Monday, November 10, 2014

நடின் கோர்­டிமர் (Nadien Gordimer)

Monday, 10 November 2014 06:56 சிறு­கதை படைப்­பி­லக்­கி­யத்­துக்கு நோபல் பரிசு வென்று உல­கப்­பு­கழ்­பெற்ற கனே­டிய எழுத்­தாளர் அலிஸ் மன்றோ போன்று நாவல் இலக்­கி­யத்­துக்கு நோபல் பரிசு வென்று புகழ்­பூத்­தவர் தென்­னா­பி­ரிக்க எழுத்­தா­ள­ரான நடின் கோர்­டிமர் (Nadien Gordimer)

படைப்­பி­லக்­கி­யத்­தோடு மட்டும் தமது சிந்­த­னை­யையும் ஆற்­ற­லையும் செயற்­பா­டு­க­ளையும் மட்­டுப்­ப­டுத்திக் கொள்­ளாமல் அதற்­கப்பால் அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளிலும் சமூக அபி­வி­ருத்தி விட­யங்­க­ளிலும் காட்­டிய ஊக்கம் அபா­ர­மா­னது.

ஆளும் வெள்­ளையர் வர்க்­கத்தில் பிறந்­தவர் சகல சுக­போ­கங்­க­ளுடன் எழுத்தை ஒரு பொழு­துப்­போக்­காக கொள்­ளக்­கூ­டிய ஒரு தரா­த­ரத்தில் இருந்த ஒரு பெண் படைப்­பாளி தனது இனத்து அதி­கார வர்க்­கத்­தினர் உதைத்து நசுக்­கிய ஆபி­ரிக்க கறுப்­பின மக்கள் மீது கொண்ட இரக்கம் போற்­றத்­தக்­கது. அதுவே அவ­ரது எழுத்தின் பிரத்­தி­யட்சம் மனி­தா­பி­மா­னத்தின் அடிப்­ப­டையில் அமைந்த எழுத்துச் சிற்­பங்­களே நடின் கோர்­டிமருக்கு 1991 ஆம் ஆண்டு இலக்­கி­யத்­துக்­கான நோபல் பரிசை வென்று தந்­தன என்றால் மிகை­யில்லை. இந்த எழுத்து சிற்பி கடந்த ஜூலை 13ஆம் திகதி (2014) தமது தொண்­ணூ­றா­வது வயதில் அம­ர­ரான செய்தி உலகம் அறிந்­ததே.

தென்­னா­பி­ரிக்­காவில் வெள்­ளையர் ஆட்சி நடை­பெற்ற கால­கட்­டத்தில் சுதேச கறுப்பு இன­மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட பல்­வேறு இன ஒதுக்கல் முகங்­க­ளையும் தாம் படைத்த 15 நாவல்கள், பல சிறு­க­தைத்­தொகுதி, கட்­டுரை நூல்கள் மற்றும் படைப்­புக்கள் மூலம் அவர் வெளிக்­கொ­ணர்ந்தார். தென்­னா­பி­ரிக்­காவின் கலா­சாரம் அதன் மக்கள் ஜன­நா­ய­கத்­துக்­கான அவர்­க­ளது போராட்டம் ஆகி­ய­வற்றின் மீது அவர் செலுத்­திய கவனம் மிக­மிக ஆழ­மா­னது. நோபல் பரிசை வென்­றதும் 1980களில் தேசத்­து­ரோக குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இன ஒதுக்கல் கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­கப்­போ­ரா­டி­ய­வர்­க­ளுக்கு ஆத­ர­வா­கத்தாம் செயற்­பட்ட காலத்­தையும் அவர் தமது வாழ்வின் மிகப்­பெ­ரு­மி­த­மான கால­மாக கரு­தினர் என்ற அவ­ரது குடும்­பத்­த­வரின் கூற்று குறிப்­பி­டத்­தக்­கது.

படைப்­பி­லக்­கி­யத்­துக்கு அப்பால் ஒரு தீவிர அர­சியல் சமூக செயற் ­பாட்­டாளர்

அடக்கி, ஒடுக்கி ஆளப்­பட்ட கறுப்­பின மக்கள் மீது கோர்­டிமர் மிக்க அனு­தாபம் கொண்டு போரா­டி­ய­தற்கு காரணம் என்ன? அதற்கு விடை அவ­ரது வாழ்வின் பின்­ன­ணியில் இருந்­தது என்றே கூறலாம்.

கோர்­டிமர் ஜோஹானாஸ்பர்க் பேர்க்­கிற்கு வெளியே கோடெங் நகரில் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்­திற்கு அண்­மை­யான இடத்தில் 1922ஆம் ஆண்டு பிறந்தார். இவ­ரது தந்­தையார் இலிடேர் கோர்­டிமர் ரஷ்­யாவில் இருந்து வந்த ஒரு யூத குடி­யேற்­ற­வாசி அவ­ரது தாயார் ஹன்னா நான் (Nan) லண்­டனைச் சேர்ந்­தவர். அவர் யூத பரம்­ப­ரையைச் சேர்ந்த ஒரு குடும்­பத்தை சேர்ந்­தவர்.

தென்­னா­பி­ரிக்­காவில் நில­விய இன மற்றும் பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்வு இடங்­களில் கோர்­டிமர் கொண்­டி­ருந்த அக்­க­றையை தூண்­டி­ய­வர்கள் அவ­ரது பெற்­றோர்­களே. ஸாரின் ரஷ்ய ஆட்­சியில் ஓர் அக­தி­யாக அவ­ரது தகப்­பனார் பெற்ற அனு­பவம் அவ­ரது அர­சியல் அடை­யா­ளத்தை உரு­வாக்க உத­வி­யது. ஆனால் அவர் ஓர் அர­சியல் நட­வ­டிக்­கை­யா­கவோ அல்­லது கறுப்­பின மக்­கள்­மீது அனு­தாபம் கொண்ட ஒரு­வ­ரா­கவோ இருக்­க­வில்லை. ஆனால், அவ­ரது தாயார் தென்­னா­பி­ரிக்க மக்­களின் வறுமை நிலை மற்றும் அவர்­க­ளுக்கு எதி­ராக காட்­டப்­பட்டு வந்த பார­பட்சம் ஆகி­ய­வற்றில் அனு­தாபம் கொண்­ட­வ­ராக இருந்தார். அதன் கார­ண­மாக கறுப்­பினப் பிள்­ளை­க­ளுக்கு உதவும் நட­வ­டிக்­கையில் ஈடு­பாடு கொண்­டிருந்தார்.இதுவே கோர்­டி­ம­ரையும் இந் நட­வ­டிக்­கை­க­ளுக்கு தூண்­டு­வ­தாக இருந்­தது.

மேலும், அவர் வளர் இளம் பரு­வத்­தி­லி­ருந்த காலத்தில் அவ­ரது வீட்­டினை முற்­று­கை­யிட்ட பொலிஸார் கறுப்பு பணி­யாளர் ஒரு­வரின் அறைக்குள் நுழைந்து அவ­ரது கடி­தங்கள் மற்றும் தினக்­கு­றிப்பு புத்தகத்தையும் கைப் பற்றிச் சென்­றதை நேர­டி­யாகப் பார்த்தவர்.

கத்­தோ­லிக்க கன்­னியர் மட பாட­சாலை ஒன்றில் கோர்­டிமர் கல்வி கற்றார். இருப்­பினும் அவ­ரது தாயார் அவரை பெரும்­பாலும் வெளியில் செல்­லா­த­வாறு வீட்­டி­லேயே தங்­க­வைத்தார். அதற்கு காரணம் அவ­ரது இரு­தயம் பல­வீ­ன­மாக இருந்­தது எனக்­கா­ரணம் கூறி­வந்­தாராம்.

தனி­யாக பெரும்­பாலும் வீட்­டுக்குள் அடைபட்டு கிடந்த கோர்­டிமர் கதைகள் எழுத ஆரம்­பித்தார். 1937ஆம் ஆண்டு அவ­ரது 15ஆவது வய­தி­லேயே அவ­ரது சிறு­க­தை எழுத்து ஆரம்­ப­மா­னது . அவை சிறு­வர்­க­ளுக்­கான கதைகள். தமது 16ஆவது வய­தி­லேயே வாழ்ந்­தோ­ருக்­கான அவ­ரது படைப்பு பிர­சுரம் கண்­டது.

விற்­வாட்­டர்ஸ்ரான்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தில் ஒரு­வ­ருட காலம் படித்தார் எனினும் பட்ட படிப்பை பூர்த்தி செய்­ய­வில்லை. 1948ஆம் ஆண்டு ஜோஹா­னாஸ்பர்க் சென்­றவர் பின்னர் அங்கே தங்­கி­யி­ருந்தார். வகுப்­புக்கள் எடுத்து கல்வி கற்­பித்­தவர் தொடர்ந்தும் கதை­களை எழு­தினார். அவை பெரும்­பாலும் உள்ளூர் தென்­னா­பி­ரிக்க சஞ்­சி­கை­களில் பிர­சு­ர­மா­கின. இச்­சி­று­க­தை­களில் பல தொகுக்­கப்­பட்டு Face To Face (நேருக்கு நேர் )என்னும் பெயரில் 1947 இல் பிர­சு­ரிக்­கப்­பட்­டது.

1951இல் நியூயோக்கர் பத்­தி­ரிகை இவர் எழு­திய ஏ வாட்சர் ஒவ் த டெட் என்ற கதையை ஏற்றுப் பிர­சு­ரித்­தது. இதன் மூலம் இவர் பர­வ­லாக பொது­மக்­களால் அறி­யப்­பட்ட ஒரு எழுத்­தா­ள­ராவார்.

இக்­கா­ல­கட்­டத்­துக்­கு­ரிய பொருத்­த­மான இலக்­கிய வடிவம் சிறு­க­தைதான் என நம்­பிய இந்த எழுத்­தாளர், ”நியூ­யோக்கர்” மற்றும் முன்­னணி இலக்­கிய சஞ்­சி­கை­க­ளிலும் சிறு­க­தை­களைத் தொடர்ந்து எழு­தினார்.

இவ­ரது முத­லா­வது பிர­சுர கர்த்தர் லுலு பிறீட்மன், எம்.பி.யான பேர்னாட் பிறிட்­மனின் மனை­வி­யாவார். அவர்­க­ளது வீட்­டில்தான் கோர்டிமர் இன ஒதுக்கல் கொள்­கை­க­ளுக்கு எதி­ரான சில எழுத்­தா­ளர்­களைச் சந்­தித்­தி­ருந்தார்.

கோர்­டி­மரின் முத­லா­வது நாவலான ”தி லையிங் டேயிஸ்” 1953ஆம் ஆண்டு நூலாகப் பிர­சு­ரிக்­கப்­பட்­டது.

1949ஆம் ஆண்டு ஜெரால்ட் காவ்றன் என்ற பல் வைத்­தி­யரை மணம்­பு­ரிந்தார். இத்­தி­ரு­ம­ணத்தின் பய­னாக ஒறியன் என்னும் பெய­ருள்ள மகள் பிறந்தாள் (1950). மூன்று வரு­டத்தின் பின் இம்­மண வாழ்வு முறிந்­தது. 1954இல் இவர் றீன்ஹோல்ட் கஸ்ஸிறர் என்­ப­வரைத் திரு­மணம் புரிந்தார். இவர் மிகவும் மதிப்­புப்­பெற்ற ஓவிய வியா­பா­ரி­யாவார். இம்­மண வாழ்க்கை கஸ்ஸிறர் 2001ஆம் ஆண்டு நோய்­கண்டு இறக்­கும்­வரை நீடித்­தது. இத்­தி­ரு­ம­ணத்தின் மூலம் ஹூகோ என்ற புத்­திரன் பிறந்தான் (1955). இவர் நியூ­யோர்க்கில் திரைப்­படத் தயா­ரிப்­பா­ள­ராக உள்ளார். கோர்டிமர் தனது மக­னுடன் இணைந்து ஆகக் குறைந்­தது இரண்டு ஆவ­ணப்­ப­டங்­களைத் தயா­ரித்­தி­ருக்­கிறார்.

இன ஒதுக்கல் கொள்­கை­க­ளுக்கு எதி­ரான இயக்­கத்தில் கோர்­டிமர் பங்கு கொள்­வ­தற்கு அவ­ரது நெருங்­கிய நண்பர் பெற்றி டு ரொயிற் கைது செய்­யப்­பட்­ட­மையும், ஷார்ப்­வில்லி படு­கொ­லை­களும் கார­ண­மாக அமைந்­தன. அதன் பின்னர் அவ­ரது நட­வ­டிக்­கைகள் தீவி­ர­ம­டைந்­தது. நெல்சன் மண்­டே­லாவின் வழக்கு விசா­ரணை 1962ஆம் ஆண்டு நடை­பெற்ற காலத்தில் அவ­ரது சட்­டத்­த­ர­ணி­க­ளுடன் இவரது நட்­பு­றவு நெருக்­க­மான ஒன்­றாக இருந்­தது.

இந்த வழக்கு விசா­ர­ணையின் போது நெல்சன் மண்­டேலா, பிர­தி­வாதிக் கைதிக்­கூண்டில் நின்று ”சாகத்­த­யா­ராக இருக்­கிறேன்” என ஆற்­றிய உரை மிகப் பிர­ப­ல­மா­னது. அந்த உரையை அவர் செம்­மைப்­ப­டுத்­து­வ­தற்கு கோர்டி­மரும் உதவி புரிந்தார். 1990ஆம் ஆண்டில் நெல்சன் மன்­டேலா சிறையில் இருந்து விடு­த­லை­யாகி வெளி­வந்­த­போது அவர் முதன்­மு­தலில் சந்திக்க விரும்­பிய ஆட்­களில் ஒரு­வ­ராக கோர்­டி­மரும் இருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

1960, 1970களில் இவர் ஜோஹ­ானஸ்­பேர்க்கில் வாழ்ந்­தி­ருந்த காலத்தில் அவர் அமெ­ரிக்கா பல்­க­லைக்­க­ழ­கங்­களில் அவ்­வப்­போது கற்­பித்­தலை மேற்­கொண்டார். அக்­கா­லத்தில் சர்­வ­தேச இலக்­கிய அங்­கீ­கா­ரத்தைப் பெற ஆரம்­பித்தார். 1961ஆம் ஆண்டில் அவ­ருக்கு முத­லா­வது பிர­தா­ன­மான விருது ஒன்று கிடைத்­தது.

அக்­கா­ல­கட்­டத்தில் தென்­னா­பி­ரிக்க அர­சாங்கம், இந்த எழுத்­தா­ள­ரது சில நாவல் படைப்­பு­களை சில காலம் தடை செய்­தது.

ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் தென்­னா­பி­ரிக்க அர­சினால் சட்­ட­வி­ரோ­த­மா­ன­தென தடை செய்­யப்­பட்­டி­ருந்த காலத்­தி­லேயே கோர்­டிமர், அதில் அங்­கத்­த­வ­ராகச் சேர்ந்­தி­ருந்தார். தென்­னா­பி­ரிக்க கறுப்­பின மக்­க­ளுக்கு விடிவைத் தேடித்­தரக் கூடி­யது ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸ்தான் என கோர்­டிமர் பூர­ண­மாக நம்­பினார்.

கோர்­டி­மரின் இலக்­கியப் படைப்­பு­க­ளுக்குப் பெரும் மதிப்பும், பெறு­ம­தி­மிக்க விரு­து­களும் பரி­சு­களும் பின்னர் கிடைத்த நிலையில் 1991ஆம் ஆண்டு அவ­ருக்கு இலக்­கி­யத்­துக்­காகக் கிடைத்த நோபல் பரிசு, சர்­வ­தேச புகழை அவ­ருக்குப் பெற்­றுக்­கொ­டுத்­தது. அவ­ரது மகத்­தான காப்­பியப் படைப்­புகள் மனித சமு­தா­யத்­துக்கு சிறந்த நன்­மையைப் புரிந்­துள்­ளது” என நோபல் பரிசு தேர்­வுக்­குழு அறிக்கை தெரிவித்தது.

இன ஒதுக்கல் கொள்கைகளுக்கு அப்பால், தென்னாபிரிக்க எழுத்தாளர் காங்கிரஸ் மற்றும் பிரதான இலக்கிய அமைப்புகளில் சேர்ந்து, அரச தணிக்கை நடவடிக்கைகள் மற்றும் அரச தகவல் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு தமது எதிர்ப்பினைக் காட்டினார்.

1990ஆம் தசாப்தம் மற்றும் 21ஆம் நூற்­றாண்டில் தென்­னா­பி­ரிக்­காவில் எச்.ஐ.வி. எயிட்ஸ் இயக்­கத்தில் மும்­மு­ர­மான ஒரு நட­வ­டிக்­கை­யா­ள­ரா­கவும் கோர்­டிமர் விளங்­கினார்.

இத்­த­கை­ய­தொரு உல­கப்­பு­கழ்­பெற்ற எழுத்­தா­ளரும், அர­சியல், சமூக நட­வ­டிக்­கை­யா­ள­ரு­மான நடியா கோர்டிமர் உறு­திப்­பாடும், நம்­பிக்­கையும் அர்த்­த­முள்ள வாழ்க்­கை­யினை வாழ்ந்து, தமது 90ஆவது வயதில் தூக்கத்தின்போது அமரரானார்.

‘மகிழ்ச்சி பல்வேறு அம்சங்களிலும் இருந்து ஏற்படுகின்றது. ஆனால் சுதந்திரமின்றி சந்தோஷம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை” என்ற அவரது கூற்று மிகுந்த அர்த்தமுள்ளது.

- அன்னலட்சுமி இராஜதுரை
eKuruvi.com
September 23, 2014

Tuesday, July 29, 2008

நீதிபதி நவநீதம் பிள்ளை

நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு:1941) என்பவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூனால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பரிந்துரைக்கப் பட்டவரும் ஆவார்.

ஐநா பொதுச்சபையின் முடிவை எதிர்பார்த்திருக்கும் நவநீதம் பிள்ளை தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை, 1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் , இவரது கணவர் உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.

பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் "ஈக்குவலிட்டி இன்று" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவளித் தமிழ்ப் பெண்மணி இவராவார்.

2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான குரூபர் பரிசு வழங்கப்பட்டது.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு தென்னாப்பிரிக்க தமிழர் நவநீதம் பிள்ளையின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது

நீதிபதி நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பதவிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நீதிபதியான நவநீதம் பிள்ளை அம்மையாரின் பெயரை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் பரிந்துரைத்துள்ளார்.

64 வயதாகும் நீதிபதி நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர்.

இவரது பெயரை ஐ.நா. பொதுச்சபை அங்கீகரிக்குமானால், கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வகித்துவந்த பதவியை நவநீதம் பிள்ளை ஏற்பார்.

