படைப்பிலக்கியத்தோடு மட்டும் தமது சிந்தனையையும் ஆற்றலையும் செயற்பாடுகளையும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் அதற்கப்பால் அரசியல் நடவடிக்கைகளிலும் சமூக அபிவிருத்தி விடயங்களிலும் காட்டிய ஊக்கம் அபாரமானது.
ஆளும் வெள்ளையர் வர்க்கத்தில் பிறந்தவர் சகல சுகபோகங்களுடன் எழுத்தை ஒரு பொழுதுப்போக்காக கொள்ளக்கூடிய ஒரு தராதரத்தில் இருந்த ஒரு பெண் படைப்பாளி தனது இனத்து அதிகார வர்க்கத்தினர் உதைத்து நசுக்கிய ஆபிரிக்க கறுப்பின மக்கள் மீது கொண்ட இரக்கம் போற்றத்தக்கது. அதுவே அவரது எழுத்தின் பிரத்தியட்சம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அமைந்த எழுத்துச் சிற்பங்களே நடின் கோர்டிமருக்கு 1991 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று தந்தன என்றால் மிகையில்லை. இந்த எழுத்து சிற்பி கடந்த ஜூலை 13ஆம் திகதி (2014) தமது தொண்ணூறாவது வயதில் அமரரான செய்தி உலகம் அறிந்ததே.
தென்னாபிரிக்காவில் வெள்ளையர் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் சுதேச கறுப்பு இனமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இன ஒதுக்கல் முகங்களையும் தாம் படைத்த 15 நாவல்கள், பல சிறுகதைத்தொகுதி, கட்டுரை நூல்கள் மற்றும் படைப்புக்கள் மூலம் அவர் வெளிக்கொணர்ந்தார். தென்னாபிரிக்காவின் கலாசாரம் அதன் மக்கள் ஜனநாயகத்துக்கான அவர்களது போராட்டம் ஆகியவற்றின் மீது அவர் செலுத்திய கவனம் மிகமிக ஆழமானது. நோபல் பரிசை வென்றதும் 1980களில் தேசத்துரோக குற்றஞ்சாட்டப்பட்ட இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு எதிராகப்போராடியவர்களுக்கு ஆதரவாகத்தாம் செயற்பட்ட காலத்தையும் அவர் தமது வாழ்வின் மிகப்பெருமிதமான காலமாக கருதினர் என்ற அவரது குடும்பத்தவரின் கூற்று குறிப்பிடத்தக்கது.
அடக்கி, ஒடுக்கி ஆளப்பட்ட கறுப்பின மக்கள் மீது கோர்டிமர் மிக்க அனுதாபம் கொண்டு போராடியதற்கு காரணம் என்ன? அதற்கு விடை அவரது வாழ்வின் பின்னணியில் இருந்தது என்றே கூறலாம்.
கோர்டிமர் ஜோஹானாஸ்பர்க் பேர்க்கிற்கு வெளியே கோடெங் நகரில் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்திற்கு அண்மையான இடத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் இலிடேர் கோர்டிமர் ரஷ்யாவில் இருந்து வந்த ஒரு யூத குடியேற்றவாசி அவரது தாயார் ஹன்னா நான் (Nan) லண்டனைச் சேர்ந்தவர். அவர் யூத பரம்பரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்.
தென்னாபிரிக்காவில் நிலவிய இன மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு இடங்களில் கோர்டிமர் கொண்டிருந்த அக்கறையை தூண்டியவர்கள் அவரது பெற்றோர்களே. ஸாரின் ரஷ்ய ஆட்சியில் ஓர் அகதியாக அவரது தகப்பனார் பெற்ற அனுபவம் அவரது அரசியல் அடையாளத்தை உருவாக்க உதவியது. ஆனால் அவர் ஓர் அரசியல் நடவடிக்கையாகவோ அல்லது கறுப்பின மக்கள்மீது அனுதாபம் கொண்ட ஒருவராகவோ இருக்கவில்லை. ஆனால், அவரது தாயார் தென்னாபிரிக்க மக்களின் வறுமை நிலை மற்றும் அவர்களுக்கு எதிராக காட்டப்பட்டு வந்த பாரபட்சம் ஆகியவற்றில் அனுதாபம் கொண்டவராக இருந்தார். அதன் காரணமாக கறுப்பினப் பிள்ளைகளுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபாடு கொண்டிருந்தார்.இதுவே கோர்டிமரையும் இந் நடவடிக்கைகளுக்கு தூண்டுவதாக இருந்தது.
