் பொருள்கள் ஒன்றோடொன்று இணைவதினால் ஏற்படுவது அல்ல என்பதையும், குறிப்பிட்ட பொருளின் (அதாவது அணுவின்) இயல்பைக் கொடுப்பது கதிரியக்கம்தான் என்பதையும் கண்டுபிடித்தனர். ஆக ரேடியம் என்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்தது மேரிதான்.

இத்தனைக்கும் தம்பதியர் இருவரும் சோதனைகள் செய்த பரிசோதனைச் சாலை மிகவும் சிறியது. ‘அட... ஏதோ உருளைக் கிழங்கு கிடங்கு மாதிரி இருக்கிறது. இதிலா பரிசோதனை செய்கிறார்கள்!’ என்று கேலி செய்தார்கள் மற்றவர்கள். ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை இந்த தம்பதியர்.

மனைவி மேரி செய்த இந்தப் பரிசோதனையின் ஒரு பகுதியாக ரேடியத்தை தன் தோலின் மீதே ஊற்றிக் கொண்டார் கணவர் பியரி. இதனால் அவர் கையில் கட்டி ஏற்பட்டது. அப்படி செய்த ஆராய்ச்சியின் மூலமாக ‘தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத கட்டிகளுக்கு’ சிகிச்சை செய்ய ரேடியத்தை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்தார் மேரி. ‘கியூரி தெரபி’ என்றே இதற்குப் பெயரிட்டார்கள் இந்தத் தம்பதியர்.

அணுவின் மர்மங்களை மேலும் அறிய கணவரும் மனைவியும் முயற்சித்தார்கள். இதன் விளைவாக ‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ என்ற புதிய கோட்பாடு உருவானது. அறிவியலின் மிகப்பெரிய திருப்புமுனை இது.

அந்த வருடம் தான் மேரி தம்பதிக்கு ஒரு அதிர்ஷ்ட வருடம்! இந்தக் கண்டு பிடிப்புக்காக உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு கணவன்_மனைவி என இருவருக்குமே கிடைத்தது!... விருது கிடைத்த பின்பு தங்கள் மோசமான உடல்நிலை பற்றி சுத்தமாக மறந்து விட்டு, இன்னும் அதிக ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள் இந்தத் தம்பதியர்.

ஆனால், யுரேனியம் போன்ற பொருள்களில் இருந்து ரேடியத்தைப் பிரித்தெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. டன் கணக்கான பாறைகளிலிருந்து பத்தில் ஒரு பங்கு ரேடியத்தைத் தயாரிக்கவே மேரிக்கு பல ஆண்டுகள் பிடித்தன.

உலகமே ரேடியத்தின் அற்புத சக்தியைப் பாராட்டியது. இந்தப் பாராட்டிலும், தன் லட்சியத்தை நிறைவேற்றும் மகிழ்ச்சியிலும் மேரி, தன்னுடைய உடலின் ஆரோக்கியக் குறைவை வெளிப்படுத்திக் கொள்ளாமலே இருந்துவிட்டார்.

கதிரியக்க சாம்பிள்களைத் தொடர்ந்து கையாண்டதால் அந்த தம்பதியர் விரல்களின் நுனி கறுத்து இறுகிப் போனது. உடல் இளைத்தது. மகள் ஐரனே பிறந்த பிறகு உருவான அடுத்த குழந்தையும் குறைப்பிரசவத்தில் இறந்து போனது. இந்தக் குடும்பக் கவலைகள், அவர்கள் நோபல் பரிசு பெற்ற சந்தோஷத்தையே மழுங்கடித்தது. கதிரியக்கத்தால் உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளால் நோபல் பரிசைக்கூட நேரில் சென்று வாங்க முடியவில்லை இவர்களால்!

அந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு டாய்லெட் இணைக்கப்பட்ட வீடு ஒன்றை வாங்கினார்கள் இந்தத் தம்பதியர். பிரான்சில் பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த வசதி அப்போது உண்டு.

இந்தத் தம்பதிக்கு பொதுமக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்ததன் காரணமாக, பிரான்ஸ் அரசு இவர்களின் கதிரியக்க ஆராய்ச்சிகளுக்காக நிதி உதவியும்கூட செய்தது.

கணவர் பியரியின் உடல்நிலையோ வேகமாக சீரழிந்துக் கொண்டிருந்தது. மேரியாலும் முழுமையாக ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியவில்லை. இரண்டாவதாகப் பிறந்த ஈவா என்ற மகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் வேறு சேர்ந்து கொண்டது. ஒரு மழைக்கால மதியத்தில் தனியே வெளியே நடந்துக் கொண்டிருந்த பியரியின் பார்வை திடீரென மோசமடைய, எதிரில் வந்த குதிரை வண்டியின் முன் விழுந்தார். குதிரையும், வண்டியும் அவர் மேல் ஏற, உடனடியாக இறந்துவிட்டார்.

மேரியால் இந்தத் துக்கத்தைத் தாங்க முடியவில்லை. இறந்தது அன்பான கணவன் மட்டுமல்ல, ஆராய்ச்சியிலும் கூடவே வந்த துணையும் ஆயிற்றே! பியரி பணிபுரிந்த இடத்தில் மேரியைப் பேராசிரியராக பணிபுரிய அனுமதித்தது பிரான்ஸ் பல்கலைக் கழகம். பிரான்ஸ் நாட்டில் இப்படியரு உயர் பதவியை வகித்த முதல் பெண்மணியே மேரிதான்!