நவி என்று அழைக்கப்படுகின்ற நவநீதம் பிள்ளை இந்தியத் தமிழ் பூர்வீகம் கொண்டவர். நடால் மாகாணத்தைச் சேர்ந்தவரான இவரின் தந்தை ஒரு பஸ் டிரைவர். எளிய குடும்பத்திலிருந்து வந்தவரானாலும், இனவெறி ஆட்சிக் காலத்தின்போதே சட்டத்தரணிகள் நிறுவனம் அமைத்த வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை இவரைச் சாரும்.

அமெரிக்காவின் பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.

ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.

Quelle - BBC 28.07.2008

Tuesday, April 15, 2008

தஸ்லீமா நஸ்ரின்உலக கவிஞர் வரிசை
ஓங்கி ஒலிக்கும் விடுதலைக் குரல்: தஸ்லீமா நஸ்ரின்


"எந்தவொரு மதம் மாறுபட்ட நம்பிக்கைகளை உடைய மக்களை அவமதிக்கிறதோ, எந்தவொரு மதம் பெண்களை அடிமையாக வைத்திருக்கிறதோ, எந்தவொரு மதம் மக்களை அறியாமையில் வைத்திருக்கிறதோ, அப்படியானால் அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.'
தஸ்லிமா நஸ்ரின் கிழக்கு பாகிஸ்தானின் மைகேன்சிங்கில் ஆகஸ்டு மாதம் 1962ல் பிறந்தார். 1971 க்கும் பின் அவர் பிறந்த இடம் பங்களாதேஷ் என தனி நாடாக அறிவிக்கப்பட்டு விட்டது.

அறிவியல் பாடத்தில் கல்வியைத் தொடர்ந்தாலும் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் வளர்ந்த சூழல் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாகும். தனது பதினைந்தாவது வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். செஞ்சுதி (1978-1983) என்னும் இதழுக்கு ஆசிரியராகவும் இருந்தார். தனது மருத்துவக் கல்லூரியின் இலக்கிய அமைப்புக்கு தலைவராக இருந்து பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். 1984ல் மருத்துவத்தில் பட்டம் பெற்ற அவர் எட்டு ஆண்டுகள் பொது மருத்துவமனையில் பணியாற்றினார்.

1986 ல் முதல் கவிதை நூல் வெளியானது. 1989 ல் வெளியான அவரது இரண்டாவது கவிதை நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பத்திரிக்கைகள் மற்றும் இதழ்கள் அவரை தொடர்ந்து எழுதும்படி அழைத்தன. ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்து எழுதத் துவங்கினார். மதம், பாரம்பரியம், கட்டுபாடான பண்பாடு, என அனைத்து குறித்தும் எந்த தயக்கமும் இல்லாமல் எழுதினார். தஸ்லீமாவின் எழுத்துகளில் உண்மையின் கடுமையும் கூர்மையும் ஆணாதிக்கத்தை கொஞ்சமும் தயங்காமல் தனது எழுத்துகளில் அம்பலப் படுத்திய தைரியமும் படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விரும்பினார்கள் பலர். வெறுத்தவர் பலர்.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் ஆனந்த் என்ற இலக்கியத்திற்கான விருது 1992ல் வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் பங்களாதேஷ் பெண் இவராவார். எழுத்தாளர்களிடையே இயல்பாகவே எழும் பொறாமை மறந்து அனைவரும் இவருக்கு ஆதரவு கொடுத்தனர்.

இஸ்லாமியராக பிறந்தாலும் தனது இனம் தன்னையும் தன் போன்ற பெண்களையும் முடக்கி வைத்திருப்பதற்கு எதிராக அவர் தனது படைப்புகளை படைத்து வந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகளை எதிர் கொண்டார். 1990ல் தஸ்லீமாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப் பட்டது. தஸ்லீமாவின் எழுத்துகளை வெளியிட்ட பத்திரிக்கைகள் மீதும் அவரது புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகங்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன.

இவர் பலமுறை பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். தஸ்லீமாவால் பொது இடங்களுக்கு போக முடிவதில்லை மேலும் புத்தக கண்காட்சிகளைக் கூட அவர் தவிர்த்து விடுகிறார். “இஸ்லாமிய வீரர்கள் “ என்ற அமைப்பு தஸ்லீமாவின் தலைக்கு சன்மானம் வைத்திருந்தது. தஸ்லீமா தனது வீட்டிலேயே சிறை பட்டார்.

தாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர் பணியைத் தொடர வேண்டுமானால் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. தஸ்லீமா எழுதுவதைத் தொடர்ந்தார் வேலையை விட்டுவிட்டார். இவர் எழுதிய “லஜ்ஜா” (வெட்கம்) என்ற நாவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனிதம் என்பது மதத்தின் மறுபெயராகட்டும் என்ற கருத்தை வலியுறுத்தி லஜ்ஜா நாவலை எழுதியதாக தெரிவித்து உள்ளார்.

கவிதை, நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை என இருபத்தெட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அமர் மெய்பேலா (எனது பெண்ணியம்), உதோல் ஹவா (கடுங்காற்று) மற்றும் செய் சோப் ஒந்தோகர் (அந்த இருட்டு நாட்கள்) ஆகிய மூன்று புத்தகங்களை பங்களாதேஷ் அரசு தடை செய்துள்ளது.

தஸ்லீமாவின் "கோ' (பேசுங்கள்) மற்றும் திவிகாந்திதோ (இரண்டாக பிரிந்த) ஆகிய சுயசரிதை நூல்களை தடை செய்ய வேண்டி பங்களாதேஷ் மற்றும் மேற்கு வங்காளத்தில் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நீதி மன்றத்தில் முறையிட்டு உள்ளனர். அதே நேரத்தில் கொல்கத்தாவின் மனித உரிமை கழகத்தினர் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் இவ்வாறான தடை சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பின் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தஸ்லீமாவின் விடுதலை உணர்வுடன் கூடிய கருத்துகள் உலகம் முழுவதும் வரவேற்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இவரை அழைத்து பாராட்டுகளையும் விருதுகளையும் கொடுத்துள்ளது.

தனது கருத்துகளை வெளிப்படையாக வெளியிட்ட ஒரு மனுஷிக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை கண்கூடு. தஸ்லீமா தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார். என்னை யாராலும் மவுனமாக்கி விட முடியாது என்று கர்ஜிக்கும் தஸ்லீமாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

எல்லை
பிரக்ஞைக்கு திரும்பியது உலகை பார்க்க, நுகர,
உணர, கேட்க வேண்டி வாசலைக் கடக்கையில்
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்
இந்தச் சுவர்களே உனது வெளி
இந்த மேற்கூரை உனது வானம்
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்
இந்த தலையணைகள் இந்த வாசமிகு சோப்
இந்த டால்கம் பவுடர் இந்த வெங்காயங்கள்
இந்த ஜாடி, இந்த ஊசி
மற்றும் பூ வேலைப்பாடு
தலையணை உறைகள்
இவைகள்தான் உனது வாழ்க்கை
அடுத்தப் பக்கத்தில்
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை
எங்ஙனம் பார்ப்பது?
பின்கேட்டை திறந்து கொண்டு
போகும் அவள்
போகாதே என தடுக்கப்படுகிறாள்.
தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்
இந்த கீரையை, இந்த கொடியை
அடிக்கடி கவனித்துக் கொள்
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை
இந்த தூய்மையான பசுமை பரப்பை
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை
இந்த மணம் வீசும் மண்ணை
இவையனைத்தும் தான்
உனது உலகம்.

மலிவாய் கிடைப்பன
சந்தையில் பெண்களை விட மலிவாய் ஏதுமில்லை
அவர்களுக்கு சாய புட்டிகள் கொடுத்துவிட்டால்
மகிழ்ச்சியில் தூக்கம் விலக்குவார்கள் இரவெல்லாம்
அவர்கள் தோலில் தேய்க்க சோப்புக் கட்டிகளும்
மயிர்களில் பூச வாசனை எண்ணெயும்
கொடுத்துவிட்டால் அடிமையாகி விடுவார்கள்
அவர்கள் மாமிசதிட்டுகளை அள்ளி
வாரமிருமுறை சந்தையில் விற்க தயாராகி விடுவார்கள்
அவர்கள் மூக்கிற்கு நகை கிடைத்து விட்டால்
எழுபது நாட்களுக்கும் மேலாக கால் நக்குவார்கள்
ஒரு சுற்றுச் சேலை என்றால்
மூன்றரை மாதங்களுக்கு தொடர்வார்கள்
கரும்புள்ளிகள் கொண்ட வீட்டு நாய் கூட
எப்பொழுதாவது குரைத்து விடும்
ஆனால் மலிவாய் வாங்கப் பட்ட பெண்களின்
வாயில் பூட்டு
தங்கப் பூட்டு

தமிழில் : ஆனந்த செல்வி

தஸ்லீமா நஸ்ரின்

Tuesday, April 08, 2008

மரியா ரெய்மோன்தெஸ் மெய்லன்

மொழி நிலத்தை தேடும் குரல்

மரியா ரெய்மோன்தெஸ்னுடன் ஓரு நேர்காணல்
சந்திப்பு: மாலதி மைத்ரி


சாயலில் வட இந்தியப் பெண்ணைப் போல் தோற்றமளிக்கும் மரியா ரெய்மோன்தெஸ் மெய்லன் 1975ல் லுகோவில் பிறந்தவர். இலக்கியம் மற்றும் உரையாடல்களை மொழிபெயர்க்கும் பணியில் உள்ளார். இவரது தாய்மொழி கலிஷியா. இந்தியாவில் இருக்கும்போது இந்திய உடைகளை அணிவது பிடித்திருப்பதாக கூறுகிறார். இவரது முதல் தொகுதி மோடா கலியா (கலிசியன் ஃபேஷன்) நுகர் பொருள் கலாச்சாரம், கலிசிய பண்பாடு, பெண் உடல் மற்றும் பால்நிலை பற்றிய கவிதைகளைக் கொண்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு இவரது காடர்னோ தே பிட்டகோரா (Ships’s log) என்ற நாவலுக்கு Mullers Progresistas விருது வழங்கப்பட்டது. இந்நாவல் போலி விஞ்ஞான கற்பனையை அடிப்படையாகக் கொண்டது. மனித உறவுகள், தனிமை மற்றும் காதல் பற்றிய சிக்கலைப் பேசுகிறது.

‘உஷா’ என்ற இவரது நாவல் கலிசியாவிலும் கர்னாடகாவிலும் வாழ நேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கதையைக் கூறுகிறது. இந்நாவலுக்கு 2005 இல் ‘பிரைமோ மெர்லின் தே விட்டராட்டுரா இன்ஃபான்டில்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பின்னல் தொழிலில் ஈடுபடும் ஆறு வேறுபட்ட பெண்களைப் பற்றிய கதையைக்கூறும் “ஓ கிளப் தா கல்சிடா” நாவல் 2005 ஆம் ஆண்டில் ‘Premio Xerais’ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்நாவல் இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.

விரைவில் ஸ்பானிஷிலும் வெளிவர உள்ளது. இக்கதை திரைப்படமாக்கப்பட்டுள்ளது. மரியா செய்தித்தாள்களிலும் எழுதி வருகிறார். விகோ பல்கலைக்கழகத்தின் பெண்ணிய ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார். கலிஷியன் மொழியில் மொழியாக்கம் செய்ப்பட்ட தமிழ் பெண்கவிஞர்களின் நூல் இந்தமாதம் வெளிவர இருப்பதாக குறிப்பிட்டார். ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி வந்த இவருடைய குழுவுடன் “கடற்காகம்” உணவுவிடுதியில் மூன்றுமணிநேரம் உரையாடினேன். மணிமேகலை மூலம் இவர் நேர்காணலை முடிப்பது என்று திட்டமிடப்பட்டு பிறகு முடியாமல், மின்னஞ்சல் மூலம் ஸ்பெனிலிருந்து இப்பேட்டியை அனுப்பிவைத்தார்.

உங்களைப் பற்றி சொல்லுங்க?

மரியா: எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறது. கலீஷியாவில் உள்ள லூக்கோவில் நான் பிறந்தேன். எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே நான் எழுதத் தொடங்கினேன். அவ்வாறு எழுதுவதென்பது நான் இந்த உலகில் இருப்பதற்கான இயற்கையான வழியாக எனக்கு எப்போதும் மனதில் பட்டது. என் இளம் வயதிலிருந்தே ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான அசமத்துவங்கள் பற்றியும், வடக்கு மற்றும் தெற்கு இடையிலான அசமத்துவங்கள் பற்றியும் தெரிந்திருந்தது.

மேலும், வாழ்க்கையின் மிக இளம் பருவத்திலிருந்தே, அதாவது எனக்கு பதினெட்டு வயதாய் இருக்கும் போதே, நான் இந்த உலகை மாற்ற வேண்டுமெனத் தீர்மானித்திருந்தேன். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, ஒரு வளர்ச்சித் திட்டத்தில் பணியாற்றுவதற்காக இந்தியாவிற்கு வந்தேன். அதன்பிறகு, 1998-ல் நான் ஒரு கலீஷியன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினேன். தற்போது அது இந்தியாவிலும் எத்தியோப்பியாவிலும் நடைபெறும் திட்டப் பணிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மேலும் வெறும் மேம்போக்காக அன்றி, உண்மையாகவே வறுமையின் சூழ்நிலையில் வாழும் என் நாட்டு மக்களின் வாழ்முறையை மாற்றுவதற்காக, அது முயன்று வருகிறது.

முதல் படைப்பு எப்போது வெளியானது? உங்கள் படைப்பாக்கங்களின் கதைத்தளம் என்ன?

மரியா: எனது முதல் புத்தகம் Moda Galega 2002-ல் வெளியானது. அதுவொரு கவிதைத் தொகுதி. இதுவரை இரண்டு நாவல்களும், சிறுவர்களுக்கான ஒரு நாவலும், அவர்களுக்கான 6 சித்திர புத்தகங்களும் மற்றும் பிற ஆசியர்களோடு சேர்ந்து சில படைப்புகள் வெளியாகியுள்ளன.

கலீஷியா என்பது ஸ்பானிஷின் வட்டார மொழியா அல்லது மலையாளம் போன்று கிளை மொழியா?

மரியா: கலீஷியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள், லத்தீன் மொழியிலிருந்தே வளர்ச்சியுற்றன. எப்படி போர்ச்சுகீசு, இத்தாலி, ஃபிரென்ச் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சி பெற்றதோ அது போலவே. 14ம் நூற்றாண்டுவரை கலீஷியனும் போர்ச்சுகீசும் ஒரே மொழியாக இருந்தது. அதன்பிறகு அரசு பிளவுண்டு கலீஷியா, ‘கஸ்டில்’லின் பகுதியானது (கஸ்டில் - பிற்கால ஸ்பெயின் நாடு) மற்றும் போர்ச்சுகல் தனிநாடாக ஆனது. கலீஷியன் மொழி நான்கு நூற்றாண்டுகளுக்குத் தடைசெய்யப்பட்டது. அக்காலக்கட்டம் முழுவதற்கும் எந்த ஒரு எழுத்துப்பிரதியும் இல்லை. கிட்டத்தட்ட இந்த மொழி வாய்மொழியாகவே பிழைத்திருந்தது, ஒரு அற்புத மகிமை என்றே சொல்ல வேண்டும்.

1939-ல் நடந்த அரசியல் கிளர்ச்சி மற்றும் உள்நாட்டுப் போர் தொடங்கி 1975 வரை வந்த சர்வாதிகார ஆட்சிவரையில் கலீஷியன் மொழி மீண்டும் தடை செய்யப்பட்டு தங்களின் சொந்த மொழியை பேசியதற்காகவும், பேசுவதற்கு உரிமையுள்ளதென உரிமை கொண்டாடியதற்காவும் பல கலீஷிய ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டனர். கலீஷியன் மொழியானது போர்ச்சுகீசிய மொழிக்கு மிகவும் நெருக்கமானது மற்றும் போர்ச்சுகீசிய மொழிக்குத் தாயாகவும் கருதப்படுகிறது.

ஸ்பெயினில் பெண்படைப்பாளிகள் சுதந்திரமாக இயங்க முடிகிறதா? எழுத்தின் மீதான தணிகையும் கண்டனத்தையும் எதிர்கொள்ள நேர்கிறதா?

மரியா: கலீஷியாவில் பெண்ணிய எழுத்தாளர்கள் நிறைய பேர் இல்லை. அப்படிப்பட்ட எழுத்தாளர்களாக பாவித்துக்கொண்டு எழுதும் எங்களைப் போன்றவர்களை எங்களின் கருத்துக்காகவும், அறிக்கைகளுக்காகவும் மற்றும் படைப்புக்காகவும் எப்போதும் விமர்ச்சிக்கப்படுகிறோம். எந்தவொரு தெளிவான அரசியல் கடப்பாடு கூட இல்லாமல் எழுதும் பிற பெண் எழுத்தாளர்கள்கூட எப்போதும் வெளிப்படையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.

உங்கள் நாட்டு பெண்ணிய இயக்கம் சமீபத்தில் குறிப்பிடும்படியாக என்ன பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியது. நீங்கள் பெண்ணிய இயக்கங்களுடன் இணைந்து இயங்குகிறீர்களா?

மரியா: எங்களுக்கு, பெண்ணியம் என்பது தனிநபர் எதிர்ப்புரைகள் அல்ல. மாறாக, அன்றாட விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுதலும் அவற்றை மாற்றுதலும் என்ற பொருண்மை கொண்ட ஒன்று. சமீபத்தில் ‘வீகோ’வில் பெண்கள் உலகப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக கலீஷியா தேசம் முழுவதும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாதம் 25-ம் தேதியை பெண்களுக்கு நிகழ்ந்தப்படும் வன்முறைக்கு எதிரான அனைத்துலக நாளாக நினைவு கூர்வதன் பொருட்டு, நவம்பர் 25-ம் தேதியன்று பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படுகிறது. மேலும், ஒரு பெண் பாலின வன்முறையால் கொல்லப்படும் போதெல்லாம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துகின்றனர். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இத்தகைய ஆர்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை அடிக்கடி நடத்த வேண்டியுள்ளது.

ஐரோப்பிய பெண்ணிய இயக்கங்கள் மூன்றாம் உலகப் பெண்களின் உரிமைக்காகவும், அவர்களின் மீதான சுரண்டலுக்கெதிராகவும் என்ன மாதிரியான செயல்திட்டங்களை வைத்துள்ளன? இல்லை ஐரோப்பிய பெண்ணியவாதிகளுக்கு மூன்றாம் உலக பெண்களின் பிரச்சனைகள் மீது அறியாமையுடன் இருப்பதாக நினைக்கிறீர்களா?

