Wednesday, May 11, 2005

சம்பூர்ணம்மாள்(பூரணி)

தன்னுடன் பல்லாங்குழி ஆடிய தன் வயது தோழி திடீரென்று ஒரு நாள் வந்து ‘‘இனிமேல் நீ தான் என் சித்தி... என் அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக உன்னைத்தான் கல்யாணம் பண்ணப் போறாங்களாம்!’’ என்று சொன்னால் ஒரு பன்னிரண்டு வயது சிறுமிக்கு எப்படி இருக்கும்?

சம்பூரணியும் அதிர்ந்துதான் போனாள்.

‘‘முடியாது... நான் நாப்பது வயசுள்ள ஒருத்தரைக் கட்டிக்க மாட்டேன்!’’ என்று அழுதிருக்கிறாள். அவளுடைய தந்தையால் அதிகம் பணம் செலவழித்து, நல்ல இடத்தில், இளைஞனாக மாப்பிள்ளை பார்த்து தன் மகளுக்குத் திருமணம் செய்து தர முடியவில்லை.

ஆனால், அந்தப் பால் வடியும் சிறுமியின் அழுகையும், அந்த மனஉறுதியும் அவளுடைய அப்பாவை உலுக்கியெடுக்க, நல்ல வேளையாக அந்தத் திருமணத்தை நிறுத்தி தன் மகளுக்கு நிம்மதி தந்தார் அந்தத் தந்தை!...

இது நடந்தது கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்பு... அந்தச் சிறுமிதான் இன்று கவிஞராகவும், எழுத்தாளராகவும் உருவாகி, தன்னுடைய தொண்ணூறு வயதில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த பூரணி என்று அறியப்படும் சம்பூர்ணம்மாள்.

அப்பாவின் தமிழ்ப் புலமை, மகள் சம்பூரணியையும் தொற்றிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை. அதனால்தான் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த சம்பூர்ணம்மாளுக்கு மரபுக் கவிதைகள் எழுதும் அளவிற்குப் புலமை வந்திருக்கிறது.

பதினைந்து வயதில் வேறொரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொண்டு புகுந்தவீடு சென்ற சம்பூரணம்மாளுக்கு அந்த வீட்டின் வித்தியாசமான சூழலே முதன் முதலில் பாட்டெழுத வைத்ததாம்..!

‘‘புகுந்த வீடு ஒரு வியாபாரக் குடும்பம். ஆண்கள் காலையில் கடைக்குச் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார்கள். என் ஓர்ப்படிகள் வீட்டு வேலை, பகல் தூக்கம், அக்கம்பக்கத்தாரோடு அரட்டை என்று பொழுதைக் கழித்தார்கள். நான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் சென்று நான்கு சுவர்களையும் பார்த்துக் கொண்டு ஜடம் போல வீற்றிருப்பது ரொம்பத் துயரமாக இருந்தது.

அப்போதுதான் பாட்டெழுதிப் பார்க்கலாமே என்ற எண்ணம் உதித்தது. நான் பாட்டின் மூலம் என் மன உளைச்சலையும், வேதனையையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. என் மனதை ஈர்த்த நல்ல விஷயங்களைப் பாட்டாக்கினேன். தடங்கலின்றி வார்த்தைகள் வெளிப்பட்டு, பிசிர் இல்லாத மரபுக் கவிதைகளாக எழுத ஆரம்பித்தேன்’’ என்கிறார் சம்பூரணம்மாள்.

இவருடைய ஆர்வத்தைப் பார்த்த கணவர், நூலகத்திலிருந்து பல அரிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்து அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறார்.

எதேச்சையாக இவருடைய கவிதைகளைப் படித்த இவருடைய அண்ணன், தன்னுடைய மேடை நாடகங்களுக்கும் சம்பூரணம்மாளைப் பாட்டெழுத வைத்திருக்கிறார். அந்தப் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதன்பிறகு சம்பூர்ணம்மாளுக்கு காங்கிரஸின் மீதும் காந்தியக் கொள்கைகளிலும் ஈடுபாடு அதிகம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் குடும்பமும், குழந்தைகளும் இருந்ததால் வீதியில் இறங்கி சுதந்திரத்துக்காகப் போராட முடியாத சம்பூர்ணம்மாள், தனது கருத்துக்களைப் பாட்டுகளாக இயற்றி, ஆண்களும் பெண்களும் கூடும் திருமணங்களின்போது பாட வைத்தார். வெறும் வாய் மொழியாக, அச்சில் ஏறாத நிலையிலிருந்த அந்தப் பாடல்கள் தமிழகம் முழுவதும் திருமணங்களின்போது அப்போதெல்லாம் பாடப்பட்டனவாம். இவை தவிர பல வில்லுப்பாட்டு வசனமும்கூட எழுதிக் கொடுத்திருக்கிறார் சம்பூரணம்மாள்.

