Wednesday, June 09, 2004

கவிஞர் சல்மா


ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர். அப்பா சம்சுதீன். அம்மா சர்புன்னிசா. 37 வயதாகும் சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா பீவி. கணவர் மாலிக். வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் கூறும் சல்மாவின் கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களாக மட்டுமே நிற்காமல், பெண்களின் பொதுவான துயரங்களாக விரிகின்றன. இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) பேரூராட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார். சில கதைகளும் எழுதியுள்ள இவர் இப்போது ஒரு நாவல் எழுதியுள்ளார். "இரண்டாம் ஜாமங்களின் கதை" என்ற அந்த நாவல் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வர உள்ளது. உதவி ஆசிரியர் பெ. அய்யனார் துவரங்குறிச்சியில் சல்மாவின் வீட்டில் அவரை சந்தித்து உரையாடினார். கவிதை, வாழ்க்கை, அவரது இலங்கைப் பயணம் என்று பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கியமான பகுதிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. "பல ஆண்டுகளுக்கு முன்பு நகுலனைத் திருவனந்தபுரத்தில் சந்தித்து "புதிய பார்வை" இதழுக்காக நேர்கண்டபோது எனக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பை சல்மாவுடன் உரையாடியபோது உணர்ந்தேன்." என்கிறார் அய்யனார்.


"எழுத்துதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம்."
"பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்"
"ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான்
பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது"

நேர்காணல் - கவிஞர் சல்மா


சந்திப்பு - பெ.அய்யனார்

இஸ்லாமியப் பெண்களுக்கான அடையாளம் மட்டும்தானே உங்கள் கவிதைகளில் உள்ளது?

எனக்குத் தெரிந்த எத்தனையோ இந்துக் குடும்பங்களில் என்னைப் போன்று அடக்கிவைக்கப்படும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். வீட்டிலிருந்து வெளியில் வராமல் எவ்வளவே பேர் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்து-முஸ்லீம் என்ற வேறுபாடில்லாமல் பெண்களுக்கான சிரமம் என்பது ஒன்றாகவே இருக்கிறது.இதை என் இந்துத் தோழிகள் மூலமாக அனுபவப்பூர்வமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அப்போதுதான் எல்லாப் பெண்களுக்குமான பிரச்சினையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். 'இஸ்லாமியப் பெண்' என்ற தனிப்பட்ட அடையாளம் எனக்கு வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். என் தனிப்பட்ட அடையாளம் மட்டும்தான் என் கவிதைகளில் இருக்கிறது என்றால் எல்லாத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கவிதைகளாக அவை இருந்திருக்காது. ஜாதி மத வேறுபாடுகளைத் தாண்டிய, எல்லாப் பெண்களின் அனுபவமாகத்தான் என் கவிதைகளைப் பார்க்கிறேன்.

மதம் என்பது ஒரு வாழ்க்கை முறைதான். இஸ்லாமிய மத ஈடுபாடு உங்களுக்கு உண்டா?

ஆரம்பத்தில் மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை எனக்கிருந்தது. பின்பு ருஷ்ய இலக்கியம், மார்க்சியம், லெனின் பற்றி நிறைய வாசிக்க ஆரம்பித்த பின்பு எனது 16, 17 வயதுகளில் மதத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அந்த நம்பிக்கை இல்லை என்று காட்டிக்கொண்டதாலேயே நிறையப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன்.

குரான் ஓதுவதற்கான போட்டியில் பள்ளிவாசலில் நிறையப் பரிசுகள் எல்லாம் பெற்றுள்ளேன். அப்படியான ஒருத்தி திடீரென்று தொழுகை செய்வதை நிறுத்திவிட்டவுடன் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தானாகவே வருகிறது. மற்ற விஷயங்களில் என்னை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள்கூட என்னைப் பற்றி அதிகக் கவலைகொள்ளத் தொடங்கினர். யாருக்காகவும் என்னை இதுவரை மாற்றிக் கொண்டதில்லை. ஒரு நம்பிக்கை போய்விட்டது. அதை மனதின்றிப் பிறருக்காகச் செய்வதில் விருப்பமில்லை. அப்போது பல நாள் வெறுமனே நின்றுகொண்டு இருந்திருக்கிறேன். அம்மா பிடிவாதமாகத் தொழச் சொல்லி அழுவார்கள். காலப்போக்கில் அவர்களுக்கும் சலிப்பு வந்து விட்டுவிட்டார்கள். இப்போது இங்குள்ள எல்லோருக்கும் நான் ஒரு 'காஃபிர்'. அதாவது இந்து. ஆனால் ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்படும் விஷயங்கள் பின்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. சென்னைக்கு வந்து லண்டன் TTN என்ற தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருந்தேன். சென்னைக்கு வந்தால் முஸ்லீமாக என்னை அடையாளம் காட்டவேண்டிய அவசியம் கிடையாது. பேட்டி கொடுத்தபோது ஃபுர்கா அணியாது சாதாரணமாகப் பேசிவிட்டு வந்தேன். அந்தப் பேட்டி ஐரோப்பாக் கண்டத்தில் மட்டும்தான் தெரியும் என்றார்கள். ஆனால் சவூதி முழுக்கவும் அந்த ஒளிபரப்புத் தெரிந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சென்று சவூதியில் வேலை பார்ப்பவர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து, பதிவுசெய்து அதை எங்கள் ஊருக்கு (துவரங்குறிச்சி) அனுப்பி வைத்துவிட்டார்கள். ஊர் முழுக்கப் பரவி, நான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள். வீட்டிலிருந்து வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அதனால் எனக்கு ஏற்பட்ட மன வருத்தத்தைச் சொல்வது சிரமம்.

ஒவ்வொருவரும் கேட்ட கற்பனையான கேள்விகளை நினைத்தே பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, "ஒரு ஆண் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய், அவன் உன் கையைப் பிடித்து இழுத்தால் நீ என்ன செய்ய முடியும்?" அதற்கு "தெருவில் நான் போகும்போது எவனாவது கையைப் பிடித்து இழுத்தால் என்ன செய்வது" என்று நான் சொல்லி கேள்வி கேட்பவர்களை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அப்போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். ஹமீது கூட சேர்ந்துதான் இப்படி ஆகிவிட்டாள். இனி அவனைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தவள் கடவுள் மறுப்புப் பற்றிப் பேசுவதை அவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இப்படியான கேள்விகளுக்குப் பதில் சொல்லி சக்தியை வீணாக்க வேண்டாம் என்று தொடர்ந்து பத்து நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தேன். வீட்டிற்குள்ளும் கடுமையான பிரச்சினை வந்தது. "இனிமேல் எந்தப் பேட்டியும் கொடுக்கக்கூடாது" என்று அப்பா, அம்மாவிலிருந்து கணவர்வரை எல்லோருமே சொன்னார்கள். தீராத அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் வருத்தம் கொண்டார்கள். அவர்களிடம் "இனிமேல் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்" என்று சொல்லி சமாதானப்படுத்தினேன். அந்த விஷயம் ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்ததே தவிர, இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்தவிகடன், தினமணி என்று பல பேட்டிகள் வந்து எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

உள்ளூர் ஜமாத்தாரிடமிருந்து ஏதும் எதிர்ப்பு வரவில்லையா?

இல்லை. அதற்கு முக்கிய காரணம் இதுவரை முஸ்லீம் சமூகத்தைப் பற்றி எதையும் எழுதவில்லை. அதைப் பற்றிய விமர்சனம் எனக்கு இருந்தாலும் அதை எழுத்தாக்கப் பயமாக இருக்கிறது. விமர்சனபூர்வமான கருத்துக்களைச் சொல்ல இங்கு இடமேயில்லை. சிறுபான்மையினர் மதமான இஸ்லாமை அந்த மதத்தில் பிறந்த ஒருவராலேயே விமர்சனம் செய்ய முடியாது. அப்படிச் செய்யும்போது நம்மைத் தண்டிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்குவார்கள். உண்மையிலேயே என்ன சொல்ல வருகிறோம் என்பதைக்கூடப் பார்க்க மாட்டார்கள். அதில் அக்கறையும் இருக்காது.

சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோதுகூட நான் பேசிய விஷயம் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. முற்போக்கு இலக்கிய அமைப்பு சார்பாக ஒரு சந்திப்புக்கு டொமினிக் ஜீவா ஏற்பாடு செய்திருந்தார். நானும் அம்பையும் அந்தக் கூட்டத்திற்க சென்றோம். குரானில் பெண்களக்கு சாதகமாக உள்ள விஷயங்களையும் பாதகமாக உள்ளதாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் பற்றியும் பேசலாம் என்றேன். ஒரு சம்பவ நிகழ்விற்கு சாட்சி வைக்க வேண்டும் என்றால் அந்தச் சாட்சி பெண்ணாக இருந்தால் இரண்டு பெண்கள் தேவை என்றும் ஆணாக இருந்தால் ஒருவர் மட்டுமே போதுமானது என்றும் குரானில் வருகிறது. முல்லாக்கள் ஹஜரத்துகள் போன்ற மதத் தலைவர்கள் இதை மட்டும்தான் அளவுகோலாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவார்கள். தங்களுக்கு சாதகமாக உள்ள மேலோட்டமான விஷயங்களை மட்டுமே கணக்கில் கொள்வார்கள். அதே விஷயத்தில் பெண்களுக்குச் சாதகமானவையும் குரானில் இருக்கும். எட்டுவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதில் உள்ள ஒரே விஷயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். இதேபோலத்தான் பெண்களைத் "தலாக்" செய்வதிலும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான முறை இருக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசி விவாதத்தை உருவாக்கினால்தான் 'இஸ்லாம்' குறித்த தவறான அபிப்பிராயங்கள் மற்றவர்களுக்கு உருவாகாது என்று அந்தக் கூட்டத்தில் சொன்னேன். உடனே, அங்கிருந்த முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர் - அங்கு அவர் முக்கியமான கவிஞராம் - "இஸ்லாம் ஒரு முழுமையடைந்த ஒரு மதம். குரானும் முழுமையடைந்த வேதம். அதைப்பற்றி இங்கு யாரும் பேசக்கூடாது. விவாதிப்பது என்ற வார்த்தையே சொல்லக்கூடாது. நீங்கள் பேசியது தவறு" என்று மிகக் கடுமையான கோபத்துடன் பேசினார்.

தமிழகத்திலிருந்து எங்களை இலங்கைக்கு அழைத்திருந்தவர்கள் "Muslim Women's Research and Action Forum" என்ற அமைப்பை நடத்தும் ஐந்து முஸ்லீம் பெண்கள். முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள். அவர்களுக்குக் கொஞ்சம் தர்மசங்கடமாகிவிட்டது. இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சொல்லி முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். எதிராகப் பேசியவர்களின் குணம் தெரிந்து அப்படிச் செய்தார்கள். எதிராகப் பேசிய அந்தக் கவிஞர் என் தம்பியிடம் என்னைப் பற்றித் தவறாகப் பேசியிருக்கிறார். "இதை நான் சாதாரணமாக விடமாட்டேன்" என்றும் மிரட்டல் தொனியில் சொல்லியிருக்கிறார்.

இஸ்லாமிய மத ரீதியான நம்பிக்கை தமிழகத்தைவிட இலங்கையில் அதிகமாக உள்ளதோ?

