Saturday, March 11, 2006

சுந்தர ஆத்தா


‘‘சுந்தர ஆத்தா’’ என்றால் திருப்பூர் வாசிகள் அந்த தொண்ணூற்றி ஐந்து வயதுப் பெண்மணியை மிகவும் மரியாதையாக, மிகவும் சந்தோஷமாக கை காட்டுகிறார்கள்.

‘‘எங்கள் ஊரின் இந்த ஆத்தாவும் நம் சுதந்திரப் போராட்டத்தில் பெரிய பங்கு வகித்தவர் தெரியுமா?’’ என்ற சந்தோஷம் அவர்கள் கண்ணில் மின்னும்... கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி, இந்த வயதிலும் வசதி மிக்கத் தன்னுடைய பங்களாவில், தன் வாரிசுகளுடன் வசிக்காமல், ஆசிரமத்திலேதான் இருக்கிறார்.

சுந்தராம்பாளின் அப்பா, திருப்பூர் ஏரியாவிலேயே பெரிய மணியக்காரர். நாடு முழுக்க காந்தியின் அஹிம்சா வழி சுதந்திரப் போராட்டம் பரவியிருந்த நேரம் அது... சுந்தராம்பாளின் அப்பாவுக்கும் காந்தியின் கொள்கைகளின் மேல் பற்று ஏற்பட்டிருக்கிறது. அப்பாவின் பற்று, மகளுக்கும் இயல்பாகவே வந்திருக்கிறது.

தியாகி சுந்தராம்பாள் அதை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்... ‘‘காந்தியடிகள், திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்த கூட்டத்திற்காக வந்திருந்தார். நானும் என்னுடைய பெரியம்மா பெண் முத்துலட்சுமியும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போயிருந்தோம். அப்போது எனக்குப் பதினைந்து வயதிருக்கும். பட்டுப்புடவையும் கழுத்து நிறைய கிலோ கணக்கில் நகைகளையும் அணிந்து கொண்டு போயிருந்தோம்.

காந்தியோ எளிமையே உருவாக இருந்தார். அவருடைய பேச்சும் செயலும் ஒன்றாகவே இருந்ததை அந்த கொஞ்ச நேரத்திலேயே உணர முடிந்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில் ‘ஹரிஜன சேவா’ இயக்கத்திற்கு நிதி வசூல் செய்தார் காந்தி. அவருடைய பேச்சால் ஈர்க்கப்பட்ட நாங்கள் இருவரும், உடனே அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழற்றி ஹரிஜன சேவா இயக்கத்துக்கு கொடுத்து விட்டோம்.

நகைகளைப் பெற்றுக் கொண்ட காந்தியடிகள், ‘இது மட்டும் போதாது... பட்டுப் புடவைகளை விட்டு இனி நீங்கள் கதராடையை அணிய வேண்டும்’ என்றும் சொன்னார். அவர் சொன்னபடியே இன்று வரை கதராடையை மட்டுமே அணிந்து வருகிறேன்.

அந்தக் கூட்டத்திற்குப் பிறகுதான், நான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். ‘என்னையே அழித்தாலும் சரி, நாட்டின் அடிமை விலங்கை அறுக்கப் பாடுபடுவேன்’ என்று சபதமே எடுத்துக் கொண்டேன்’’ என்று சொல்லும் இவரின் குரலின் கம்பீரம் இன்னும் குறையவில்லை.

சுதந்திரப் போராட்டத்திற்கு இடையே சுந்தராம்பாளுக்கு பதினேழு வயதில் திருமணம், இரண்டு குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கையும் ஏற்பட்டிருக்கிறது. இதில் சோகம் என்னவென்றால் சுதந்திரப் போராட்டத்தில் சுந்தராம்பாள் ஈடுபடுவதை அவருடைய கணவர் விரும்பவில்லை. எத்தனையோ முறை இவருக்கும், கணவருக்கும் இடையே இந்த விஷயத்தில் பெரிய போராட்டமே ஏற்பட்டிருக்கிறது.