பாரத மாதா மாதர் சங்கத்திற்குப் பணம் தேவைப்பட்டபோது இவரே முன்னின்று நாடகம் போட்டு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வசூலித்துக் கொடுத்திருக்கிறார். அந்தக்காலத்தில் இது ஒரு மிகப்பெரிய தொகை.

இதற்கிடையில் தான், தன்னுடைய ஒன்பது குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார் சம்பூர்ணம்மாள். ‘சித்தன்’, ‘பாரத ஜோதி’ போன்ற இதழ்களிலும்கூட இவருடைய கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.

வீட்டு வேலை முடிந்தவுடன் எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பாராம். ஆனால் எழுதியவற்றை தபாலில் அனுப்பவோ, பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்க்கவோ, பிறரின் உதவி தேவைப்பட்டதால் எழுதிய படைப்புகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டு விடுவாராம்.

அவரது படைப்புகள் புத்தகமாக வெளிவந்தது அவருடைய தொண்ணூறாவது வயதில்தான். ‘பூரணி கவிதைகள்’ என்ற பெயர் கொண்ட அற்புதமான கவிதைத் தொகுப்பு அது!

சம்பூர்ணம்மாள் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஒரு சீர்திருத்தவாதியாகவே வாழ்ந்துள்ளார். அவரிடம் இந்தி கற்க வந்த ஒரு விதவைப் பெண்ணுக்குப் பூ வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆசை உண்டாம். அதை அறிந்த சம்பூர்ணம்மாள் தனிமையில் அந்தப் பெண்ணுக்குப் பூச்சூட்டி மகிழ்வித்திருக்கிறார்.

தன்னுடைய மகன் காதலித்த பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் என்ற போதும் பயப்படாமல் திருமணத்தை நடத்திக் காட்டியவர் இவர்.

இன்னொரு விஷயம் தெரியுமா...? சம்பூரணம்மாளின் மகள்தான் கவிஞர் கிருஷாங்கிணி.

‘‘வாழ்க்கையில் எத்தனையோ கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், முடியாது என்ற வார்த்தை அம்மா வாயில் இன்றுவரை வந்ததே கிடையாது. முடிந்தவரை முயற்சி செய்வோம் என்பதுதான் அவரின் கொள்கை’’ என்று அம்மாவை பற்றிப் பெருமிதத்துடன் சொல்கிறார் கிருஷாங்கிணி.

இந்த மன உறுதிதான் அவரை தொண்ணூறு வயதிலும் துணி துவைப்பது, தானே குளித்துக் கொள்வது என்று தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் அளவிற்கு வைத்திருக்கிறது.

சம்பூரணம்மாளின் புத்தகம், இலக்கிய உலகில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அவரின் படைப்புகள் அத்தனையும் அடுத்தடுத்து இன்னும் பலப் புத்தகங்களாக வெளிவர இருக்கின்றன.

மு.வி. நந்தினி
Quelle - Kumutham-sinehithi

Thursday, March 24, 2005

எம்.எஸ். சுப்புலட்சுமி

கர்நாடக இசையுலகின் சகாப்தமாக விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களைக் காலம் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டது. ஆனால் அவரது அமுதக்குரல் இன்றும் என்றும் நம்மிடையே ஒலித்துக் கொண்டிருக்கும். அது காலத்தால் அழிக்க முடியாத அமரக் குரல்.

1916_ஆம் ஆண்டு செப்டம்பர் 16 _ ஆம் நாளன்று மதுரை சண்முக வடிவு அம்மாள் _ ராமசாமிப்பிள்ளை தம்பதியினருக்கு புதல்வியாகத் தோன்றியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி.