சிறிது நாட்களிலேயே குடும்பத்தை நிர்வகித்து வந்த மாமனாரும் (பியரியின் அப்பா) இறந்தவுடன் வீட்டில் குழந்தைகள் மேலும் இடிந்துபோனார்கள். இதற்கு நடுவே மேரியின் வாழ்க்கையை மாற்றிய இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு ஆதரவு தேவைப்பட்ட மேரியின் மனதுக்கு இதம் தந்தது பால் என்பவரது பேச்சு. இவர் நான்கு குழந்தைகளுக்கு தந்தை என்றாலும் மனைவிக்கும் அவருக்கும் கடும் கருத்துவேறுபாடுகள். இந்த நிலையில்தான் பாலும் மேரியும் காதல் வசப்பட்டார்கள். ‘‘நீங்கள் உங்கள் மனைவியிடமிருந்து, முழுதாக பிரிந்துவிடுவதுதான் நமது இணைப்பிற்கான முதல் படியாக இருக்கும்’’ என்று ஒரு கடிதத்தை அனுப்பினார் மேரி.

ஆனால், மேரியின் போதாத காலம், இந்தக் கடிதம் பாலின் மனைவி ஜினியிடமே கிடைத்துவிட்டது. ஜினியின் அண்ணன் ஒரு நாளிதழின் ஆசிரியர். மேரியின் புகழைக் கெடுக்கும் வகையில், அந்தக் கடிதத்தின் சில பகுதிகளைத் தன் தினசரி பேப்பரில் பிரசுரம் செய்தார் அவர். ஏற்கெனவே, மேரி தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்தவள் அல்ல... ஆனாலும் இவ்வளவு புகழ் பெறுகிறாளே என்று மேரியைக் குத்திக் கிளற சமயம் பார்த்துக் கொண்டிருந்த சிலருக்கு இது பெரிய வாய்ப்பாகப் போய்விட்டது. இந்த விஷயத்தையே சாக்காக வைத்து அவரை அவமானப்படுத்தி, எப்படியாவது அவரை பிரான்சிலிருந்து வெளியேற்றத் துடித்தார்கள். மேரியின் பரிசோதனைச் சாலையைச் சுற்றி வந்து கலாட்டா செய்தார்கள்.

‘‘என் அறிவியல் பணிகளையும் அந்தரங்க வாழ்க்கையையும் இணைத்துப் பேசுவது சரியல்ல. என் வாழ்க்கைத் தொடர்பான வதந்திகளின் நிழலை எனது ஆராய்ச்சிகளின் மீது படிய விடுவது அனாவசியம்’’ என்று சொன்னார் மேரி. ஆனால் மேரிக்கு எதிரான கலவரங்கள் மேலும் மேலும் அதிகமாகத்தான் ஆயின.

இந்தக் காலகட்டத்தில், ரேடியம் மற்றும் பொலானியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததற்காக மேரிக்கு மீண்டும் ஒருமுறை நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேரிக்கு எதிர்ப்புகள் மிக அதிகமாக இருக்கவே ‘விருது பெறும் நிகழ்ச்சிக்குக் கூட நீங்கள் நேரடியாக வரவேண்டியது கட்டாயமல்ல’ என்றார்கள் நோபல் குழுவினர். ஆனால் மனத்துணிவுடன் நேரில் சென்றே பரிசைப் பெற்றுக்கொண்டார் மேரி.

தொடர்ந்து செய்து வந்த ஆராய்ச்சிகளால் தன் இரண்டு பெண்களுக்கும் இளம் வயதில் போதிய கவனிப்பை மேரியால் கொடுக்க முடியாமல் போனது. ஆனால் வளர வளர தாயும் மகள்களும் மிகவும் பாசத்துடன் ஒன்றுபட்டார்கள். இசையில் ஆர்வம் கொண்ட ஈவா, வீட்டிலேயே இருந்து கொண்டு நிர்வகிக்க, மேரியும் அவரது மூத்த மகள் ஐரனேவுமாக குண்டு காயம் பட்ட இராணுவ வீரர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கத் தொடங்கினார்கள்.

இதற்காக பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள முந்நூறு மருத்துவ மனைகளுக்குச் சென்று வந்தார்கள். உடலுக்குள் குண்டு தங்கிய இடத்தை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து ராணுவ டாக்டர்களுக்குப் பயிற்சி அளித்தார்கள்.

ஐரனேவுக்கு இருபத்தெட்டு வயதானபோது அவருக்குத் திருமணம் நடந்தது. கணவர் ஜீவியெட்டும் ஒரு விஞ்ஞானியே என்பதுதான் சிறப்பம்சம்! இந்தக் கணவன் மனைவி இணைந்து செயற்கைக் கதிரியக்கத்தை கண்டுபிடித்தார்கள். இதற்காக இந்தத் தம்பதிக்கும் நோபல் பரிசு வழக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிரான்ஸ் நாட்டின், அணுசக்தி திட்டத்தின் சிற்பியாகவே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார் ஜீவியெட். ஆக கணவன், மனைவி, மகள், மருமகன் என நால்வருமே நோபல் பரிசு பெற்று பெரும் சாதனையைப் படைத்தார்கள்!