இலங்கையில் நம் ஊரில் இருப்பதைவிடத் தீவிரமாகவே உள்ளது. தாங்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்திக் கொள்ள மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களது வாழ்க்கைநிலை. தமிழ் முஸ்லீம் என்ற அடையாளத்தை விரும்பியே வகுத்துக் கொள்கிறார்கள்.

"நான் தமிழனல்ல. முஸ்லீம். புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்கள் வேறு ஆட்கள். அவர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள்தான் போராடுகிறார்கள். நாங்கள் போராடவில்லை" என்பதை சிங்கள ராணுவத்திற்கும் அரசிற்கும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் புலிகளினால் அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால் தங்களைத் தனிச் சமூகமாகக் காட்டிக்கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். புலிகளின் மீதான வெறுப்பை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மத அடையாளத்தைக் காட்டிக்கொண்டு தங்களின் உயிரையும் சொத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இனப்பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பெல்லாம் பெண்கள் வெளியில் செல்லும்போது ஃபுர்கா அணிந்து செல்ல மாட்டார்களாம். ஆனால் இப்போதெல்லாம் ஃபுர்கா அணியாமல் முஸ்லீம் பெண்கள் வெளியில் செல்வதே இல்லை. அதனால் தனி ஒரு இனமாகக் காட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்குள் இருக்கும் போது எப்படியிருந்தாலும் வெளியில் வரும்போது முஸ்லீம் என்ற அடையாளத்துடன்தான் வருகிறார்கள். "தமிழர்களல்ல நாங்கள். முஸ்லீம்கள்" என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் தாய்மொழி தமிழ்தான். "புலிகள்மீது எங்களுக்குச் சிறிதளவும் நம்பிக்கையில்லை. அவர்களிமிடருந்து தனித்து நிற்கவே விரும்புகிறோம்" என்பதே அவர்கள் நிலை.

நான் அங்கு இருந்த சமயத்தில்கூட கிளிநொச்சியில் கலவரம் நடந்தது. அதைக்கூட உதாரணமாகக் காட்டி அவர்கள் எப்போதுமே இப்படித்தான் நம்மை அவமானப் படுத்துகிறார்கள் என்று கோபமாகச் சொன்னார்கள். புலிகளின் தலைமை முஸ்லீம்களுடன் சமாதானத்தை விரும்பினாலும்கூட மாவட்டப் பிரதிநிதிகளின் முஸ்லீம் வெறுப்பு அதைச் சாதிக்கவிடாது என்றே பெரும்பான்மையோர் சொன்னார்கள். ஒரு சில விஷயங்களை அவர்கள் சொன்னபோது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

தமிழகத்திலுள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இடையே என்னவிதமான வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்?

அங்குள்ளவர்கள் கலாச்சாரரீதியாக மிகுந்த சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நம்முடைய கலாச்சாரம் எல்லாப் பெண்களுக்கும் ஒருவித மனத்தடையை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருக்கும்வரை முஸ்லீம்கள் என்ற அடையாளத்தைப் பார்க்க முடியவேயில்லை. முஸ்லீம் பெண்கள் இந்த அளவிற்குச் சுதந்திரமாக இருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உடைகளிலிருந்து பேசுவதுவரை நிறைய வித்தியாசத்தைப் பார்த்தேன். பெண்களுக்கு நல்ல கல்வி கிடைத்திருக்கிறது. வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப் பல விஷயங்கள் அங்கு சாத்தியமாகி இருக்கிறது. தமிழகத்தில் அந்த அளவிற்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.

நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?

நான் ஒன்பதாவது வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் எங்கள் ஊரான துவரங்குறிச்சி தியேட்டரில் ஏதோ ஒரு படம் போட்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் திரைப்படம் என்பது ஒரு அதிசயமானது. நூலகத்திற்குத்தான் நான் போனேன். அதற்கு அருகில்தான் திரையரங்கு. திரைப்படப் பாடல்களின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. சனி ஞாயிறு மட்டும்தான் பகல்காட்சி நடைபெறும். திரைப்படப் பாடல்கள் காதில் தொடர்ந்து விழுந்துகொண்டிருக்க நாமும் ஏன் சினிமாவிற்குச் செல்லக்கூடாது என்று எனக்கும் என்னுடன் நூலகத்தில் இருந்த இரண்டு தோழிகளுக்கும் தோன்றியது. எங்கள் கையிலும் காசிருந்ததால் உடனே திரையரங்குக்குள் போய்விட்டோம். என்ன படம் என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. உள்ளே போனால் பெண்கள் யாரும் இல்லை. எல்லாம் ஆண்கள். மதிய நேரத்தில் பெண்கள் யாரும் படத்திற்கு வரமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டோம். படம் பார்க்க வந்த ஆண்கள் எல்லோரும் எங்களையே அதிசயமாகப் பார்க்கிறார்கள். எங்கள் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. படம் திரையில் ஒட ஆரம்பித்ததும்தான் அதிர்ச்சியடைந்தோம்.

அது ஒரு மலையாள 'ஏ' படம். ஆண்கள் பகுதியில் கூட்டம் நிரம்பியுள்ளது. அதில் என் தம்பியும் இருப்பதைப் பார்க்கிறேன். பெண்கள் பகுதியில் நாங்கள் நாலே நாலு பெண்கள் மட்டும்தான். ஆண்கள் யாரும் திரையில் நடப்பதைப் பார்க்காமல் எங்களையே கண்கொட்டாமல் பார்க்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் உடலே நடுங்குகிறது. பெருத்த அவமானமாக உணர்கிறோம். வீட்டிற்குத் தெரிந்தால் வெட்டிக் கொன்றுவிடுவார்கள். படத்தை நாங்கள் பார்க்காமல் தரையைப் பார்த்தபடியே இருக்கிறோம். படம் முடிந்து எல்லோரும் வெளியே போய் அரை மணி நேரத்திற்குப் பின்பு உள்ளேயே உட்கார்ந்திருக்கிறோம். பயத்திலும் அதிர்ச்சியிலும் எங்களுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. தயக்கத்துடன் நாங்கள் வெளியில் சென்றால் எல்லா ஆண்களும் திரையரங்கு வாசலைப் பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள். நாங்கள் யாராக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் போவோம் என்பதைப்போல் எல்லோருமே நிற்கிறார்கள். வீட்டிற்குப் போவதற்கு முன்பே அம்மாவிற்குத் தகவல் போய்விட்டது. அன்றிலிருந்து பள்ளிக்குப் போகவில்லை. அப்போதே தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். தம்பி அதே படத்தைப் பார்க்கிறான். அவன் அடுத்த நாளிலிருந்து பள்ளிக்குப் போகவே செய்கிறான்; எந்தத் தண்டனையுமின்றி. அந்தச் சமயத்தில்தான் நான் வேறு அவன் வேறு என்ற பாகுபாடை உணரச் செய்தார்கள். பெண் என்ற ஒரே காரணத்திற்காக என் படிப்பு பறிக்கப்படுகிறது.

அதேபோல பக்ரீத், ரம்ஜான் சமயத்தில் நல்ல உடை உடுத்தி வெளியில் சென்று எல்லா ஆண்களும் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்துவார்கள். ஆனால் பெண்கள் ஒன்று சேர முடியாது. அப்போது எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது. பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்தினால் என்ன என்று தோன்றியிருக்கிறது. நம்மை மட்டும் ஏன் பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிப்பதில்லை, வீட்டிற்குள்ளேயே பெண்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். சொந்த வாழ்க்கை அனுபவம்தான் எல்லாவற்றையும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. வேறுவிதமான சிந்தனைகளுக்கும் இதுதான் காரணம் என்றும் நினைக்கிறேன். எவ்வளவு படிப்பிருந்தாலும் அனுபவம்தான் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திருந்தால் என்னால் எதுவும் எழுதியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.

அம்பையின் எழுத்துக்களில் வலிந்து சொல்லும் பெண்ணியக் கருத்துக்கள் தூக்கலாக இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள். உங்களின் எழுத்துக்களில் அப்படி இல்லை என்பதைப் பார்க்க முடிகிறது. இதை எப்படி அடைந்தீர்கள்?

எந்த அளவிற்கு அதிகமான அடக்குமுறைக்கு உள்ளாகிறோமோ அந்த அளவிற்குத் தீவிரமான வெளிப்பாடாக எழுத்துக்கள் வெளிவரும் என்றே நம்புகிறேன். இதை எனது படைப்புகளை முன்வைத்தே நிரூபிக்க முடியும். சிந்தனை ரீதியான புதிய விஷயங்களே அம்பையின் கதைகளில் தூக்கலாகத் தெரியும்.

சிந்தனை, வாசிப்பு அனுபவம் சார்ந்தே பெரும்பாலான கதைகளை அம்பை எழுதியிருக்கிறார். இதை அம்பையின் 'காட்டில் ஒரு மான்' கதைத் தொகுப்பைப் பற்றிய என் விமர்சனத்தில்கூட பதிவு செய்துள்ளேன். அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எனது எழுத்துக்கள் என் வாழ்பனுபவம் சார்ந்து இருப்பதால் யதார்த்தமாகவும் இருக்கிறது. பெண்ணியம் பற்றிய தீவிரமான கருத்துகளை பலபேர் குறைசொல்லிக் கேட்டிருக்கிறேன். தீவிரமாகப் பேசுவதாலோ பிறரோடு சண்டை போடுவதாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை. அமைதியாகவும் சிறிய வார்த்தைகள் மூலமாகவும் பெண்ணியக் கருத்துக்களைத் தீவிரமாகச் சொல்ல முடியும் என்றே நம்புகிறேன். அம்பையின் செயல்பாடுகள் அவரைப் பொறுத்தளவில் சரியானதுதான். அதை நான் குறையாகச் சொல்லவில்லை.

ஒரு பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு இங்கே என்ன நடக்கிறது என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்கிறேன். என் நிலைமைதான் இங்கு எல்லாப்பெண்களுக்கும்.

"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" தொகுப்பு முன்னுரையில் மொழியின் போதாமை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போதும் அப்படித்தான் நினைக்கிறீர்களா?

பெண்ணிற்கான மொழி இன்னும் வீரியத்துடன் வெளிப்பட வேண்டும் என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், நம்மிடம் இருக்கும் மொழியை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளோமா என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டால் 'இல்லை' என்ற பதிலையே நான் இப்போதும் சொல்ல விரும்புகிறேன். ஆனால், அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது என்ற நிறைவின்மை இருந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கான மொழியை பெண்கள்தான் உருவாக்க வேண்டும். இன்றைய மொழி ஆணின் சிந்தனைக்கேற்ற மொழியாகத்தான் இருக்கிறது. பெண்கள் சிந்திப்பதுகூட ஆணின் சிந்தனை முறையை ஒட்டித்தான் வருகிறது.

பெண்மொழி என்பதற்கான வரையறை என்ன என்று சொல்ல முடியுமா?

ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான் பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது. இது தவறு என்ற யோசனையே இல்லாமல்தான் பெண்ணும் யோசிக்கிறாள். பெண்கள் தங்களுக்கென்று சுயமான சிந்தனையை வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையை வைத்துக்கூட இதை விளக்க முடியும். ஒரு ஆண் வரதட்சணை கேட்கும் அதே நேரம் பெண்ணும் கேட்கிறாள். மகனுக்குத் திருமணம் செய்விக்கும் அம்மா வரதட்சணை கேட்பதிலும் மகனுடன் போட்டிபோடுகிறாள். திருமணமான பின்பு அவள் இருக்கும்வரை அவளை வைத்துச் சாப்பாடு போடுகிறோம். காப்பாற்றுகிறோம். அதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகைதான் நீங்கள் கொடுப்பது என்றெல்லாம் ஒருபெண்தான் சொல்கிறாள். இப்படிப் பேச வைப்பது ஒரு ஆணின் சிந்தனைதான். இப்படியான சிந்தனைகளிலிருந்து வெளிவரும் போதுதான் பெண்ணிற்கான முழுமையான சிந்தனை வரும். யாரைப் பற்றி, யாருக்காகச் சிந்திக்கிறோம் என்றுகூட அறியாமல் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு ஆணின் பிரதிநிதியாக ஏன் செயல்பட வேண்டும் என்பதையும் யோசிப்பதில்லை.

பெண்களுக்காகப் படைப்புரீதியாகக் குரல்கொடுத்த அம்பை போன்றவர்கள் பெண் ஆண் என்று தீவிரமான வேறுபாடைச் சொன்னதில்லை. ஆனால் இப்போது குட்டிரேவதி, மாலதிமைத்ரி, நீங்கள் எல்லோரும் அப்படியான பாகுப்பாட்டை விரும்புவது ஏன்?

'அம்பை' தன்னைப் பெண் என்ற அடையாள வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதை விரும்பவும் மாட்டார்கள். ஆனால் எனக்கென்னவோ பெண், ஆண் என்ற பாகுபாடு அவசியமாகத்தான் தோன்றுகிறது. பெண் தன்னைப் பாகுப்படுத்திக் கொண்டு தன் விடுதலையை நோக்கியப் பயணத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது? அம்பையிடம் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர்களது தளம் அறிவுபூர்வமானது. அறிவும் உணர்வும் சேரும்போதுதான் சிறப்பான படைப்புகள் வெளிவரும். இப்போது எழுதியுள்ள என்னுடைய நாவலைக்கூட இப்படியானதாகத்தான் நினைக்கிறேன். என் அனுபவங்களை உணர்வுபூர்வமாக மட்டும் பார்க்கக் கூடாது. புதிய பார்வைகளை உருவாக்கும் விதமாக எழுதியிருக்கிறேன். என் அனுபவத்தை எல்லோருக்கும் பொதுவான விஷயமாக மாற்றுவதுதான் படைப்பின் வெற்றியாக நினைக்கிறேன். மேலும் உணர்வுகளை அறிவுரீதியாகச் சிந்தித்து படைப்பாக மாற்றுவதை விரும்புகிறேன்.

நவீனப் பெண் படைப்பாளிகள் பலர் பெண் உடலைக் கொண்டாடுவது பற்றிப் பல இடங்களில் பேசுகிறார்கள். பெண் உடலைக் கொண்டாடுவது என்றால் என்ன?

மற்றவர்கள் எதை உணர்த்த இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. பொதுவாக உடல் என்பதையே அருவருப்பான ஒன்றாகத்தான் பார்த்து வந்திருக்கிறோம். இதையொட்டி நம் மனம் முழுக்கக் குற்ற உணர்ச்சி நிரம்பி உள்ளது. இந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்த ஆண் பெண் பாகுபாடில்லாமல் சகலரும் மீள வேண்டிய தேவை உள்ளது. சினிமா, தொலைக்காட்சி மூலம் நம் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது என்ற புலம்பல்களுக்கும் காரணத்தைத் தேடினால் உடல் பற்றிய நம் அறியாமையும் கற்பனையும்தான் வெளிப்படும். (தமிழ் சினிமா இதற்கு விதிவிலக்கு.) உடல் என்பது அருவருக்கத் தக்கதல்ல என்பதை நிரூபித்துவிட்டாலே பல தேவையற்ற சிக்கல்களுக்கு விடை கிடைக்கும். இதைப் பற்றி பலவிதமாக யோசித்தாலும் எதிலிருந்தும் விடுபடமுடியாத தன்மைதான் தொடர்கிறது. மேலும் பெண் உடல் "தீட்டு", "பாவம்" என்று இன்றுவரை சொல்லப்பட்டுத்தானே வருகிறது. இதிலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும் என்பதே என் எண்ணம். இதை என் கவிதையிலும் சொல்லியிருக்கிறேன்.

உங்கள் கவிதைகளில் வழியற்று ஒடுங்கிப்போன பெண்ணின் உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. மீண்டு வர வேண்டும் என்றோ, மீற வேண்டும் என்றோ கவிதைகளில் காண முடியவில்லையே?

மீள வேண்டும். மீற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பமோ சூழலோ எனக்கில்லை. ஒரு வட்டத்திற்குள்தான் சுற்றிவருகிறேன். இந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. எப்போதும் யாரையாவது சார்ந்து வாழ வேண்டும் என்பதே அவநம்பிக்கையையே ஏற்படுத்துகிறது. வெளி உலகம் பற்றிய பயம் சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம்தான். ஆனாலும் மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நான் எழுதத் தொடங்கியதிலிருந்தே அதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

உங்கள் ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்தவுடன் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளீர்கள். இது 'பெண்' என்ற ஒரே காரணத்திற்காகவா?

எனக்கு மட்டுமல்ல. சமீபத்தில் எழுதும் எல்லாப் பெண்களுக்குமே கவனம் கிடைத்திருக்கிறது. எத்தனையோ தொகுப்புக்கள் போட்ட ஆண்களைவிட குட்டிரேவதி, மாலதிமைத்ரி ஆகிய பெண் கவிஞர்களுக்கு நல்ல கவனம் கிடைத்திருக்கிறது. பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவுடன் மற்றவர்களைவிடக் கொஞ்சம் கூடுதலான கவனம் கிடைத்திருப்பது உண்மைதான். நவீன இலக்கிய ஆர்வமுள்ள ஒருவர் அரசியலுக்குள் வரும்போது இப்படியான கவனம் கிடைப்பதைத் தவிரக்க முடியாது.

மேலும் இப்போது எழுதும் என்னைப் போன்ற பல பெண்கள் புதுவிதமாக எழுதத் தொடங்கியிருகிறார்கள். தமிழில் இதுவரை இல்லாததைச் சொல்லும்போது பெண்களுக்குக் கிடைக்கும் கவனம் எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. "இப்படியான கவனம் இடதுஒதுக்கீடு போல" என்று ஒரு சிலர் இதைக் குறை கூறுவார்கள். நல்ல விஷயங்களுக்குக் கவனம் கிடைக்காத ஒரு சூழலில் கவனம் கிடைக்கும்போது அதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? இந்தக் கவனம் பிற பெண்களுக்கும் எழுதுவதற்கான ஆர்வத்தைத் தூண்டும் என்றே நினைக்கிறேன். அரசியலுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் எனக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இது மிகுந்த ஆறுதலாகவும் உள்ளது. உதாரணமாக பேரூராட்சி சார்ந்த அலுவலக விஷயமாகப் பல அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அரசு எந்த அளவுக்கு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதைப் பார்த்து உணர முடிகிறது. இந்த ஓராண்டிற்குள் சலிப்புத்தான் வந்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மக்களுக்கு எந்தவிதப் பயனுமின்றித்தான் செயல்படவேண்டுமோ என்றுகூடத் தோன்றும். பஞ்சாயத்துத் தலைவர்கள் எந்த அளவிற்கு அலைக்கழக்கப்படுகிறார்கள் என்பதையும் பார்க்கிறேன்.

ஒவ்வொரு அதிகாரியைச் சந்திக்கும்போது நான் எழுத்தாளர் என்று வேண்டுமென்றே அறிமுகம் செய்துகொள்வேன். அப்போது கொஞ்சம் பயப்படவே செய்கிறார்கள். 'விஷயம் தெரிந்த ஆள்' இவர்களை அலைக்கழிக்கக் கூடாது என்ற திடீரென்று அவர்களுக்கே தோன்றுகிறது. 'இந்தியன் எக்ஸ்பிரஸி'ல் வந்த என் பேட்டியை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காட்டினேன். அதை அவரிடம் காட்டிப் பெருமையடித்துக் கொள்வது என் நோக்கமல்ல. அதனால் ஒரு ஃபைல் நகர்கிறது.

இந்நிலையில் பொதுஜனங்களும் படிப்பறிவு குறைவான பஞ்சாயத்துக் தலைவரும் அரசு அதிகாரிகளை எப்படி அணுகுக முடியும் என்ற சிந்தனையும் எனக்குள் ஓடும்.

வீட்டிற்குள்ளேயே இருந்த நீங்கள், 'பஞ்சாயத்துத் தலைவி' என்ற பதவிக்காகப் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இப்போது. அந்த அனுபவம் கவிதைகளாக மாறுகிறதா?

அலுவலக விஷயமாகப் பல இடங்களுக்குப் போனாலும் களத்தில் இறங்கிப் பணிபுரியவில்லை. களத்தில் இறங்கிப் பணிபுரியும் சூழல் எனக்கு இல்லை. இதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன். எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது. ஆனாலும் முடியவில்லை. இப்போது நான் ஒரு ஊசிமுனையில் நின்றுகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள்தான் இருக்கிறேன். களத்தில் இறங்கிப் பணிபுரிவது தடுக்கப்பட்டுத்தான் வருகிறது. மக்களோடு சேர்ந்து பல காரியங்களைச் செய்ய யோசிக்கவே செய்கிறேன். ஆனாலும் அது முடியாமல்தான் உள்ளது. அப்படியான சூழலும் அனுபவமும் வாய்க்கும்போது அது என் படைப்பிலும் வெளிப்படும். இப்போது எனக்கிருக்கும் அரசியல் அனுபவத்தை வைத்துக் கட்டுரைகள் எழுதலாம். ஆனால் கதை, கவிதை போன்ற படைப்புகளாக அது வெளிப்பட வாய்ப்பில்லை.

நீங்கள் 'தினமணி' இதழில் எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது.

அந்தக் கட்டுரைக்குப் பலதரப்பினரிடமிருந்து பாராட்டுக் கிடைத்தது. எனக்கு அரசு யந்திரம் அரசுத் திட்டங்கள் சார்ந்து பல விமர்சனங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றாக மனதில் குவிந்துகொண்டே வருகின்றன. பின்னாட்களில் கட்டுரைகளாக அவைகளை எழுதுவேன். இப்போது எழுதினால் வேறுவிதமான எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரும். அரசைச் சார்ந்து செயல்படும் பணியில் இருந்துகொண்டு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன். பதவியில் இல்லாதபோது எழுதுவதுதான் சரியானது. உதாணரத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். குமுதம் ஜங்ஷனில் வந்த பேட்டியைப் படித்த அதிகாரி ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து "நன்றாக இருந்தது" ஆனால் "நீங்கள் ஒரு எழுத்தாளர் என்பதற்காகத்தான் உங்களை உபசரிக்கிறோமா?" என்று வருத்தப்பட்டார். நான் சொன்னேன், "உங்களை நினைத்து அப்படிச் சொல்லவில்லை. மற்றவர்களிடம் உணர்ந்ததை அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறேன்" என்று சொன்னவுடன், அதை ஒத்துக் கொண்டார். பதவியில் இருப்பதால் வெளிப்படையாகப் பேசுவதில் உள்ள சிரமம் இதுதான்.

இதுவரை நீங்கள் படித்தவை மற்றும் எழுதியவை மூலம் "கவிதை என்றால் என்ன" என்ற வரையறையை அடைந்துள்ளீர்களா?