‘‘நான் காந்தி வழியில் தீவிர மதுவிலக்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தேன். என் கணவரோ அப்போதுதான் ஊரைச் சுற்றியிருந்த அத்தனை கள்ளுக்கடைகளையும் ஏலத்தில் எடுத்திருந்தார். இத்தனை முரண்பாடுகள் எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும்போது எப்படி அவர் என்னுடன் குடும்பம் நடத்துவார்? அதனால்தான் அவர் என்னையும் இரண்டு குழந்தைகளையும் பிரிந்து சென்று இன்னொரு திருமணம் செய்து கொண்டார்’’ என்று சொல்லும்போதே சுந்தராம்பாளின் முகத்தில் வெறுமையான புன்னகை.

‘‘அவர் என்னை விட்டுப் பிரிந்தது ஒரு விதத்தில் எனக்கு நன்மை என்றே நினைக்கிறேன். அவர் பிரிந்த பிறகுதான் நான் சுதந்திரப் போராட்டத்தில் இன்னும் தீவிரமாக ஈடுபட முடிந்தது.

தனி நபர் சத்தியாகிரகப் போராட்டத்தில், என் மூன்று வயது கைக்குழந்தையுடன் ஜெயிலுக்குப் போனேன். கிட்டத்தட்ட ஏழுமாதங்கள் நான் ஜெயிலிலேயே இருந்தேன்’’ என்று சொல்லும் சுந்தராம்பாள், சுதந்திரப் போராட்டக் காலத்தில் மூன்று முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறார்.

அந்தக் காலகட்டத்தில் அவருக்கு உற்ற துணையாக இருந்தது அவருடைய குடும்பம்தான். இன்றும் சுந்தராம்பாளின் குடும்பம்தான் திருப்பூரில் பெரிய பணக்காரக் குடும்பம். இருந்தும் அவர் குடியிருப்பது என்னவோ ஆசிரமத்தில்தான்!

‘‘சுதந்திரம் கிடைத்த பிறகு அமைந்த புதிய அரசின் அமைச்சரவையில் இடம் பெற எனக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. ‘தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறோம்’ என்றார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இருந்த காங்கிரஸோ, அதன் நோக்கத்திலிருந்து நிறைய மாறி இருந்தது. வசதி படைத்தவர்கள் மட்டுமே பெரிய பதவிகளில் இருந்தார்கள். இந்தப் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை.

இந்தச் சமயத்தில்தான் எனக்கும் அழைப்பும் வந்தது. வினோபாபாவே யின் ஆலோசனைப்படி அதை நான் நிராகரித்து விட்டேன். அவர்தான் என்னை ஆதரவற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒரு இல்லம் ஆரம்பிக்க யோசனை சொன்னார். இதோ அந்த இல்லத்தில்தான் நான் இத்தனை காலமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவிக்கிறார்.

சுதந்திரம் கிடைத்த பிறகும்கூட, சுந்தராம்பாளின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. கோயம்புத்தூரைச் சுற்றியிருந்த நூற்றாலைகளில் பணிபுரிந்த பெண்களுக்காகவும் இவர் போராடியிருக்கிறார். அதோடு விவசாயிகளின் மின் கட்டணத்தை உயர்த்தியபோது நடுரோட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டு மறியல் போராட்டமும் நடத்தியவர் இவர்.

‘‘என்ன நோக்கத்திற்காக நாங்கள் போராடி சுதந்திரம் வாங்கினோமோ, அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவே இல்லை. வறுமை, ஏழ்மை, வன்முறை, பெண்ணடிமைத்தனம் வேலையில்லா திண்டாட்டம் இன்னும் மாறவேயில்லை. பெண்களின் நிலையிலும் பெரிசாக எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும் கூட பெண்களால் இன்னும் தனிப்பட்ட ஒரு முடிவை தன்னிச்சையாக எடுக்க முடிவதில்லை. கணவன் அல்லது தந்தையை சார்ந்துதான் இருக்க வேண்டிய நிலைமை. இது மாற வேண்டும்!’’ என்கிறார்.

சுந்தராம்பாளிடமிருந்து விடைபெறும்போது ஐந்து தலைமுறை விஷயங்களையும் தெரிந்து கொண்ட உணர்வு ஏற்பட்டது. சுயநலம் பாராட்டாத ஒரு தியாகியின் உன்னத வாழ்க்கையைத் தெரிந்து கொண்ட நெகிழ்வும்கூட!

Quelle - Kumutham - March2006