THADAI UDAITHTHU THALAI NIMIRNTHA PENNKAL தடை உடைத்து தலை நிமிர்ந்த பெண்கள்
Tuesday, May 25, 2004
Sonia Gandhi
"என் மனபலத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
நான் எதனால் உருவாக்கப் பட்டவள் என்று
அவர்களுக்குத் தெரியவில்லை."
பத்தொன்பது வயதில் பிரிட்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் படிக்க இத்தாலியில் இருந்து சோனியா கிளம்பிய வேளை மிகவும் உன்னதமானதாக இருந்திருக்க வேண்டும். சோனியாவினுடையது ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். அப்பா ஸ்டீஃபனோ மைனோ ஒரு பில்டிங் காண்ட்ராக்டர்.
கேம்ப்ரிட்ஜில் சக மாணவராக இருந்த மாதவராவ் சிந்தியாதான் ராஜீவ் என்ற இளைஞனை சோனியாவுக்கு அங்கு அறிமுகம் செய்து வைத்தார். அது கண்டதும் காதல் என்ற கதை. மூன்று வருடங்கள் சோனியாவும், ராஜீவும் காதலித்தார்கள். சோனியா சொல்கிறார், ‘‘நான் இந்தியப் பிரதமரின் மகனைக் காதலிக்கவில்லை. ராஜீவ் என்ற மனிதன்மேல் காதல் கொண்டேன்.’’
இந்தக் காதலுக்கு இந்திராகாந்தியிடமிருந்து ஆரம்பத்தில் ஆதரவில்லை. ‘‘நாம் எவ்வளவு பெரிய குடும்பம்! ஒரு நடுத்தரக் குடும்பப் பெண்ணையா மணம் புரிவது?’’ என்று வழக்கமான குடும்ப அட்வைஸ்கள். கடைசியில் காதல் வென்றது. 1968_ல் டெல்லியில் சோனியா _ராஜீவ் திருமணம்... பிறகு ராகுல், பிரியங்கா என்ற அழகான குழந்தைகள். ராஜீவ், இந்தியன் ஏர்லைன்ஸில் பைலட்டாக பணியாற்ற... இந்திராவுக்கு உதவியாக வீட்டைக் கவனித்துக் கொண்டார் சோனியா. மேனகா காந்தி கோபித்துக் கொண்டு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய பின்பு இந்திராவுடன் மேலும் நெருக்கமாயிருந்தார் சோனியா.
அதன்பிறகுதான் அந்தப் பெண்மணிக்கு வாழ்வில் புயல்கள் அடிக்க ஆரம்பித்தன. இந்திரா காந்தியின் மரணம் முக்கியமான ஒன்று. பாதுகாவலர்களால் சுடப்பட்ட இந்திராவை ஓடிப்போய் சோனியா தன் மடியில் தாங்க... இந்திராவின் உயிர் பிரிந்தது. வேறு வழியே இல்லாமல் ராஜீவை அரசியலுக்காக சோனியா விட்டுக் கொடுத்தார். ஆனாலும், 89_ல் மக்கள் ராஜீவை வீழ்த்தினார்கள். 91_ல் மீண்டும் ஜெயித்து பிரதமராவார் என்று எல்லோரும் நினைத்தபோது அந்த சம்பவம்... எதற்காக சோனியா பயந்தாரோ அது நடந்தது! சோனியாவைப் பொறுத்தவரை அது உச்சிவானமே இடிந்து தலையில் விழுந்தது போன்ற சம்பவம்.
இத்தாலி மொழி சாயலில் ஆங்கில உச்சரிப்பு... அரைகுறை இந்தி _ இத்துடன் கணவரை இழந்து கண்ணீருடன்இருந்த சோனியாவுக்கு, 1991_ல் தங்கத்தட்டில் பிரதமர் பதவியை வைத்துக் கொடுக்க காங்கிரஸ் தயாராக இருந்தது.
கணவர் இறந்தவுடன் பதவியை ஏற்க அடித்துக்கொண்ட இந்திய பெண்மணிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்தப் பதவியை உதறித் தள்ளும் மனப்பக்குவம் இந்தியாவில் பார்க்க முடியாத கேரக்டர். அது இந்த இத்தாலி மருமகளிடம் இருந்தது. நரசிம்மராவ், பின்பு கேசரி என்று மாபெரும் தோல்வியால் காங்கிரஸ் தடுமாறியபோது கட்சித் தலைமையை ஏற்கச் சொல்லி காங்கிரஸ் கெஞ்சவே.... வழியில்லாமல் ஏற்றார் சோனியா.