‘ரேடியம் இன்ஸ்டிடியூட்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார் மேரி. ஆனால், கதிரியக்கம் தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளின் காரணமாக, மேரிக்கு கண்களில் கேடராக்ட், காதில் எப்போதும் ஒலி, தோலில் மாற்றம் போன்ற பல பாதிப்புகள் இருந்து கொண்டேயிருந்தன. ஆனால் மேரி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தன்னால் மனிதகுல முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்ய முடியுமா என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. ஓய்வில்லாமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேரி க்யூரி, கடைசியில் புற்று நோயால் இறந்தார். அவரது சாம்பல் பாந்தியாம் என்ற கவுரவமிக்க இடத்தில் இன்னும்கூட வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

- ஆதர்ஷ் -
நன்றி-குமுதம்

Monday, March 29, 2004

வனிதா


Oscar விருது பெற்ற தமிழ் பெண்

மனித மாமிசத்தை சாப்பிடும் பயங்கரமான ராட்சஸன். பச்சை நிரத்தில், மலையைப் போன்ற உடம்புடன்... பார்கையில் மனிதன் போலவே கோப தாபங்களுடன் சுற்றிக் கொண்டிருப்பார். தன்னுடைய சின்னஞ்சிறிய காட்டில் அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த ராட்சஸனுக்கு பூணை, எலித் தொல்லை அதிகமானது. அந்த எலித் தொல்லையிலிரந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஒரு கோட்டையை எழுப்ப வேண்டும். அந்த வேலையை தொடங்கும்போது, அடுக்கடுக்காய் பல பொறுப்புகள் வந்து தலையில் விழுந்தன. கடைசியில் ஒரு ராஜகுமாரியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் வந்த விட்டது.

பார்ப்பதற்கு ராட்சஸன் ஆனாலும், அவனுடைய மனம் இளகியதென்று காட்டிய படம்தான் அன்மையில் யானிமேஷன் பிரிவில் ‘ஆஸ்கர்’ விருதைப் பெற்ற ‘‘ஷ்ரெக்’’. உலகளவில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. யானிமேஷன் துறையில் புதிய தொழில் நுட்பங்களுடன் புதிய சாதனைகளை படைத்த ‘ஷ்ரெக்’ படத்தின் வெற்றியில் ஒரு தமிழ் பெண்ணுக்கு பங்குண்டு என்பதை பலருக்கு தெரியாது. அந்த ‘ஆஸ்கர்’ தமிழ் பெண்தான் வனிதா ரங்கராஜன்.

தமிழ்நாடு திருச்சியில் பிறந்த வனிதா, திருச்சி ரீஜினல் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஆர்க்கிடெக்சர் படித்தார். அப்புறம் வேலைத் தேடி பெங்களூர் போனவருக்கு ரமணன் அறிமுகம் கிடைத்தது. அதுவே காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. ரமணனும் ஒரு இன்ஜினீயர்தான். ஆர்கிடெக்சரை படித்த வனிதா 95ல் ஒருநாள் தற்செயலாக `Toy Story’ படத்தை தயாரித்த விதத்தை தொலைக்-காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி வனிதாவின் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது. அவர் அர்கிடெக்சரை மறந்து முழு நேரம் யானிமேஷன் கற்றுக் கொள்ள தொடங்கினார்.

இதற்கிடையில் கணவர் ரமணன் மேற்படிப்பிற்காக அமெரிக்க செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்ததால், வனிதா, அந்த வாய்ப்பை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அங்கு ‘‘இன்டஸ்ட்ரியல் லைட் மேஜிக்’’கில் விஜூவல் எஃபெக்ட்ஸ் படிப்பை முடித்தார். உடனே அவருக்கு பசிபிக் டேட்டா இமேஜெஸில் வேலை கிடைத்தது. அப்புறம் ‘‘ட்ரீம் வொர்க்ஸ்’’

‘‘ட்ரீம் வொர்க்ஸ்’’ கம்பெனியில், திரையில் தோன்றும் ஒவ்வொரு ப்ரேமிற்க்கும் ஒளியைக் கொடுப்பது வனிதாவின் வேலை. எந்த மாதிரி ஒளி எந்த உணர்ச்சியை உண்டாக்கும். எங்கு ஒளி இருந்தால் காட்சி நன்றாக அமையும். முகத்தில் ஒளியை எப்படி பிரதிபலிக்கச் செய்யலாம். நிழல்கள் எப்படி இருக்கவேண்டுமென்பவை’’ லைட்டிங் டெக்னிகல் டைரெக்-டரி’’ன் கடைமைகள். ப்ரேமில் தோன்ற கூடிய இரவு, பகல், தூசு, காற்று, அக்னி... இப்படி எல்லாமே ஒரு சவால்தான். ஆனால் இரவு பகல் பார்க்காமல் கம்ப்யூட்டர்களுடன் மல்யுத்தம் செய்து, தன்னிடம் ஒப்படைத்த பணியை செவ்வனே முடித்தார் வனிதா. இதற்கு தொழில் நுட்பம் மட்டும் போதாது. கலை உணர்ச்சி, இருக்க வேண்டும். வனிதாவிடம் அது நிறையவே இருக்கிறது. ‘ஷ்ரெக்’ படம் ஒரு யானிமேஷன் படமாக மட்டுமின்றி தொழில் நுட்பத்தில ரிக்கார்ட்களை பதிவு செய்தது. இந்த படத்தில் வழக்காம கையில் வளரவதை விட்டுட்டு முழுதும் கம்ப்யூட்டரின் உதவியால்தான் வரைந்தனர். 300 செயற்கை சதைகளுடன் ‘ஷ்ரெக்’ முகத்தில், தமக்கு வேண்டிய உணர்ச்சியை பிரதிபலிக்க செய்தது ஒரு சாதனை. இப்படத்தில் தோன்றும் செடி, கொடி, மரங்களில் ஒவ்வொரு இலையும் அசையும். தூசு பறக்கும். ‘ஷ்ரெக்’ படத்தை பார்த்தவர்கள் ‘‘அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியில் நாங்கள் இருக்கின்ற மாதிரி பாவித்தோம்’’ என்று புகழாரம் சூட்டினாரென்றால் வனிதாவின் குழு செய்த அற்புதத்தை உணரமுடிகிறது.