மேலும், அவர் வளர் இளம் பருவத்திலிருந்த காலத்தில் அவரது வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார் கறுப்பு பணியாளர் ஒருவரின் அறைக்குள் நுழைந்து அவரது கடிதங்கள் மற்றும் தினக்குறிப்பு புத்தகத்தையும் கைப் பற்றிச் சென்றதை நேரடியாகப் பார்த்தவர்.
கத்தோலிக்க கன்னியர் மட பாடசாலை ஒன்றில் கோர்டிமர் கல்வி கற்றார். இருப்பினும் அவரது தாயார் அவரை பெரும்பாலும் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே தங்கவைத்தார். அதற்கு காரணம் அவரது இருதயம் பலவீனமாக இருந்தது எனக்காரணம் கூறிவந்தாராம்.
விற்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைக்கழகத்தில் ஒருவருட காலம் படித்தார் எனினும் பட்ட படிப்பை பூர்த்தி செய்யவில்லை. 1948ஆம் ஆண்டு ஜோஹானாஸ்பர்க் சென்றவர் பின்னர் அங்கே தங்கியிருந்தார். வகுப்புக்கள் எடுத்து கல்வி கற்பித்தவர் தொடர்ந்தும் கதைகளை எழுதினார். அவை பெரும்பாலும் உள்ளூர் தென்னாபிரிக்க சஞ்சிகைகளில் பிரசுரமாகின. இச்சிறுகதைகளில் பல தொகுக்கப்பட்டு Face To Face (நேருக்கு நேர் )என்னும் பெயரில் 1947 இல் பிரசுரிக்கப்பட்டது.
1951இல் நியூயோக்கர் பத்திரிகை இவர் எழுதிய ஏ வாட்சர் ஒவ் த டெட் என்ற கதையை ஏற்றுப் பிரசுரித்தது. இதன் மூலம் இவர் பரவலாக பொதுமக்களால் அறியப்பட்ட ஒரு எழுத்தாளராவார்.
இக்காலகட்டத்துக்குரிய பொருத்தமான இலக்கிய வடிவம் சிறுகதைதான் என நம்பிய இந்த எழுத்தாளர், ”நியூயோக்கர்” மற்றும் முன்னணி இலக்கிய சஞ்சிகைகளிலும் சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதினார்.
இவரது முதலாவது பிரசுர கர்த்தர் லுலு பிறீட்மன், எம்.பி.யான பேர்னாட் பிறிட்மனின் மனைவியாவார். அவர்களது வீட்டில்தான் கோர்டிமர் இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு எதிரான சில எழுத்தாளர்களைச் சந்தித்திருந்தார்.
கோர்டிமரின் முதலாவது நாவலான ”தி லையிங் டேயிஸ்” 1953ஆம் ஆண்டு நூலாகப் பிரசுரிக்கப்பட்டது.
1949ஆம் ஆண்டு ஜெரால்ட் காவ்றன் என்ற பல் வைத்தியரை மணம்புரிந்தார். இத்திருமணத்தின் பயனாக ஒறியன் என்னும் பெயருள்ள மகள் பிறந்தாள் (1950). மூன்று வருடத்தின் பின் இம்மண வாழ்வு முறிந்தது. 1954இல் இவர் றீன்ஹோல்ட் கஸ்ஸிறர் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர் மிகவும் மதிப்புப்பெற்ற ஓவிய வியாபாரியாவார். இம்மண வாழ்க்கை கஸ்ஸிறர் 2001ஆம் ஆண்டு நோய்கண்டு இறக்கும்வரை நீடித்தது. இத்திருமணத்தின் மூலம் ஹூகோ என்ற புத்திரன் பிறந்தான் (1955). இவர் நியூயோர்க்கில் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார். கோர்டிமர் தனது மகனுடன் இணைந்து ஆகக் குறைந்தது இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.
இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு எதிரான இயக்கத்தில் கோர்டிமர் பங்கு கொள்வதற்கு அவரது நெருங்கிய நண்பர் பெற்றி டு ரொயிற் கைது செய்யப்பட்டமையும், ஷார்ப்வில்லி படுகொலைகளும் காரணமாக அமைந்தன. அதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் தீவிரமடைந்தது. நெல்சன் மண்டேலாவின் வழக்கு விசாரணை 1962ஆம் ஆண்டு நடைபெற்ற காலத்தில் அவரது சட்டத்தரணிகளுடன் இவரது நட்புறவு நெருக்கமான ஒன்றாக இருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது நெல்சன் மண்டேலா, பிரதிவாதிக் கைதிக்கூண்டில் நின்று ”சாகத்தயாராக இருக்கிறேன்” என ஆற்றிய உரை மிகப் பிரபலமானது. அந்த உரையை அவர் செம்மைப்படுத்துவதற்கு கோர்டிமரும் உதவி புரிந்தார். 1990ஆம் ஆண்டில் நெல்சன் மன்டேலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவந்தபோது அவர் முதன்முதலில் சந்திக்க விரும்பிய ஆட்களில் ஒருவராக கோர்டிமரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1960, 1970களில் இவர் ஜோஹானஸ்பேர்க்கில் வாழ்ந்திருந்த காலத்தில் அவர் அமெரிக்கா பல்கலைக்கழகங்களில் அவ்வப்போது கற்பித்தலை மேற்கொண்டார். அக்காலத்தில் சர்வதேச இலக்கிய அங்கீகாரத்தைப் பெற ஆரம்பித்தார். 1961ஆம் ஆண்டில் அவருக்கு முதலாவது பிரதானமான விருது ஒன்று கிடைத்தது.
அக்காலகட்டத்தில் தென்னாபிரிக்க அரசாங்கம், இந்த எழுத்தாளரது சில நாவல் படைப்புகளை சில காலம் தடை செய்தது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தென்னாபிரிக்க அரசினால் சட்டவிரோதமானதென தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே கோர்டிமர், அதில் அங்கத்தவராகச் சேர்ந்திருந்தார். தென்னாபிரிக்க கறுப்பின மக்களுக்கு விடிவைத் தேடித்தரக் கூடியது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்தான் என கோர்டிமர் பூரணமாக நம்பினார்.
கோர்டிமரின் இலக்கியப் படைப்புகளுக்குப் பெரும் மதிப்பும், பெறுமதிமிக்க விருதுகளும் பரிசுகளும் பின்னர் கிடைத்த நிலையில் 1991ஆம் ஆண்டு அவருக்கு இலக்கியத்துக்காகக் கிடைத்த நோபல் பரிசு, சர்வதேச புகழை அவருக்குப் பெற்றுக்கொடுத்தது. அவரது மகத்தான காப்பியப் படைப்புகள் மனித சமுதாயத்துக்கு சிறந்த நன்மையைப் புரிந்துள்ளது” என நோபல் பரிசு தேர்வுக்குழு அறிக்கை தெரிவித்தது.
இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு அப்பால், தென்னாபிரிக்க எழுத்தாளர் காங்கிரஸ் மற்றும் பிரதான இலக்கிய அமைப்புகளில் சேர்ந்து, அரச தணிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரச தகவல் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பினைக் காட்டினார்.
1990ஆம் தசாப்தம் மற்றும் 21ஆம் நூற்றாண்டில் தென்னாபிரிக்காவில் எச்.ஐ.வி. எயிட்ஸ் இயக்கத்தில் மும்முரமான ஒரு நடவடிக்கையாளராகவும் கோர்டிமர் விளங்கினார்.
இத்தகையதொரு உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும், அரசியல், சமூக நடவடிக்கையாளருமான நடியா கோர்டிமர் உறுதிப்பாடும், நம்பிக்கையும் அர்த்தமுள்ள வாழ்க்கையினை வாழ்ந்து, தமது 90ஆவது வயதில் தூக்கத்தின்போது அமரரானார்.
‘மகிழ்ச்சி பல்வேறு அம்சங்களிலும் இருந்து ஏற்படுகின்றது. ஆனால் சுதந்திரமின்றி சந்தோஷம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை” என்ற அவரது கூற்று மிகுந்த அர்த்தமுள்ளது.
- அன்னலட்சுமி இராஜதுரை
eKuruvi.com
September 23, 2014