சேவல்கள் குரல் கொடுக்கலாம்... முட்டையிடுவது கோழிகள்தானே!
உலகம் முழுக்க இருக்கும் அத்தனை நாடுகளையுமே தங்களது வெண்கொற்றக் குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தவர்கள் பிரிட்டிஷார். அவர்களே பிரமிப்புடன் பார்த்து, மிகப் பெருமையுடன் தங்கள் தலைவி என்று ஏற்றுக்கொண்டது இந்தப் பெண்மணியைத்தான்!
அவர் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர். தொடர்ந்து பதினோரு வருடங்கள் பிரிட்டனின் பிரதமராக இருந்தார். அதற்கப்புறமும்கூட அவரே செய்த ராஜினாமாதான்!
தற்போது எழுபத்தெட்டு வயதாகிறது இவருக்கு. இன்னும்கூட பிரிட்டனில் இந்தப் பெண்மணிக்கு அசைக்க முடியாத புகழ் இருக்கிறது!
பெண்கள் மென்மையானவர்கள், பூப் போன்றவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு தலைவியாக தாட்சரின் திடமான முடிவுகளையும், எந்த எதிர்ப்புக்கும் கலங்காத அவரது மன உறுதியையும் பார்த்து இவரல்லவா ‘இரும்புப் பெண்மணி!’ என்று ஒரு கம்பீர பட்டம் தந்து கௌரவித்தார்கள் மக்கள்.
அரசியலில் பெண்கள் சக்ஸஸ் ஃபுல்லாக வர விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று, இவர் நடவடிக்கைகளைப் பார்த்து பாடம் கற்றுக் கொண்டவர்கள் நிறையப்பேர்.
இவ்வளவு பெருமைக்குரிய இந்த பெண்மணியின் சுயசரிதையில் சுவாரஸ்யமான சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போக வேண்டியிருக்கும்.
சமீபத்தில் வெளியான மார்க்ரெட் தாட்சரின் சுயசரிதைக்காக அவரை இண்டர்வியூ செய்த எழுத்தாளர், தாட்சரிடம் ‘‘மேடம்... இப்படியே இந்த சுயசரிதம் வெளிவந்தால் போரடிக்கும். உங்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொஞ்சம் சொல்லுங்கள்..!’’ என்று கேட்டாராம்...!
அவ்வளவு தூரம் ஒளிவு மறைவு இல்லாத... பரபரப்பு இல்லாத ஒரு ‘ஸ்டிரெய்ட் ஃபார்வர்டு’ வாழ்க்கை முறை தாட்சருடையது!
தவிர தான் பெண் என்பதாலேயே தனக்கு முக்கியத்துவம் கொடுத்து, பத்திரிகைகள் தன் படங்களைப் போட்டு தன்னைப் பற்றி அதிகமாக எழுதுவதையும் அவர் விரும்பியதில்லை.
‘என் தகுதியும், திறமையும்மட்டும்தான் எனக்கு எந்தப் பதவியையும் பெற்றுத்தர வேண்டும்’ என்று பிடிவாதமாக இருந்தவர் அவர்!
இத்தனைக்கும் மார்கரெட்டின் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. மார்கரெட்டின் அப்பா ஒரு மளிகைக் கடையில் வேலை செய்தவர். மிகமிக சாதாரண ஒரு குடும்பம்!
மார்கரெட், அவர் தங்கை முரியல் என்று இரண்டே பெண் குழந்தைகள்தான் அவர்களது பெற்றோருக்கு!...
அப்பா அம்மாவுக்கு மதத்திலும் கடவுள் காரியங்களிலும் தீவிர நம்பிக்கை என்பதால் இரண்டு பெண்களையுமே நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பயங்கர கண்டிப்புடன் வளர்த்தார்கள். உள்ளூர்ப் பள்ளிக்கூடத்திலேயே இருவரும் சேர்க்கப்பட்டார்கள். ‘இவள் அதிகநேரம் படிப்பதில்லையே... எப்படி பாஸ் செய்வாள்?’ என்று பெற்றோர் சந்தேகத்துடன் பார்க்கும்போதே மார்கரெட் வகுப்பில் முதல் மாணவியாக வந்து புருவத்தை உயர வைப்பாள். மார்கரெட்டின் இந்த சூட்டிகை தனம்தான் அவரை சம்பந்தமே இல்லாத அரசியல் துறையில்கூட பிரகாசிக்க வைத்தது!