லாஸ் ஏன்ஜெல்ஸில் ‘ஆஸ்கர்’ விருது விழா நடந்துக் கொண்டிருக்கும்போது, வனிதா தன்னுடைய சக ஊழியர்களுடன் காலிபோர்னியா பாலோ ஆல்டோ ஸ்போர்ட்ஸ் களப்பில் அவ்விழாவின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார். தங்களுடைய படத்துக்கு விருது கிடைக்குமோ... கிடைக்காதோ என்ற பயம். கடைசியில் பட தயாரிப்பாளர் யாரன் வார்னர் மேடையை ஏறி விருது பெற்றுக்கொள்ளும்போது வனிதா-வின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு இந்திய பெண்ணாக தானும் ஆஸ்கர் விருது பெற்ற குழுவில் இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாக அவர் பெருமைப்-பட்டார். திருச்சியிலுள்ள வனிதாவின் பெற்றோருக்கு அளவிலா மகிழ்ச்சி. அவர்கள் தம்முடைய நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

‘‘6 வருடங்களுக்கு முன் இந்தியா-வில் இருந்து தொலை காட்சியில் ஆஸ்கர் விருது விழாவை பார்த்த நான், இன்று எங்க ஸ்டூடியோவில் ஆஸ்கர் விருதை கையில் பிடித்து நின்றதை பற்றி யோசிக்கும் போது... அற்புதமாக இருக்கிறது’’ என்று சொல்லும் வனிதா, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை ‘க்ரீன் கார்ட்’ வாங்க-வில்லை. ஏன் என்று கேட்டால் ‘‘என்றென்றுக்கும் நான் திருச்சிக்காரி’’ என்று சொல்கிறார்.

தற்போது வனிதா ‘ஷ்ரெக் 2’ வேலைகளில் மும்முரமாக இருக்-கிறார். அந்தப் படம் இவ்-வருடம் ஜூலை மாதம் வெளிவரப் போகிறதாம்’ அப்போ 2005_லும் வனிதாவுக்கு மற்றொரு ஆஸ்கார் காத்துக் கொண்டிருக்கிறது.

nantri - kumutham

Sunday, March 21, 2004

பத்மாவதி நாக கனக ஸ்ரீவல்லி

இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். நடக்கிறதைப் பார்!


அந்த ஆறு வயதுக் குழந்தை மாடியின் மேல் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவளின் கை மின் கம்பத்தின் வயர்களின் மேல் பட்டது. கணத்தில் ஒரு கை, இரண்டு கால்கள் எரிந்து கறுகிப் போயின. பெற்றோர் அவளை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் பலன் இல்லாமல் போனது. இரண்டு கால், ஒரு கையைப் பறிகொடுத்து வீடு திரும்பிய அவளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கை ஊற்றி வளர்க்கத் தொடங்கினார்கள். அதனால்தான் உடல் ஊனமுற்றாலும் வைராக்யம் கொண்ட மனதுடன் வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவிக்கிறார் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சார்ந்த இருபத்து இரண்டு வயதுள்ள துடிப்புமிக்கப் பெண் பத்மாவதி நாக கனக ஸ்ரீவல்லி.

ஆம். அன்றைய ஆறு வயதுக் குழந்தை, தற்போது ஒரு கையினால் கம்ப்யூட்டரில் கீபோர்டில் மடமடவென்று டைப் செய்வாள். கால்கள் இல்லையென்றாலும் செயற்கை உறுப்புகளை அமர்த்தி பள்ளிக்கு அனுப்பினார் பத்மாவதியின் தந்தை மல்லிகார்ஜுன ராவ். “இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். இருக்கிறதை வைத்து எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியுமென்பது பற்றி யோசி” என்று எங்க அப்பா அடிக்கடிச் சொல்வாரென்று சொல்லும் பத்மாவதி, தந்தையின் சொல்லே வேத வாக்காக செயல்பட்டு பட்டப்படிப்பை முடித்தார். அப்புறம் தன்னுடைய தோழிகளில் பல பேர் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டிருக்க தானும் கற்றுக்கொள்ள முயன்றார் பத்மாவதி. இதைப் பார்த்து சில பேர் கேலி செய்ததுண்டு. ஆனால் சாஃப்ட்வேர் லாங்வேஜ்ஜைக் கற்றுக்கொண்ட பத்மாவதி, ஹார்ட்வேரையும் கற்றுக்கொள்கிறார்.

இதற்கிடையில் பத்மாவதி ஹோம் கார்ட் வேலைக்கு விண்ணப்பித்தார். எல்லாத் தகுதிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் அவருக்கு வேலை கிடைத்தது. தற்போது பத்மாவதி விஜயவாடா போலீஸ் கண்ட்ரோல் ரூமில் டிராபிக் பிரிவு கம்ப்யூட்டர் செக்ஷனில் வேலை பார்க்கிறார். படு சுறுசுறுப்பாக இருக்கும் பத்மாவதியைப் பார்த்து சக ஊழியர்கள் “தன்னம்பிக்கையின் முழு உருவம்தான் பத்மாவதி” என்று புகழ்கிறார்கள். விடைபெறும்போது “என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டதற்கு “எங்கப்பா சொன்னதுதான். இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். நடக்கிறதைப் பார்” என்று சொன்னார் பத்மாவதி.

- மூர்த்தி -
Quelle - Kumudham

Sunday, March 07, 2004

நசீம் பானு!