மரியா: தற்போது ஐரோப்பிய பெண்ணியவாதிகள், உலகம் முழுவதிலுமுள்ள சூழ்நிலையை அலட்சியப்படுத்த முடியாது. உண்மையாகவே, சில சிக்கல்கள் வெறும் உள்ளூர் மட்டத்திற்கானதாய், அவை கலீஷியா அல்லது ஐரோப்பிய வட்டத்தில் மட்டும் பொருந்தக்கூடியதாய் மற்ற சூழ்நிலைக்கு பொருத்தமற்றும் இருக்கக்கூடும். (உதாரணமாக, எங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. இங்கே பெண்ணினம் மைய நீரோட்டத்திற்கு வருதல் ஒரு முக்கிய கருத்தாகியிருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகளில் மக்கள் நல அரசுகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளதால், ஐரோப்பாவின் பலபகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.) ஆனால் ஐரோப்பாவிற்கு மூன்றாம் உலக நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களும் விவாதங்களில் இடம் பெறுகிறார்கள். இது விவாதங்களை செழுமைப்படுத்துகிறது. இது போன்ற ஏதோ ஒன்று இந்தியாவில் குறைவதாக எனக்குப்படுகிறது. இங்கே வெறும் இந்தியாவிற்கு உரிய கருத்துக்களே விவாதங்களாக சுற்றிவருகின்றன. மற்றும் உலகின் பிற பகுதிகளான லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா அல்லது கரீபியன் போன்ற நாட்டுப் பெண்கள் பிரச்சினைகள் பற்றிய மெல்லிய தொடர்புடன்.

கல்வி, வேலை வாய்ப்பு, அரசதிகாரம் போன்ற துறைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உரிய முறையில் கிடைக்கிறதா? இன்னும் நீங்கள் போராடி பெறும் சூழலில் இருக்கிறீர்களா?

மரியா: கலீஷியாவில் கல்வியைப் பொருத்த மட்டும், பல்கலைக்கழக அளவில்கூட ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை மிகுதியாக இருப்பினும், பெண்கள் இன்னும் அதிகமாக போராட வேண்டியுள்ளது. 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள். ஆனால் வேலை வாய்ப்புச் சந்தையைப் பொருத்தவரை, ஆண்களே அதிகாரப் பதவிகளில் உள்ளனர். அரசியல் பங்கெடுப்பை எடுத்துக் கொண்டால் இந்த நிலை இன்னும் மோசம். கடந்த ஆட்சி மாற்றத்தில்தான் கலீஷிய மற்றும் ஸ்பானிஷ் அரசியலில் 50 சதவீத அமைச்சர்களாக பெண்கள் அமர்த்தப்பட்டனர்.

வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இது அதிகாரத்திற்கு வந்த சோஷலிச கட்சியின் அரசியல் முடிவால் நிகழ்ந்தது. அப்படி இல்லையென்றால் அரசியலில் பெண்களின் பங்கெடுப்பும் அதிகார பகிர்வும் மிகவும் குறைவாக இருந்திருக்கும். ஆண்கள் செய்யும் அதே பணிகளுக்கு கூட பெண்கள் மிகக்குறைந்த ஊதியத்தையே பெறுகிறார்கள். இன்றும் பெண்கள் சமூக ரீதியாக வீட்டுக்கும் குடும்பத்திற்கும் மட்டுமே பொறுப்பானவர்கள் என்று கருதப்படுவதால், அவர்கள் ஆண்களைக் காட்டிலும் இருமடங்கு அல்லது மும்மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது.

திருமணம், குழந்தை பெறுதல், கருக்கலைப்பு, சொத்துரிமை ஆகியவற்றுக்கான சமூக வழக்கங்களும் பெண் உரிமைகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் என்ன? பெண்கள் தங்கள் உரிமைகளை பெற சட்டரீதியான பாதுகாப்புள்ளதா?

மரியா: எங்கள் சமூகத்தில் சட்டத்தின் முன்பாக பெண்கள் ஆண்களும் சமமானவர்கள். பெண்களின் உரிமைகளை சீர்குலைப்பதான, வரதட்சணை போன்ற, சமூக பழக்கங்கள் இல்லை. ஆனாலும் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்படும் மரபார்ந்த கல்விமுறை பெண்கள் வீட்டு பொறுப்புக்கே உரியவர்கள் என்றே கருதுகிறது. அவர்களின் நடத்தைகள் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம் பெண்கள் பார்ப்பதற்கு லட்சணமாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிள்ளைகளை வளர்க்கவும், வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உழைக்கவும் வேண்டுமென்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. குடும்பத்திற்குள் வன்முறை என்பது சதாரணமானதாக இருக்கிறது. சமூகத்தில் சட்ட பாதுகாப்பு சிறிதளவு ஆதரவு பெண்களுக்கு கிடைத்தாலும் பழமைவாதிகள் இதுபோன்றவற்றை பொதுவில் விவாதிக்கக்கூடாது என நினக்கின்றனர். எனவே ஏதேனும் வன்முறையைப் பெண்கள் சந்திப்பார்களானால் அதற்கு அவர்களே பொறுப்பு எனக் கருதுகின்றனர்.

பெண் மீதான வன்முறைக்கெதிரான சட்ட பாதுகாப்பாவது உங்கள் பெண்களுக்கு பூரணமாக கிடைக்கிறதா? வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்களா?

மரியா: வெறும் 4 கோடி மக்களே உள்ள ஸ்பெயின் நாட்டில், ஆண்டு தோறும் 100க்கு மேலான பெண்கள் தங்களின் கணவர்கள் அல்லது முன்னாள் கணவர்களால் கொல்லப்படுகிறார்கள். “ஆண்களும் வீட்டுப் பணிகளை பெண்களோடுப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்ற கருத்து கொள்கையளவிலேயே உள்ளது. நடைமுறையில் பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு வாழ்க்கை துணை அமைந்தபிறகு வீட்டுவேலை போன்ற அற்ப விஷயங்களை பெண்களே செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். என் சொந்த குடும்பத்தில் என் மாமன் அடுப்படி வேலை எதையும் தொட மாட்டார்.

சாப்பிட்டத் தட்டைக்கூட கழுவ மாட்டார். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். என் அத்தைக்கு ஒரு கடை உண்டு. தினமும் 1 கிலோ மீட்டர் நடந்து சென்று அவரது பெற்றோருக்கு சமைக்க வேண்டும். அவர்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல. என் மாமனின் வயதான அம்மாவையும் கவனித்துக்கொள்ள வேண்டும். கடையையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

போதாக்குறைக்கு வீட்டு வேலைகளை செய்வதல்லாமல் அடிக்கடி விருந்துக்கு வரும் மாமனின் நண்பர்களுக்கும் சேர்த்து சமைக்க வேண்டும். என் அத்தை மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா பெண்களுக்கும் இது பொதுவானது.

தனித்து வாழும் பெண்களை குறித்த இன்றைய சமூக, அரசியல் கண்ணோட்டம் என்ன? அவர்கள் உண்மையிலேயே தளைகள் அற்று வாழ்வதாக உணருகிறார்களா? குடும்பப் பெண்களை விட தனித்து வாழும் பெண்கள் வித்தியாசப்பட்டவர்களாகவும் தனியாளுமையுடன் இருப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளதா?

மரியா: எங்கள் சமூகத்தில் திருமணம் ஒரு கட்டாயம் அல்ல. நிறைய பெண்களும் ஆண்களும் தனித்து வாழ்கின்றனர் அல்லது சேர்ந்து வாழ்கின்றனர். இன்று இது சர்வசாதாரணமான ஒன்று. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கத்தோலிக்க சமூகத்தில் பெண்ணும் ஆணும் திருமணமின்றி சேர்ந்து வாழ்வது பெரும் பாவமாக கருதப்பட்டது. தனிப் பெண்கள் போராடுவதிலிருந்து விடுபடவில்லை. ஆண்கள் தங்களுக்கு சமமானவர்களாகப் பெண்களை ஏற்றுக்கொள்வதில்லை. பல பெண்கள் ஆணின் இந்நிலைப்பாட்டை ஒத்துக் கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு காதல் கிடைக்காமல் போகிறது. மற்றொரு புறத்தில் பல ஆண்கள் பெண்களை ஏதோ முழுமை பெறாத மனித உயிர்களாகவே காண்கின்றனர். இப்போதெல்லாம் பெண்கள் கணவன் இல்லாமலே பெற்று வளர்க்கும் விருப்ப உமைகள் உள்ளன. (இது ஒரு நகர்புற நடுத்தர வகுப்புப் பெண்களின் வாய்ப்பு மட்டுமே) ஆனால் சமுதாயமோ பெண்கள் பிள்ளை பெற்றுத்தர வேண்டுமென ஒரு அழுத்தத்தை உண்டாக்குகிறது. அப்படி நடந்துக்கொள்ள மறுப்பவர்களை அசாதரணமான பெண்களாக கருதுகிறது.

உலகெங்கிலும் பெண் எழுத்துக்கான வாசக தளமும் சந்தையும் எப்படி உள்ளது? பதிப்பகம் மற்றும் ஏஜென்டுகள் பெண் படைப்புகளை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்களா?

மரியா: உலகளவில் பல பதிப்பகத்தார்கள் பெண்களின் எழுத்துகளுக்கு ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள். மேலும் சில சந்தர்பங்களில் நமது படைப்புகள் வியாபாரப் பண்டங்களாகிவிடுகின்றன. கலீஷிய இலக்கியத்தை பொருத்தமட்டில் பெண் எழுத்தாளர்களால் செய்யப்பட வேண்டிய வேலை நிறைய உள்ளது. பெண்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் மிகக்குறைவு.

லத்தீன் அமெரிக்க இலக்கியம் உலகெங்கிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் இதை எப்படி பார்க்கிறீர்கள். வேறொரு கண்டத்தின் இலக்கியமாக வாசிக்கப்படுகிறதா?

மரியா: நான் ஸ்பானிஷ் மொழியில் எழுதுவதில்லை. எனவே, எனக்கு அந்த மொழியுடன் அதன் இலக்கியத்துடன் தொடர்பில்லை. இன்னும் கூட ஸ்பானிஷ் மொழியானது எங்கள் மேல் திணிக்கப்படுவதால், இது எனக்கானதோர் அரசியல் நிலைப்பாடாகவும் உள்ளது

இன்று மேஜிகல் யாலிசம் என்ற உத்தி பெரிய வகைமையாக உருவெடுத்துள்ளது. தமிழில் இந்த நரேட்டிவ் பாணியில்தான் பெரும்பாலான படைப்புகள் வெளிவருகின்றன. இம்மாற்றம் ஸ்பெயினில் நடந்ததா? போர்ஹேவும், மார்க்வெஸும் தமிழ் இலக்கிய கடவுளர்களாக மாறிவிட்டனர்.

மரியா: உண்மையாகவே மாய எதார்த்தவாத கதை சொல்லும் முறையை கலீஷிய எழுத்தாளரான ‘ஆல்வரோ கன்கய்ரோ’ (Alvaro cunqueiro) போர்ஹே, மார்க்வெஸ் போன்றோர்க்கு முன்பே உருவாக்கியவர். மேலும், அவரின் எழுத்துக்கள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. எனவே, மேற்கூறிய இரண்டு பேரும் அவர்களின் பெருமைமிக்க கருத்துக்களை ஸ்பானிஷ் மொழியில் வந்த மொழிபெயர்ப்புகளை கற்றபின் பெற்றிருப்பார்கள் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.

தமிழ் நாட்டுக்கு முதலில் வந்தது எப்போது? இங்கு உங்கள் பணி மற்றும் செயல்பாடுகள் என்ன?

மரியா: கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் முன்பு. அதற்கும் முன்பாக நான் கர்நாடகாவில் கொஞ்சம் காலத்திற்கு பணியாற்றிக்கொண்டிருந்தேன். நான் நினைவு கூரக்கூடிய அளவிற்கு எதுவும் தனித்த சிறப்புடைய செய்திகள் இல்லை. நான் தமிழ்நாட்டைப் பற்றி நிறைய அறிந்துகொண்டது காலப்போக்கிலேதான்.

தமிழ் பெண் எழுத்துக்கள் மீது உங்கள் ஆர்வம் எப்படி உருவானது. உங்களுக்கு தமிழும் தெரியாது. மேலும் பெண்களின் எழுத்துகள் ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை. மணிமேகலை உங்களுக்கு உதவினார்களா?

மரியா: ஆங்கில மொழியில் எழுதப்படும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்கு மிகவும் பரீட்சியமானவை. பிற இந்திய மொழிகளில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளையும் விரும்பி படிப்பேன். அதிர்ஷ்டவசமாக ‘கதா’ போன்ற நல்ல பதிப்பகங்கள் இது போன்று மொழியாக்கப் பணிகளை செய்து வருகின்றனர். கவிதையில் ஆர்வம் இருந்ததால் எனக்கு தமிழில் உள்ள பெண்கவிஞர்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைத்தது. நான் இணையதளத்தில் ஒருமுறை அலசும்போது சி.எஸ்.லஷ்மியின் கட்டுரையைக் கண்டேன். அதன் வழி குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி, மாலதி மைத்ரி மற்றும் பிற பெண்கவிஞர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. திருச்சியில் உள்ள எனது குடும்ப நண்பர்களான டாக்டர் மணிமேகலை மற்றும் அம்பலவாணன் அவர்களிடம் இக்கவிஞர்களைத் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.

எத்தனை பெண் கவிஞர்களின் கவிதைகளை கலீஷியாவில் மொழியாக்கம் செய்தீங்க? அந்த அனுபவத்தை சொல்லுங்கள்?

மரியா: நான் நிறுவியுள்ள தொண்டு நிறுவனத்தின் வழியாக, மிகவும் ஆர்வமுடன் நாங்கள் செய்யும் பணி; இன்று மேற்கு உலகத்தில் தனது சொந்த நலனுக்காக உருவாக்கப்பட்டு உலவ விடும், வளரும் நாடுகளைப் பற்றிய பொய்களை (மக்கள் வறுமையில் இருந்தாலும், ஆனந்தமாக இருக்கிறார்கள்; வளரும் நாடுகளில் உள்ள பெண்கள் இணக்கமான பலிகடாக்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தேவை.) அடித்து தரைமட்டமாக்குவதே எங்கள் செயல்பாடாகும். எங்களின் கலீஷிய கலாச்சாரத்திற்கு மிக நெருக்கமான, அனைத்து கலாச்சாரங்களின் நல்ல அம்சங்களை கொண்டு வர நாங்கள் முயற்சிக்கிறோம். மேலும் பெண்கள் மேல்தான் எங்கள் கவனம் குவிக்கப்படுகிறது. எங்களின் புத்தகமான வணக்கம்/பென்விதாஸ் (Benvidas) இன் கருத்தானது, கலீஷிய மற்றும் தமிழ் பெண்கவிஞர்களின் படைப்புகளை சேகரிப்பதாகும்.

ஆண்டாளின் ஒரு பாடலை நாங்கள் கலீஷியனில் மொழியாக்கம் செய்தோம். அதேபோல், முன்பு குறிப்பிட்ட தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைகளையும் மொழியாக்கம் செய்துள்ளோம். அந்நூல் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த மொழியாக்க அனுபவமானது என்னை மிகவும் செழுமைப்படுத்தியது. ஏனெனில் அவர்களின் அதிசயத்தக்க கவிதைகளைப் படித்தது என்னை நெகிழ வைத்தது. எழுச்சியுற வைத்தது. நான் நிச்சயமாக நம்புகிறேன்... அவை கலீஷியாவில் உள்ள பிறருக்கும் நெகிழ்ச்சியையும் எழுச்சியையும் தரும் என்று.

இந்த நூலில் பங்குகொண்ட சில கலீஷிய பெண்கவிஞர்களும் தங்களது பாராட்டுகளை தெவித்துள்ளனர். தமிழ் கவிதைகளின் வழியாக பிறநாட்டு பெண்கவிஞர்களின் வெளிகளை இதுவரை கேள்விப்பட்டிராத வெளிகளை நம் நாட்டு பெண்கள் பகிர்ந்து கொள்வதை நான் ஒரு பெருமையாக கருதுகிறேன். எனது கலாச்சாரத்திற்கு உலகத்தின் பிற பகுதிகளில் வாழும் பெண்களின் குரல்களுக்கான வெளிகள் திறப்பதனால், எனது மக்கள் மேலும் சிறப்படைவர். வறுமையின் வேர்களை களைந்து எறிவதற்கும் அது துணைபுரியும் என நான் மெய்யாகவே நம்புகிறேன்.

நாம் சமதையானவர்கள் என்ற எண்ணத்தோடு செயல்படவும், நாம் சமதையானவர்கள் என்ற அக்கறையோடு ஒருவருக்கு ஒருவர் பிரச்சினைகளை செவிமடுக்கவும் வேண்டும். இதுவரை நான் சந்தித்த தமிழ் பெண்கவிஞர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். குறிப்பாக அவர்களின் துணிச்சலுக்காக. நான் நீண்ட காலமாக இங்கு வசித்து வருவதால், கிட்டத்தட்ட ஏற்கனவே பாதி தமிழச்சியாகிவிட்டேன். அதனாலேயே இந்த மாபெரும் சாதனைகளை இந்த பெண்கள் நிகழ்த்தியுள்ளதை நான் புரிந்து கொள்கிறேன். முறையாக பாராட்டவும் செய்கிறேன். எதிர்கால மனிதகுலத்தைப் பற்றிய நல்ல நம்பிக்கையை இவர்கள் எனக்கு அளிக்கின்றனர்.

ஐரோப்பிய பெண்ணின் வாழ்நிலைக்கும் தமிழ் பெண்ணின் வாழ்நிலைக்கும் இடையில் என்ன விதமான வித்தியாசங்களும் பாரபட்சங்களும் இருப்பதாக அவதானிக்க முடிந்தது?

மரியா: சில விஷயங்களில் மட்டும் வேறுபாடுகள் காணப்படுக்கின்றன. ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடுகள், வெவ்வேறு சமூகத்திலும் வெவ்வேறு வகையில் வெளிப்படுவதாகும். நான் மிகவும் எரிச்சல் அடைவது. இங்கு தமிழ்நாட்டில் உள்ளவர்களின் பொத்தாம் பொதுவான, மேலைநாட்டு பெண்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றிய மன அவசங்களைக் கேட்கும்போதுதான். ஏதோ மேலைநாட்டுப் பெண்கள் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்வது போலவும், இங்கு மட்டும் இல்லை என்பது போலவும் கொண்டுள்ள மனக் கருத்துகள் எனக்கு எரிச்சல் ஊட்டுகின்றன. நாம் எப்போதும் மறக்கக்கூடாத ஒன்று, எத்தகைய உரிமைகளை நாங்கள் மேற்கில் பெற்றிருந்தாலும், அது உடைகளை உடுத்திக் கொள்வதற்கான உரிமையாக இருந்தாலும்கூட- இவற்றை போராடியே பெற்றிருக்கிறோம்.