ஒருதரம் ஒரு விஷயத்தைக் கேட்டால், அதை கூர்மையாக கவனத்தில் வைத்துக் கொள்ளும் மார்கரெட்டின் புத்திசாலித்தனமும், மற்றவர்களைத் தன் அறிவார்ந்த பேச்சால் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆற்றலும் இயல்பிலேயே இருந்ததால், மார்கரெட்டைச் சுற்றி எப்போதுமே ஒரு கும்பல் இருந்து கொண்டேயிருந்தது. ‘விளையும் பயிர் முளையிலே’ என்று சும்மாவா சொன்னார்கள்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்களின் கன்சர்வேடிவ் கூட்டமைப்பின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் டீன்_ஏஜ் மாணவியான மார்கரெட். இந்தப் பதவியை வகித்த முதல் பெண்ணும் இவர்தான்!
அப்போதுதான் பல புகழ்பெற்ற அரசியல்வாதிகளை இவர் சந்திக்க முடிந்தது. உடனே நாட்டின் பொதுத்தேர்தல் வேறு வந்துவிட, கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவாக சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்டார் மாணவி மார்கரெட். அரசியல் அவரை உடும்புபோல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
படிப்பு முடிந்தவுடனேயே பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்பட்டார் மார்கரெட். அந்த வயதுக்கு அது சற்றே பேராசைதான் என்றாலும் அந்த இளம்பெண்ணின் சக்தியை உணர்ந்துகொண்ட கட்சி அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பை அளித்தது. ஆனால் மார்கரெட்டிற்கு அளிக்கப்பட்ட அந்தத் தொகுதியோ எதிர்கட்சியான லேபர் கட்சியின் கோட்டை! எதிர்பார்த்தது போலவே மார்கரெட் தோல்வியடைந்தார்.
ஆனால் நஷ்டத்திலும் சில லாபங்கள். ‘எம்.பி. தேர்தலுக்கு நின்ற மிகவும் இளவயதுக்காரர்’ என்ற பெயர் மார்கரெட்டுக்குக் கிடைத்தது. உழைப்பாளிகள் நிறைந்த அந்தத் தொகுதி அவருக்கு பல படிப்பினைகளைத் தந்தது. குறிப்பாக, தேர்தலில் போட்டியிட்டபோது அதிகமான வருமானவரியும் அரசின் குறுக்கீடுகளும் மக்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை நேரடியாகவே அறிந்து கொண்டார் மார்கரெட்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, தன் வருங்காலக் கணவர் டெனிஸ்தாட்சரை மார்கரெட் சந்தித்ததும் இந்தத் தொகுதியில் தான்..!
டெனிஸ் தாட்சர் இரண்டாம் உலகப்போரில் ஒரு மேஜராகப் பணிபுரிந்தவர். பர்மா காஸ்ட்ரால் என்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். மார்கரெட்டின் ஆளுமை நிறைந்த அணுகுமுறை டெனிஸ் தாட்சருக்கு பிடித்திருந்தது. மார்கரெட்டுக்கு டெனிஸின் எளிமை பிடித்திருந்தது. இருவரும் மனம்விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள். மார்கரெட்டுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மகனுக்கு மார்க் என்றும் மகளுக்கு கரோல் என்றும் பெயரிட்டார்கள்.
வீட்டில் குழந்தைகளை கவனித்தபடியே சட்டப்படிப்பு படித்தார் மார்கரெட். அதிலும் குறிப்பாக மக்களை அதிகம் பாதித்த ‘வரிகளை’ மனசில் வைத்துக் கொண்டு அதுபற்றி படித்தார். இதுவே இவரை இன்னும் பிரபலப்படுத்தி விட்டது!
இந்தச் சமயத்தில்தான் லண்டனுக்கு அருகே உள்ள, தொகுதியில் (அதே கன்ஸர்வேடிவ் கட்சியின் பிரதிநிதியாக) போட்டியிட மறுபடியும் சீட் கிடைத்தது மார்கரெட்டுக்கு.. முதல்முறை வெற்றி பெற்றார்! உடனே மார்கரெட்டை கல்வித்துறையின் செயலாளராகவும் நியமித்து கௌரவித்தார்கள்.