நாம் அன்றாடம் எவ்வளவோ விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்போது நமக்கு நெருக்கமான விஷயத்தைக் கவிதையில் கொண்டு வரும்போது அந்த விஷயம் எல்லோருக்கும் நெருக்கமான அனுபவமாக மாறுகிறது. அந்த அனுபவம் படிப்பவர்களின் உள்ளே எதாவது ஒன்றைத் திறக்க வேண்டும். எனக்குள் திறந்த விஷயம் இன்னொருவருக்கும் திறக்க வேண்டும். இதைத்தான் கவிதை என்று உணர்கிறேன். யாராவது ஒரு கவிஞனின் கவிதையை நான் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்குள் படிந்திருந்த ஏதோ ஒரு விஷயத்தைத் திடீரென்று ஞாபகப்படுத்தும். இதைத்தான் கவிதை என்று நினைக்கிறேன்.

கவிதை சத்தமாகப் பேச வேண்டும் என்றோ அது பலவிதமான வரையறைகளைக் கொண்டுள்ளது என்றோ நான் நினைக்கவில்லை. எப்படியான அனுபவத்தையும் சாதாரண வார்த்தைகளில் சொல்ல முடியும். ஹமீதின் (மனுஷ்ய புத்திரன்) சமீபத்திய கவிதைகள் எல்லாமே எளிய வார்த்தைகளைக் கொண்டவை. பெரிய பெரிய படிமங்களோ விஷயங்களோ கொண்டவை அல்ல. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விஷயங்களைத் திறந்து விட்டிருக்கிறது. அப்படித்தான் கவிதை இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு நானும் எளிய சொற்களைக் கொண்டுதான் எழுதிவருகிறேன். குறுக்கே வரும் பெரிய படிமங்களைக்கூடத் தூக்கி எறிந்திருக்கிறேன். சட்டென்று ஒருவரிடம் திறப்பைக் கொண்டுவர வேண்டும். ழாக் ப்ரெவரின் கவிதைகளைப் படித்தபோது இதை உணர்ந்தேன். மிகச் சாதாரண வார்த்தைகளில், மனதுக்குள் உறைந்திருந்த ஒளிந்திருந்த விஷயங்களைத் துருவி எடுக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரெஞ்சு கவிஞனின் எண்ணமும் நம் எண்ணமும் எப்படி ஒரே அலைவரிசையில் வருகிறது? கவிதை என்ற மொழிதான் இதை சாத்தியப் படுத்துகிறது.

பெண்களுக்காகப் படைப்புரீதியாகக் குரல்கொடுத்த அம்பை போன்றவர்கள் பெண் ஆண் என்று தீவிரமான வேறுபாடைச் சொன்னதில்லை. ஆனால் இப்போது குட்டிரேவதி, மாலதிமைத்ரி, நீங்கள் எல்லோரும் அப்படியான பாகுப்பாட்டை விரும்புவது ஏன்?

'அம்பை' தன்னைப் பெண் என்ற அடையாள வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதை விரும்பவும் மாட்டார்கள். ஆனால் எனக்கென்னவோ பெண், ஆண் என்ற பாகுபாடு அவசியமாகத்தான் தோன்றுகிறது. பெண் தன்னைப் பாகுப்படுத்திக்கொண்டு தன் விடுதலையை நோக்கியப் பயணத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது? அம்பையிடம் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர்களது தளம் அறிவுபூர்வமானது. அறிவும் உணர்வும் சேரும்போதுதான் சிறப்பான படைப்புகள் வெளிவரும். இப்போது எழுதியுள்ள என்னுடைய நாவலைக்கூட இப்படியானதாகத்தான் நினைக்கிறேன். என் அனுபவங்களை உணர்வுபூர்வமாக மட்டும் பார்க்கக்கூடாது. புதிய பார்வைகளை உருவாக்கும் விதமாக எழுதியிருக்கிறேன். என் அனுபவத்தை எல்லோருக்கும் பொதுவான விஷயமாக மாற்றுவதுதான் படைப்பின் வெற்றியாக நினைக்கிறேன். மேலும் உணர்வுகளை அறிவுரீதியாகச் சிந்தித்து படைப்பாக மாற்றுவதை விரும்புகிறேன்.

உங்களைப் பற்றிய சுயமதிப்பீடு?

நம்மைப் பற்றிய மிகையான மதிப்பீட்டை வைத்துக்கொள்வது தேவையற்றது என்றே நினைக்கிறேன். பல சமயங்களில் என் கவிதைகளில் நான் சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லையோ என்றே தோன்றும். படைப்புரீதியான நிறைவு எப்போதும் வந்துவிடக் கூடாது. நிறைவின்மை, போதாமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லாப் படைப்பாளிகளுக்குமே இப்படித்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. தேவையற்ற பிரமைகளை ஏற்படுத்திக்கொள்வது நம்மை வளர்த்தெடுக்காது. மிகையான சுய மதிப்பீட்டை எப்போதும் நான் வைத்துக் கொண்டதில்லை. ஆனாலும் என் படைப்புகளுக்குக் கூடுதலான கவனத்தை எல்லோரும் கொடுக்கிறார்கள். இது நல்லதுதான். என் பொறுப்பை அதிகப்படுத்தவே இது பயன்படுகிறது.

இதுவரை எதுவுமே நான் சொல்ல ஆரம்பிக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது போல மற்றவர்கள் உணர்வதுதான் ஆச்சர்யமளிக்கிறது.

ஆரம்ப காலத்தில் நீங்கள் படித்த புத்தகத்திலிருந்து இன்று வரையிலான படிநிலைகளைச் சொல்லுங்கள்.

ஆரம்பத்தில், கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தேன். அப்போது இந்தப் புத்தகம்தான் கிடைக்கும் என்று தேர்வு செய்து படிக்கும் நிலை இருந்ததில்லை. ரஷ்ய இலக்கியங்கள் நிறையக் கிடைத்தன. வேறு எந்தத் தெடர்பும் இருந்ததில்லை. மார்க்சியம் சார்ந்த விஷயங்களில் ரொம்ப ஆழமான தேடலும் ஆர்வமும் இருந்தது. ரஷ்ய இலக்கியங்கள் ரஷ்யாவைச் சொர்க்க பூமியாகக் காட்டின. வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தப் பூமியை மிதிக்க வேண்டும் என்று இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். ரஷ்யா என் கனவுபூமியாக இருந்துகொண்டே இருக்கிறது. ரஷ்யாவின் வீழ்ச்சியைப் படித்தபோது என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. அந்த அளவிற்கு ரஷ்ய இலக்கியத்தின் மீதும் ரஷ்ய நகரங்கள் மீதும் அதீதக் காதல் இருந்தது.

பின்பு கவிதைகள் சார்ந்த விஷயங்களை வாசிக்க ஆரம்பித்தேன். நாவல், சிறுகதை என்று பின்னால் விரிந்தது. நண்பர்கள் நல்ல புத்தகங்கள் என்று சொல்வதை வாங்கிப் படித்தேன்.

இதுதான் படிக்க வேண்டும் இதெல்லாம் படிக்கக்கூடாது என்று எப்போதும் நினைத்ததில்லை. அரசியலோ, கவிதை, சிறுகதையோ, கட்டுரையோ எந்த வகையான நூலாக இருந்தாலும் படிப்பதில் ஆழமான ஆர்வம் உண்டு. பெரியாரைப் பற்றிய நூல்களையும் முன்பே படித்துள்ளேன்.

மதுரை சோகோ டிரஸ்டின் சட்டங்கள், சுற்றுச்சூழல் பற்றிய நூல்களை இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஹமீதைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் மூலமாக அம்மா வந்தாள், மரப்பசு, ஆத்மாநாம் கவிதைகள், ஜெயகாந்தன் படைப்புகள், அசோகமித்திரன் இப்படிப் பலரின் நூல்களும் படிக்கக் கிடைத்திருக்கின்றன. தேடிப்போய் வாங்கத் தெரியாது. உள்ளூர் நூலகத்தில் தேடிப் படிப்பது உண்டு.

86 ஆம் ஆண்டு வாக்கிலேயே ஜே.ஜே. சில குறிப்புகள் கோயம்புத்தூரிலிருந்து வந்த ஜோசப் என்ற நண்பர் மூலம் கிடைத்தது. எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எஸ்.வி.ஆர். எழுதியிருந்த புத்தகம் மூலமாக 'இஸங்கள்' பற்றிய அறிமுகம் கிடைத்தது. 90களின் தொடக்கத்தில் எஸ்.வி.ஆரின் தொடர்பு கிடைத்ததின் மூலம் 'ரஷ்யப் புரட்சி - இலக்கிய சாட்சியம்' நூலை அனுப்பிவைத்திருக்கிறார். அவர் மூலமாகவே அன்னா அக்மதேவா கவிதைகள், கிராம்ஷி எல்லாம் கிடைத்தது. எல்லாமே படித்திருந்தாலும் 'இஸங்கள்' மீது பெரிய அளவில் ஈடுபாடில்லை. ரஷ்ய இலக்கியம் பின்பு விடுபட்டுப்போயிற்று.

சுந்தர ராமசாமியின் அறிமுகம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

என்னுடைய கவிதைகள், ஹமீதின் கவிதைகளைப் படித்துவிட்டு லல்லி எங்களைப் பார்க்க வந்திருந்தார். அப்போது எனக்குத் திருமணமாயிருந்த சமயம். இந்தியன் எக்ஸ்பிரஸில் அப்போது சுந்தர ராமசாமியின் கதை படித்திருந்தேன். 'சன்னல்' என்ற கதை. அந்தக் கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஜே.ஜே. சில குறிப்புகள், புளியமரத்தின் கதை எல்லாம் படித்திருந்தேன். சுந்தர ராமசாமி மீது அப்போதே பெரிய அளவில் எனக்கு மதிப்பு உருவாகியிருந்தது.

அவரை இளைஞராக நினைத்துக்கொண்டிருந்தேன். ஜே.ஜே. சில குறிப்புகளில் வரும் இளமையும் உற்சாகமும் அப்படி நினைக்கத் தோன்றியது.லல்லி தொண்ணூற்றி ஒன்றாம் ஆண்டில் அவரைச் சந்தித்திருந்தார். அப்போதுதான் அவர் எங்களைச் சந்திக்க வருகிறார். "சுந்தர ராமசாமியின் ஜவுளிக் கடைக்கு இன்ஸ்பெக்ஷனுக்குப் போயிருந்தேன். அவரிடம் பேசினேன். வயதானவர்" என்றெல்லாம் லல்லி சொன்னார். வயதானவர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றிய பிம்பம் உடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

'ஜே. ஜே. சில குறிப்புகள்' போன்ற ஒரு எழுத்தைத் தமிழில் படித்ததே இல்லை. மொழிபெயர்ப்புக் கதைகள். எல்லாம் எனக்கு அதிகம் அறிமுகமாகத் தருணம் அது. ஜே.ஜே. சில குறிப்புகள் நடை, ஸ்டைல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின்பு லல்லி, ஹமீதும் அடிக்கடி நாகர்கோவில் சென்று சுந்தர ராமசாமியைப் பார்ப்பார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஹமீதுக்கு அப்போது வெளியுலகு புதிதுதான். ஆனாலும் எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. நாங்கள் இருவரும் ஒரே இடத்தில்தான் இருப்போம். அவர் ஆண் என்பதால் சில விஷயங்கள் அவருக்கு சாத்தியமாகி உள்ளது. எஸ்.வி. ஆரைப் பார்க்கப் போவார்கள். கீதாவைப் பார்க்கப் போவார்கள். இப்படிப் பலரையும் பார்த்ததைப் பற்றி அவர்கள் வந்து சொல்வதைக் கேட்டுக்கொண்டு மட்டுமே இருப்பேன். நான் வெளியில் செல்வதற்கான வாய்ப்பு இருந்ததில்லை.