பாரதம் தந்த புதுமைப் பெண்!

ஒரு தாயின் கண் முன்னாலேயே அவளது வயது வந்த 13 வயது மகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டால் எப்படியிருக்கும்? மகளது மானத்தைக் காப்பாற்ற முனைந்த அவளது அன்புக் கணவனைக் கண் முன்னாலேயே படுகொலை செய்ததோடு மட்டுமல்ல அவளது மாமா, மாமி என அவளது உறவினர்கள் 24 பேரைப் படுகொலை செய்து ஆற்றினுள் வீசினால் எப்படியிருக்கும்? உங்களில் பலருக்கு 1983இல் நடைபெற்ற இலங்கை இனக்கலவரத்தின் நினைவு உடனடியாக ஞாபகத்தில் வரும். இது போன்ற பல நிகழ்வுகள் அக்கலவரத்தில் நடைபெற்று இலங்கை அரசியல் வரலாற்றினையே அடியோடு மாற்றி வைத்து விட்டன. ஆனால் அது போன்ற பயங்கர நிகழ்வுகளை இந்தத் தாய் இரு வருடங்களுக்கு முன்னர் கோத்ராவில் முஸ்லீம் வெறியர்களால் இந்துக்கள் பயணித்த புகையிரதம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் இந்து வெறியர்களால் அப்பாவி முஸ்லீம் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட இனக்கலவரத்தில் அனுபவித்திருக்கின்றாள். இன்று இவளுக்குகென்றிருக்கும் உறவுகள் இவளது 13 வயது மகனும், மைத்துனியொருத்தியுமே. இந்தப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது இவள் ஆஸ்பத்திரியிலிருந்ததால் உயிர் தப்பித்துக் கொண்டாள். ஆனால் ஆஸ்பத்திரியிலிருந்த இவளைப் பார்ப்பதற்காக வந்த இவளது உறவினர்களில் மைத்துனியொருத்தியைத் தவிர அனைவரும் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவியான மைத்துனியோ பலரால் பலர் முன்னிலையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டாள். இன்று அவள் பிழைத்திருந்தாலும் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். இவ்வளவும் நடந்து முடிந்திருக்கின்றது குஹராத்தைச் சேர்ந்த நசீம் பானுவின் வாழ்வில்.

இவ்வளவு நடந்தும் நசீம்பானு தன் துணிவினை இழந்துவிடவில்லை. இன்று அவள் நடந்து முடிந்த கொடும் செயல்களுக்காக நீதி வேண்டித் தனது போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றாள். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான சமூக விரோதிகளைச் சட்டம் தண்டிக்கும் வரையில் இவளது போராட்டம் ஓய்ந்து விடப்போவதில்லை. படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் வெளியில் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கும் பொழுது அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதால் எந்தவிதப் பயனுமில்லை. சட்டத்தின் தண்டிப்புக்குப் பின்னால் மட்டுமே அரசின் வருத்தத்துக்கு அர்த்தமிருக்க முடியும் எனக் கூறும் நசீம் பானு இன்று பாரதத்தின் நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து நீதியினை நாடி வழக்குத் தொடர்ந்திருக்கின்றாள். இவள் தனது வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் இவளது மகனைக் கடத்தப் போவதாகச் சமூகவிரோதிகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நசீம் பானு தன் உறுதியினை இழந்து விடவில்லை. அவளால் இழப்பதற்கு இனியென்ன இருக்க முடியும்? தனக்கு நீதி கிடைக்குக் வரையில் தான் ஓய்ந்து விடப்போவதில்லை என்று வைராக்கியத்துடன் இருக்கும் நசீம் பானு கடந்த இரு வருடங்களாக பெண்களுக்காகப் பாடுபடும் அரசு சார்பற்ற , இலாப நோக்கற்று இயங்கும் ஸ்தாபனமொன்றில் இணைந்து பாதிக்கப் பட்ட பெண்களின் உரிமைக் குரலாக விளங்கி வருகின்றாள். இவளது போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் தர்மத்துக்காக நடைபெறும் போராட்டங்கள் இறுதியில் என்றுமே வெற்றியினைத் தான் அடைந்து விடுகின்றன என்பதுதான் வரலாறு நமக்குக் கூறும் பாடம்!

நந்திவர்மன்
மூலம்: இந்து
nantri - Pathivukal

Wednesday, January 28, 2004

மார்க்கிரெட் தாட்சர்

சேவல்கள் குரல் கொடுக்கலாம்... முட்டையிடுவது கோழிகள்தானே!

உலகம் முழுக்க இருக்கும் அத்தனை நாடுகளையுமே தங்களது வெண்கொற்றக் குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தவர்கள் பிரிட்டிஷார். அவர்களே பிரமிப்புடன் பார்த்து, மிகப் பெருமையுடன் தங்கள் தலைவி என்று ஏற்றுக்கொண்டது இந்தப் பெண்மணியைத்தான்!

அவர் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர். தொடர்ந்து பதினோரு வருடங்கள் பிரிட்டனின் பிரதமராக இருந்தார். அதற்கப்புறமும்கூட அவரே செய்த ராஜினாமாதான்!

தற்போது எழுபத்தெட்டு வயதாகிறது இவருக்கு. இன்னும்கூட பிரிட்டனில் இந்தப் பெண்மணிக்கு அசைக்க முடியாத புகழ் இருக்கிறது!