அதன்பிறகுதான் இந்த தேசம் ஒரு பெண்மணியை மட்டுமே குறிவைத்து சதா அரசியல் தலைவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தது... கிட்டத்தட்ட எட்டு வருடம்..! ‘‘சோனியா வெளிநாட்டுக்காரர்... அவருக்கு என்ன தெரியும்? அவர் ஒரு கேள்விக்குறி... எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்...’’ என்று ஒலிபெருக்கிகள் இந்திய காற்றில் சோனியாவுக்கு எதிராக விஷம் கக்கின.
அதைவிட சரத்பவார் தனிக்கட்சி ஆரம்பித்தது, சோனியாவை மிகவும் வெறுத்துப் போக செய்தது. இவை எல்லாவற்றையும் உறுதியுடன் எதிர்கொண்டு அவரால் நாடாளுமன்றம் வர முடிந்தது. முக்கியமாக இந்தியைக் கற்றுக்கொண்டு எதிர்கட்சித் தலைவியாக, வாஜ்பாய் போன்ற பழுத்த புலிகளுடன் வாதம் செய்ய முடிந்தது. இதற்கெல்லாம் மிகப் பெரிய வலு வேண்டும்.
இந்த தேர்தல்தான் சோனியாவின் முழு பலத்தையும் உணர்த்தியது. ஒற்றை ஆளாக சோனியா பிரச்சாரம் செய்வதைப் பார்த்தது. அவர் பயணம் செய்தது சுமார் 50,000 கி.மீ.
‘‘இவ்வளவு கஷ்டத்தையும் சோனியா எதற்குப் படுகிறார்? பிரதமர் பதவியில் உட்காரத்தானே? அதிகார ஆசை! அது நடக்கப் போவதில்லை’’ என்று கேலி பேசியது எதிர்த்தரப்பு.
பேட்டி ஒன்றில், ‘‘நான் ஆசைப்பட்டிருந்தால் 1991_ல் பிரதமராக ஆகியிருப்பேன்!’’ என்று சோனியா சொன்னார். ‘‘என்ன திமிர்... பிரதமர் பதவி என்ன அவ்வளவு லேசா?’’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார் பிரமோத் மஹாஜன். இது ஒரு சாம்பிள் மட்டும்தான்.
‘‘ஆனால் ஒரு விஷயம்...’’ என்று ஆரம்பிக்கிறார் ஒரு மூத்த செய்தியாளர். ‘‘1996_ல் ஆட்சி அமைக்க வலுவில்லாத போதும்கூட பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்ட வாஜ்பாய், 2001_ல் தேர்தலில் நிற்க முடியாதபோதும்கூட இரவோடு இரவாக பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா... இவர்களுடன் சோனியாவை வைத்துப் பார்த்தால் சோனியா எவ்வளவோ உச்சத்தில் இருக்கிறார். மக்கள் தீர்ப்பு சோனியாவின் வெளிநாட்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டது. தற்போது பதவியிலிருக்கும் பிரதமர் வாஜ்பாய்... இவ்வளவு நாள் ஏன் வாய்மூடி இருக்கிறார்? சோனியா பிரதமர் ஆகக் கூடாது என்று கூக்குரல் போடும் பா.ஜ.க. தலைவர்களை அவர் கண்டித்திருக்கவேண்டாமா?’’ என்று கேட்கிறார் அவர்.
‘‘இப்படி ஒரு தியாகத்தைச் செய்ய இந்தியப் பெண்களால் முடியாது!’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஒரு புது எம்.பி.!
டெல்லி தால்கோத்ரா ஸ்டேடியத்தில் 1999ல் நடந்த ஒரு கூட்டத்தில் சோனியா பேசியது இது.
‘‘என் மனபலத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள். நான் எதனால் உருவாக்கப் பட்டவள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.’’
உண்மைதான்!
_டெல்லியிலிருந்து என். அசோகன்
nantri - Kumutham
Subscribe to:
Posts (Atom)