Tuesday, July 11, 2006

தமிழ்க்கவி

- நேர்கண்டவர்: தமிழன்பன் (ஐவான்) -

எமது விடுதலைப் போராட்டவரலாற்றில் அதிசயமான வியக்கத்தக்க எத்தனையோ சாதனைகள் நடந்திருக்கின்றன. எங்களுடைய தமிழீழ தேசியத் தலைவர் எங்களுடைய இனத்தை ஒரு சமத்துவமான சமதர்மமுடைய நல்ல பலமான ஒரு இனமாக கட்டி வளர்த்து வருகிறார்.

களங்களையும் புலங்களையும் கண்டு பேனா முனையிலும் துப்பாக்கி முனையிலும் ஏர்முனையிலும் நின்று தன்னை நிலை நிறுத்தி இன்று வரை அயராது உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு உயர்ந்த பெண்மணியைச் சந்திக்கின்றோம்.



தமிழன்பன் (ஐவான்): ஏகப்பட்ட தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி அயராது உழைத்து நிமிர்ந்து நிற்கும் ஒரு உயர்ந்த இலட்சிய வாதியாகவும் ஒரு போராளியாகவும் இருக்கிறியள்.

ஒரு எழுத்தாளராக இருக்கிறியள். எழுத்தாளர் எனும்பொழுது சிறுகதை, நாடகம், வானொலி நாடகம், நாவல், வரலாறு என பல பக்கங்களில் இயங்குவதை நாங்கள் பார்க்கின்றோம். அதை விட ஒரு பாடகியாகவும் இருக்கிறியள்.

கிராமியப் பாடகியாக, கிராமியக் கலைஞராக சிறப்பாக இயங்குகிறியள். ஒரு வீடியோ படப் பிடிப்பாளராக, படத் தொகுப்பாளராக, நெறியாளராக, படத் தயாரிப்பாளராக இயங்குகிறியள்.

புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாக நிகழ்ச்சி எழுத்தாளராக தயாரிப்பாளராக, நெறியாளராக இருக்கிறியள். அந்த வகையில் வானொலி ஊடாகவும் தொலைக்காட்சி ஊடாகவும், எழுத்து இலக்கியங்களின் ஊடாகவும் உங்களுடைய படைப்புக்கள் மக்களைச் சென்றடைந்திருக்கின்றன. அத்தோடு நீங்கள் உங்களை நல்ல ஒரு ஊடகவியலாளருக்குரிய தன்மையை வலுப்படுத்தி வழிகாட்டி வந்திருக்கிறியள். நீங்கள் ஒரு சட்டவாளராக இருக்கிறியள். அவை எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஒரு மாவீரனுடைய தாயார். போராளியினுடைய தாயார். நல்ல விவசாயி. தமிழ், ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளை சரளமாக பேசக்கூடியவர். உங்களுடைய இந்த நீண்ட வரலாற்றில் இன்று நீங்கள் நிற்கும் நிலை வரைக்குமான அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தமிழ்க்கவி: இவ்வளவு நீண்ட பட்டியலுக்குரியவளாக என்னை நான் ஒரு போதும் கருதிக்கொள்ளவில்லை. நீங்கள் சொல்லுவது அத்தனையும் என்னுடைய வாழ்க்கை. நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். இந்தப் போராட்டச் சூழலில் எமது தேசியத் தலைவர் அவர்கள் பிறந்த அந்தக் காலத்தில் நானும் பிறந்தேன்.

அந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அந்தக் காலத்திலே உணர்ந்து கொண்டிருக்கின்றேன். என்கின்ற வகையிலே தான் என்னுடைய செயற்பாடுகளை நான் கூறக் கூடியதாக இருக்கும்.

வாசகர்களோடு நான் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக நீங்கள் சொல்லும் இவ்வளவு பரிமாணங்களையும் எட்டி இருக்கிறேன் என்றால் அதற்கு போராட்டச் சூழல் ஒரு வழிகாலாக இருந்திருக்கும். போராட்டம் என்கிறது வந்து என்னை மட்டுமல்ல இன்றைக்கு தமிழீழ மண்ணில் இதை விட வியத்தகு சாதனைகளை நிறையவே செய்திருக்கு. அந்த வகையிலே போராட்டம் வார்த்தெடுத்த ஒரு வார்ப்பாக நான் அமைந்திருக்கிறேன்.