சுந்தர ராமசாமி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னதும், நாகர்கோவிலுக்கு ஒரு டூர் செல்வது போலச் சென்றோம். வீட்டில் சுந்தர ராமசாமியைப் பார்க்கப் போகிறேன் என்றால் அனுப்பமாட்டார்கள். ஹமீது, லல்லி, ஹமீதின் சகோதரிகளுடன் என் அம்மா, நானும் ஒரு வேனில் சென்றோம். அப்போதுதான் அவரை முதன் முதலாகச் சந்திக்கிறேன். 1995ஆம் ஆண்டு அது. அதற்குப் பின்பு கடிதம் மூலம் தொடர்புகொண்டேன். ரொம்ப மனதொடிந்துபோய் கடிதம் எழுதுவேன்.

"நீங்கள் இவ்வளவு சோர்வடைவதற்கு ஒன்றுமே இல்லை. வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளளன. இருக்கும் இடத்திலிருந்தே மேலே போகலாம்" என்று என் மனதில் உறைக்கும் வண்ணம் தெளிவாகக் கடிதம் எழுதி இருந்தார். "நல்லாப் படிக்கவில்லையே, வெளி உலகம் தெரியவில்லையே, என்று தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை" என்பதையும் மனதில் தைக்கும்படி எழுதியிருந்தார்.

பின்புதான் அதிக உத்வேகத்துடன் எழுத ஆரம்பித்தேன். நாவல் எழுதத் தூண்டுகோலாக இருந்ததும் அவர்தான். எவ்வளவோ நண்பர்கள் அப்போது இருந்திருந்தாலும் அடிக்கடி சுந்தர ராமசாமி எழுதிய கடிதம்தான் ஆறுதலாக இருந்தது. இவ்வளவு பெரிய எழுத்தாளர் நமக்கு இப்படிக் கடிதம் எழுதுகிறாரே என்ற ஆச்சர்யமும் பிரமிப்பும். இது எனக்குக் கூடுதலான நம்பிக்கையைக் கொடுத்தது. 'வீட்டை விட்டே போய்விடவேண்டும்' என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். அப்போது "அப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம். வெளியுலகமும் அப்படியொன்றும் பாதுகாப்பானதல்ல. உள்ளுக்குள்ளே இருந்துகொண்டு செயல்படுவதும் முக்கியம்தான்" என்று சுந்தர ராமசாமி அப்போது எனக்கு எழுதியதை நினைத்துப் பார்க்கும்போது இப்போது அது சரியென்றே படுகிறது.

'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவல் பற்றிய உங்கள் கடிதத்தை கணையாழி சுந்தர ராமசாமி சிறப்பிதழில் படித்தேன்.

'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் மனரீதியான பாதிப்பையும் உருவாக்கியது. அதைத்தான் கணையாழியில் வெளிவந்த கடிதத்தில் எழுதியிருந்தேன்.

'கலைகளுக்கு எதிரானது இஸ்லாம்' என்ற தோற்றம் உருவாகியுள்ளதே?

இஸ்லாமியப் புனித நூலான குரானில் அப்படியான கருத்து இல்லை. பல்வேறு துறைசார்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் இஸ்லாமிய மதத்தில் உள்ளார்கள். படே குலாம் அலிகான், ஜாகிர் உசேன் மாதிரியான உன்னதமான கலைஞர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். எங்கள் வீட்டில் ரம்ஜான் மாதமானால் தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள். அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக. போதை மருந்துக்குச் சமமானதாகப் பேசுவார்கள் இசையைக் கேட்பதை. மனதைக் கிறங்கடித்து சந்தோஷத்தில் ஆழ்த்தி கெட்ட செய்கைகளுக்குத் தூண்டும் என்பார்கள்.

கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும்கூட இஸ்லாமியக் கோட்பாடு என்ற பெயரில் பல பழக்க வழக்கங்கள் ஆழமாக மனதில் பதிவதாகத்தானே உள்ளது?

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல பழக்க வழக்கங்கள் மாறிவிடுகின்றன. இதெல்லாம் குழந்தைகளிடம்கூடப் பார்க்க முடிகிறதே, அதைத்தான் என்னால் சகிக்கவே முடியவில்லை.

எங்கள் வீட்டில் என் கணவரும் தொழுகை செய்யமாட்டார். நானும் அப்படித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருப்போம். முஸ்லீம் என்ற அடையாளமே எங்களுக்கில்லை. என் கணவர் தி.மு.க. இயக்கத்தில் இருந்தவர்.

பள்ளிக்குச் செல்லும் எங்கள் பையன்கள் எல்லா விசயத்தையும் அங்கிருந்து கொண்டு வருகிறார்கள். 'சாமி' கட்சிப் பையன்கள். 'அல்லா' கட்சிப் பையன்கள் என்ற பிரிவினை இப்போதே அவர்களுக்கு வந்துவிட்டது. எங்கள் இளைய பையன் வீட்டில் ஏதாவது இந்துச் சாமிப் படம் இருந்தால் பெரும் ஆத்திரத்தோடு அதைக் குத்திக் கிழித்து விடுவான்..

என் தோழி ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் போகும்போது வீட்டில் ஸ்டிக்கர் பொட்டை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதைக் கண்ணாடி முன்பு நின்று என் நெற்றியில் வைத்துப் பார்த்தேன். அதைப் பார்த்து என் பையனுக்குப் பயங்கரக் கோபம் வருகிறது. அழுது அடம்பிடிக்கிறான். "நீ என்ன சாமி கட்சிக்குப் போகப் போகிறாயா" என்கிறான். சின்னப் பையனும் அழுகிறான். பெரிய பையனும் அழுகிறான். நமது குழந்தைகளை வேறுவிதமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது சுத்தமாக அடிபட்டு போய்விட்டது. பள்ளிக்கூடம்தான் குழந்தைகளை உருவாக்குகிறது. மார்க்ஸ் சொன்னதுபோல சூழல்தான் மனிதனை உருவாக்குகிறது. இது முழுக்க உண்மை என்றே நம்புகிறேன்.

இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது. நான் இலங்கைக்குப் புறப்படும்போது "எந்த அம்மா இப்படி வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்கிறார்கள்" என்ற கேள்வியை எழுப்பி, ஏதோ தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதைப்போல நினைத்துப் பேசுகிறான். சின்னப் பையன்களைக்கூட திசை திருப்புவதாக நம் சமூகச் சூழல் இருக்கிறது. நாளை யாரோ ஒரு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது "நீ ஏன் அவருடன் பேசுகிறாய்" என்ற கேள்வியை அவன் எழுப்புவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து பிள்ளைகளை வேறு எங்காவது விடுதியில் தங்கவைத்துப் படிக்க வைக்க நினைத்துள்ளோம்.

கவிதையிலிருந்து நாவல் எழுத எப்படித் தோன்றியது?

சின்ன வயதில் நடந்த பல்வேறு விஷயங்கள் மனதுக்குள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த விஷயங்களை நாம் ஏன் எழுதக்கூடாது என்று நினைத்தேன். சிறுகதையாக எழுதி முடிக்க முடியாது. மனதில் பதிந்த விஷயங்கள் எல்லாமே பெண்கள் சார்ந்த விஷயங்கள். இந்த விஷயங்களை நாவலாக எழுதலாமே என நினைத்தேன். அப்படி நினைத்தது மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. லல்லிதான் இரண்டு நோட்டுக்களை வாங்கிக் கொடுத்தார். வீட்டில் கேட்டால் கிடைக்காது. ஐம்பது பக்கம்வரை எழுதியிருப்பேன். என் கணவர் அதைப் படித்துவிட்டார் (அந்தச் சமயத்தில் 'நான் எழுதக்கூடாது' என்ற சண்டை நடந்து கொண்டே இருக்கும்) நாவலின் தொடக்கம். வேறு சில கவிதைகள் எல்லாவற்றையும் ஒளித்து வைத்து விட்டார். 'இனிமேல் எழுதினால் கையை ஒடிப்பேன்' என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

நாவலை உற்சாகத்தோடு எழுத ஆரம்பித்துத் தடைபட்டு விட்டது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். மனதுக்குள் இருப்பதை எப்போது வேண்டுமானாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. பின்பு ஓராண்டுக்குப் பின்பு பெரிய அளவில் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினை இல்லாதபோது பீரோவைத் திறந்து பார்த்தேன். அப்படியே இருந்தது. கீதா, சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள் எல்லாம் அதில் இருந்தது. மற்றவற்றைவிடக் கடிதங்களைக் கிழித்து எறிந்திருப்பாரோ என்பதுதான் அதிகத் துயரத்தைத் தருவதாய் இருந்தது.

ஏற்கெனவே எழுதிய நாவலை 'இனி எங்கே எழுதமுடியும்' என்ற தயக்கத்தில் கொஞ்ச நாட்கள் வைத்திருந்தேன். நாவல் தொடங்கிய விஷயம் லல்லி மூலமாகக் கண்ணனுக்குத் தெரியும். அவர் அடிக்கடி 'ஏன் எழுதவில்லை' என்று தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டே இருப்பார். தயக்கத்தில்தான் இருந்தேன். சுந்தர ராமசாமியும் கடிதத்தில் இதைப் பற்றிக் கேட்பார். என் நாவலைப் பற்றிய சு.ரா., கண்ணன் இருவரின் அக்கறையான நினைவுறுத்தல்கள் இல்லையென்றால் நான் எழுதியிருக்கவே மாட்டேன்.

நாவல் எதைப் பற்றியது?

நாவல் முழுக்கவே "பெண்களை இந்தச் சமூகம்" எப்படி வைத்துள்ளது என்பதைப் பற்றித்தான் பேசுகிறது. அதை எந்தவித விமர்சனமும் இல்லாமல் சொல்லி உள்ளேன். மூன்று காலகட்டமாகப் பிரித்து எழுதியிருக்கிறேன். 1948இல் நடப்பது, 1970இல் நடப்பது ஆகியவற்றைத் தாண்டி 83ல் நடந்த இலங்கை இனக் கலவரம் வரையான காலகட்டத்துடன் நாவல் முடிகிறது. மூன்று காலகட்டமும் பெண்கள் சார்ந்ததுதான்.

ஒவ்வொரு காலகட்டத்திலுமே பெண்கள் என்பவர்கள் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆகவே தெரிகிறார்கள். பொம்மைகளின் வாழ்க்கை. எப்படிப் பொருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்,

அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், அதற்குத் தகுந்தாற்போல் எப்படித் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் நாவலில் வரும். அதில் என்னுடைய விமர்சனம் எதுவும் நேரடியாக இல்லாமல் யதார்த்தமாக எழுதியுள்ளேன். "இது ஒரு யதார்த்தவாத நாவல்" என்று எளிதாக விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ள முடியாத விஷயங்களை என் நாவலில் எழுதியுள்ளேன்.
தமிழ்க் கலாச்சாரம் என்றால் உன்னதமானது. அதைவிட ஒழுக்கமானது இஸ்லாமியக் கலாச்சாரம் என்றெலல்லாம் பேசுவது நடைமுறை சார்ந்த உண்மை இல்லை. யாருடைய வாழ்க்கையும் அப்படி இல்லை. கற்பனையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சந்தர்ப்பம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியாதவரை எல்லாம் சரியானதுதான். பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மையில் நடக்கும் ஒழுக்கமற்ற(?!) விஷயங்களை இல்லை, இல்லை என்று ஏன் சொல்லவேண்டும்.