மேற்குலகில் பெண்கள் ‘பேண்டு’ அணிந்ததற்காக அடிக்கவும், கொல்லவும் பட்டார்கள் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. மேற்கில், பெண்கள் தங்களின் வாழ்க்கை விதி வசப்பட்ட ஒன்று என்பதை ஒப்புக்கொள்ளாமல் அதனை எதிர்த்துப் போராடினர். பலர் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். பொது சமூகத்தில் ஏளனத்தை எதிர் கொண்டனர். ஆனால் இன்று நாங்கள் அவர்களால் தான் மிகவும் கூடுதலான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். நாம் - கடந்த காலத்தில் நமக்கு முன்பாக பெண்களின் உரிமைகளுக்காய் போராடிய பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடம் பெறவேண்டும். அவர்களிடத்திலிருந்து துணிச்சல் பெற வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கும் எதிரான உறுதிகொண்ட ஒற்றுமைக்கான தொடர்புக் கண்ணிகளை உருவாக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருப்பதனால் மட்டுமே, நாம் சூழ்நிலையை மாற்ற முடியும்.

இருக்கும் நிலையை எதிர்ப்பதன் மூலம்தான் - குடும்பம், நண்பர்கள், சமூகம் ஆகியவற்றிற்கு எதிராக நடக்க வேண்டியிருப்பினும் நம்மால் தற்போதைய உலகை மாற்ற முடியும். தமிழ் பெண்கள் பெருன்பான்மையோர் தங்களது வாழ்க்கையை விதிப்படி ஆகட்டும் என்று ஒத்துக்கொள்வதை, நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்து வருகிறேன். நமது வாழ்க்கையின் விதியை நாம் தான் உருவாக்குகிறோம். தியாகங்களாலும் கண்ணீராலும். ஆனால் அதே சமயத்தில் நம்மைப் போன்று சிந்திப்பவர்களின் ஆதரவோடும் அது உருவாக்கப்படுகிறது. எதிர்கால தலைமுறை பெண்கள் இன்னும் உயர்வடைவர் என்ற நம்பிக்கையோடு சிந்திப்பவர்களால் தான் பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும்.

சமீபத்தில் தஸ்லீமா நஸ்ரின் ஹைதராபாத்தில் மத அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டார். உங்கள் நாட்டில் நீங்கள் கிருஸ்துவ மதத்தை விமர்சித்து படைப்புகளை வெளியிட முடியுமா? படைப்புச் சுதந்திரம் மறுக்கப்படுவது குறித்து உங்கள் கருத்தென்ன?

மரியா: எங்கள் சமூதாயத்தில் நாங்கள் கிருத்துவ மதத்தைப் பற்றி எதிராகக்கூட எழுத முடியும். இதற்கு அர்த்தம் கிருத்தவ மத நிறுவனம் இவற்றை விரும்பும் என்பதல்ல. ஆனால், நாங்கள் மதத்தின் கிடுக்கிப்பிடியில் இருந்து எங்களை விலக்கிக் கொண்டுள்ளதால், மதத்தினரிடமிருந்து எந்த ஒரு வல்லழுத்தமும் எங்களுக்கு இல்லை.

உலகமயமாதல், அதி நவீன நுகர்வு கலாச்சாரம் போன்றவைகளால் மேலும் மேலும் மூன்றாம் உலக மனிதர்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய அறிவுஜீவிகள் என்ன செய்கிறார்கள்?

மரியா: ஐரோப்பாவில் எங்கு பார்த்தாலும் வெகுமக்கள் நுகர்வு கலாச்சாரம் நிலவுகிறது. ஆனால் அதற்கு மாற்றான எதிர்ப்பு இயக்கங்களும் முக்கியமானவை. WHO விற்கு எதிரான ஆர்பாட்டங்களோ அல்லது உலகமயத்திற்கு எதிரான கூட்டங்களோ நிகழும்போது, அங்கே நிறைய ஐரோப்பிய மக்களை நாம் காண முடியும். பல விவாதக்குழுக்கள், ஆர்வலர் குழுக்கள் விவாதங்களை மேல் எடுப்பினும், அவை ஒரு பரந்துபட்ட சமுதாயத்தை எட்டுவதில்லை. ஆனால் இது ஏதோ புதிதான ஒன்றல்ல. எங்கும் காணக்கூடிய நிலைமைதான்.

எங்கள் நிலத்தில் கொள்ளையடிக்கப்படும் இயற்கை வளங்களும், கொல்லப்படும் நதிகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேப் போகிறது. வெள்ளையின மக்களின் ஆடம்பர நுகர்வு கலாச்சாரத்தை குறைத்துக்கொள்ள என்ன மாதியான நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் சட்ட பூர்வமாகவும் தேவைப்படுகிறது? இதில் உங்கள் பங்களிப்பு எந்த வகையில் உள்ளது?

மரியா: எந்த ஒரு கேள்விமுறையும் இல்லாமல், இன்று இந்தியாவில் நுகர்வு கலாச்சாரம் தழுவப்பட்டு வருகிறது. நுகர்வியக் கோட்பாடானது முதலாளியத்துவத்தோடு தொடர்புடைய ஒன்று. இதற்கான மாற்றை மக்கள்தான் உருவாக்க வேண்டும். மக்கள்தான் பன்னாட்டு முதலாளிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஐரோப்பாவில் முக்கியமான மக்கள் குழுக்கள் உள்ளன. மனிதர்களை சுரண்டும் நிறுவனங்களின் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதை தடுப்பர். ஆனால் இதுபோல ஒரு காட்சியை நான் இந்தியாவில் கண்டதேயில்லை. ஓர் உதாரணத்திற்காகக்கூட, குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஓட்டல்களில் உணவு அருந்தும் வழக்கத்தை தவிர்க்கும் மக்களை நான் பார்த்ததில்லை.

இத்தகைய ஒரு பழக்கத்தை தவிர்க்கும் போக்கை இங்கு உண்டாக்கி வலிமைப்படுத்த வேண்டும். இது போன்ற தலைப்புகளையே நான் எனது கவிதைகளில் கையாண்டு இது தொடர்பான ஓர்மையை வளர்த்தெடுக்க நான் முயன்று வருகிறேன். எனது ‘மோதா கலேதா’ கவிதைத் தொகுப்பில் நுகர்வு கலாச்சாரத்தை, பெண்களின் உடல்கள் அதற்கு பயன்படுத்தப்படுவதை, சுற்றுச்சூழலியத்தை மையக் கருத்தாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. மக்கள் முதலில் சிந்திக்க வேண்டும், பிறகு செயல்படவேண்டும். மேலும் நம்மைப் போன்ற பொதுவாழ்வு களத்தில் உள்ளவர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி பிறர்க்கும் அத்தகைய எண்ணவோட்டங்கள் உருவாவதற்கு தூண்டுதலாக இருக்க வேண்டும். அதைத்தான் நான் என்னால் முடிந்தவரை முயன்று செய்து வருகிறேன்.

மாலதி மைத்ரி
உதவி: மணிமேகலை
தமிழில்: J. குப்புசாமி


Quelle- கீற்று Sep-Dec 2007

Sunday, December 30, 2007

கிரண்ஜித் அலுவாலியா


உங்கள் மகன் நிறைய பாவங்களை செய்திருந்தார். அவர் பாவங்களைப் போக்கவே அவரை அக்னியில் குளிப்பாட்டினேன். அவரை குளிப்பாட்டிய பாவத்துக்காக இப்போது சிறையில் வாடுகிறேன்" - பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் ஒரு வயதுமுதிர்ந்த தாய்க்கு அவரது மருமகள் 18 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.

கிரண்ஜித்துக்கு அப்போது பருவம் பூத்து குலுங்கிய பதினாறு வயது. பெற்றோர் இல்லாத பெண் என்பதால் சகோதரர்களுக்கு ரொம்பவும் செல்லம். தங்கள் தங்கையை பெரிய இடத்தில் மணமுடித்து கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். லண்டனில் வசித்த பஞ்சாபியான தீபக் அலுவாலியாவுக்கு கிரண்ஜித்தை மணமுடித்தார்கள்.

அயல்நாட்டில் தொடங்கிய மணவாழ்க்கை கிரண்ஜித்துக்கு அதிர்ச்சியாகவே தொடங்கியது. தீபக் ஒரு சைக்கோவைப் போல கிரண்ஜித்திடம் நடந்துகொள்ள தொடங்கினார். மிளகாயை பச்சையாக கடித்து திங்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. எட்டி உதைப்பார். முகத்தில் குத்துவார். பெல்ட்டால் விளாசுவார். ஷூவால் அறைவார். சூடான இஸ்திரி பெட்டியை வைத்து முதுகில் தேய்ப்பார். இரவானால் பாலியல் வண்புணர்வு. வகை தொகையில்லாத எண்ணற்ற சித்திரவதைகளை அனுபவிக்கத் தொடங்கினார் கிரண். சித்திரவதைகளுக்கு இடையிலும் இரு மகன்களை பெற்றெடுத்தார்.

சித்திரவதை தாங்காமல் தாய்வீட்டுக்கு சென்றார் கிரண். இந்தியப் பண்பாட்டில் ஊறிய குடும்பம் ஆயிற்றே? கல்லானாலும் கணவன். புல்லானாலும் புருஷன். கொஞ்சம் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்து என்று மீண்டும் கணவனிடமே திருப்பி அனுப்பினார்கள். வீட்டை விட்டு ஓடிப் பார்த்தார். கண்டுபிடித்து திரும்பவும் கூட்டி வந்தார்கள். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீபக்கின் சித்திரவதை விதம் விதமாக தொடர்ந்து கொண்டிருந்தது.

தன் வாழ்க்கை பாழானதை நினைத்து கண்ணீர் வடித்த கிரணுக்கு இரவுகள் தூக்கமில்லாமல் கழிந்துகொண்டிருந்தது. கிரணின் வாழ்க்கையில் விதி விளையாடிய இரவு அது. வழக்கம்போல வெகுநேரம் கழித்து குடித்துவிட்டு வந்த தீபக் எதுவும் பேசாமல் படுக்கையில் படுத்தார். தூங்கிக் கொண்டிருந்த கணவனின் கொடூர முகத்தை கண்ட கிரணுக்கு வெறுப்பு படரத் தொடங்கியது. வீட்டு உபயோகத்துக்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தீபக் மீது ஊற்றி தீக்குச்சியை கிழித்து பற்றவைத்தார். துடிதுடித்து மரணித்த தீபக்கை கண்டதுமே, திருமணமான பத்து ஆண்டுகளில் சிரிக்க மறந்திருந்த கிரண் பைத்தியம் போல சிரிக்க ஆரம்பித்தார்.

1989ல் நடந்த இந்த கொலைக்காக லண்டன் போலிசாரால் கைது செய்யப்பட்டார் கிரண். கொலை வழக்கு தொடரப்பட்டது. இயல்பிலேயே மென்மையான குணம் கொண்டவராக இருந்த கிரண் சிறையில் தன் மன உறுதியை வளர்த்துக் கொண்டார். அழகியல் சம்பந்தமான படிப்பினை படிக்கத் தொடங்கினார். கிரணின் பரிதாப நிலையை கண்ட ஆசிய பெண்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்பு ஒன்று அவரது வழக்கினை எடுத்து நடத்தத் தொடங்கியது. கிரண் தரப்பு நியாயங்களை உணர்ந்த நீதிமன்றமும் தற்காப்புக்காகவே அவர் அந்த முடிவை எடுக்க நேர்ந்தது என்று கூறி 1992ல் விடுதலையும் செய்தது. குடும்ப வன்முறைக்கு சாவுமணி அடித்த தீர்ப்பல்லவா அது? வரலாற்று சிறப்புமிக்க அந்த தீர்ப்பு இன்றளவும் உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், சித்திரவதைகளையும் "சர்க்கிள் ஆப் லைட்" என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் கிரண். இப்புத்தகத்தை தழுவி சமீபத்தில் "ப்ரவோக்ட்" என்ற பெயரில் ஐஸ்வர்யா ராய் நடித்த ஆங்கிலத் திரைப்படம் ஒன்றும் திரைக்கு வந்தது.

இன்றும் கூட இதுபோன்ற குடும்ப வன்முறைகள் இந்தியப் பெண்கள் மீது பாய்ந்துக் கொண்டிருப்பதை நாம் தினம் தினம் செய்தித்தாள்களில் காணலாம். கணவன், தந்தை, அண்ணன், உறவினர்கள் என்று பலரால் ஏதோ ஒரு முறையில் உளவியல் ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு அவதிப்படும் பெண்கள் பற்றிய பரிதாப நிலையினை நம் சமுதாயத்தில் உணரமுடிகிறது.

கிரணுக்கு சம்பவித்தது போன்ற சித்திரவதைகள் எந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஏற்படலாம். அதுபோன்ற சூழ்நிலையில் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது செய்து, வாழ்க்கையை தொலைப்பதை விட எளிய வழிகளில் பிரச்சினையைக் கையாளலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால்....

- உதவி கேளுங்கள். உங்கள் குடும்பத்தினரிடமோ அல்லது உங்கள் கணவரின் குடும்பத்தினரிடமோ, அக்கம்பக்கத்தவரிடமோ உங்கள் நிலையை மனம் விட்டு பேசுங்கள். உங்கள் பிரச்சினைக்கு எந்தவகையிலாவது உதவவேண்டும் என்று கவுரவம் பார்க்காமல் சொல்லிவிடுங்கள். மனம் விட்டு பேசுவதாலேயே பாதி பிரச்சினைகள் குறைந்துவிடும் என்று உளவியலாளர்கள் சொல்லுகிறார்கள்.

- உங்கள் கணவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். ஆணாதிக்க (Sadist) மனப்பான்மை கொண்டவர்கள் ஏதோ ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். முறையான சிகிச்சை மற்றும் ஆலோசனை நிச்சயம் அவர்களை மாற்றும்.

- மனநல சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் ஒரேநாளில் பலன் தரும் என்று எதிர்பார்க்காதீர்கள். கொஞ்ச கொஞ்சமாகவே அவர்கள் மாறிவிடுவார்கள். அதுவரை உங்களுக்கு பொறுமை அவசியம்.

- எனினும் நிலைமை கையை மீறிவிட்டதாக உணர்ந்தீர்களேயானால், அருகில் இருக்கும் காவல் நிலையத்தின் உதவியை நாடுங்கள். மகளிருக்கென பிரத்யேக மகளிர் காவல் நிலையங்கள் ஏராளமாக இருக்கிறது.

- இந்த வழிமுறைகள் எதுவுமே உங்களுக்கு ஒத்துவரவில்லையென்றால் நல்ல வழக்கறிஞரை பார்த்து விவாகரத்துக்கு விண்ணப்பிப்பது தான் ஒரே வழி. வழக்கறிஞர் மூலமாக தகுந்த ஆலோசனைகளையும் பெறலாம்.

பாவப்பட்ட கிரண்ஜித் அலுவாலியா இந்த எல்லா வழிமுறைகளையுமே முயற்சித்து பார்த்து தோல்வியடைந்தார். சொந்த குடும்பத்திலும் அவருக்கு உதவி கிடைக்கவில்லை. கணவர் குடும்பத்திலும் அவருக்கு உதவி கிடைக்கவில்லை. "என் கணவரின் வன்முறையை தடுக்க எனக்கு வேறு வழியே தெரியவில்லை. அவரை கொல்லவேண்டும் என்று நான் நினைத்ததே இல்லை. ஆயினும் அவரது வன்முறையையும், சித்திரவதைகளையும் தடுக்க நினைத்தேன்" என்கிறார் கிரண்.

2001ம் ஆண்டு கிரண்ஜித்துக்கு குடும்ப வன்முறைகளுக்கு எதிராக போராடும் பெண்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது வழங்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமரின் மனைவி கையால் இந்த விருதினை வாங்கினார் கிரண்ஜித்.

சிறை வாழ்க்கைக்கு பிறகு கிரண் தன் மகன்களை நல்லவிதமாக வளர்ப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார். சமூகசேவை மற்றும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார். வாழ்வாதாரத்துக்காக பணிக்கும் சென்றுகொண்டிருக்கிறார். மூத்த மகன் ரஞ்சித், இளையமகன் சஞ்சய் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். ஐம்பது வயதை கடந்த அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இப்போது தான் உண்மையாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

"கணவனால் வஞ்சிக்கப்படும் பெண்கள் வலுவில்லாதவர்கள் என்பதை பொய்ப்பிக்க விரும்பினேன். பெண்களும் கடின உழைப்பாளிகள் தான். வலுவானவர்கள் தான். பெண்களால் எதையும் செய்யமுடியும். ஆண்கள் இல்லாமலேயே வாழ்ந்து காட்டமுடியும் என்பதற்கு என் வாழ்க்கையாவது உதாரணமாக இருக்கட்டும்" என்கிறார் கிரண்ஜித் அலுவாலியா.

- லக்கிலுக் -
Quelle - Thinnai

Tuesday, July 11, 2006

தமிழ்க்கவி

- நேர்கண்டவர்: தமிழன்பன் (ஐவான்) -

எமது விடுதலைப் போராட்டவரலாற்றில் அதிசயமான வியக்கத்தக்க எத்தனையோ சாதனைகள் நடந்திருக்கின்றன. எங்களுடைய தமிழீழ தேசியத் தலைவர் எங்களுடைய இனத்தை ஒரு சமத்துவமான சமதர்மமுடைய நல்ல பலமான ஒரு இனமாக கட்டி வளர்த்து வருகிறார்.

களங்களையும் புலங்களையும் கண்டு பேனா முனையிலும் துப்பாக்கி முனையிலும் ஏர்முனையிலும் நின்று தன்னை நிலை நிறுத்தி இன்று வரை அயராது உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு உயர்ந்த பெண்மணியைச் சந்திக்கின்றோம்.தமிழன்பன் (ஐவான்): ஏகப்பட்ட தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி அயராது உழைத்து நிமிர்ந்து நிற்கும் ஒரு உயர்ந்த இலட்சிய வாதியாகவும் ஒரு போராளியாகவும் இருக்கிறியள்.

ஒரு எழுத்தாளராக இருக்கிறியள். எழுத்தாளர் எனும்பொழுது சிறுகதை, நாடகம், வானொலி நாடகம், நாவல், வரலாறு என பல பக்கங்களில் இயங்குவதை நாங்கள் பார்க்கின்றோம். அதை விட ஒரு பாடகியாகவும் இருக்கிறியள்.

கிராமியப் பாடகியாக, கிராமியக் கலைஞராக சிறப்பாக இயங்குகிறியள். ஒரு வீடியோ படப் பிடிப்பாளராக, படத் தொகுப்பாளராக, நெறியாளராக, படத் தயாரிப்பாளராக இயங்குகிறியள்.

புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாக நிகழ்ச்சி எழுத்தாளராக தயாரிப்பாளராக, நெறியாளராக இருக்கிறியள். அந்த வகையில் வானொலி ஊடாகவும் தொலைக்காட்சி ஊடாகவும், எழுத்து இலக்கியங்களின் ஊடாகவும் உங்களுடைய படைப்புக்கள் மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. அத்தோடு நீங்கள் உங்களை நல்ல ஒரு ஊடகவியலாளருக்குரிய தன்மையை வலுப்படுத்தி வழிகாட்டி வந்திருக்கிறியள். நீங்கள் ஒரு சட்டவாளராக இருக்கிறியள். அவை எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஒரு மாவீரனுடைய தாயார். போராளியினுடைய தாயார். நல்ல விவசாயி. தமிழ், ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். உங்களுடைய இந்த நீண்ட வரலாற்றில் இன்று நீங்கள் நிற்கும் நிலை வரைக்குமான அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தமிழ்க்கவி: இவ்வளவு நீண்ட பட்டியலுக்குரியவளாக என்னை நான் ஒரு போதும் கருதிக்கொள்ளவில்லை. நீங்கள் சொல்லுவது அத்தனையும் என்னுடைய வாழ்க்கை. நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். இந்தப் போராட்டச் சூழலில் எமது தேசியத் தலைவர் அவர்கள் பிறந்த அந்தக் காலத்தில் நானும் பிறந்தேன்.

அந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அந்தக் காலத்திலே உணர்ந்து கொண்டிருக்கின்றேன். என்கின்ற வகையிலே தான் என்னுடைய செயற்பாடுகளை நான் கூறக் கூடியதாக இருக்கும்.

வாசகர்களோடு நான் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக நீங்கள் சொல்லும் இவ்வளவு பரிமாணங்களையும் எட்டி இருக்கிறேன் என்றால் அதற்கு போராட்டச் சூழல் ஒரு வழிகாலாக இருந்திருக்கும். போராட்டம் என்கிறது வந்து என்னை மட்டுமல்ல இன்றைக்கு தமிழீழ மண்ணில் இதை விட வியத்தகு சாதனைகளை நிறையவே செய்திருக்கு. அந்த வகையிலே போராட்டம் வார்த்தெடுத்த ஒரு வார்ப்பாக நான் அமைந்திருக்கிறேன்.

நல்ல ஒரு தலைவருக்குக் கீழ் எங்களை அணி திரட்டிக் கொண்டதன் மூலமாகத்தான் எங்களுடைய இத்தனை வெளிப்பாடுகளும் நீங்கள் சொல்லுகின்ற இத்தனை பரிமாணங்களும் வாய்த்திருக்கிறது. சாதாரணமாக எல்லாப் பெண்களுக்குள்ளும் இருக்கின்ற ஒரு ஆற்றல் தான். அதை நாங்கள் வெளிப் படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இந்த போராட்டம், இந்த இயக்கம், இந்த இயக்கத்தினுடைய தலைவர் வழங்கியிருக்கிறார். அவர்கள் வெட்டிவிட்ட அந்த வாய்க்காலினூடாக ஓடிக் கொண்டிருக்கும் நீர் மட்டும்தான் நான்.

அந்த நீரை உரிய இடங்களுக்கு மடைமாற்றி அதன் மூலம், இந்தச் சமுதாயம் பெறக்கூடிய ஒரு பயனை வழங்கியிருக்கிறது என்று சொன்னால், எங்களுடைய இயக்கத்தையும் தலைவரையும் அவருடைய நெறியாள்கையின் கீழ் இருக்கின்ற இந்த நிறுவனங்களையும் தான் சொல்லலாம்.

நான் பிறந்ததில இருந்து சாதாரணமா ஒரு விவசாயியின் மகள். அதுவும் நாகரீக வளர்ச்சியைக் காணாத ஆதிவாசிகளைப் போல வேட்டையோடு புலக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சாதாரண விவசாயியினுடைய மகளாக நான் பிறந்து, நவநாகரீகமான உலகத்தில் கணணிக்கு முன் இருந்து இப்பொழுது தொழில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், இந்த நீரை உரிய இடத்திற்கும் மடை மாற்றி அந்த உரிய பயனை விளைவித்த பெருமைவந்து தேசியத் தலைவருக்குத்தான்.

இந்தப் பெருமையை நான் ஒரு போதும் சொந்தம்கொள்ள முடியாது. ஏனென்றால் எனக்குள் இந்த ஆற்றல் இருக்குதா என்ற அந்த செய்தியை வந்து என்னால ஏற்றுக் கொள்ள முடியேல்ல ஏதோ செய்து கொண்டிருக்கிறேன்.

தமிழன்பன் (ஐவான்): உங்களிடம் இருக்கும் ஆற்றல்களை மடை திறந்து வைத்தது இந்த விடுதலை போராட்டமா?

தமிழ்க்கவி: தலைவரால் கண்டு வழி நடத்தப் படுகிறேன் என்று ஒற்றைப் போக்கில சொல்றது மிகைப் படுத்தலாக இருக்காது. ஏனென்று சொன்னால் இந்த வழியும் இந்த வாய்க்காலும் அவர் அமைத்தது. இந்த இயக்கத்துக்கு வருகின்ற வழிவாய்க்கால் கூட அவர் அமைத்தது. இயக்கத்திற்கு வருவதற்கான அந்த வாய்க்காலை சில வேளை சிங்கள அரசாங்கம் வெட்டிவிட்டு இருக்கலாம்.

ஆனால் வாய்க்காலில் விழுந்த நீரை உரிய பயனுக்குக் கொண்டு வந்து வைத்தது இந்த விடுதலைப்போராட்டம் தான்.

இந்தப் பெருமையில துளியைத்தனையும் கொண்டாடுவதில் எந்த விதமான உரிமையும் எனக்கில்லை. நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் முதலிலேயே சொன்னது போல போர்க்காலச் சூழலில் இந்த தேசியத் தலைவரின் வழிநடத்தலில் வாழக்கூடிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்கிறேன். இதைத் தவிர வேற ஒன்றும் சொல்வதற்கில்லை.

தமிழன்பன் (ஐவான்): வாழ்க்கையினுடைய அமைப்பு நீங்கள் கூறுவது போல பல பரிமாணங்களைக் கொண்டிருக்கலாம். இது ஒரு வாழ்க்கை.

உங்கட ஆரம்ப கால வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த மோசமான துயரங்கள் இருக்கலாம், எதிர்கொண்ட பலத்த நெருக்கடிகள் இருக்கலாம், அவற்றை எவ்வாறு தாண்டி வந்தீர்கள்?

தமிழ்க்கவி: நான் வாழ்ந்துகொண்டிருக்கிற காலத்தை விட, பிறந்து வளர்ந்த காலத்தை பற்றிக் கதைக்கலாம் என நினைக்கிறேன்.

எங்களுடைய கிராமத்திலேயே மிதி வண்டிகள் இல்லாத காலப்பகுதியில நான் மிதி வண்டி ஓடியதே ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. இது கூட எனது சமுதாயத்தை எதிர்த்துச் செய்த காரியம்.

ரலிசைக்கிள் மிகப் பாரமானது. அந்த சைக்கிளுக்கு பலகையில் கரியல் போட்டு, நல்ல பலமான ஸ்ரான்ட் அடித்திருப்பார்கள். சைக்கிள் உருட்டும் பொழுது அந்த ஸ்ரான்ட் எழும்பி படக் என அடிக்கும். அந்த சைக்கிளை தள்ளும் போது அடித்து விழுந்திருக்கிறோம். அப்பா சைக்கிள உருட்டும் பொழுது பின்னுக்கு நிண்டு ஸ்ரான்ட் அடிச்சு காயப் பட்டிருக்கிறேன்.
சின்னப் பராயம். வெய்யில்ல நிண்ட சைக்கிள உருட்டி வைக்கிறத்துக்கு அடுத்த வீட்டில இருந்து ஒரு ஆம்பிளப் பிள்ளைய கூப்பிடச் சொல்லி அம்மா சொன்ன போது எனக்கு ஒரு ஆவல் வந்தது.

ஏன் ஆம்பிளை வந்து உருட்டி வைக்கோணும், நான் உருட்டி வைச்சா என்ன, என்று நான் சைக்கிள உருட்டப் போன போது அம்மா வெளியால வந்து 'எடியேய்" எனச் சத்தம் போட நான் சைக்கிள தடுமாறி கீழ போட அந்த சைக்கிள உருட்ட வந்தவர் தலையில நறுக்கெண்டு குட்டு வைச்சு "பெட்டச்சிக்கு ஏன் இந்த வேலை" எனக் கேட்டுட்டேர்.

எனக்கு பெட்டச்சி என்ற வார்த்தை அப்பவே சுட்டிற்று. அப்ப நான் ஓடவேண்டும் என்ற அந்த விரதத்தை வைச்சிருந்து, மிகக் குறுகிய காலத்தில கொழும்பில இருந்து வந்த எனது மைத்துனரிடம் அவர் இப்போது அக்காவின் கணவராக இருக்கிறார். அவருடைய ஆதரவோடுதான் "இந்தச் சைக்கிள உருட்டக் காட்டித் தாங்கோ" என்று கேட்டனான்.

அவர் சொன்னார் 'கொழும்பில பெண்கள் சைக்கிள் ஓடுகிறார்கள். நான் ஓடவே உனக்குக் காட்டித்தாறன்" அவர் காட்டித் தந்தார். ஒரு மூன்று தின நிலவில வீட்டில உள்ள அங்கத்தவர்கள் யாருக்கும் தெரியாமல் அந்தச் சைக்கிளை ஓடக் கற்றுக் கொண்டு, வீதியில அந்தச் சைக்கிள் ஓட்டத்தை நடத்திய போது முதல் முறையாக என்னுடைய தாயார் தற்கொலைக்கே தயாராகி விட்டார்.

'இப்படி ஒரு அடங்காப்பிடாரியை பெற்றதற்கு சாகலாம்" என்று சொல்லி.
இப்ப கேட்கும் போது நகைச்சுவையாக இருக்கிறது. பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் வந்து அம்மாவுக்குப் சரியான பேச்சு. "என்ன பிள்ளை பெத்து வைச்சிருக்கிற நீ , இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு செத்துப்போகலாம்" அம்மாட்ட இப்படி ஒரு கோபம் இருந்தது. இதை வந்து அப்பாவுக்குச் சொல்லப்போறா. அப்பா அடிக்கப் போறார். அப்பாட்ட அந்த நேரம் சவுள் அடி வாங்குவன். சரியான குழப்படியும்தான் நான்.
"அவள் தன்ர காலால, தன்ர உடம்பால செய்யிறத நீ ஏன் தடுக்கிற, அதைப் பற்றி உங்களுக்கென்ன" என்று கேட்டுப் போட்டார்.

அந்த வயதில தந்தையை தொட்டுப் பேசுகிற வழக்கம் பெண் பிள்ளைகளிடம் இல்லை. இப்ப இருக்கு. ஆனால் அந்த நேரம் நான் அப்பாவை ஓடிப்போய் கட்டிப் பிடித்தன். அதுக்கு அடுத்த பேச்சு விழுந்தது. 'பொம்பிளப் பிள்ள இந்த வயசில போய் ஏன் அப்பாவை கட்டிப்பிடிக்கிறது" பொம்பிளப் பிள்ளை எட்ட நிண்டு கதைக்கோணும், ஆம்பிளப் பிள்ளை கிட்ட நிண்டு கதைக்கலாம். நான் அப்புவோட அப்படிப் பழகேல்ல. இரண்டு வாரத்துக்குள்ளேயே அப்பு எனக்கு வேலைகள் தரத் தொடங்கி விட்டார். "பிள்ளை கொஞ்சம் எட்டப் போய் வயலுக்குள்ள மாடு நிக்கா எண்டு பார்த்துக் கொண்டோடியா. சைக்கிளக் கொண்டோடு".

நான் கொண்டுபோவன். என்னை உதாரணம் காட்டி பெண்ணின் மகள் இரண்டு வருடத்தில் சைக்கிள் ரேசில் கப்பெடுத்தவா. அப்ப காலம் மாறி விட்டது. முதல் மாற்றத்தை நான் செய்தன்.

அதே போல படிக்கவேண்டும் என்று சரியான ஆர்வம். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கதையை எல்லா இடமும் பேசினார்கள். வழக்குகளை உடைக்கிற விசயம் பற்றி பேசினார்கள். நான் இதைச் சொல்லியே ஆகவேணும் ஏனெண்டு சொன்னால் எனக்கு ஒரு சட்டவாளராக வரவேண்டும் என்று அப்பவே ஆசை. நானும் ஒரு கறுப்புக் கோட்டணிந்து நீதிவானுக்கு முன்னால பேசவேண்டும் என்று ஆசை இருந்தது. கல்வி வந்து எனக்கு இடையிலேயே நிறுத்தப்பட்டு போய் விட்டது.

என்ன பிரச்சனை என்று சொன்னால் ராணுவம் வந்து எங்களுடைய கிராமங்களை அண்டி நிலைப் படுத்திக் கொண்டார்கள். 1961ம் ஆண்டு சிறிமாவோவினுடைய இராணுவம் வடபகுதிக்கு அனுப்பப்பட்ட போது எங்களுடைய கிராமத்துக்கு அண்மையிலதான் யோசப்காம் இருக்கிற இடம்.
அந்த இடத்தில தான் முகாம் அமைச்சு நிறைய இராணுவத்தை தங்க வைச்சிருந்தார்கள். அந்தப் பகுதியைத் தாண்டித்தான் பாடசாலைக்குப் போகவேண்டும்.

இதுக்கு முதலே இனக்கலவரம் 1958ம் ஆண்டு நடந்த போது ஒரு பன்னிரண்டு வயசுப் பெண் பிள்ளை எங்களுக்கு மூப்பு, அந்தப் பிள்ளையை எங்கட வீட்டில அந்தக் குடும்பத்தைப் பிரிச்சு குடியேற்றின பொழுது முதல் கொண்டு வந்து சங்கத்துக்காகக் கட்டப்பட்ட ஸ்ரோரில கட்டிடத்தில அகதியாக வைச்சிருந்தார்கள்.

பிறகு பிரிச்சு வீடு வீடா கேட்டு இரண்டு குடும்பங்களை ஒவ்வொரு வீட்டிலையும் விட்டிச்சினம். அப்ப எங்கட வீட்டுக்கு வந்த குடும்பத்தில ஒரு பிள்ளை அவாவுக்கு பன்னிரண்டு வயசிருக்கும். அந்தப் பிள்ளையை விளையாடுறத்துக்கு கூப்பிட்டா, அவாட அம்மா வந்து மோசமாப் பேசுவா. அந்தப் பிள்iயைப் பேசுவா.

"அதில ஏண்டி உக்காந்திருக்கிற, அதில ஏண்டி சிரிக்கிற, அவங்களை ஏண்டி பார்க்கிற." அந்தப் பிள்ளை அழுதுக்கொண்டே தான் இருக்கும்.

என்ன நடக்கிறது எண்டு எங்களுக்குத் தெரியாது. ஒரு நாள் எல்லாருக்கும் அந்தப் பிள்ளேல ஒரு அனுதாபம் இருந்தது.
கிணத்தடிக்குக் குளிக்கப் போச்சுது. நாங்களும் கூடப் போனோம் தண்ணி அள்ளி ஊத்த. என்னுடைய நாவலிலையும் குறிச்சிருந்தன் அந்த சம்பவத்தை. அப்பதான் பார்த்தன் அந்த பிள்ளையினுடைய உடையை, நீரில் அலம்பி வெளியால எடுக்கேக்குள்ள இந்தத் தண்ணி சிவப்பா மாறிவிட்டது. போட்டிருந்த உடுப்பு பச்சை நிறம். அந்தப் பிள்ளையினுடைய உடையை அலம்பி எடுக்கும் பொழுது சிவப்பா வருது தண்ணி.

அப்ப பச்சைத் துணியில எப்படி சிவப்பச் சாயம் வரும், நான் போய் எங்கட வயசுக் காரரோட கதைக்க, அந்தக் கதை அம்மாவுக்கு எட்ட, அம்மா போய் அந்த அம்மாவக் கூப்பிட்டுப் பேச, 'என்ன அந்த பிள்ளை பெருசாகிட்டுதா, ஒளிச்சு வைச்சிருக்கிறேயா?" தீட்டுத் தொடக்கெல்லாம் பெருசாப் பார்க்கிற காலம் கிணத்தடியெல்லாம் கண்டபடி பழகிருவினம். அதுக்குப் பிறகு தான் அந்த அம்மா அழுது கொண்டே சொல்றா 'தன்னுடைய பிள்ளையை ஒரு நாலு சிங்களவர் சேர்ந்து...." பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர் என்ற சம்பவம் வருகுது.

அப்ப அந்த இனக்கலவர நேரம் எங்க ஊருக்கு ஒரு வானொலி பெட்டி இருந்தது. அது இடம் பெயர்ந்த வந்த ஒருவருடையது. இரவு அந்த வானொலிப் பெட்டியில் செய்திகள் கேட்கிறதுக்கு அயல் எல்லாம் கூடும். அன்றைக்கு அந்த அயலெல்லாம் கூடினது செய்தி கேட்க அல்ல, அந்தச் செய்தியை பரிமாறிக் கொள்ள. அந்தச் சம்பவத்தைச் சொல்லி அந்த நேரம் எங்களுக்கு விளக்கம் அளிக்கேல்ல. பாடசாலைக்கு நான் போகேக்குள்ள ஒன்பதாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தன். ஒன்பதாம் ஆண்டு பரீட்சை எழுதிப்போட்டு அடுத்த வகுப்புக்கான பாடசாலைக்குப் போகும் போது 'இராணுவம் வந்து நிற்கிறான். "இந்தப் பாதையால இனி பள்ளிக்குப் போகேலாது. நீ பள்ளிக்கூடத்துக்குப் போனாய் எண்டா உனக்குத் தெரியும் தானே பூவாய்க்கு நடந்த விசயம்."

பூவாய்க்கு என்ன நடந்தது என்ற விசயத்தை அம்மா எனக்குச் சொல்றா.
நாக்கு அண்ணத்தில ஒட்ட அப்படியே ஆவென்று கேட்டுக் கொண்டு இருக்கிறோம். விளங்கியும் விளங்காத வயசு. இந்தக் கதையை கேட்ட எனக்கு பன்னிரண்டு வயசு. அப்ப நாலு வருசத்துக்குப் பிறகுதான் எனக்கு விளக்கம் சொல்றா. அந்தக் கேள்வியோடையே என்னுடைய படிப்பு முடிஞ்சுது.

பாடசாலையால நிண்ட பிறகு சட்டவாளராகிற கனவு, ஆசிரியராகிற கனவு அல்லது சங்கீதம் பாடுகிற ஒரு கனவு எல்லாம் அதோட முடிஞ்சுது. பிறகு, எங்கட குடும்பத்தில மூத்த ஆம்பிளப் பிள்ளை இல்லை. நாங்கள் முன்னுக்குப் பிறந்தது மூன்று பேரும் பொம்பிளப் பிள்ளையள். அதுக்குப் பிறகு பின்னுக்குப் பிறந்தது ஆம்பிளப்பிள்ளையள். ஒட்டு மொத்தமா எங்கட அம்மா பதினொரு பிள்ளைகளைப் பெத்தா. அப்பவுக்கு நான் சைக்கிளும் ஓடப் பழகிட்டேன் தானே.

