நோபல் பரிசு பெறும் முதலாவது ஆபிரிக்கப் பெண்மணி!
சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்!
இம்முறை சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆபிரிக்காவின் பெண்ணொருத்திக்குக் கிடைத்துள்ளது. நோபல் விருதினைப் பெறும் முதலாவது ஆபிரிக்க தேசத்துப் பெண் என்ற பெருமையினைப் பெற்றிருக்கின்றார் கென்யாவைச் சேர்ந்த வங்கரி மாதாய் (Wangary Maathaai). சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் அமைதி போன்றவற்றுக்கு இவர் ஆற்றிய, ஆற்றிவரும் சேவைக்காக இவர் இம்முறை இவ்விருதினைப் பெறுகின்றார்.
1940இல் பிறந்த கிழக்காபிரிக்காவின் முதலாவது பெண் கலாநிதி, கென்யாவின் பல்கலைக் கழகமொன்றின் இலாகாவொன்றின் முதலாவது பெண் தலைவர் என்ற பெருமைகளையும் ஏற்கனவே பெற்றுள்ள இவர் கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சூழல் மற்றும் இயற்கை/வன வளத்துறைக்குரிய இணை அமைச்சராகவும் விளங்கி வருகின்றார். இவர் உயிரியற் துறையில் பட்டப்படிப்பினை கன்சாஸிலுள்ள மவுண்ட். செயின்ற் ஸ்கொஸ்டிகா காலேஜிலும், பிட்ஸ்பார்க் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் (Masters) பட்டத்தினையும் பெற்றவர். அதன் பின்னர் கென்யா திரும்பிய இவர் நைரோபிய பல்கலைக் கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் ஆய்விலீடுபட்டுக் கலாநிதி பட்டம் பெற்றவர். சக ஆண்களின் அவநம்பிக்கையினையும், எதிர்ப்பினையும் சமாளித்து இவர் இப்பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அப்பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி மிருக வைத்தியத் துறைக்கான தலைவராக பதவி உயர்வு பெற்ரறுச் சாதனை புரிந்தார்.
வாங்கரி மாதாய் 1977இல் 'The Green Belt' இயக்கத்தினை ஆரம்பித்தார். இவரது இவ்வமைப்பு இதுவரையில் 10 மில்லியனுக்கும் மேலாக மரங்களை நட்டுச் சாதனை புரிந்துள்ளது. மண்ணரிப்பைத் தடுக்கும் அதே சமயம் சமைப்பதற்குரிய எரிபொருளான விறகுகளையும் பெறுவதே இதன் நோக்கம். சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தியாக இது அமைகின்றது (Sustainable Development). இந்த அமைப்பின் செயற்பாடுகள் யாவும் கென்யாக் கிராமங்களில் வாழும் பெண்களாலேயே பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சூழலைப் பாதுகாப்பதுடன் மரம் நடுவதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கும் இவரது அமைப்பு அதன் மூலம் பெண்கள் தங்களது குழந்தைகளைப் பராமரிக்கவும், அவர்களது எதிர்காலததை வளமாக்கவும் உதவி புரிகிறது.
1998இல் கென்யாவின் அன்றைய ஜனாதிபதியின் டானியல் அரப் மாய் (Daniel Arap Moi) ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆடம்பர வீடமைப்புத் திட்டத்துக்காக நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் மரங்கள் அழிக்கப்பட்டன. அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட இவரை அரசு கைதுசெய்து சிறையிலடைத்தது. பின்னர் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலையீட்டினால் இவர் விடுதலை செய்யப்பட்டார். 1999இல் நைரோபியின் கருரா பொதுப் பூங்காவில் மரங்களை நாட்டிக் கொண்டிருந்த பொழுது பலமாகத் தாக்கப்பட்டுத் தலையில் பலத்த காயங்களைப் பெற்றார். கென்யாவின் முன்னைய அரசினால் பல தடவைகள் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வறிய மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் பலமாகவும் குரல் கொடுக்கும் இவர் ஒரு முறை நிர்வாணப் பெண்களின் ஆர்ப்பாட்டமொன்றினையும் தலைமை தாங்கி நடத்தியவர்.
1980இல் இவரை விவாகரத்துச் செய்த இவரது முன்னாள் கணவர் அதற்குக் கூறிய காரணங்கள்: "இவர் மிகவும் அதிகமாகப் படித்தவர், மிகவும் வலிமையானவர், மிகவும் வெற்றிகரமானவர், மிகவும் பிடிவாதமானவர், கையாளுவதற்கு மிகவும் கடினமானவர்" என்பதே. மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், ஜனநாயகம், அமைதி, சூழல் பாதுகாப்பு, சூழழ் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி ஆகியவற்றில் இவரது அளப்பரிய பங்களிப்பினைக் கெளரவிக்கும் முகமாகவே இம்முறை இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சில சமயஙக்ளில் விருதுகள் பெருமையுறும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இது அத்தகைய சந்தர்ப்பங்களிலொன்று.
- ஊர்க்குருவி -
நன்றி - பதிவுகள்.கொம்