Tuesday, July 29, 2008

நீதிபதி நவநீதம் பிள்ளை

நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு:1941) என்பவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூனால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பரிந்துரைக்கப் பட்டவரும் ஆவார்.

ஐநா பொதுச்சபையின் முடிவை எதிர்பார்த்திருக்கும் நவநீதம் பிள்ளை தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை, 1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் , இவரது கணவர் உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.

பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் "ஈக்குவலிட்டி இன்று" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவளித் தமிழ்ப் பெண்மணி இவராவார்.

2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான குரூபர் பரிசு வழங்கப்பட்டது.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு தென்னாப்பிரிக்க தமிழர் நவநீதம் பிள்ளையின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது

நீதிபதி நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பதவிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நீதிபதியான நவநீதம் பிள்ளை அம்மையாரின் பெயரை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் பரிந்துரைத்துள்ளார்.

64 வயதாகும் நீதிபதி நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர்.

இவரது பெயரை ஐ.நா. பொதுச்சபை அங்கீகரிக்குமானால், கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வகித்துவந்த பதவியை நவநீதம் பிள்ளை ஏற்பார்.

நவி என்று அழைக்கப்படுகின்ற நவநீதம் பிள்ளை இந்தியத் தமிழ் பூர்வீகம் கொண்டவர். நடால் மாகாணத்தைச் சேர்ந்தவரான இவரின் தந்தை ஒரு பஸ் டிரைவர். எளிய குடும்பத்திலிருந்து வந்தவரானாலும், இனவெறி ஆட்சிக் காலத்தின்போதே சட்டத்தரணிகள் நிறுவனம் அமைத்த வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை இவரைச் சாரும்.

அமெரிக்காவின் பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.

ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.

Quelle - BBC 28.07.2008