சிறுவயதில் பெற்றோர்களாலும் திருமணமான பின்பு கணவனாலும் இப்போது பையன்களாலும் கட்டுப்படுத்தப்படுவதாக நினைக்கிறீர்களா?

என்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல; எல்லாப் பெண்களின் வாழ்க்கையும் அப்படித்தான் உள்ளது. ஏதோ ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அலங்கார பொம்மைகளாகத்தான் இருக்கிறோம். என்ன சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளதோ அதன்படி நடக்கிறோம். எந்த ஸ்தானத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறார்களோ அதற்குரிய வேலையைச் செய்கிறோம். மனைவி எனும்போது அதற்குரிய வேலைகள், குழந்தைகள் பெற்ற பின்பு அதற்குரிய ஸ்தானம் கொடுக்கப்பட்டு அதற்குரிய வேலைகள். பெண்களுடைய வாழ்க்கையே அப்படித்தானே இருக்கிறது.

சமீபத்தில் பெண்கள் பலர் கவிதை எழுதுகிறார்கள். அவர்களுடைய கவிதைகள் பற்றிச் சொல்லுங்கள்.

பெரும்பாலான கவிஞர்கள் பெண் சம்மந்தப்பட்ட விஷயங்களை எழுதுகிறார்கள். பெண் உடல், பெண் சுதந்திரம் இப்படியான கருத்துக்கள் கவிதைகளின் பொதுவான போக்காக உள்ளது. இப்படி எழுதுவது ஒரு ஜிக்ஷீமீஸீபீ ஆக மாறிவருகிறது. திடீரென்று எல்லாப் பெண் கவிஞர்களுக்கும் இதுபற்றிய ஆர்வமும் உண்டாகி இருக்கலாம். இப்படி எழுதுவதற்கான தேவையும் இருக்கத்தான் செய்கிறது. எத்தனைபேர் எழுதினாலும் பெண்கள் சம்மந்தமான எவ்வளவோ விஷயங்கள் எழுதுவதற்காகக் காத்திருக்கின்றன.

பல பெண்கள் யோனி, முலைகள் என்ற சொற்களைப் போட்டுக் கவிதை எழுதுவது படிப்பவர்களை அதிர்ச்சியூட்டத்தானா?

வெறும் அதிர்ச்சியூட்டலுக்காகவே என்று சொல்ல முடியாது. அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதால் அந்தக் கவிதையின் அர்த்தத் தளம் தீவிரமாக நம்மைப் பாதிக்கிறதா என்பதுதான் முக்கியம். படிப்பவர்களை அதிர்ச்சியூட்ட மட்டுமே சொற்களைப் பயன்படுத்தினால் அதனால் எதுவும் பயனில்லை. எனது 'நகரம்' என்ற கவிதையில்கூட அப்படியான சொற்களைப் பயன்படுத்தியிருப்பேன். அது அவ்வளவாகப் பொருந்தவில்லை என்பதைப் பிரசுரமானவுடன்தான் கவனித்தேன். என்னுடைய கவிதைத் தொகுப்பில் அப்படியான சொற்கள் தீவிரமான தளங்களில் இயங்குகிறது.

"எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி"

என்ற என் கவிதை வரிகளைப் படித்த வாசகர் ஒருவர் "ஏன் இப்படி இவ்வளவு ஆபாசமாக எழுதுகிறீர்கள்" என்று கேட்டார். "நான் அவசியமானால் எழுதித்தான் தீருவேன்" என்றேன். இந்த இடத்தில் ஆபாசம் என்று சொல்லி ஒதுக்கித்தள்ள முடியாது. அதிர்ச்சி மட்டும் இல்லை. அனுபவம் சார்ந்து வார்த்தைகளைப் போடும்போதுதான் படிப்பவர்களுக்கும் புதிய அனுபவம் தரக்கூடியதாக மாறும்.

குட்டி ரேவதியின் "முலைகள்" என்ற தொகுப்பின் தலைப்பை வைக்கும்போது அது படிப்பவர்களை அதிர்ச்சியூட்டவே செய்யும். பத்திரிகைகளின் கவனம்பெறும். அதிகமானோர் புத்தகம் வாங்கிப் படிக்க விரும்புவார்கள். குட்டிரேவதி எந்த நோக்கத்திற்காக அந்தத் தலைப்பை வைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எல்லோரிடமும் ஒரு பரபரப்பை உருவாக்கி உள்ளார். அவரது கவிதையின் பலம் பற்றி எனக்கு உடனே சொல்ல முடியவில்லை.

என்னுடைய நாவலுக்கு இப்படி ஏதாவது ஒரு தலைப்பை வைத்தால் அதிகமான கவனம் கிடைக்கும். அப்படிச் செய்யவேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். நான் எழுதியுள்ள விஷயங்களால் எனக்குக் கவனம் வந்தால் போதுமானது.

கவிஞர் மனுஷ்ய புத்திரனைச் சந்திக்கப் பல ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை துவரங்குறிச்சிக்கு வந்திருக்கிறேன். அப்போது உங்களையும் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். ஆனால் அப்போது இவ்வளவு வீச்சோடு எழுதுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. வாசக நிலையிலிருந்து எப்படிப் படைப்பாளியானீர்கள்?

நான் படிக்கும்போதே எழுதத் தொடங்கி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் பார்த்த சமயத்திலும் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். 15, 16 வயதில் ஹமீது (மனுஷ்ய புத்திரன்) என்ன செய்து கொண்டிருந்தாரோ அதையெல்லாம் நானும் செய்துகொண்டுதான் இருந்தேன். இருவரும் சேர்ந்து நிறையப் புத்தகங்களை வாசித்திருக்கிறோம். ஆனால் அவருக்கு முன்பே என் 12 வயதில் கதை ஒன்று எழுதியிருக்கிறேன்.

எழுத வேண்டும் என்ற ஆர்வம் அப்போதிலிருந்தே இருக்கிறது. சின்ன வயதில் குமுதம், ராணி போன்ற இதழ்களை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. அப்போது அதுதான் கிடைத்தது. ஏழாம் வகுப்பு படித்தபோது எழுதிய அந்தக் கதை இப்போதுகூட நினைவில் இருக்கிறது. அந்தச் சமயத்தில் பள்ளிக்கூட ஆசிரியைகள் எல்லா மாணவர்களிடமும் கேட்கும் சம்பிரதாயக் கேள்வி: "படித்து முடித்த பின்பு என்னவாகப் போகிறீர்கள்?" என்பது. ஒவ்வொருவரும் டாக்டர், இஞ்சினியர் இப்படி வழக்கமான பதிலைச் சொன்னபோது நான் மட்டும், "எழுத்தாளர் ஆவேன்" என்றேன். எல்லோருக்கும் ஒரே சிரிப்பாகி விட்டது. அதில் ஒரே ஒரு ஆசிரியருக்கு மட்டும் அதிர்ச்சியாகி விட்டது. "எல்லோரும் ஒன்றைச் சொன்னால், நீ மட்டும் புதிதாய் என்ன சொல்கிறாய்?" என்று ஆச்சர்யப்பட்டுக் கேட்டார். "அதில்தான் எனக்கு ஆர்வமிருக்கிறது" என்று சொன்னேன்.

நிறைய வாசிக்க வாசிக்க நமக்குள் இருக்கும் உணர்வுகளை எழுத வேண்டும் என்ற தவிப்பு இயல்பாகவே வந்து விட்டது. எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு முக்கியக் காரணம் ஹமீதோடு சேர்ந்து நிறையப் படித்தது. அவர் என்ன செய்வாரோ அதையெல்லாம் நானும் செய்வேன். அதற்கு முன்பே நான் எழுத ஆரம்பித்தாலும் அவர் கவிதை எழுத ஆரம்பித்த பிறகுதான் நானும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்தே செயல்படுகிறோம் என்ற உணர்வு இருக்கும். தனது கவிதைகளை அவர் அனுப்பும் இதழ்களுக்கு நானும் என் கவிதைகளை அனுப்புவேன். திருச்சியிலிருந்து சின்னச் சின்னக் கையெழுத்துப் பிரதிகள் வந்து கொண்டிருக்கும். என் பதினாறு வயதிலிருந்து அது போன்ற இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துள்ளன. அதை இப்போது கவிதை என்று என்னால்கூட ஏற்க முடியாதுதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அப்போதும் பெண்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன் என்று தெரிகிறது. ஹமீது அப்போது ஒரு தொகுப்பு கொண்டுவரும் அளவிற்கு எழுதியிருந்தார். நான் குறைவாகவே எழுதியிருந்தேன். பெண்களின் விழிப்புணர்வு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போதே எழுதியிருக்கிறேன்.

ஹமீதைப் பார்க்கப் பல இலக்கிய நண்பர்கள் அடிக்கடி வருவார்கள். யார் வந்தாலும் அவர்களுடன் பேசிப் பல விஷயங்களை அவரால் பகிர்ந்துகொள்ள முடியும். பக்கத்து வீட்டில்தான் நான் இருப்பேன். ஆனால் எனக்கு யாரையும் பார்க்க அனுமதி கிடையாது. அவர் ஆண் என்பதால் ஆண் நண்பர்களுடன் பேச முடியும். பெண் நண்பர்களுடனும் பேச முடியும். எல்லோரிடமும் பேச அவருக்கு வாய்ப்பு இருந்தது. நான் ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக அப்படியான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்தச் சமயங்களில் மிகவும் கவலைப் படுவேன். பெண்ணாய்ப் பிறந்ததால் வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டுமா? இப்படியான சூழ்நிலைதான் என்னை எழுத வைத்தது. நிறைய வாசித்ததன் மூலமாக எனக்கான ஒரு மொழியைக் கண்டடைந்தேன் என்றுதான் நினைக்கிறேன்.

"அக்கினிப் பரீட்சை" என்ற ருஷ்ய மொழிபெயர்ப்பு நாவலின் மூன்று பாகங்களை இரண்டே மாதத்தில் வாசித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்போது அவ்வளவு நேரமும் இருந்தது. வேகமும் இருந்தது. இப்போது அப்படிப்பட்ட நிலை இல்லை.

கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனிப்பட்ட முறையிலும் படைப்புரீதியாகவும் எந்த அளவிற்கு உதவியாய் இருந்திருக்கிறார்?

அவர் என்ன யோசிப்பாரோ அதையே நான் யோசித்திருக்கிறேன். யோசிப்பதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் எங்கள் இருவருக்குமே ஒரேவிதமான எண்ணங்கள் இருந்தன. அவருடைய படைப்புரீதியான உணர்வுகளை நெருக்கமாக நான் உணர்வேன். அதேபோல என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்து கொள்வார். ஒத்த உணர்வுடையவர்களாக இருந்தோம். நான் எழுத வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாய் இருந்து ஊக்குவித்திருக்கிறார். நமது சமூகத்தில் யாரும் இப்படி எழுதியதில்லை. தொடர்ந்து நீ எழுத வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். நான் ஒரு கவிதையை எழுதியவுடன் அவரிடம்தான் கொடுப்பேன். வெளியுலகிற்கு அவற்றை அனுப்பிப் பிரசுரம் செய்வதற்குக் காரணமாய் இருந்தவர் அவர்தான். அவரில்லாமல் நான் இந்த அளவிற்கு அறிமுகம் பெற்றிருக்க முடியாது. அவர் இல்லாதிருந்தால் என் உணர்வுகள் என் மனதிலேயே கருகிப்போயிருக்கும். கவிதைகளாக உருப்பெற்றிருக்காது.