பெண்கள் மென்மையானவர்கள், பூப் போன்றவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு தலைவியாக தாட்சரின் திடமான முடிவுகளையும், எந்த எதிர்ப்புக்கும் கலங்காத அவரது மன உறுதியையும் பார்த்து இவரல்லவா ‘இரும்புப் பெண்மணி!’ என்று ஒரு கம்பீர பட்டம் தந்து கௌரவித்தார்கள் மக்கள்.

அரசியலில் பெண்கள் சக்ஸஸ் ஃபுல்லாக வர விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று, இவர் நடவடிக்கைகளைப் பார்த்து பாடம் கற்றுக் கொண்டவர்கள் நிறையப்பேர்.

இவ்வளவு பெருமைக்குரிய இந்த பெண்மணியின் சுயசரிதையில் சுவாரஸ்யமான சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போக வேண்டியிருக்கும்.

சமீபத்தில் வெளியான மார்க்ரெட் தாட்சரின் சுயசரிதைக்காக அவரை இண்டர்வியூ செய்த எழுத்தாளர், தாட்சரிடம் ‘‘மேடம்... இப்படியே இந்த சுயசரிதம் வெளிவந்தால் போரடிக்கும். உங்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொஞ்சம் சொல்லுங்கள்..!’’ என்று கேட்டாராம்...!

அவ்வளவு தூரம் ஒளிவு மறைவு இல்லாத... பரபரப்பு இல்லாத ஒரு ‘ஸ்டிரெய்ட் ஃபார்வர்டு’ வாழ்க்கை முறை தாட்சருடையது!

தவிர தான் பெண் என்பதாலேயே தனக்கு முக்கியத்துவம் கொடுத்து, பத்திரிகைகள் தன் படங்களைப் போட்டு தன்னைப் பற்றி அதிகமாக எழுதுவதையும் அவர் விரும்பியதில்லை.

‘என் தகுதியும், திறமையும்மட்டும்தான் எனக்கு எந்தப் பதவியையும் பெற்றுத்தர வேண்டும்’ என்று பிடிவாதமாக இருந்தவர் அவர்!

இத்தனைக்கும் மார்கரெட்டின் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. மார்கரெட்டின் அப்பா ஒரு மளிகைக் கடையில் வேலை செய்தவர். மிகமிக சாதாரண ஒரு குடும்பம்!

மார்கரெட், அவர் தங்கை முரியல் என்று இரண்டே பெண் குழந்தைகள்தான் அவர்களது பெற்றோருக்கு!...

அப்பா அம்மாவுக்கு மதத்திலும் கடவுள் காரியங்களிலும் தீவிர நம்பிக்கை என்பதால் இரண்டு பெண்களையுமே நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பயங்கர கண்டிப்புடன் வளர்த்தார்கள். உள்ளூர்ப் பள்ளிக்கூடத்திலேயே இருவரும் சேர்க்கப்பட்டார்கள். ‘இவள் அதிகநேரம் படிப்பதில்லையே... எப்படி பாஸ் செய்வாள்?’ என்று பெற்றோர் சந்தேகத்துடன் பார்க்கும்போதே மார்கரெட் வகுப்பில் முதல் மாணவியாக வந்து புருவத்தை உயர வைப்பாள். மார்கரெட்டின் இந்த சூட்டிகை தனம்தான் அவரை சம்பந்தமே இல்லாத அரசியல் துறையில்கூட பிரகாசிக்க வைத்தது!

ஒருதரம் ஒரு விஷயத்தைக் கேட்டால், அதை கூர்மையாக கவனத்தில் வைத்துக் கொள்ளும் மார்கரெட்டின் புத்திசாலித்தனமும், மற்றவர்களைத் தன் அறிவார்ந்த பேச்சால் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆற்றலும் இயல்பிலேயே இருந்ததால், மார்கரெட்டைச் சுற்றி எப்போதுமே ஒரு கும்பல் இருந்து கொண்டேயிருந்தது. ‘விளையும் பயிர் முளையிலே’ என்று சும்மாவா சொன்னார்கள்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்களின் கன்சர்வேடிவ் கூட்டமைப்பின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் டீன்_ஏஜ் மாணவியான மார்கரெட். இந்தப் பதவியை வகித்த முதல் பெண்ணும் இவர்தான்!

அப்போதுதான் பல புகழ்பெற்ற அரசியல்வாதிகளை இவர் சந்திக்க முடிந்தது. உடனே நாட்டின் பொதுத்தேர்தல் வேறு வந்துவிட, கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவாக சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்டார் மாணவி மார்கரெட். அரசியல் அவரை உடும்புபோல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

படிப்பு முடிந்தவுடனேயே பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்பட்டார் மார்கரெட். அந்த வயதுக்கு அது சற்றே பேராசைதான் என்றாலும் அந்த இளம்பெண்ணின் சக்தியை உணர்ந்துகொண்ட கட்சி அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பை அளித்தது. ஆனால் மார்கரெட்டிற்கு அளிக்கப்பட்ட அந்தத் தொகுதியோ எதிர்கட்சியான லேபர் கட்சியின் கோட்டை! எதிர்பார்த்தது போலவே மார்கரெட் தோல்வியடைந்தார்.

ஆனால் நஷ்டத்திலும் சில லாபங்கள். ‘எம்.பி. தேர்தலுக்கு நின்ற மிகவும் இளவயதுக்காரர்’ என்ற பெயர் மார்கரெட்டுக்குக் கிடைத்தது. உழைப்பாளிகள் நிறைந்த அந்தத் தொகுதி அவருக்கு பல படிப்பினைகளைத் தந்தது. குறிப்பாக, தேர்தலில் போட்டியிட்டபோது அதிகமான வருமானவரியும் அரசின் குறுக்கீடுகளும் மக்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை நேரடியாகவே அறிந்து கொண்டார் மார்கரெட்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, தன் வருங்காலக் கணவர் டெனிஸ்தாட்சரை மார்கரெட் சந்தித்ததும் இந்தத் தொகுதியில் தான்..!