இசையுலகினரால் எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப்பட்ட சுப்புலட்சமி அவர்களுக்கு அவரது முதல் குரு அவரது தாயார்தான். தாயார் சண்முகவடிவு ஒரு சிறந்த வீணைக் கலைஞர்.

தொடக்க காலத்தில் சண்முக வடிவு அம்மாளின் வீணைக் கச்சேரிகளில் எம்.எஸ். அவர்கள் உடன் பாடி வந்தார்.

1926 _ ல் வெளியிடப்பட்ட ஒரு எல்.பி. இசைத்தட்டில் ‘மரகத வடிவும் செங்கதிர் வேலும்’ என்னும் பாடலை சண்முகவடிவின் வீணையும் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டும் இணைந்து வெளிவந்தது.

‘தி டுவின் ரிகார்டிங் கம்பெனி’ இதை வெளியிட்டது. எம்.எஸ்.ஸின் முதல் இசைத்தட்டு இதுதான்.

எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு ஒரு மூத்த சகோதரரும், ஒரு இளைய சகோதரியும் இருந்தார்கள்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் அண்ணன் பெயர் மதுரை சக்திவேல் பிள்ளை. இவர் ஒரு மிருதங்கக் கலைஞர், தங்கை பெயர் வடிவாம்பாள். மதுரை சக்திவேல் பிள்ளை தனது தங்கை எம்.எஸ்.ஸின் கச்சேரிகளுக்கு பல முறை மிருதங்கம் வாசித்துள்ளார்.

மிருதங்க ஜாம்பவான் என்று புகழப்பட்ட புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை தொடக்க காலத்தில் எம்.எஸ்.ஸின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம்.எஸ்.ஸின் கச்சேரி நடந்தது. 1935 _ ல் நடைபெற்ற இந்தக் கச்சேரிதான் எம்.எஸ்.ஸின் சங்கீதத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது.

அதே ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் அப்போதைய மைசூர் மகாராஜாவின் அரசவையில் திருக்கோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் மிருதங்கத்துடன் எம்.எஸ். கச்சேரி செய்தார்.

அதுமுதற்கொண்டு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களிலும் எம்.எஸ். கச்சேரிகள் நடந்தன.

அந்நாளைய பிரபல திரைப்பட இயக்குநர் கே. சுப்ரமணியம் எம்.எஸ்.ஸை தனது ‘சேவாசதனம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிண்டியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது எம்.எஸ்.ஸ§க்குத் துணையாக வந்தவர் சதாசிவம்.

1940 _ ல் சதாசிவமும் எம்.எஸ்.ஸ§ம் சென்னையை அடுத்த திருநீர்மலைக் கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

‘சகுந்தலை’ என்னும் திரைப்படத்தில் எம்.எஸ். சகுந்தலையாகவும் ஜி.என். பாலசுப்ரமணியம் துஷ்யந்தனாகவும் நடித்தனர்.

1941 _ ஆம் ஆண்டு ‘சாவித்திரி’ என்ற படத்தில் எம்.எஸ்.ஸை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினர். ஆனால் ஆண் வேடத்தில் நடிக்க எம்.எஸ். மறுத்துவிட்டார். அப்போது எழுத்தாளர் கல்கி ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறியிருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப் பத்திரிகை தொடங்க விரும்பினார்கள். ஆனால் அதற்கு கைவசம் பணம் இல்லை. அதனால் எம்.எஸ். நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு, அதற்குரிய சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால், அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை தொடங்கலாம் என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொன்னார். அதற்காகவே எம்.எஸ். நாரதர் வேடத்தில் சாவித்திரி படத்தில் நடித்துக் கொடுத்தார். அதில் எம்.எஸ்.ஸ§க்குக் கொடுக்கப்பட்ட ஊதியத் தொகையில் தொடங்கப்பட்டதுதான் ‘கல்கி’ வார இதழ்.

ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், அறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப்பட்ட தமிழிசை இயக்கத்திற்கு பக்கபலமாக நின்றவர் எம்.எஸ். அவர்கள்.

மகாகவி பாரதி, சுத்தானந்த பாரதி, வள்ளலார், ராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற எண்ணற்ற அருளாளர்களின் தமிழ்ப்பாடல்களை மேடைதோறும் பாடி ரசிகர்கள் மனதில் பதியவைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியையே சாரும்.