திருமணத்திற்குப் பின்னால் என் இலக்கிய ஈடுபாடுகள் எல்லாம் விட்டுப் போய்விடும் என்று என் பெற்றோர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்ததும் சரியானதுதான். ஹமீது இல்லையென்றால் எனக்கும் அப்படித்தான் ஆகியிருக்கும். அவர் ஊரில் இருந்தது என்னை வளர்த்தெடுக்க மிகவும் உதவியது. இன்றுவரை அவர் இல்லையென்றால் நான் இல்லை என்பதுதான் உண்மை.

திருமணத்திற்கு முன்பு உங்கள் அப்பா, அம்மா இருவரும் உங்கள் இலக்கிய ஈடுபாட்டை எப்படி எதிர்கொண்டார்கள்?

என் அப்பா, அம்மா இருவருமே ரொம்ப உதவியாய் இருந்திருக்கிறார்கள். நான் என்ன செய்தாலும் அதற்கு ஆதரவாய் இருந்திருக்கிறார்கள். எனக்கு எவ்வளவோ கடிதங்கள் யார் யாரிடமிருந்தோ வரும். என் கவிதைகளைப் படித்துவிட்டு ஆண்களும் கடிதம் எழுதுவார்கள். நானும் பதில் எழுதுவேன்.

எங்கள் ஊரில் எங்கள் சமூகத்தில் கல்யாணமாகாத ஒரு பெண்ணுக்கு முகம் தெரியாதவர்களிடமிருந்து கடிதம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது. அந்தச் சூழ்நிலையிலும் என் பெற்றோர் என்னைப் புரிந்துகொண்டு அதற்கான சுதந்திரத்தை எனக்குக் கொடுத்திருந்தார்கள். என் பெற்றோர் "எனக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாக" என் கணவர் இப்போதும் சொல்வார்.

சமயத்தில் மதுரைக்குக் கூட்டிச்சென்று நியூ செஞ்சுரி புக் ஹவுசில் எனக்குப் பிடித்தமான புத்தகங்களை எல்லாம் அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறார். துவரங்குறிச்சியில் அதுவும் முஸ்லீம் சமூகத்தில் இதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்படியான வாயப்புகள் யாருக்கும் கிடைத்திருக்காது. ஆனால் எனக்குக் கிடைத்தது. எங்கள் ஊரில் இருக்கும் பெண்கள் என்னைப் போல யோசித்தாலும் அதற்குரிய வாய்ப்புக்களை யாரும் ஏற்படுத்தித் தர மாட்டார்கள். என் வீட்டில் உற்சாகப்படுத்தினார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் என் செயல்பாடுகள் எதையும் தடுத்ததில்லை.

தமிழினி 2000 நடந்தபோதுதான் உங்களது கவிதைத் தொகுப்பு "ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" வெளியிடப்பட்டது. அந்த வெளியீட்டு அழைப்பிதழில் பல எழுத்தாளர்களின் புகைப்படங்களும் இருந்தன; உங்களது புகைப்படம் தவிர. உங்கள் முகத்தைக்கூட வெளியுலகத்திற்குக் காட்ட முடியாத நிலை இருந்ததா?

புகைப்படமா? நான் எழுதுவதுகூட அப்போது என் கணவருக்குத் தெரியாது. திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் யாருக்கும் தெரியாமல்தான் எழுதிக் கொண்டிருந்தேன். வெளிப்படையாக என்னைக் காட்டிக் கொண்டு எழுதக்கூடிய சின்ன வெளிகூட அங்கு இல்லை. நான் எழுதக் கூடாது என்பதற்கு என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் என் கணவர் வீட்டில் செய்தார்கள். எழுதுவது என்பதை என் இருத்தல் சார்ந்த விஷயமாக நினைத்தேன். என் உரிமை சார்ந்த விஷயமாகவும் அதைப் பார்த்தேன். யாரோ ஒருவர் என்னை எழுதக் கூடாது என்று சொல்வதால் என்னால் எழுதாமல் இருக்க முடியாது. என் அடையாளத்தை எழுத்தின் மூலம்தான் காட்ட முடியும். என் குடும்ப வாழ்க்கையுடன் என்னைத் தொலைத்துவிட வேண்டும் என்று நினைக்கவில்லை. குடும்ப வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்றும் நினைக்கவில்லை. என் தேடல்களுக்குக் குறுக்காக யாரும் நிற்கக் கூடாது என்றும் நினைத்தேன். இப்படிப்பட்ட சூழல்தான் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. கல்யாணமான புதிதில் "தலாக்" பற்றி ஒரு கவிதை எழுதினேன். அப்போது ராஜாத்தி என்ற பெயரில்தான் கவிதைகள் வெளிவந்தன. 'தலாக்' கவிதை இப்போது என்னிடம் இல்லை. அதைக் கிழித்தெறிந்து விட்டேன். இதுபோலப் பல கவிதைகளைக் கிழித்துப் போட்டிருக்கிறேன்.

ஏன் அப்படிக் கிழித்துப்போட வேண்டும்? பின்னால் தவறாக ஏதும் உணர்ந்தீர்களா?

தவறாய் ஒன்றும் இல்லை. அச்சுறுத்தல், பயம்தான் முக்கியக் காரணம். 'தலாக்' கவிதையை ஹமீதிடம் காட்டினேன். அவரும் நன்றாயுள்ளதாகச் சொன்னார். வெளியிடலாம் என்றார். எனக்குப் பிரசுரம் பண்ணுவதில் தயக்கம் வந்தது. வீட்டில் எழுத வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இப்படிப்பட்ட கவிதை வெளிவந்தால் பிரச்சினை வரும் என்று நினைத்துப் பயந்தேன். அப்போது ஹமீதுதான் சொன்னார், இனிமேல் எழுதும் கவிதைகளைப் புனைபெயரில் பிரசுரிக்கலாம் என்று. எனக்கு அந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு வீம்பு வந்தது. யாருக்கும் பயந்து என் பெயரை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். அப்படியென்றால் நான் எழுதாமலே இருந்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியம் இல்லை என்பதையும் உணரவே செய்தேன். வீம்பு செய்யும் அளவிற்கு வாழ்க்கை பாதுகாப்பாய் இல்லை என்பதையும் விளங்கிக் கொள்பவளாகவே இருந்தேன். அந்தச் சமயத்தில் நிறையக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். வீட்டில் உள்ள பிரச்சினையால் ரொம்ப வெறுமையாக உணர்ந்தபோது எல்லாக் கவிதைகளையும் கிழித்துப் போட்டிருக்கிறேன். பயந்து பயந்து எழுதுவதை வீட்டில் வைத்துக் கொள்ளவும் முடியாமல் பிரசுரிக்கவும் முடியாமல் சிக்கலான நிலைமையாக இருந்தது. எழுதாமலும் இருக்க முடியவில்லை. அதற்குப் பின்புதான் புனைபெயரில் எழுத ஆரம்பித்தேன். புனைபெயர் என்பது சௌகரியமான ஒன்றாக இருந்தது. 'சல்மா' என்ற புனைபெயரை அப்போதுதான் வைத்துக் கொண்டேன். அதுவரை எழுதவே முடியாமல் இருந்த விஷயங்களை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். ஏற்கெனவே அறிமுகமான அடையாளப் பெயரின் மனத்தடையால் மனதின் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். புனைபெயரில் நிறையக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பிரசுரமும் ஆயின. இது எல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. நான் எழுதுவதை நிறுத்திவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கடிதங்களும் நேரடியாக எனக்கு வராமல் ஹமீது முகவரிக்கு வரும். அங்கிருந்து நான் எடுத்துக் கொள்வேன். இப்படித்தான் பல ஆண்டுகள் நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் சி. மோகன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஜி. நாகராஜன் படைப்புகள் பற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்டுவர உள்ள விஷயம் குறித்த அந்தக் கடித்தில் 'அன்புள்ள சல்மா'விற்கு என்று எழுதியிந்தது. அதை ஹமீதுவிடமிருந்து வாங்கிப் படித்துவிட்டு என் வீட்டில் எங்கோ வைத்து விட்டேன். என் கணவர் கண்ணில் பட்ட அந்தக் கடிதத்தால் ஏகப்பட்ட பிரச்சினைகள். "எவனோ ஒருத்தன் உனக்கு அன்புள்ள சல்மாவிற்கு என்று எழுதியிருக்கிறான். எழுதக்கூடாது என்று சொன்னதையும் மீறி 'சல்மா' என்ற பெயரில் எழுதுகிறாயே" என்று திரும்ப பிரச்சினைகள் உருவாயிற்று. அப்போது நான் வாய்மூடி மௌனியாக இருக்கவில்லை. அதற்குச் சரியான பதில் சொன்னேன். என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்று தைரியமாகச் சொன்னேன். அதற்குப் பின்புதான் என் வீட்டில் விட்டு விட்டார்கள். முன்பே  கூட என்னால் தைரியமாகப் பேசியிருக்க முடியும். ஆனால் அதையொட்டி வரும் வீண் பிரச்சினைகளால் நான் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால்தான் முதலில் எழுதவில்லை என்று சொல்லி, வீட்டுக்குத் தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.

கவிதைத் தொகுப்பு வெளிவருவது தெரியக் கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் வீட்டில் உள்ளவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாத அளவிற்குப் பல கவிதைகள் தொகுப்பில் இருந்தன. ஏற்கெனவே நான் எழுதிய கவிதைகள் ஆபாசம் என்றும் சொந்த வாழ்க்கையைப் பற்றிய கவிதைகள் என்றும் என் வீட்டில் நினைத்துக் கொண்டிருந்த கவிதைகள் புத்தகமாக வருகின்றன என்று தெரிந்தால் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று யோசித்து அதுபற்றி வீட்டில் சொல்லாமல் இருந்தேன்.

தொகுப்பில் இருக்கும் கவிதைகள் அடங்கிய டைரியை ஹமீதிடம் கொடுத்தேனேயொழிய அது எப்படிவரும் என்பது பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. புரூஃப்கூட நான் பார்க்கவில்லை. புத்தகம் வெளிவருவது வீட்டில் யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் அவ்வளவு கவனமாகவும் பயத்துடனும் இருந்தேன். ஹமீதுதான் எல்லாம் பார்த்துப் புத்தகமாக்கினார். புத்தகம் வெளிவரும் சமயத்தில்தான் "வெளியீட்டு விழா இருக்கிறது, வர முடியுமா?" என்று ஹமீது கேட்டபோது வீட்டில் என்ன சொல்லிவிட்டுச் செல்வது என்று தெரியாமல் இருந்தேன். உடல்நிலை சரியில்லை என்று சொல்லித்தான் எங்கள் வீட்டிற்குப் போனேன். பின்பு அம்மாவுடன் சென்னை சென்றேன். இப்படியான நிலையில் என் புகைப்படம் புத்தகத்திலோ அழைப்பிதழிலோ வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

புத்தக வெளியீட்டு விழாவின்போது சலபதி புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். நிறையக் கவிதைகளின் தலைப்பு மற்றும் ஒருசில வரிகளில் வார்த்தைகள் எல்லாம் மாறியிருந்தன. புத்தகம் வருவதற்கு முன்பே நான் பார்த்திருந்தால் குறைகளாகத் தோன்றுவதை சரி செய்திருப்பேன். அந்தப் புத்தக உருவாக்கத்தில் என்னுடைய பங்கு எதுவுமேயில்லை.