டெனிஸ் தாட்சர் இரண்டாம் உலகப்போரில் ஒரு மேஜராகப் பணிபுரிந்தவர். பர்மா காஸ்ட்ரால் என்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். மார்கரெட்டின் ஆளுமை நிறைந்த அணுகுமுறை டெனிஸ் தாட்சருக்கு பிடித்திருந்தது. மார்கரெட்டுக்கு டெனிஸின் எளிமை பிடித்திருந்தது. இருவரும் மனம்விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள். மார்கரெட்டுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மகனுக்கு மார்க் என்றும் மகளுக்கு கரோல் என்றும் பெயரிட்டார்கள்.

வீட்டில் குழந்தைகளை கவனித்தபடியே சட்டப்படிப்பு படித்தார் மார்கரெட். அதிலும் குறிப்பாக மக்களை அதிகம் பாதித்த ‘வரிகளை’ மனசில் வைத்துக் கொண்டு அதுபற்றி படித்தார். இதுவே இவரை இன்னும் பிரபலப்படுத்தி விட்டது!

இந்தச் சமயத்தில்தான் லண்டனுக்கு அருகே உள்ள, தொகுதியில் (அதே கன்ஸர்வேடிவ் கட்சியின் பிரதிநிதியாக) போட்டியிட மறுபடியும் சீட் கிடைத்தது மார்கரெட்டுக்கு.. முதல்முறை வெற்றி பெற்றார்! உடனே மார்கரெட்டை கல்வித்துறையின் செயலாளராகவும் நியமித்து கௌரவித்தார்கள்.

பதவி கிடைத்தவுடனே பிரிட்டனின் பொருளாதாரத்தை சரிசெய்ய பல நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் மார்கரெட் தாட்சர். ஆனால் அவற்றில் ஒரு நடவடிக்கை கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. நர்ஸரி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுவந்த இலவச பால் திட்டத்தை இவர் ரத்து செய்துவிட, ‘‘மார்கரெட் தாட்சர், மில்க் ஸ்னாச்சர்!’’ என்றுகூட விமர்சிக்கப்பட்டார். தாட்சர் கவலைப்படவில்லை. ‘‘அவரவர் குழந்தைக்கு அவரவர் பால் வாங்கித் தந்து கொள்ள முடியும். ஆனால், நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் நாட்டில் அனைவருமே நன்றாக இருக்க முடியும்!’’ என்று உறுதியாகச் சொன்னார் தாட்சர்.

தொழிற்சங்கங்களோடு ஏற்பட்ட மோதல்களின் காரணமாக அப்போது பிரதமராக இருந்த ஹீத் தேர்தலில் தோல்வியடைய... உடனே மார்கரெட் தாட்சர், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் அவர் சோஷலிஸத்தை ஆதரிக்கவில்லை. ‘சோஷலிசத்துக்கு எதிர்ப்பாதையில் சென்றால்தான் பிரிட்டனை பொருளாதார அழிவுப்பாதையிலிருந்து மீட்கமுடியும்’ என்று தைரியமாகக் கூறினார்.

தான் சொன்னதை செயல்படுத்தவேண்டிய வாய்ப்பு அவருக்கு சீக்கிரமே வந்து சேர்ந்தது. அடுத்த பொதுத் தேர்தலில் ஜெயித்தவுடனே அவரையே பிரதமராக்கியது கன்சர்வேடிவ் கட்சி. பிரிட்டனின் முதல் பெண் பிரதமரானார் மார்கரெட்!

ஆனால் நாடு சோதனையில் இருந்த காலம் அது. இங்கிலாந்தில் மட்டுமே வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டி விட்டிருந்தது. அந்த சமயத்தில் அர்ஜென்டினா நாடு அவருக்கு ஒரு விதத்தில் உதவி (!) செய்தது.

அதாவது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் எல்லைக்குள் இருந்து வந்த பாக்லாந்து தீவுகளை ஆக்கிரமித்து வந்தது. அர்ஜென்டினா. உடனே பிரிட்டனின் கடற்படையை அங்கு அனுப்பினார் மார்கரெட் தாட்சர். தோல்வி நிச்சயம் என்றும், போருக்கு பதிலாக மார்கரெட் தாட்சர் ராஜதந்திரத்துடன் சமாதானமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் இங்கிலாந்தின் பிரபல நாளிதழ்கள் எல்லாமே அலறின.

ஆனால், எதிர்பாராத திருப்பம்! ‘டக்’கென்று அர்ஜென்டினா அடிபணிந்து, பாக்லாந்து தீவுகளை காலி செய்தது! அப்புறமென்ன? பிரிட்டனின் ஒட்டுமொத்த மீடியாவின் ஆதரவும் மார்கரெட் தாட்சர் பக்கமே முழுசாகத் திரும்பிவிட்டது! அடுத்த பொதுத் தேர்தலிலும் அவரே பிரதமரானார்!

புகழ் வெளிச்சம் என்பது ஆபத்தையும் தேடித் தருவதுதான்! தாட்சருக்கும் அந்த ஆபத்து நிகழ்ந்தது. கட்சி மாநாடு நடக்கும்போது, குண்டு வெடித்ததில் மயிரிழையில் உயிர் தப்பினார் மார்கரெட். அருகே இருந்த ஐந்து முக்கிய பிரமுகர்களும் இந்த குண்டு வெடிப்பில் இறந்துபோனார்கள். குண்டு வைத்தது ஐரிஷ் தீவிரவாதிகள் என்பதும் விரைவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

தான் சொன்னது போலவே தாட்சர் பிரிட்டனின் பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் தாட்சரின் வெற்றி. ஆனாலும்கூட இவர்மீது மிகக் கடுமையான விமர்சனங்களும் எழவே செய்தன.