பதவி கிடைத்தவுடனே பிரிட்டனின் பொருளாதாரத்தை சரிசெய்ய பல நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் மார்கரெட் தாட்சர். ஆனால் அவற்றில் ஒரு நடவடிக்கை கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. நர்ஸரி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுவந்த இலவச பால் திட்டத்தை இவர் ரத்து செய்துவிட, ‘‘மார்கரெட் தாட்சர், மில்க் ஸ்னாச்சர்!’’ என்றுகூட விமர்சிக்கப்பட்டார். தாட்சர் கவலைப்படவில்லை. ‘‘அவரவர் குழந்தைக்கு அவரவர் பால் வாங்கித் தந்து கொள்ள முடியும். ஆனால், நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் நாட்டில் அனைவருமே நன்றாக இருக்க முடியும்!’’ என்று உறுதியாகச் சொன்னார் தாட்சர்.
தொழிற்சங்கங்களோடு ஏற்பட்ட மோதல்களின் காரணமாக அப்போது பிரதமராக இருந்த ஹீத் தேர்தலில் தோல்வியடைய... உடனே மார்கரெட் தாட்சர், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் அவர் சோஷலிஸத்தை ஆதரிக்கவில்லை. ‘சோஷலிசத்துக்கு எதிர்ப்பாதையில் சென்றால்தான் பிரிட்டனை பொருளாதார அழிவுப்பாதையிலிருந்து மீட்கமுடியும்’ என்று தைரியமாகக் கூறினார்.
தான் சொன்னதை செயல்படுத்தவேண்டிய வாய்ப்பு அவருக்கு சீக்கிரமே வந்து சேர்ந்தது. அடுத்த பொதுத் தேர்தலில் ஜெயித்தவுடனே அவரையே பிரதமராக்கியது கன்சர்வேடிவ் கட்சி. பிரிட்டனின் முதல் பெண் பிரதமரானார் மார்கரெட்!
ஆனால் நாடு சோதனையில் இருந்த காலம் அது. இங்கிலாந்தில் மட்டுமே வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டி விட்டிருந்தது. அந்த சமயத்தில் அர்ஜென்டினா நாடு அவருக்கு ஒரு விதத்தில் உதவி (!) செய்தது.
அதாவது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் எல்லைக்குள் இருந்து வந்த பாக்லாந்து தீவுகளை ஆக்கிரமித்து வந்தது. அர்ஜென்டினா. உடனே பிரிட்டனின் கடற்படையை அங்கு அனுப்பினார் மார்கரெட் தாட்சர். தோல்வி நிச்சயம் என்றும், போருக்கு பதிலாக மார்கரெட் தாட்சர் ராஜதந்திரத்துடன் சமாதானமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் இங்கிலாந்தின் பிரபல நாளிதழ்கள் எல்லாமே அலறின.
ஆனால், எதிர்பாராத திருப்பம்! ‘டக்’கென்று அர்ஜென்டினா அடிபணிந்து, பாக்லாந்து தீவுகளை காலி செய்தது! அப்புறமென்ன? பிரிட்டனின் ஒட்டுமொத்த மீடியாவின் ஆதரவும் மார்கரெட் தாட்சர் பக்கமே முழுசாகத் திரும்பிவிட்டது! அடுத்த பொதுத் தேர்தலிலும் அவரே பிரதமரானார்!
புகழ் வெளிச்சம் என்பது ஆபத்தையும் தேடித் தருவதுதான்! தாட்சருக்கும் அந்த ஆபத்து நிகழ்ந்தது. கட்சி மாநாடு நடக்கும்போது, குண்டு வெடித்ததில் மயிரிழையில் உயிர் தப்பினார் மார்கரெட். அருகே இருந்த ஐந்து முக்கிய பிரமுகர்களும் இந்த குண்டு வெடிப்பில் இறந்துபோனார்கள். குண்டு வைத்தது ஐரிஷ் தீவிரவாதிகள் என்பதும் விரைவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
தான் சொன்னது போலவே தாட்சர் பிரிட்டனின் பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் தாட்சரின் வெற்றி. ஆனாலும்கூட இவர்மீது மிகக் கடுமையான விமர்சனங்களும் எழவே செய்தன.
வருமானவரியைக் குறைத்தார் என்றாலும், ‘வாட்’ என்ற மறைமுக வரியின் விகிதத்தை அதிகப்படுத்தினார். இதனால், ‘பணக்காரர்களின் கைக்கூலி’ என்ற பட்டம் அவருக்குக் கிடைத்தது!
தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைக் குறைத்தார். நாட்டின் பொருளாதாரத்தை மனதில் கொண்டு பல சுரங்கங்களை இவர் மூட, தொழிலாளிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
தவிர, அரசியல்வாதிகள் செய்யும் தேர்தல் செலவுக்கென ‘தேர்தல் வரி’யை இவர் அறிமுகப்படுத்த, அத்தனை கட்சிகளும் அலறின. இவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே தாட்சர் மேல் கடும் கண்டனங்கள் எழுந்தது.