அதுவரை புகைப்படத்தில்கூட என்னைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

இந்த நிலை எப்படி மாறியது?

சமீபத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தபோது எல்லாம் மாறிவிட்டது. எங்கள் பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். மக்களிடம் நம் முகத்தை வெளிக் காட்டித்தான் ஓட்டுக் கேட்க முடியும். இவ்வளவு நாட்களாக என்னை மறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த எனக்கு, என்னை வெளிக்காட்டித்தான் ஓட்டுக் கேட்க முடியும் என்பதால் வீட்டில் அதற்கெல்லாம் தயாராகவே இருந்தார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் வேட்பாளர் என்ற பெயரில் என் புகைப்படம் வந்தது. ஓட்டுக் கேட்க பேரூராட்சித் தொகுதி முழுக்கப் போகவேண்டி வந்தது. இதனால் இதற்கு முன்பு இருந்த எல்லா விஷயங்களும் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. என் தனித்துவத்திற்காக நான் செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயங்களெல்லாம் குடும்பத்தில் ஒத்துக் கொள்ளப்படும்போதுதான் வெளிப்படையாக இயங்க முடிகிறது.

இதே தேர்தலில் நிற்பதை என் சொந்த விருப்பமாகச் சொல்லியிருந்தால் நிற்கச் சொல்லியிருக்க மாட்டார்கள். எப்போதுமே எனது சுயவிருப்பம் சார்ந்து இயங்க முடியாமல்தான் இருக்கிறது. தேர்தலில் நான் நிற்பது அவர்களுடைய தேவை சார்ந்தது. எனது விருப்பமாக மட்டுமே இருந்தால் அனுமதித்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மேடையாகக் கூட்டிப் போய்ப் பேச வைத்திருக்க மாட்டார்கள். வீட்டிற்கு வீடு அழைத்துப்போயிருக்க மாட்டார்கள்.

தேர்தலில் நான் நிற்பது அவர்களுடைய தேவை. பெண்களுக்கான தொகுதி என்பதால் என்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினார்கள். அதனால் உடனே இதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது. ஆனால் எனக்கும் அது தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். என் பயத்தைப் போக்கிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் நிற்க ஒத்துக் கொண்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு என்றால் என்னை யாரும் வீட்டில் வந்து பார்க்கவோ பேட்டி எடுக்கவோ முடியாது. அதற்கான இடமே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது பேரூராட்சித் தலைவர் என்ற முறையில் அலுவலகரீதியாகப் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என்று யார்யாரோ பார்க்க வருகிறார்கள். அதற்கு வீட்டில் எந்த எதிர்ப்பும் கிடையாது. அப்போது அவர்கள் வேறு நான் வேறு என்றில்லாமல் போகிறது. தடுக்கவும் முடியாது. இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்கிறேன். தேர்தல் வேண்டாம் என்று விட்டு விட்டிருந்தாலும் இப்போதைய சுதந்திரம் கிடைக்காமல் போயிருக்கும். இப்போது எல்லாக் கதவுகளும் திறந்தபடியே இருக்கின்றன.

திருமணத்திற்கு முன்பும் அதற்குப் பின்பும் வீட்டுச் சூழல் எப்படி இருந்தது?

வீட்டுச்சூழல் என்று பார்த்தால் அம்மாவுடன் எப்போதும் பாதுகாப்பான உணர்வுடன் இருக்க முடியும். என் ஒவ்வொரு செயல்பாட்டையும் பெற்றோர்கள் அங்கீகரித்தார்கள். ஏற்றுக் கொண்டார்கள். திருமணம் ஆனவுடன் சிறையில் இருப்பதைப் போல உணர ஆரம்பித்தேன். சின்ன அளவில்கூட சுதந்திரமற்று இருந்தேன். அப்போது அதிக அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆட்பட்டேன். ஹமீது துவரங்குறிச்சியில்தான் இருந்தார். என் கணவர் வீடு ஹமீது வீட்டிற்குப் பக்கத்துத் தெருதான். ஆனால் அவரை மாதத்திற்கு ஒருமுறைதான் பார்க்க முடியும். அருகிலேயே அவர் இருந்தாலும் அவரைப் பார்க்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். எனது மன உணர்வுகளை கவலைகளைப் பகிர்ந்துகொள்ள உடனுக்குடன் முடியாது. பெண்ணாகப் பிறந்ததால்தானே இப்படி என்று மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானேன். இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று எங்காவது போய்விடலாம் என்றுகூட நினைத்தேன். கிராமத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் நினைப்பதுகூட சிரமம்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது சமூகம் என்ன நினைக்குமோ என்று பயந்துதான் வாழ வேண்டியுள்ளது. நமக்காக வாழவே முடியாது. நமக்கென்று ஒரு முகம் உண்டு. அடையாளம் உண்டு. அதையொட்டியேதான் வாழ முடியும். அதனால் நமக்கு விதிக்கப்பட்டதற்குள் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் எழுதுவதுதான் ஒரே வழி. தீவிர உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை அப்போதுதான் எழுதினேன். பின்பு கொஞ்ச நாளில் எழுதுவதிலும் ஆர்வம் இல்லாமல் போனது. "வாழ்க்கையே முடிந்து போனது, பிறகு எதற்கு எழுத வேண்டும்?" என்று நினைக்கும்படியான மனச்சோர்வுக்கு உள்ளானேன். மூன்று ஆண்டுகள்வரை எழுதவே இல்லை.

முதல் குழந்தைக்காகக் கர்ப்பம் ஆனவுடனே மனசுடைந்து போனேன். வாழ்வின் முடிவிற்கே வந்துவிட்டதுபோல இருந்தது. இனிமேல் எதுவும் வாழ்வை மாற்றப்போவது இல்லை. இதுதான் தலைவிதி. சாகும்வரை இப்படித்தான். எழுதுவது நம்மை எந்த விதத்தில் மீட்டெடுக்கப் போகிறது, இதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயம் என்ற அப்போதைய மனநிலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டேன். சராசரியான எல்லாப் பெண்களுக்குமே திருமணமாகி ஒரு குழந்தை பெற்றுவிட்டாலே தங்களது உடலைப் பற்றிய கவலை போய்விடும். எல்லாம் முடிந்துபோனது. இனிமேல் அதைக் குறித்த கவலை எதற்கு என்பதான மனப்போக்குத்தான் ஏற்படும். இதே மனநிலைதான் எனக்கும் இருந்தது. பிற பெண்கள் நினைப்பதற்கும் நான் நினைப்பதற்கும் என்ன வேறுபாடு? பிற பெண்கள் மாதிரியல்லாது வேறுவிதமான சிந்தனைகள் கொண்டதாக நான் நினைத்துக் கொண்டிருப்பது பொய்யா? இப்படியெல்லாம் என் மனதில் நினைவுகள் முட்டி மோதின. அப்போதுதான், கல்யாணத்திற்குப் பிறகும் எவ்வளவோ செய்ய முடியும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவதன் மூலம் நம் அடையாளத்தைக் காட்ட முடியும்,. நாம் ஒன்றுமில்லாமல் போய்விடக் கூடாது என்ற வீம்பு திரும்ப வந்தபின்புதான் எழுதத் தொடங்கினேன். இன்றைய நிலையில் முதலில்போல மனச்சோர்வுதரும் விஷயங்கள் எதுவும் இல்லை. நம்பிக்கையுடனே இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் என் கவிதைத் தொகுப்பு வெளிவந்ததுதான். அப்போதுகூட என் கவிதைகள் புத்தகமாய் வர வேண்டாம் என்றே ஹமீதிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். புத்தகமாய் வந்து என்னை என்ன செய்யப்போகிறது என்ற அவநம்பிக்கைதான் முதலில் இருந்தது. அந்த அவநம்பிக்கை 2002வரை தொடரவே செய்தது. கவிதைகள் புத்தகமாய் வெளிவந்தது அதிகப்படியான நம்பிக்கையே அளித்தது. எழுத்தின் மூலமாய்க் கிடைத்த பலன் பல முக்கியமான நண்பர்கள் அறிமுகமானதுதான். அதுதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம். எழுத்து புதிய வாழ்க்கையைக் கொடுக்கா விட்டாலும் நட்பைக் கொடுத்தது. இது ஒன்றே போதுமானது என்றே நினைக்கிறேன்.

மனச்சோர்வுதான் உங்களை எழுதத் தூண்டுகிறதா?

ஆமாம். மனதிற்குள் உள்ளதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வழியில்லாமல்தான் எழுதினேன். அதை எழுதும்போது யாரிடமோ பகிர்ந்து  கொள்கிறோம் என்ற எண்ணமே மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. எழுதியவுடன் கிடைக்கும் மனத் திருப்தி மனச்சோர்விலிருந்து விடுபடுவது போன்ற உணர்வைத் தரும்.

உங்களுடைய கவிதைகள் உங்கள் சுயசரிதை போலவே தோன்றுகிறது. எல்லாப் பெண்களுக்குமான கவிதைகளாக உங்கள் கவிதைகளை உணர்கிறீர்களா?

என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளாக என் கவிதைகளை நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் நான் அப்படிப் பார்ப்பதில்லை. என்னுடைய அனுபவங்கள் அவை என்றாலும் எல்லாப் பெண்களுக்குமான பொதுவான உணர்வுகளாகவும் இருக்கின்றன. படிப்பவர்களுக்குப் பொதுவான தளத்திற்குச் செல்வதற்கு என் ஒவ்வொரு கவிதையும் இடம் தரவே செய்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நேராத பல விஷயங்களும் என் கவிதைகளில் இருக்கவே செய்கிறது. என் கவிதைகளின் குரல் தன்னுணர்ச்சி கொண்டதாக இருப்பதால் சுயசரிதைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த பல பெண்களின் வாழ்க்கையும் என் கவிதைகளில் இருக்கவே செய்கிறது. என் வாழ்க்கையைப் போன்றுதான் எங்கள் ஊரிலுள்ள எங்கள் சமூகப் பெண்களின் வாழ்க்கையும் இருக்கிறது. அதிகமும் அப்படித்தான் இருக்கிறது.

துவரங்குறிச்சியில் உங்களுக்குத் தெரிந்த பெண்கள் உங்கள் கவிதைகளைப் படித்திருக்கிறார்களா?

இங்குள்ள பெண்களுக்குக் கவிதை படிப்பதிலெல்லாம் விருப்பம் கிடையாது. அத்தோடு நான் எழுதியுள்ள விஷயங்களையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நிராகரிக்கவே செய்தார்கள். நான் எழுதுவதைத் தப்பான காரியமாகவே பார்த்தார்கள். இதை அவர்கள் ஊக்கப் படுத்தவும் முடியாது. ஆதரிக்கவும் முடியாது. எங்கள் சமூகத்தில்கூட இதுவரை யாரும் படித்துப் பாராட்டியதில்லை.