அதால கலப்பை கொண்டு போறது வயலுக்கு,மாடு கொண்டு போறது உழுகிறது.... அப்பா வயலில தனியப்பாடு படுவேர். கூலியாள் போட மாட்டேர்.

அப்ப நாங்கள் தேத்தண்ணி கொண்டு போய் கொடுக்கேக்குள்ள மாடு பூட்டோட நிண்டா கொஞ்சம் கலைப்பம். கலைச்சு உழுதா அவருக்கு உதவியா இருக்கும். திருப்பி மேட்டு வயல் திருத்துகிற நேரமெல்லாம் அவர் மண்ணைக் குத்தித் தர நாங்கள் பலகையை இழுப்பம்.

காணி திருத்தித் திருத்தி வேலை செய்றது, கட்டைகளுக்கு நெருப்பு வைக்கிறது, வெட்டும் போதெல்லாம் ஒரடி இரண்டடி சுற்றுமரங்களை அப்பா பிரிச்சு தந்திடுவேர்.

அதுக்குரிய கோடாலியும் தருவார். அம்மா "நீ மத்தியானத்துக்குள்ள இந்த மரத்த விழுத்திப் போட்டையெண்டா உனக்கு ஒரு பாவடை வேண்டித் தருவேன்". பாவடையெண்டா நீங்க பெருசா எதிர்பார்க்காதீங்க சீத்தைப் பாவடை. இன்னொரு மரம் தங்கச்சிக்குக் கொடுப்பார்.அவாவுக்குக் கொஞ்சம் குறைவு. அப்படி கைப்பருமன் உள்ள மரங்களை பிரிச்சுப் பிரிச்சு எங்களிட்ட தந்து போட்டு மற்ற பெரிய மரங்களை அவர் எப்படியோ தான் தறிச்சுக் கிறிச்சுப் போடுவார்.

எல்லா வேலைகளிலேயுமே நாங்கள் அப்புவோட பங்குபற்றி வருவோம்.
வீட்ட வர அம்மா தொடங்குவா. 'ஒரு வெங்காயம் உரிக்கத் தெரியாது, ஒரு பச்சை மிளகாய் வெட்டத் தெரியாது, தேத்தண்ணி ஊத்தத் தெரியாது, கொண்டு திரியிறீங்க பின்னால,கொண்டு திரியிறீங்க பின்னால, நாளைக்கு வாறவனிட்ட குத்துப்படப் போறாள்!" அம்மா நெடுகப் பேசிக் கொண்டே இருப்பா. அப்பு சொல்லுவேர் 'எணைய் நீ பேசாமல் இரு பேசாமல் இரு, பொம்பிளப்பிள்ளை எண்டு பார்க்கக்கூடாது."

அப்ப தமிழரசுக் கட்சி ஊர்வலத்துக்கெல்லாம் என்னை தோளில தூக்கிக் கொண்டு போகேக்குள்ள அதத்தான் சொல்லுவார். 'விடுதலை என்பது பொம்பிளையளுக்கும் வேணும் அது நீ எண்ணிப் பாக்கத்தான் வேணும்" விளங்குதோ விளங்கேல்லையோ சொல்லிக்கொண்டு இருப்பார்.
மேடைகளில பேசுற கூட்டங்களில தமிழ் பெண்களுக்கென்று ஒரு நாள் நடந்தது.

இப்ப இருக்கிற சைவப்பிரகாச வித்தியாசாலையில், அப்ப கட்டிக் குறை, அதுக்கதான் நடந்தது, அந்த மாநாட்டில போய் அப்ப ஏழெட்டு வயசுதான், 47ம் ஆண்டு பிறந்தனான், 57ம் ஆண்டு அந்த மாநாடு நடக்குது, மாநாட்டில அந்தப் பெண்கள் ஆக்கிரோசமாப் பேசினம். நானும் ஒருக்கா எழும்பி ஆக்கிரோசமாப் பேசவேணும். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் எனக்கு இருந்தது.

அப்பா ஆரம்பத்தில குடிகாரனா இருக்கேல்ல. நாங்கள் வளரும் போது பிறகு அவர் நண்பர்களோட சேர்ந்து குடியைப் பழகிக் கொண்டேர். சுபாவமா இருந்தாலும் சரி, குடி பழகின பிறகும் சரி அவர் எப்பொழுதும் அவருடைய பொழுது போக்கு நாட்டார் பாடல்கள் தான். அரிவு வெட்டத் இறங்கினாலும் பாட்டுத்தான். சூடடிக்கத் தொடங்கினாலும் பாட்டுத்தான். இதுகள்ள கூத்துகளும் இடைக்கிடையில போடுவினம். அரிவு வெட்டுக்காலம் முடியேக்குள்ள போடுவினம். இதில கிருஷ்ணருக்கு வேஷம் கட்டி நடிக்கிறவர் இருக்கிறார். அவருக்கு சரியான தொந்தி. அவர் கிருஷ்ணருக்கு வேஷம் கட்டேக்குள்ள தொந்தி தெரியாம இறுக்கி வரிஞ்சு கட்டுவேர்.
முதல் இளக்கையித்தால வரிஞ்சு கட்டி, கமுக மடல்களை வைச்சு மூடி அதுக்கு மேல மேக்கப் போட்டுத்தான் நடிப்பேர். பாடுவேர், துள்ளி ஆடுவேர் ஆனால் கொஞ்சம் தொந்தி. இதெல்லாம் நாங்க கிட்ட நிண்டு பார்க்கிறது. அப்படி ஒவ்வொருத்தருக்கு வேஷத்துக்கு தக்கமாதிரி நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்குபெற்றுவோம்.

இந்த நிகழ்சிகளிலெல்லாம் கவரப்பட்டு என்னிட்ட பாடுற ஆற்றல் தனியாவே இருந்தது. எங்கட வீட்டில எல்லாரும் வெள்ளையும் அழகும், நான் தான் கறுப்பு. தோற்றமும் பொலிவில்லாத தோற்றம். அப்ப சின்னனிலேயே ஒரு தாழ்வு உண்ர்ச்சி என்னிடம் இருந்தது. அயலவர்கள் கூப்பிடுறதே "கறுப்பி" எண்டுதான். இதை விட இன்னொரு கிழவன் சொல்லிக்கொண்டே இருப்பார் "உன்னை தவிட்டுக்கு விலைக்கு வாங்கினது" என்று .இந்த தாழ்வு உணர்ச்சி எல்லாம் என்னிட்ட இருந்தது. அப்ப இதோட வந்து படிப்பிலையும் வந்து "ஆமிக்காரன் வந்து நீ படிக்கப் போனா உன்னை ஏதும் செய்திருவான் பிறகு உன்னை ஒருத்தரும் சீண்டமாட்டான்" என்ற கதை வந்து என்னை பயப் படுத்திப் போட்டு.

அதை போலதான் பேச்சாளரா வரோணும், பாட்டாளரா வரோணும் எனக்குள்ளேயே பிறந்து எனக்குள்ளேயே மடிஞ்சிட்டு. நான் இப்படி ஒரு இடத்திற்கு வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை.

அப்ப சின்ன வயசிலேயே பாட்டுக்காக எனது ஊரிலேயே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்குப் போறதுக்குக் கள்ளம். அப்பா பள்ளிக்கூட வாசல் வரைக்கும் அடித்துக் கொண்டு போய் விடுவேர். கொண்டு போய் பள்ளிக்கூட வாசலில இறக்கி விட்டிற்றுப் போவேர். சரியெண்டு அவர் கடைத்தெருவுக்குப் போக பள்ளிக்கூடத்தின்ர பின் கேற்றால விழுந்து காட்டுக்கால விழுந்து வீட்ட போயிருவன்.

அப்பா வீட்ட வாறதுக்குள்ள நான் வீட்ட நிப்பன். பிறகு மாமரத்தில கட்டி தலைகீழா தொங்க விடுவார். தொங்க விடேக்குள்ள 'என்னைக் கீழ இறக்கி விடுங்கோ நான் பள்ளிக்கூடத்துக்குப் போறன்" எண்டு சொல்லுவன். இறக்கிவிட்டப் பிறகு "நான் நாளைக்குப் பள்ளிக்குப் போறன்" என்று சொல்லுவன். இப்படிக் களவில படிச்சனான்.

பக்கத்து வீட்டில இருக்கிற ஒருவர் அப்புட அடியில இருந்து காப்பாத்துறதுக்காக கூட்டிக் கொண்டு ஒழிக்கிறதுக்கு கேட்ப்பேர் 'அப்ப நீ என்னை கல்யாணம் கட்டினி எண்டா வா உன்னை ஒழிச்சு வைக்கிறன் நான் காட்டமாட்டன்".

அப்ப ஒரு நாள் அவர் அப்படிச் சொன்னதை வைச்சு அப்புட்ட இருந்து தப்புறத்துக்காக அப்படியே சொல்லிக் கொண்டு அவருட்ட ஒழிச்சிட்டன். அப்பு வயலுக்குப் போயிருவேர். நாங்கள் விளையாடத் தொடங்கி விடுவோம். அடுத்த நாள் பள்ளிக்குக் களவடிக்கோணும் எண்டு சொன்னா "வடிவேல் அண்ணே நான் உன்ன கல்யாணம் கட்டுறன்" எண்டு சொல்றது. சொன்னா அவர் ஒழிச்சு வைப்பேர். அவர் எத்தின நாளைக்கு ஒழிப்பேர் அவர் எங்களுக்கு விளையாட்டுக் காட்டுறார் என்று எங்களுக்கும் விளங்காதுதானே.

நாங்க நினைக்கிறம் அவர் சொன்னா ஒழிச்சுவைப்பார் என்று. இப்படியே அப்பாட்ட அடிபட்டு கடசியா படிச்ச அந்த படிப்பு தமிழ்தான் என்று சொன்னா எங்களிட்ட ஒரு மாஸ்ரர் இருந்தவர் அவர் பெயர் சுப்ரமணியம். இயல்பாகவே இந்த அறிவு வரக் காரணம் என்னவென்றால் வாசிக்கக் கூடிய ஆக்கள் எங்கட ஊருக்க இருக்கேல்ல.

மாலையில எவ்வளவுதான் வயல் வேலை முடிச்சிட்டு வந்தாலும் அப்பு வரேக்க முன்னமே ஏழட்டு வயசுபோன ஆக்கள் வந்து கூடியிருவினம்.
அப்பு வரேக்குள்ள வெண்கலக் கைவிளக்கோட மதன காமராயன், விக்ரமாதித்தன், ஐகதலப் பிரதாபன், மகாபாரதம், போன்ற புத்தகங்களை அவர்களே திரட்டிக் கொண்டு வருவார்கள். தெரிஞ்ச இடத்தில ஒரு புத்தகம் கண்டா ஆரோ ஒரு கிழடு தூக்கிக் கொண்டு வரும், தூக்கிக் கொண்டு வந்து கந்தப்பு இந்தப் புத்தகத்தை இண்டைக்குப் படிக்கோணும்.

அது தொடர்கதை. அப்ப அவர் விளக்க கைய்யில இப்படி பிடிச்சுக் கொண்டுதான் படிப்பார். விளக்கு புத்தகத்துக்குக் கிட்ட பிடிச்சுக்கொண்டு துவங்கும்

"ஆ....ஆ..... த...ச...ர...த..ன் ஆனவன்... வே....ட்டைக்குப்.... புறப்பட்டு போகையிலே...." அங்கிருந்த முற்றும் தரிப்பொன்றும் இருக்காது அந்த எழுத்தில. ராகத்திலதான் படிச்சுக்கொண்டு போகோணும். அப்ப இவர் இருந்து படிக்க 25, 30 பேர் இருந்து கேப்பினம். அப்ப கதாநாயகன் காந்தரோபாயன். நான் இருந்து படிக்கோணும் 48 பேர் கேட்கோணும். அந்தக் கனவுகளைச் சொல்கிறன். அப்பா படிச்சிற்றுப் போகேக்குள்ள தம்பியாக்கள் சின்னன். இவற்ற ராகம் தம்பி அவங்களுக்கு விளங்காது. திருப்பி அவங்களுக்கு இப்ப உள்ள வசன நடையில நாங்களே அதுக்குள்ள முற்றுப்புள்ளிகளைப் போட்டு போட்டு திருப்பி படிக்கோணும்.

படிக்கேக்குள்ள இப்ப உள்ள இந்தப் புராணம், நாட்டிலக்கியம், மேற்கோள் காட்டுகிற வசனங்கள் இதுகள் எல்லாம் நான் அப்ப படிச்சதுதான். அப்ப நாங்கள் தம்பி ஆக்களுக்காக வேண்டி படிக்கிறம். வீட்டில எப்பவும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன்,வீரகேசரி பத்துச்சதம் கலைமகள் இருபதுசதம் எண்டா வாங்கிறேல்ல. அது எங்கட அப்பாவின்ர அம்மா வாங்குவா. அப்பு வந்து கல்கியும், குமுதமும், ஆனந்த விகடனும், பேப்பரும் அவர் வாங்குவேர். வீரகேசரியில் உதயணனின்ர கன்னித் தீவு, கிருஷ்ணா அவதாரம், இதுகள் தொடராக வருகுது. நாலாமாண்டு படிக்கேக்குள்ளே தொடர்கதை படிக்கோணும். தொடர்கதை படிச்சிட்டு அடுத்த கிழமை வர வர அந்தக் கதைகளைப் படிச்சு, இந்தக் கிழமை இந்த அத்தியாயம் முடிய அடுத்த அத்தியாயம் பள்ளிக்கூடத்தில இருக்கிற சக மாணவிகள் எல்லாருக்கும் நான் தான் அந்த கதை சொல்லி. எல்லாருக்கும் கதை தெரியும் பேப்பர் எடுக்கினமோ எடுக்கேல்லையோ கதை தெரியும். அப்படிக் கதை சொல்லிக் கொண்டு வந்தா அப்ப ஒரு யோசனை எனக்கு வகுப்பில மாஸ்ரர் எழும்பிச் சொல்லுவேர். ஒரு பாடத்தை விளங்கப்படுத்தும் போது சரித்திரப் புத்தகம்,
பூமி சாத்திரப் புத்தகம், ஒராள் வாசிங்க எண்டு சொல்லிப் போட்டு எல்லாருக்கும் விளங்கப் படுத்துவேர். சில நேரம் நான் எழும்பி நிண்டு வாசிப்பன். புதுசா எங்களுக்கு வந்தவர் அந்த ஆசிரியர் ஐந்தாம் ஆண்டு அரசாங்கச் சோதனை ஒன்பது வயசு எனக்கு அப்ப வகுப்பில சாதாரணமா கெட்டிக்காரியா இருந்தனான். இப்ப உள்ளது போல எனக்கு உணரத் தெரியேல்ல. அந்தப் பரீட்சையில மூன்று பாடம் வைப்பினம். ஆங்கிலம், கணிதம், தமிழ், பொதறிவு. ஆங்கிலப் பாடத்தில மாகாணத்தில முதல் மாணவி என்ற விருது எங்கட பாடசாலைக்கு வந்தது. அந்த முதல் மாணவி யாரெண்டா அப்ப எங்களுக்குத் தெரியாது. லீவு முடிஞ்சும் போன பிறகு அந்த வகுப்பிலேயே கடசி வாங்கில இருக்கிற ஆள் நான்தான். ஏனென்றால் முன் வாங்கெல்லாம் உத்தியோகத்தருடைய பிள்ளைகளுக்கு இரண்டாம் வாங்கு கொஞ்சம் வர்த்தகர் காசுக்காரருடைய பிள்ளைகளுக்கு. அடுத்த வாங்கு அதையும் விட கொஞ்சம் கார் வைச்சிருக்கிறவேக்கு, சைக்கிள் வைச்சிருக்கிறவேக்கு. சைக்கிள் வைச்சிருக்கிறவனும் அப்ப பணக்காரன் தான்.

பின் வாங்கில உண்மையிலே பிச்சை எடுக்கிறக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் இருந்தது.எங்களை அந்தப் பிள்ளைகளோட தள்ளி விட்டிருவினம். ஏனென்றால் நான் கறுப்பு. தாழ்வுணர்ச்சியை நான் அங்கிருந்து பொறுக்கிறன். பின் வாங்கில தள்ளி விட்டிருவினம். அப்ப வகுப்பில நான் ஒரு முன்னணிக்குரிய ஆள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. நான் அப்படி நினைக்கவும் இல்லை. ஏதோ படிச்சுக் கொண்டிருக்கிறன். அப்ப 'மாகாணத்துக்குள்ள முதல் மாணவி எங்கட வகுப்பில வந்திருக்காம்" எண்டு ஆசிரியர் சொல்றேர். யாரெண்டு சொல்லேல்ல. அப்ப எல்லாரையும் கூப்பட்டாச்சு மேடைய குவிச்சாச்சு ரீச்சர்ரெல்லாம் வந்தாச்சா, வந்தோண்ண இவர் சொன்னேர் மாஸ்ரர் இல்லத்தானே. வாத்தியார், வாத்தியாரம்மா, பெரிய வாத்தியார் தலைமை வாத்தியார் பெரிய வாத்தியார் மற்ற எல்லாரும் வாத்தியார். அப்ப வாத்தியார் வந்து சொல்றேர் 'எங்கட வகுப்பில இருக்கிற பிள்ளைக்கு பரிசு கிடைச்சிருக்காம் எல்லாரையும் வரட்டாம். எல்லாரும் போனோம் சின்ன வகுப்புக்காரர் முன்னுக்கு. மற்ற எல்லாரும் பின்னுக்கு. கூப்பிட்டார் மாஸ்ட்டர் 'எழும்பு" என்ர பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார் 'எழும்பு" எண்டு அப்பவும் அந்த நேரமும் பக்கத்தில இருந்த மாணவிக்குக் கிள்ளி போட்டன். கிள்ளிப் போட்டுத்தான் இருக்கிறன் என்னை நெருக்கிப் போட்டாள் எண்டு.

இவர் எழும்பு எண்டோன்ன எனக்கு விறைச்சுப் போச்சு. இவர் நுள்ளினதைக் கண்டுட்டேரெண்டு. அவர் அரக்காக் கோலி மேடையில ஏத்திப் போட்டுச் சொன்னேர் 'இவள் தான் அவள்" எனக்கு விடிஞ்சதும் தெரியாது ஒன்பது வயது எங்களுக்கு என்ன விளங்கும் இவள் தான் அவள் என்று.