சென்னை தமிழிசைச் சங்கம் எம்.எஸ்.ஸ§க்கு ‘இசைப் பேரறிஞர்’ பட்டமளித்துப் போற்றியது.

எம்.எஸ்.ஸின் குரலில் மிகப் பிரபலமடைந்த பாடல்களுள், ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’, ‘குறையன்று மில்லை’ ‘நீ இரங்காய் எனில் புகலேது’, ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’, ‘வாழிய செந்தமிழ்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

எம்.எஸ்.ஸின் இசை ஆசிரியர்கள்

சிறு வயதில் தாயிடம் இசை பயின்ற எம்.எஸ். திருமணத்திற்குப் பிறகு செம்மங்குடி சீனிவாச அய்யரிடம் இசை பயின்றார்.

கடையநல்லூர் வெங்கட்ராமன், டி.பசுபதி, நேதநூரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் கீர்த்தனைகளைப் பயின்றார்.

தோடி ராக ஆலாபனைகளை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசைத் தட்டுகளைக் கேட்டுப் பயின்றாராம்.

முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதி டி.எல்.வெங்கட்ராம அய்யரிடம் பயின்றார்.

பாபநாசம் சிவனும், மைசூர் வாசு தேவாச்சாரும் தாங்கள் இயற்றிய பாடல்களைத் தாங்களே எம்.எஸ்.ஸ§க்குக் கற்றுக் கொடுத்தனர்.

முதல் அரங்கேற்றம்

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளி அரங்கில் சண்முகவடிவு அம்மாள் வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். வாசிப்பை திடீரென்று நிறுத்திவிட்டு, அருகிலிருந்த தனது மகள் 10 வயதுச் சிறுமி சுப்புலட்சுமியை அழைத்து, ‘‘குஞ்சம்மாள், நீ வந்து பாடு’’ என்று மேடைக்கு அழைத்தார்.

எம்.எஸ்.ஸை அவரது குடும்பத்தார் அழைக்கும் பெயர் குஞ்சம்மாள்.

உடனே சிறுமி குஞ்சம்மாள் மேடைக்கு ஓடிச் சென்று, இந்துஸ்தானி மெட்டில் ‘ஆனந்த ஜா’ என்ற மராட்டி ராகப் பாடலை, சிறிதும் சபைக் கூச்சமின்றி பாடினார்.

இன்றைக்கும் அகில இந்திய வானொலியில் காந்தி அஞ்சலிக்கு முன்னால் ஒலிக்கும் ‘வைஷ்ணவ ஜனதோ ‘மற்றும்’ ரகுபதிராகவ ராஜாராம்’ போன்ற, மகாத்மா காந்திக்குப் பிடித்த பாடல்கள் எம்.எஸ்.ஸால் பாடப்பட்டவையே.

ஜவஹர்லால் நேரு எம்.எஸ்.ஸின் கச்சேரியை கேட்டுவிட்டு, பொது மேடையில் அனைவர் முன்பாகவும், ‘‘நான் வெறும் பிரதம மந்திரிதான். எம்.எஸ்.ஸோ இசையுலகின் அரசி!’’ என்று பாராட்டினார்.

எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம்

வெங்கடேச சுப்ரபாதம் திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும்போது பாடப்படும்.

இறைவனைத் துயில் எழுப்பும் இந்தத் தெய்வீகப் பாடலை பிரதிவாதி பயங்கரம் அன்னங்காச்சாரியார் என்னும் வைணவப் பெரியவரின் குரலில்தான் திருப்பதி கோவிலில் ஒலிபரப்பி வந்தனர்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய வெங்கடேச சுப்ரபாதம், பஜகோவிந்தம் என்னும் ஆதிசங்கரரின் சுலோகம், ரங்கபுர விஹாரா என்னும் முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனை ஆகியவற்றை எச்.எம்.வி. நிறுவனம் இசைத்தட்டாக வெளியிட்டபோது அது உலக அளவில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

திருப்பதி தேவஸ்தானம் முதலில் எம்.எஸ்.ஸின் சுப்ரபாதத்தை அங்கீகரிக்காமல் இருந்தது. பிறகு 1975_ல் திருப்பதி தேவஸ்தானம் எம்.எஸ்.பாடிய சுப்ரபாதத்தை ஒலிபரப்ப சம்மதித்தது.

ஆர்.சி.சம்பத்
quelle - Kumutham