இதனால் அடுத்து நடைபெற்ற கட்சித்தேர்தலின் முதல் சுற்றில் கூட, மிகக் குறைவான ஓட்டு வித்தியாசத்தில்தான் மார்கரெட்டால் வெல்ல முடிந்தது. இரண்டாவது சுற்றில் தோல்விபெறும் வாய்ப்பு உண்டு என்பதை அறிந்துகொண்டதுமே மார்கரெட் தாட்சர் தானாகவே முன்வந்து தன் ராஜினாமாவை தந்துவிட்டார்.
‘‘கட்சியில் தீர்மானங்கள் எடுக்கும் இடத்தில் நான் இல்லை என்பதை நான் உணரவே எனக்குக் கொஞ்சகாலமானது. நான் பிரதமராக அமர்ந்திருந்த அந்த மக்கள் சபையில் தொடர்ந்து அமர எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் நிச்சயம் பிரதமராக மறுபிரவேசம் செய்வீர்கள் என்று பல நண்பர்களும் சொல்கிறார்கள். ஆனால், வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானதல்ல... பதினொன்றரை வருடங்கள் இங்கே பிரதமராக அமர்ந்திருக்கிறேன். போதும்... ஒரு நாள் வழிவிட்டுத்தானே தீர வேண்டும்? தவிர, நான் இதே சபையில் இருந்தால் தற்போதைய பிரதமருக்கும் சங்கடமாக இருக்கிறது. எனவே மேலவைக்கு வந்துள்ள அழைப்பை நான் ஏற்று அங்கே போகிறேன்!’’ என்று தாட்சர் சொல்ல பலரும் நெகிழ்ந்து போனார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் உடல்நிலை சற்று கெட, டாக்டர்களின் ஆலோசனைக்கேற்ப, அரசியல் வாழ்க்கையிலிருந்தே விலகிவிட்டார் மார்கரெட். சென்ற வருடம் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியில், தன் அரசியல் வாழ்க்கைக்கு தன் கணவர் எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதை மிக உணர்ச்சிகரமாக குறிப்பிட்டார் அந்த மனைவி. ஆனால், அப்படிப்பட்ட நல்ல துணையை அவரால் அவர் காலம் முழுக்க பெறமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே. இதயமாற்றுச் சிசிக்சைக்கு உள்ளான டெனிஸ் தாட்சர் சமீபத்தில் மரணமடைந்துவிட்டார்.
சமீபத்தில் மார்கரெட் தாட்சரின் சுயசரிதம் வெளியாகியிருக்கிறது. அதில் அரசியல் தவிர என்னென்ன பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் தாட்சர். நான் வீட்டில் தையல் வேலையை விரும்பி செய்வதுண்டு. துணிகளையும் ஒழுங்குபடுத்துவேன். மீந்துபோன உணவை வீணடிக்கமாட்டேன். அதை மாற்றி ஏதாவது புது அயிட்டம் செய்துவிடுவேன். சினிமா பார்க்கப் பிடிக்கும். பியானோ வாசித்ததுண்டு. சிறுவயதில் உள்ளூர் இசைவிழாக்களில் பரிசுகள்கூட பெற்றதுண்டு. அப்பாவை அதிகம் பிடிக்கும்!’’
மார்கரெட்டின் அரசியல் வாழ்வில் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் குறைச்சலே தவிர, சுவாரஸ்யமான பேச்சுகளுக்கு குறைவு இல்லை! இதோ ‘நச் நச்’ என்ற அவரது பேச்சுக்களில் சில..
‘‘தேம்ஸ் நதியின் மீது நான் நடந்தால் கூட விமர்சகர்கள், ‘மார்கரெட்டுக்கு நீந்தத் தெரியாததால் நடக்கிறாள்’’ என்பார்கள்..’
‘‘பெரிய பொய்களை சொல்லக்கூடாதுதான். ஆனால், தெளிவில்லாத பதில்களைக் கூறலாமே!’’
‘‘நேற்று ‘மம்மி ரிடர்ன்ஸ்’ என்ற சினிமா போஸ்டரைப் பார்த்தேன். இன்னமும் நான் தேவை என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றே இதைக் கருதுகிறேன்...’’
‘‘சேவல்கள் குரல் கொடுக்கலாம்... ஆனால் முட்டையிடுவது கோழிகள்தானே!’’
nantri-Kumudam