அந்த ஆசிரியரைக் கூப்பிட்டேர் ஆங்கிலம் படிப்பிச்ச மனுசி ஒரு பறங்கி மனுசி. இந்த வெள்ளைக்காரரெல்லாம் வெளியேறின போது போகாமல் அங்கு நிண்ட ஒரு பறங்கி மனுசிதான் எங்களுக்குப் படிப்பிச்சவா. அப்ப அவாவ கூப்பிட்டிட்டு இந்தப் பிள்ளை இந்த பாடத்திலும் கெட்டிக்காரி அந்தப் பாடத்திலையும் நல்ல புள்ளி எடுத்திருக்கிறாள் இந்த பாடத்திலையும் புள்ளி எடுத்திருக்கிறாள் 'ஏன் ஒருத்தரும் இனங்கானாமல் வைச்சிருந்தனீங்கள்" எண்டு அந்த மேடையில் பேசும் போது அவர் கேட்கிறேர். அப்ப இரண்டாம் ஆண்டு படிப்பிச்ச ஒரு ஆசிரியர் சொன்னா "அவள் அப்பவே கெட்டிக்காறிதான்" ஒரு நாளும் அந்த ஆசிரியர் என்னைப் பார்த்துக் கெட்டிக்காறி என்று சொல்லேல்ல. அவாட்ட அடியண்டா நாளாந்தம் வாங்கியிருக்கிறன்.

அப்படிபட்ட அடி வாங்கியிருக்கிறன் அந்த வாத்திமார் எல்லாருட்டையும்.
ஒருத்தரும் கூட என்னை நெத்திக்கு நேர நீ கெட்டிக்காறி என்று சொன்னதே கிடையாது. அப்படி நேர சொல்லியிருந்தால் நான் இன்னும் படிச்சிருப்பன்.
அப்போ உள்ள கொள்ளை என்னெண்டு சொன்னால் நேரடியா பாராட்டின பிள்ளை விழுந்து போகும்.

என்னுடைய தந்தையைப் பற்றி நான் சொல்ல வேண்டும் எங்கட அப்புட்ட போய் நீங்க சொல்லுங்க 'அப்பு நான்இண்டைக்கு சங்கீதத்தில் முதல் பரிசு வாங்கியிருக்கிறன்" 'ஆ" எண்டிற்று போயிருவேர். திரும்பிப் பார்க்க மாட்டேர்.
"அப்ப நான் கணக்கில நூற்றுக்கு நூறு எல்லாம் எடுத்திருக்கிறன்." 'ஆ" எண்டிற்று போயிடுவேர். சில நேரம் கேக்காமலேயே போயிடும் அந்த ஆள். ஒரு நாள் என்னை பாராட்டுறத்துக்கு வரேல்ல என்னத்துக்கென்று தெரியேல்ல. எங்கட வளவுக்க நிண்ட மாடு அறுத்துக் கொண்டு பாய்ஞ்சிட்டுது.

அறுத்துக்கொண்டு பாய்ஞ்சா .எல்லாரும் தானே திரிஞ்சு பார்த்திச்சினம். ஒருத்தருக்கும் அம்பிடேல்ல அது. கடசியா நான் தான் மடக்கி பள்ளிக்கூடத்தால வந்து உடுப்பு களட்டேல்ல. அப்ப இவர் சொல்றார் 'எத்தும் எத்தும்" எண்டு .

நான் மட்டுமல்ல விவசாயக் குடும்பத்தில பத்து வயசில பிள்ளை மாடு சாய்க்கும். இப்பவும் நீங்கள் பார்க்கலாம் மலையக பிள்ளைகள் சமைக்குது. ஒன்பது வயது பிள்ளை சமைக்குது. என்ர மகளும் சமைத்தவள். தகப்பனுக்கு பின்னால தடி கொண்டு போவினம்.

அப்ப நான் மட்டும் எண்டில்லை பொதுவா பின்தங்கிய கிராமங்களுக்குப் போய் பார்த்தீர்கள் என்றா தெரியும். 'பாலன் பஞ்சம் பத்து வருசம்" பத்து வயசு வந்தா பிள்ளை தகப்பனுக்குப் பின்னால தடி கொண்டு போகும் மாடு சாய்க்க.
அதாலதான் அந்த முதுமொழியே வந்தது. அப்ப எங்கட வீட்ட ஆம்பிளப் பிள்ளையே இல்லை. நான் தான் அந்த மூத்த மகள். மூத்த மகள் என்ற செல்வாக்கிலே நிழலில் வளர்ந்தனான். இரண்டாவது நான் தான். அடுத்தது நான் வந்து காடேறிதான்.

அப்ப அந்த நிலைமையில திரிஞ்சபடியா நான் அந்த வேலைகளுக்கெல்லாம் போகத் தொடங்கிட்டன். பாடசாலை கல்வி என்றது அங்க முக்கியமாக கருதப்படேல்ல.

அப்ப அம்மாவுக்கு உதவி செய்கிறது முத்துக்குப் பிறந்த பிள்ளைதான். என்னுடைய மகளே ஒன்பது வயசில நான் அஸ்ப்பத்திரிக்குள்ள இருக்கேக்க எனக்கு சமைச்சு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவாள்.

ஆனால் இப்ப என்னுடைய பேத்தி 20 வயசு அவள் செய்யமாட்டாள். கால மாற்றம் என்றது அங்குதான் வருது.

அப்ப அந்தமாதிரியான காலப்பகுதியிலதான் இந்த மாட அவுட்டுக்கொண்டு காலேல தவுடு வைக்கிறது எல்லாம் என்ர வேலை. எனக்கு விடிய எழும்பினா வீட்டோட உள்ள வேலை, விடிய எழும்பின உடன பல்லுல கரியப் போட்டுக் கொண்டு ஒரு தண்ணி குடம் இருக்கு அதைத் தூக்கிக் கொண்டு கிணத்தடிக்குப் போவன். அள்ளிக் கொண்டு வாறது அங்கு தண்ணில தவுடு குளைச்சு மாட்டுக்கு வைக்கிறதோட அங்க தேத்தண்ணி ரெடியா இருக்கும்.

வீட்டில எல்லாரும் தரையிலதான் படுப்பினம். எனக்கு ஒரு சாக்குக் கட்டிலிருக்கு. ஏனெண்டா ஆம்பிள வேலை செய்யிற ஆள். உழைக்கிற பிள்ளை என்றதுக்காக அந்த ஒரு செல்வாக்கு இருந்தது. இந்த மாடு அறுத்துக் கொண்டு திரிய எல்லோரும் ஓடி கடைசியா ஏலாம களைச்சுப் போய் இருக்கினம். நாங்கள் அப்ப இரண்டு நேர பள்ளிக்கூடம்.காலமை சாப்பாடு 25 இடியப்பம் வாங்கிக் கட்டிக்கொண்டு போறது. அத சாப்பிட்டிட்டு மூன்றரைக்குத்தான் பள்ளியால வருவம்.

பள்ளியால எண்டா - இப்போ இதில இருக்கிற ரியூசன் கிளாசுக்குச் சைக்கிள் கேட்குது எங்கட பிள்ளைகள். இரண்டரை மைல் நடந்து போய் நடந்து வரோணும். அதுவும் வீட்டில வேலை செய்துபோட்டு ஓட்டமும் நடையுமாத்தான் போவம்.

இப்போ உள்ள பிள்ளைகள் வீட்டில வெள்ளன குளிச்சுப்போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகுதுகள். எப்பவும் நாங்க - இன்றைக்குக்கூட காலையில பேத்திய அனுப்பேக்குள்ள நான் நினைச்சன். பாடசாலை துவங்குவதற்கு முன் பத்து நிமிசம் ஆவது பள்ளிக்கூடத்தில முன்னுக்கு நிக்க வேணும் என்ற ஆசை எனக்கு வெகு நாட்களா இருந்தது.

பள்ளிக்கூடம் துவங்குறதுக்கு பத்து நிமிசத்துக்கு முதலாவது நான் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டும்.

ஆனால் எப்பவும் நாங்கள் போறது பள்ளிக்கூடம் துவங்கி இரண்டு நிமிசம் கழிஞ்ச பிறகு. ஓடோடெண்டு ஓடினாலும் பிரார்த்தனை துவங்கி விடும்.
பள்ளிக்கூடத் தட்டிக்குக் கீழாழ புத்தகத்தை உள்ளுக்கத் தள்ளிபோட்டு பிராத்தனையில நிண்டுட்டு வாற மாதிரி போவம்.

அப்படித்தான் வகுப்புக்குப் போயிருக்கிறன். நான் பள்ளிக்கூடம் மூன்றரையால வர இந்த மாடு வாலக் கிழப்பிக் கொண்டு ஒடுது. நாலு தறையும் ஓடித் திரியிது அந்த இரண்டு ஏக்கர் காணியையும் ஒரு ஏக்கரையும் தாண்டுது.

அப்ப அப்பு சொல்றேர். 'போகாத பிள்ளை போகாத மாடு தாறுமாறா பாயுது"
என்று.

அப்ப நான் சொன்னன் 'நான் பிடிச்சுத் தாறன்" எண்டு. பின்ன அவர் ஒன்றும் கதைக்கேல்ல. நான் மாட்டையே பார்க்கேல்ல. வாளி எடுத்துக்கொண்டு கிணத்தடிக்குப் போனன். அவர் ஓடிக் களைச்சு நிண்டவர் தானே வாளிய கண்டவுடன தண்ணிக்கு வந்தேர்.

வழக்கமா நான்தானே தண்ணி வைக்கிறனான். தண்ணிய அள்ளி வைச்சன் குடிச்சுது. அப்படியே எட்டி நாணயக் கயித்தில பிடிச்சன். கட்டிப்போட்டன்.

அப்பு சொன்னேர் 'நான் அவளத்தாண்டி என்ர பிள்ளையெண்டு இருக்கிறன் அவள் தான் நாளைக்கு எண்ட பெயர் சொல்லப்போறவள்" எண்டேர்

அம்மாவுக்கு இண்டைக்கு அவற்றப் பெயர்தான் சொல்றன்.

அப்ப அம்மா என்ன சொன்னா எண்டு தெரியுமா "பொம்பிளப்பிள்ளை சொல்லாதப்பா அது ஒருத்தனுக்குப் பின்னால போறது." என்று சொன்னா.

இப்படித்தான் எங்கட கால மாற்றமும் சூழலும். பொம்பிளப்பிளையள் கல்யாணம் செய்தா புருசன்ர பெயரத்தான் சொல்லுவினம். இன்றைக்கு நான் அப்புட பெயரைத்தான் சொல்லுவன். இண்டைக்கு இந்த வளர்ச்சிக்கு அடிநாதமா நின்றவர் அவர் தான்.

அந்தக் காலப்பகுதிலேயே ஒரு விடிவுப்போக்கத் தந்து வளர்த்தவர் என்ற முறையில நான் வந்து அதைச் சொல்லுவன். அண்டைக்குத்தான் அவர் என்னை பாராட்டினது. வேற விஷயங்களுக்குப் பாராட்ட மாட்டேர்.

ஒருக்கா வயல் கிணத்துக்குள்ள ஒரு பிள்ளை விழுந்திற்று. எனக்கு நீச்சல் தெரியும். ஆனால் விழுந்த பிள்ளைய எப்படி காப்பாத்துவது என்று தெரியாது. சில வேளை எங்களையும் சேர்த்து இழுத்துப் போடுவினம்தானே.

அப்ப நான் வயல் கிணத்துக்குள்ள குதிக்க எண்டு முயற்சி பண்ணிப் போட்டும் பிறகு நான் ஏனோ ஒரு நினைவில என்ன செய்தனான் எண்டு சொன்னா ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த தும்பியை இறக்கிவிட்டன்.
இறக்கின உடனே அந்தப் பிள்ளை அந்தத் தும்பியப் பிடிச்சிட்டு. தும்பிய பிடிச்ச பிறகுதான் நான் சத்தம் வைச்சு மற்ற ஆக்களைக் கூப்பிட்டன். அந்தப் பிள்ளையைக் காப்பாற்றிற்றம்.

காப்பாற்றினதுக்குமே அந்த இரண்டாவது பாராட்டை எனக்கு அப்பு தாறேர்.
பாராட்டை தார அண்டைக்கும் சொல்றேர் 'அவள் மூளையைப் பாவிச்ச படியால் குதிக்காமல் விட்டால், குதிச்சிருந்தா இரண்டு பேரும் செத்திருப்பினம்". அதுக்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரியும் தண்ணிக்குள்ள விழுந்தவள குதிச்சுக் காப்பாற்றக் கூடாது எண்டு.

குதிச்சிருப்பன் அந்த நேரம் உயிருக்குப் பயம் எனக்கு. நான் விழுந்து செத்தாலும் எண்டுதான் தும்பிய விட்டனான். அவர் அதை நினைக்கேல்ல. ஏனெண்டா சமயோசிதமான ஒரு சிந்தனையை போட்டன் என்றதைத்தான் அவர் நினைத்தார்.

இப்படி என்ர வாழ்க்கையில நினைச்சு எதிர்பார்த்திருந்து அந்தச் சம்பவங்கள் எல்லாம் கரைந்தே போயிற்றுது.

இனி இல்லை என்று நினைச்சுக்கொண்டிருந்தனான். 11 வயது 12 வயது கல்விய முடிச்சிட்டன். 12 வயது ஆரம்பத்திலேயே ஒன்பதாவது வகுப்பு.
ஏனென்றால் அப்ப கதைக்கத் தெரிஞ்சா பள்ளிககூடத்திற்கு போகாமல் விடலாம்.

இப்ப மாதிரி அப்ப வயது கட்டுப்பாடில்லை. நாலு வயசில கதைக்கத் தொடங்கிட்டன். நாலு வயசில அரிவரி. ஐஞ்சு வயசில முதலாம் ஆண்டு.
இப்டியே முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று ஏறிவந்தேன். ஒன்பதாம் ஆண்டு நான் படிக்கேக்க எனக்கு 12 வயது. அடுத்த வருசம் நான் ஓ-எல் எடுக்கவேணும் எண்டேக்க எங்கட ஆசிரியர் அதைத்தான் சொன்னவா.
'நீ பத்தாம் ஆண்டு படித்தாக் கூட உன்னை விடேலாது. வயது கட்டுப்பாடு வந்திட்டு. 14 வயசு வராமல் பரீட்ச எழுதமுடியாது என்று அவா சொல்லிட்டா. நீ படிச்சுக்கொண்டு வரலாம். அது பிரச்சனை இல்லை. இந்த வயசில என்னெண்டு இந்த வகுப்புக்கு வந்தாய்". எண்ட கேள்வியும் அவா போடுவா.

அப்ப எங்களுக்கு ஒண்டும் விளக்கம் இல்லாத காலம் நாங்கள் கதைக்க மாட்டம். ஆனால் ஒன்பதாம் வகுப்போடையே என்னுடைய கல்வி முடிஞ்சுது. பிறகு நான் வெள்ளைக் கவுண் ஒண்டு போட்டுக் கொண்டு ஒரு சிவப்பு ரை ஒண்டு கட்டிக்கொண்டு காலுக்கு வெள்ளைச் சப்பாத்துப் போட்டுக் கொண்டு பெரிய நடப்பா அந்த ரோட்டால நடந்து போகோணும் எண்டு சரியான ஆசை. அந்த ஆசைக்குக் கூட ஒரு கவுண் போட்டதில்லை.

ஏனெண்டா அப்ப சீருடை வழக்கில இருக்கேல்ல. எங்கட அம்மா பொம்பிளப்பிளைக்கு கண்டக்கால் தெரியக் கூடாது எண்டு சொல்லி முழுப் பாவடை தைச்சு தான் பாடசாலைக்கு அனுப்புவா.

அப்ப என்னுடைய அந்த வகுப்பு எட்டாம் ஆண்டு முடிஞ்சு ஒன்பதாம் ஆண்டு வந்து பத்தாம் ஆண்டுக்குப் போகும் போது வேற பாடசாலைக்குப் போகோணும்.

அந்தப் பாடசாலை சீருடை நடைமுறைக்க இருந்தது. அப்ப நான் அந்தப் பாடசாலைக்கும் போகும் போது வெள்ளைக் கவுண் போட்டுக் கொண்டு போவேனே எண்டு ஆசை ஆசையாக் காத்துக் கொண்டிருந்தனான்.

ஆனால் அது ஒரு நாளும் நடக்கேல்ல. அதும் கனவோடையே போயிற்று.
இண்டைக்குக் கூட எனக்கு அந்த தாக்கம் இருக்குது. நான் ஒரு வெள்ளைக் கவுண் போட்டுக் கொண்டு ஒரு பள்ளிக்கூடம் போகவில்லையே என்ற தாக்கம் எனக்கு இருக்கு.

அதுக்குப்பிறகு எதிர்பாராத விதமாக 14 வயசிலேயே எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. நிச்சயப் படுத்தப் பட்டது என்றும் சொல்லேலாது.
எங்கட அப்பு நல்லா குடி பழகிட்டேர். அப்புவினுடைய நண்பர்களும் அப்புவும் சேர்ந்து குடிச்சார்கள். எங்கட அக்காவை திருமணம் செய்தவரும் இருந்து குடிச்சார்.

அவருடைய நண்பர்களும் குடிச்சார்கள். எல்லாரும் கூடிக் குடிச்சு சாராயப் போத்தலோட ஒரு தீர்மானம் எடுத்தார்கள். தீர்மானம் ஆகியது அந்த கல்யாண வீடு. ஒரு நத்தார் தினத்துக்கு முதல் தீர்மானம் செய்திச்சினம். இந்தப் பொம்பிளைய அவருக்குக் கட்டிக் கொடுக்கிறது என்று.

அவர் யார்? எவர்? என்ற விசாரனை ஒன்றும் இல்லை. அந்த முடிவை எடுத்ததுக்குப் பிறகு பொங்கலுக்கு மறுநாள் திருமணம் முடிஞ்சுது.

நத்தார் 25ம் திகதி.
4ம் திகதி பேச்சு.
பொம்பிளை பார்த்தது 16ம் திகதி.
17 திகதி கல்யாணம் வீடு.

அந்த திருமணம் நடந்ததுக்குப் பிறகு ஏறக் குறைய 14 வருடஙகள் அந்நியாச வாசம் எண்டு சொல்லோணும். அந்தப் 14 வருடங்களின் இடைக்குள்ள என்னுடைய குடும்ப நிலையினுடைய மிக மோசமான கட்டங்களை எல்லாம் நான் சந்திச்சன்.

என்னுடைய பகையாளிக்குக்கூட அந்தத் துயரங்கள் வரக்கூடாது. எனக்கொரு பகையாளி எண்டு இப்ப ஒருத்தரும் இல்லை சுட்டிக் காட்டக் கூடியதாக இல்லையென்று சொன்னாலும் கூட அந்த மொழிக்காக நான் சொல்றன். என்னுடைய எதிரிக்குக்கூட அந்த நிலை வரக்கூடாது என்று நான் நினைக்கிற மாதிரியான மோசமான துயரங்களை, மோசமான ஒடுக்கு முறைகளை,மோசமான சித்திரவதைகளை எல்லாம் நான் அதுக்குள்ளே அனுபவிச்சு ஆறு குழந்தைகளையும் பெற்றன்.

