Friday, April 09, 2004

ருக்மணி தேவி அருண்டேல்


கலைத் துறையில் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பெண்மணி


நூற்றாண்டு விழா (1904 _ 2004)
பரத நாட்டியத்திற்கு இன்று நல்ல கௌரவம் கிடைக்கிறதென்றால், அது அவருடைய புண்ணியம்தான் என்று நாட்டில் பேசுவதுண்டு. பரத நாட்டியத்திற்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தவர் அவர். கலைத் துறையில் 20ஆம் நூற்றாண்டில் சிறந்த பெண்மணியாக கௌரவம் பெற்றவர் அவர். அவர் வேறு யாருமல்ல! ருக்மணி அருண்டேல்!

கால«க்ஷத்ரா பெயரைக் கேட்டவுடனே நினைவிற்கு வரும் பெயர் ருக்மணி அருண்டேல். கலா«க்ஷத்ராவுக்கு ஒரு உருவத்தைக் கொடுத்தவர். ருக்மணி அருண்டேலையும், கலா«க்ஷத்ராவையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கமுடியாதுதான். கலைத்துறையில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் புரட்சிகரமான பாதையில் நடந்த புரட்சிப்பெண் ருக்மணி அருண்டேல். இந்த வருடம் பிப்ரவரி 29ஆம் தேதியிலிருந்து ருக்மணி அருண்டேல் நூற்றாண்டு விழா (1904_2004) நடைபெறுகிறது. அதற்காக இந்த வருடம் முழுவதும் நாட்டில் பல்வேறு நகரங்களில் நாட்டிய, இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இவ்விழா 2005 பிப்ரவரியில் நிறைவுபெறும்.

பரத நாட்டியக் கலைஞர்களுக்கு நாட்டில் மிகப்பெரிய கௌரவத்தைப் பெற்றுத் தந்தவர் ருக்மணி அருண்டேல். அவர் பரதக் கலையை தன்னுடைய 30_வது வயதில் கற்றுக் கொண்டாரென்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். கலைக்கு வயது ஒரு வரம்பில்லை என்பது ருக்மணி அரண்டேலின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். நாட்டியம் கற்றுக்கொள்ளும் விஷயத்தில் அவருடைய கணவர் ஜார்ஜ் சிட்னி அருண்டேலின் பங்கும் எவ்வளவோ இருக்கிறது.

சென்னை தியோசாபிகல் சொசைட்டி முதல்வர் சிட்னி அருண்டேல், ருக்மணி அருண்டேலை விட வயதில் மூத்தவர். வெளிநாட்டுக்காரர் (பிரிட்டன்).

அச்சாரமுள்ள பிராமண குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண், அக்காலத்தில் ஒரு வெளிநாட்டுக்காரரை மணப்பதென்பது சாதாரண விஷயமல்ல. அக்காலத்தில் “தேவதாசி நாட்டியம்” என்று கருதப்பட்ட நாட்டியக் கலையை கற்றுக் கொள்வதில் அவர் அதே தைரியத்தைக் காண்பித்தார். இந்தியாவில் மட்டுமன்றி, உலக அளவில் பரதக் கலைக்கு ஒரு கௌரவத்தைப் பெற்றுத் தந்தார்.

ருக்மணி அருண்டேல் பரதக் கலையைக் கற்றுக் கொள்வதற்குக் காரணம் ரஷ்யன் பாலே டான்ஸர் அன்னா பாவ்லோவா(1882_1931). ருக்மணி அருண்டேல் அவரிடம் பாலே நாட்டியத்தைக் கற்றுக் கொண்டிருக்கும்போது, உன் தோற்றம் பரதக் கலைக்கு மிக எடுப்பாக இருக்குமென்று ஊக்குவித்தார். அவருடைய யோசனை ருக்மணி அருண்டேலின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ‘கலா«க்ஷத்ரா’ எனும் ஒரு கலைக்கூடம் உருவாவதற்கு மூலகாரணமாய் இருந்தது.

ருக்மணி தேவியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி மிகப்பெரிய வேத பண்டிதர். தாய் சேஷம்மாள் சங்கீதக் கலைக்கு ஒரு மையமான திருவையாறைச் சேர்ந்தவர். தந்தை தியோசாபிகல் சொசைட்டியுடன் தொடர்புள்ளவர். ஆகையால் ருக்மணிதேவிக்கு சிறு வயதிலிருந்தே அந்த அமைப்புடன் ஒரு தொடர்பு உண்டு. 16 வயதில் சிட்னி அரண்டேலை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ருக்மணி பல நாடுகளுக்குச் சென்று வந்தார். அப்படித்தான் அவருக்கு ரஷ்யன் பாலே டான்ஸர் அன்னா பாவ்லோவாவுடன் நட்பு தொடங்கியது.

1933_ல் மியூஸிக் அகாடமியில் பாண்டநல்லுர் சகோதரிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியை ருக்மணி பார்க்க நேர்ந்தது. அந்த பரத நாட்டிய நிகழ்ச்சி ருக்மணி தேவிக்கு மிகவும் பிடித்தது. உடனே அந்தக் கலையை பாண்டநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார்.

ஆனால், முதலில் மீனாட்சிசுந்தரம் அவருக்குக் கற்றுத்தர சம்மதிக்கவில்லை. பிறகு எவ்வளவோ வற்புறுத்தல்களுக்குப் பிறகு அவர் தன்னுடைய சம்மதத்தைத் தெரிவித்தார்.

ருக்மணி அருண்டேல் தன்னுடைய அரங்கேற்றத்தை தியோசாபிகல் சொசைட்டியில் செய்தார். அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. அவர் உருவாக்கிய வால்மீகி ராமாயண நாட்டிய நிகழ்ச்சி பலரின் பாராட்டுக்களைப் பெற்றது.

அவர் தன்னுடைய 82_வது வயதில் 1986 பிப்ரவரி 24ஆம் தேதியன்று காலமானார். அவர் இறப்பதற்கு முன் ஒரு நிருபரிடம் வேதனையுடன் கூறியதாவது, “நாட்டில் மக்களுடைய யோசனை மாறி வருகிறது. எல்லோருக்கும் பணம்தான் முக்கியம் ஆகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். கலைஞர்கள் தங்களுடைய மனதையும், ஆன்மாவையும் கலைக்குத்தான் அர்ப்பணம் செய்யவேண்டும்” என்றார்.

கடைசி நிமிடங்களிலும் கலையைப் பற்றி நினைத்த அவரின் கலை உணர்வுகள் பற்றி வேறு ஏதும் சொல்லவா வேண்டும்?

-அருண்-
nantri.kumutham
Photos - Kumutham