வருமானவரியைக் குறைத்தார் என்றாலும், ‘வாட்’ என்ற மறைமுக வரியின் விகிதத்தை அதிகப்படுத்தினார். இதனால், ‘பணக்காரர்களின் கைக்கூலி’ என்ற பட்டம் அவருக்குக் கிடைத்தது!

தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைக் குறைத்தார். நாட்டின் பொருளாதாரத்தை மனதில் கொண்டு பல சுரங்கங்களை இவர் மூட, தொழிலாளிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

தவிர, அரசியல்வாதிகள் செய்யும் தேர்தல் செலவுக்கென ‘தேர்தல் வரி’யை இவர் அறிமுகப்படுத்த, அத்தனை கட்சிகளும் அலறின. இவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே தாட்சர் மேல் கடும் கண்டனங்கள் எழுந்தது.

இதனால் அடுத்து நடைபெற்ற கட்சித்தேர்தலின் முதல் சுற்றில் கூட, மிகக் குறைவான ஓட்டு வித்தியாசத்தில்தான் மார்கரெட்டால் வெல்ல முடிந்தது. இரண்டாவது சுற்றில் தோல்விபெறும் வாய்ப்பு உண்டு என்பதை அறிந்துகொண்டதுமே மார்கரெட் தாட்சர் தானாகவே முன்வந்து தன் ராஜினாமாவை தந்துவிட்டார்.

‘‘கட்சியில் தீர்மானங்கள் எடுக்கும் இடத்தில் நான் இல்லை என்பதை நான் உணரவே எனக்குக் கொஞ்சகாலமானது. நான் பிரதமராக அமர்ந்திருந்த அந்த மக்கள் சபையில் தொடர்ந்து அமர எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் நிச்சயம் பிரதமராக மறுபிரவேசம் செய்வீர்கள் என்று பல நண்பர்களும் சொல்கிறார்கள். ஆனால், வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானதல்ல... பதினொன்றரை வருடங்கள் இங்கே பிரதமராக அமர்ந்திருக்கிறேன். போதும்... ஒரு நாள் வழிவிட்டுத்தானே தீர வேண்டும்? தவிர, நான் இதே சபையில் இருந்தால் தற்போதைய பிரதமருக்கும் சங்கடமாக இருக்கிறது. எனவே மேலவைக்கு வந்துள்ள அழைப்பை நான் ஏற்று அங்கே போகிறேன்!’’ என்று தாட்சர் சொல்ல பலரும் நெகிழ்ந்து போனார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் உடல்நிலை சற்று கெட, டாக்டர்களின் ஆலோசனைக்கேற்ப, அரசியல் வாழ்க்கையிலிருந்தே விலகிவிட்டார் மார்கரெட். சென்ற வருடம் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியில், தன் அரசியல் வாழ்க்கைக்கு தன் கணவர் எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதை மிக உணர்ச்சிகரமாக குறிப்பிட்டார் அந்த மனைவி. ஆனால், அப்படிப்பட்ட நல்ல துணையை அவரால் அவர் காலம் முழுக்க பெறமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே. இதயமாற்றுச் சிசிக்சைக்கு உள்ளான டெனிஸ் தாட்சர் சமீபத்தில் மரணமடைந்துவிட்டார்.

சமீபத்தில் மார்கரெட் தாட்சரின் சுயசரிதம் வெளியாகியிருக்கிறது. அதில் அரசியல் தவிர என்னென்ன பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் தாட்சர். நான் வீட்டில் தையல் வேலையை விரும்பி செய்வதுண்டு. துணிகளையும் ஒழுங்குபடுத்துவேன். மீந்துபோன உணவை வீணடிக்கமாட்டேன். அதை மாற்றி ஏதாவது புது அயிட்டம் செய்துவிடுவேன். சினிமா பார்க்கப் பிடிக்கும். பியானோ வாசித்ததுண்டு. சிறுவயதில் உள்ளூர் இசைவிழாக்களில் பரிசுகள்கூட பெற்றதுண்டு. அப்பாவை அதிகம் பிடிக்கும்!’’

மார்கரெட்டின் அரசியல் வாழ்வில் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் குறைச்சலே தவிர, சுவாரஸ்யமான பேச்சுகளுக்கு குறைவு இல்லை! இதோ ‘நச் நச்’ என்ற அவரது பேச்சுக்களில் சில..

‘‘தேம்ஸ் நதியின் மீது நான் நடந்தால் கூட விமர்சகர்கள், ‘மார்கரெட்டுக்கு நீந்தத் தெரியாததால் நடக்கிறாள்’’ என்பார்கள்..’

‘‘பெரிய பொய்களை சொல்லக்கூடாதுதான். ஆனால், தெளிவில்லாத பதில்களைக் கூறலாமே!’’

‘‘நேற்று ‘மம்மி ரிடர்ன்ஸ்’ என்ற சினிமா போஸ்டரைப் பார்த்தேன். இன்னமும் நான் தேவை என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றே இதைக் கருதுகிறேன்...’’

‘‘சேவல்கள் குரல் கொடுக்கலாம்... ஆனால் முட்டையிடுவது கோழிகள்தானே!’’

nantri-Kumudam