ஆறு குழந்தைகளும் பிறந்து இந்த இடைக்காலப் பகுதியில் என்னுடைய
மூன்றாவது குழந்தை பிறந்த காலப் பகுதியில ஒரு பண்டிதரைச் சந்தித்தனான். அவர் இறந்துட்டார். அந்தப் பண்டிதர் என்னுடைய தமிழில் அவருக்கு ஆவல். தமிழ் செய்யுள்களை நான் விளங்கப் படுத்திற விதம்.
அப்ப அவர் முதல்ல சொல்லுவேர் 'அவள் தமிழை உச்சரிக்கிற விதம் அவள் பேசுற விதம் அவளிட்ட ஒரு நளினம் இருக்கெண்டு".

அந்த நேரம் என்னுடைய பாடசாலை ஆசிரியர் என்னுடைய கட்டுரைகளை வாங்கி பாராட்டினார். ஒரு கட்டுரை எழுதினேன் எண்டா அந்தக் கட்டுரையை அவர் எல்லா ஆசிரியர்களுக்கும் அனுப்புவார். 'என்னுடைய வகுப்பு மாணவி ஒருகட்டுரை எழுதியிருக்கிறா பாருங்கோ" எண்டு சொல்லி.

அந்தக் கட்டுரை எழுதுற ஆற்றல் எல்லாம் எனக்கு இந்தக் கல்கி, குமுதம் இநதப் புத்தகங்களால் வந்தது. அப்ப எட்டாம் ஆண்டில நான் எழுதுற கட்டுரை எல்லாம் எல்லா வகுப்புகளுக்கும் போய் வரும்.
கட்டுரைப் போட்டியில பரிசு எடுத்திருக்கிறன். பேச்சுப் போட்டியில பரிசு எடுத்திருக்கிறன். ஓட்டப் போட்டிகளில பரிசு எடுத்திருக்கிறன்.

அந்த நேரம் நாடகப் போட்டிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கேக்க ஒரு நாடகத்தில நடிகர்களைச் சேர்த்து இருந்திச்சினம். அதில இயல்பாக தலைமை ஆசிரியருடைய மகள் இன்னொரு ஆசிரியருடைய மகன் அப்படி அந்தக் கொஞ்சம் கண்ணுக்கு பூசனனை உள்ள ஆக்களை பிடிச்சு நாடகத்தில சேர்த்திருந்தார்கள்.

நாடகத்தைப் பழக்கும் போது நாங்கள் வேடிக்கை பார்ப்போம். சுத்தி நிண்டு அப்ப அந்த ஆசிரியர் சொல்லுவா 'கனபேர் நிக்க நடிச்சா கூச்சம் இருக்காது மேடையில செய்யேக்க" எண்டு கூப்பிட்டு எல்லாரையும் விட்டிற்றுதான் நடிக்கப் பழக்கிறது.

அப்படி நடிச்சுக் கொண்டிருக்கேக்குள்ள ஒரு பாத்திரம் ஒரு அம்மா பாத்திரம் அந்தப் பாத்திரம் நடித்த விதம் ஆசிரியருக்கு திருப்தி தரேல்ல. திருப்பி திருப்பி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்க சரிவரேல்ல. நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனான் உள்ளுக்குள்ள போய் இப்படிச் செய்யலாமே எண்டு சொல்லி இந்த விருந்தினர்கள் வரேக்க எப்படி வரவேக்கிறது எண்டுறதை 'ஆ வாங்கோ இருங்கோ எப்படிச் சுகம்" என்ற ஒன்று மட்டும் தான் கேட்டன்.

அந்த ஆசிரியருக்குப் அது பிடிச்சுப் போட்டு. சரியெண்டு அந்தப் பாத்திரத்தை மாத்தி 'நீயே செய்"என்று என்னைக் கூப்பிட்டு விட்டார். என்னை கூப்பிட்டு விட்டா அதே சமயம் அந்த பாடசாலையில் நடக்கிற நிகழ்ச்சி அத்தனைக்கும் நான் பின்னணி பாடுவன்.

ஆனால் முன்னணிக்கு வரேலாது. ஏனென்றால் கறுப்பு. அவே கறுப்பெண்டு ஒதுக்கிச்சினமோ என்னமோ தெரியாது நான் கருதுறது அப்படித்தான் என்னுக்குள்ள.

எல்லாப் பிள்ளைகளும் வடிவான பிள்ளைகளா இருக்கு. நான் கறுப்பு ஆனபடியா நான் பின்னுக்கு இருந்து பாடுவன். இந்தச் சம்பவம் வந்து எங்கட அப்புவுக்குக் கொஞ்சம் பிடிக்காது. அப்பு சொல்லுவார் 'அதென்ன பின்னணி பாடுறது முன்னுக்கு விடாம" எண்டு.

அப்ப நான் நாடகத்தில சேர்ந்திருக்கிறன் எண்டு அவருக்கு நல்ல சந்தோசம் ஆனால் அந்த நாடகத்துக்கான உடையை அது இதெல்லாம் வேண்டிக் கொடுக்க மாட்டினம் வசதி இல்லை.

அந்த ஆசிரியர் தன்னுடைய உடைகளைத்தான் தந்து என்னை நடிக்கும் படி சொல்லி உற்சாகப் படுத்தினார். அந்த நாடகமும் பரிசு பெற்ற நாடகம் தான்.
அதே நேரம் இன்னுமொரு நாடகத்திலையும் என்னைச் சேர்த்திருச்சினம். சேர்த்துப் போட்டு பிறகு என்னை எடுத்துப் போட்டினம். வேறையொரு ஆளைப் போட்டு செய்திச்சினம்.

அப்ப இந்த நாடகத்தை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை வந்து அந்த மாணவியைக் கூப்பிட்டக் கேட்கிறா 'முதல் தமயந்திய போட்டிருந்தததல்லோ அந்த நாடகத்தில நாங்கள் நாடகத்தை வெள்ளண்ண பழக்கிப் போட்டம்தானே ஏன் ஆவாவ விட்டுப்போட்டு வேற ஆளமாத்தினது" என்று சொல்லி

அப்ப அதில இருந்த பிள்ளை சொல்லிச்சிது 'அவா வடிவில்லையாம்".

அந்த ஆசிரியர் அங்க கதைச்சத அந்தப் பிள்ளை அதுக்குச் சொல்லக் கூடாது என்றது தெரியேல்ல அதிலேயே வைச்சு சொல்லுது. 'அவா வடிவில்லையாம் அதான் வேற ஆள மாத்தினதாம்".

அப்ப அந்த ஆசிரியர் வந்து அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு 'நீ இப்படிச் சொல்லக்கூடாது சொல்லியிருந்தாலும் நீ இதில வைச்சுச் சொல்லக் கூடாது அவாவுக்கு" ஆனால் எனக்கு தைக்கேல்ல. ஏனென்றால் இதெல்லாம் சின்னல்ல இருந்து கேட்டுக்கொண்டு வாறதால தைக்கேல்ல.

ஆனால் அந்த ஆசிரியர் கனக்க மனம் வருத்தினார். இந்தக் கதையை எனக்கு முன்னால வந்து சொல்லிப் போட்டாளே எண்டு. அப்ப இந்த உறைப்புகள் எல்லாம் எனக்கு வரக்கூடிய காலம் எப்ப வந்தது என்று சொன்னால் திருமணத்திற்குப் பிறகுதான்.

தமிழ் கட்டுரையை கொண்டு வந்து அவரவர் எழுதிய கட்டுரையை வாசிங்கோ எண்டேக்குள்ள நான் கட்டுரையை வாசிக்க இந்த வாசிப்பைகக் கேட்டுப் போட்டு அந்த தலைமை ஆசிரியர் பெரிய வாத்தியார் அவர் சொன்னார்" 'நீ ஒரு காலத்தில வானொலி அறிவிப்பாளரா வரவேண்டிய தகுதி இருக்கு. உனக்கு அவ்வளவு செழுமையான வாசிப்பெண்டு."

செய்யுள் படிச்சாலும் அப்படித்தான். செய்யுளும் அந்தமாதிரித்தான் வாசிப்பன்.
அந்த மாதிரித்தான் கருத்துச் சொல்லுவன். படிக்காட்டியும் பாஸ்பண்ணிடுவன். நல்ல புள்ளி எடுப்பன். அவர் சொன்னார் "நீ ஒரு வானொலி அறிவிப்பாளரா வரவேண்டிய ஒரு தகுதி இருக்கு உனக்கு"எண்டு சொல்லி.

அப்ப வானொலி அங்க அப்ப இலங்கை வானொலிதானே. இதையெல்லாம் யார் நினைச்சது எங்களுக்கு ஒரு வானொலி வரப்போகுது நாங்களும் அதுக்க நிப்பம் எண்டோ அல்லது நான் இருந்த நிலைக்க நான் இப்படி வருவேன் எண்டோ எதிர்ப்பார்க்கேல்லத்தானே.

அப்ப நான் சொல்லும் அந்தக் கனவு எனக்குள்ள. நல்லா பாடிக் கொண்டிருந்தன். சும்மா சினிமாப் பாடல்கள் தான். பாடுறதைக் கேட்டிற்று ஒரு நுளம்பெண்ணை அடிக்க வந்த ஒரு உத்தியோகத்தர் நான் பிள்ளை தாலாட்டுறதுக்குப் பாடிக் கொண்டிருந்த பாட்டைக் கேட்டிற்றுச் சொன்னார் 'நீர் நல்லா பாடுறீர் ஒருக்காப் பாடும் பாப்பம் நான் பாட்டுக் கேட்க"எண்டு சொல்லி. அப்ப நான் 'சமரசம் உலாவும் இடமே" எண்ட பாட்டு அதைத்தான் பாடினன்.

இப்பக் கொஞ்சம் குரல் உரலாப் போய்ச்சுது. அந்தப் பாட்டைக் கேட்டிற்று சொன்னர் 'சூ! என்ன மாதிரி பாடுது இந்தப் பிள்ளை நீ சங்கீதம் படிக்கிறீரா?"
'இல்லை" எங்கட வவுனியா மாவட்டத்துக்கே சங்கீதப் பாடம் இல்லை. ஆக மகாவித்தியாலத்தில ஒரு மாஸ்ரர் இருப்பார் இந்தத் தமிழ் தினப் போட்டி மாதிரி எதும் போட்டி வந்தால் அந்த ஒரு ஆசிரியர் எல்லாப் பாடசாலைக்கும் நிகழ்ச்சி நடத்துவார் போய். ச ரி க ம ப த நி ஸ ஸ நி த ப ம க ரி ஸ என்ற அந்த சுரங்களைக் கூட நாங்கள் எங்கையோ படிச்சப் பிள்ளைகளிட்டக் கேட்டுப் பார்த்ததுதான் ஒளிய அதில சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு வராது.

சினிமாப் பாட்டக் கேட்டிங்களண்டா 'வராத மழைதனிலே வரு ஜோரான கௌதாரி இரண்டு" இந்தப் பாட்டு ஒரு பிரபலமான விருப்பமான பாட்டு 'பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே" தோக்கு தூக்கில வந்த ஒரு பழைய பாட்டு இந்தப் பாட்டப் படிக்கச் சொல்லிக் கேக்கிறாங்கள் ஆம்பிளையள். எனக்கு விவரம் தெரியாது நான் நல்லாப் பாடுவன் 'ஒய்யாரக் கொண்டையிலே தாளம் பூவா அதனுள்ளே இருக்கிறது ஈரும் பேனாம். இளமையா உணர்ந்தவனே புத்திமானாம் மேனி மினுக்கும் பெண்டுகள பார்த்திடானா பெண்களை நம்பாதே கண்களே" எண்டு அப்படியே போகும் அந்த வரி நாங்களே பாடுவோம்.

இந்தப் பாட்டக் கேக்கறதுக்காகக் கொஞ்சம் ரசிகர் கூட்டம். கிராம அடிப்படையிலேயே, மற்றும் கடிதம் எழுதுறது. எல்லா வீட்டுக்கும் நாங்க தான் கடிதம் கொடுக்கோணும். இப்ப சொன்னாலே நெஞ்சு விறைக்குது.
ஆசிரியர் காப்பாற்றினது ஐந்தாம் ஆண்டு படிக்கேக்குள்ள கடிதம் எழுதினா '.....வந்திட்டுப் போகட்டாம்" அங்கப் போனாச் சொல்லுவேர் 'ஒரு எம்பலப்பும், கடிதாசியும் வைச்சுக் கொண்டு இன்றும் .....மகன் அறிவது" என்ற ஒரு கடிதம்
அவர் சொல்லச் சொல்ல நான் எழுதி அதைக் கொடுக்கிறது.

எங்களுடைய அப்பா சொன்னார் ஐஞ்சாம் வகுப்பில 'பிள்ளை நீ இப்ப காகிதம் எல்லாம் எழுதுவாய் தானே, பிள்ளைக்கு எழுதப் படிக்க எல்லாம் தெரியும்தானே, சீனா அண்ணேக்கெல்லாம் எழுதிக் கொடுத்தனியாம், இனிக் காணும் அம்மா பிள்ளை நில்லுங்கோ குரங்குக் காவலுக்கு ஆளில்லை. குரங்கு காவலுக்குப் போகோணும். ஆனபடியா படிச்சது காணும். பிள்ளைக்கு எனி எழுதப் படிக்கத் தெரியும் தானே. இனி பிள்ளை கதைப் புத்தகம் எல்லாம் படிக்கும் வயதுதானே.

எண்டோன்ன நான் ஓம் அப்பு. அப்பு சொன்னாச் சரி. சாகும் வரைக்கும் அப்பு போன வருசம் தான் செத்தவர். சாகும் வரைக்கும் அப்பு சொன்னா அந்த கோட்டத் தாண்டமாட்டன் நான். சரி எண்டுட்டன். நிண்டாச்சு பள்ளிக்கூடாத்தாலையும் நிண்டாச்சு. நிண்ட பிறகு மாஸ்ரர் ஓடிவந்துட்டேர். வீட்ட வந்து கேட்டார் 'ஏன் இவள் பள்ளிக்கு வரேல்ல" எண்டு

அப்பு சொன்னேர் 'குரங்குக் காவலுக்கு ஆளில்லை மாஸ்ரர், பள்ளிக்கூடத்துக்கு விட்டு நாங்க என்ன செய்றது மாஸ்ரர்,நாங்கள் ஏழைக் குடும்பம் அதைச் செய்து முன்னேறினால் தானே - நாங்களும் சாப்பாட்டுக்கு விளைச்ச பயிர குரங்குக்கு விட்டிற்று என்ன செய்றது. பிள்ளைய குரங்குக்குக் காவல் விட்டிருக்கு"

'பேமனிசா குரங்குக் காவல் முடிய அவள அனுப்பு. பழுதாக்கிப் போடாத அவள் மாவட்டப் பரிசு வாங்கினவள். மாகாணப் பரிசு வாங்கினவள். நீ இப்படி விசர் கதை பறையாத அனுப்பிப்போடு" என்று.

அது போலதான் இந்த நுளம்பண்ண அடிக்க வந்த அந்த அதிகாரி தன்ர வேலையா விட்டிற்று வந்து அப்புவோட கதைக்கிறார்

'இந்தப் பிள்ளைய எனக்குத் தாருங்கோ நான் கொண்டே சங்கீதம் பழக்கிறன்" அவர் அருணா செல்லத்துரையினுடைய மாமனார்.. அவர் வந்து கேட்கிறார்.

அப்பு சொல்லிப்போட்டேர் 'அவள விட்டிற்று நான் ஐஞ்சு நிமிசம் இருக்க மாட்டன்" பாடசாலையில சுற்றுலா போங்கள் சனம் பிள்ளைகள் எல்லாம் போங்கள் ஒரு இரண்டு ரூபா காசு தந்து என்னையும் அனுப்பு அப்பு எண்டா அது விடாது

'உன்னை விட்டிற்று நான் என்னெண்டு இருக்கிறது" எண்டு. ஒரு காலத்திலும் நான் ஒரு சுற்றுலாவுக்கும் போனதில்லை. எங்கட பாடசாலையில இருந்து அந்த பாடசாலை வளவைத்தாண்டிக் கொஞ்சம் தள்ளி அங்கால விளையாட்டுப் போட்டி எண்டா கூட அனுப்பமாட்டேர்.

யார நம்பி பிள்ளைய விடலாம் விடேலாது. அது நான் தான் வரவேணும். வாத்தியார நான் என்னெண்டு நம்பிறது. எண்டு எனக்குச் சொல்லி சமாளிச்சுப் போடுவார். இப்படியே என்ர வாழ்வு இருளுக்க இருந்தது.

தொடரும்

நேர்கண்டவர்: தமிழன்பன் (ஐவான்)
Quelle - Erimalai

Sunday, June 04, 2006

Sivarathai Loganathan

Sivarathai Loganathan errang Technik-Sieg bei "Jugend forscht"

Über den Technik-Sieg freut sich Sivarathai Loganathan (19). Die Rheinland-Pfälzerin präsentierte ein selbst konstruiertes, kostengünstiges Photometer zur Darstellung chemischer Reaktionen und zur Messung von Konzentrationen.

Die Bundessieger des 41. Finales von Deutschlands bekanntestem Nachwuchswettbewerb stehen fest. In Anwesenheit von Andreas Storm, Staatssekretär im Bundesministerium für Bildung und Forschung, wurden am 21. Mai 2006 die besten Jungforscher in einer Feierstunde in Freiburg ausgezeichnet. Veranstalter des diesjährigen Bundeswettbewerbs waren die Stiftung Jugend forscht e. V. und die Sick AG aus Waldkirch.

Im Bereich „Technik“ hatte die in Rheinland-Pfalz lebende Sivarathai Loganathan (19), Schülerin am Bertha-von-Suttner-Gymnasium in Andernach, die Nase vorn. Mit dem von ihr entwickelten Photometer gewann sie den Technik-Preis von „Jugend forscht“. In der Laudatio wurde sie mit folgenden Worten gelobt: „Diese junge Frau zeigt Wissen, Fähigkeiten und Eigenschaften, die auf ein herausragendes Talent hinweisen.“

Doch wie kam es, dass Sivarathai Loganathan sich mit der Entwicklung und Bau eines Photometers überhaupt beschäftigte? Angeregt durch den Chemieunterricht hat sie ein Photometer zur Darstellung chemischer Reaktionen und zur Messung von Konzentrationen entwickelt. Aufgrund ihrer Idee mit einer Dreifarb-LED zu arbeiten, kann sie die Absorption dreier Wellenlängen gleichzeitig messen. Das konnten herkömmliche Photometer bisher nicht. Da chemische Reaktionen meistens mit sehr hoher Geschwindigkeit ablaufen, hat sie das Photometer um eine serielle Schnittstelle erweitert und PC-Softwareprogramme entwickelt, mit denen pro Sekunde 10 000 Messungen durchgeführt, erfasst, ausgewertet und dargestellt werden können. Sivarathai Loganathan hat zudem einen Muster-Baukasten angefertigt, der es Schulen erlaubt, ihre Erfindung kostengünstig nachzubauen.

Quelle - http://www.brikada.de/cgi-bin/con.cgi