நல்ல ஒரு தலைவருக்குக் கீழ் எங்களை அணி திரட்டிக் கொண்டதன் மூலமாகத்தான் எங்களுடைய இத்தனை வெளிப்பாடுகளும் நீங்கள் சொல்லுகின்ற இத்தனை பரிமாணங்களும் வாய்த்திருக்கிறது. சாதாரணமாக எல்லாப் பெண்களுக்குள்ளும் இருக்கின்ற ஒரு ஆற்றல் தான். அதை நாங்கள் வெளிப் படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இந்த போராட்டம், இந்த இயக்கம், இந்த இயக்கத்தினுடைய தலைவர் வழங்கியிருக்கிறார். அவர்கள் வெட்டிவிட்ட அந்த வாய்க்காலினூடாக ஓடிக் கொண்டிருக்கும் நீர் மட்டும்தான் நான்.

அந்த நீரை உரிய இடங்களுக்கு மடைமாற்றி அதன் மூலம், இந்தச் சமுதாயம் பெறக்கூடிய ஒரு பயனை வழங்கியிருக்கிறது என்று சொன்னால், எங்களுடைய இயக்கத்தையும் தலைவரையும் அவருடைய நெறியாள்கையின் கீழ் இருக்கின்ற இந்த நிறுவனங்களையும் தான் சொல்லலாம்.

நான் பிறந்ததில இருந்து சாதாரணமா ஒரு விவசாயியின் மகள். அதுவும் நாகரீக வளர்ச்சியைக் காணாத ஆதிவாசிகளைப் போல வேட்டையோடு புலக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற, வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சாதாரண விவசாயியினுடைய மகளாக நான் பிறந்து, நவநாகரீகமான உலகத்தில் கணணிக்கு முன் இருந்து இப்பொழுது தொழில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், இந்த நீரை உரிய இடத்திற்கும் மடை மாற்றி அந்த உரிய பயனை விளைவித்த பெருமைவந்து தேசியத் தலைவருக்குத்தான்.

இந்தப் பெருமையை நான் ஒரு போதும் சொந்தம்கொள்ள முடியாது. ஏனென்றால் எனக்குள் இந்த ஆற்றல் இருக்குதா என்ற அந்த செய்தியை வந்து என்னால ஏற்றுக் கொள்ள முடியேல்ல ஏதோ செய்து கொண்டிருக்கிறேன்.

தமிழன்பன் (ஐவான்): உங்களிடம் இருக்கும் ஆற்றல்களை மடை திறந்து வைத்தது இந்த விடுதலை போராட்டமா?

தமிழ்க்கவி: தலைவரால் கண்டு வழி நடத்தப் படுகிறேன் என்று ஒற்றைப் போக்கில சொல்றது மிகைப் படுத்தலாக இருக்காது. ஏனென்று சொன்னால் இந்த வழியும் இந்த வாய்க்காலும் அவர் அமைத்தது. இந்த இயக்கத்துக்கு வருகின்ற வழிவாய்க்கால் கூட அவர் அமைத்தது. இயக்கத்திற்கு வருவதற்கான அந்த வாய்க்காலை சில வேளை சிங்கள அரசாங்கம் வெட்டிவிட்டு இருக்கலாம்.

ஆனால் வாய்க்காலில் விழுந்த நீரை உரிய பயனுக்குக் கொண்டு வந்து வைத்தது இந்த விடுதலைப்போராட்டம் தான்.

இந்தப் பெருமையில துளியைத்தனையும் கொண்டாடுவதில் எந்த விதமான உரிமையும் எனக்கில்லை. நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் முதலிலேயே சொன்னது போல போர்க்காலச் சூழலில் இந்த தேசியத் தலைவரின் வழிநடத்தலில் வாழக்கூடிய ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து
கொண்டிருக்கிறேன். இதைத் தவிர வேற ஒன்றும் சொல்வதற்கில்லை.

தமிழன்பன் (ஐவான்): வாழ்க்கையினுடைய அமைப்பு நீங்கள் கூறுவது போல பல பரிமாணங்களைக் கொண்டிருக்கலாம். இது ஒரு வாழ்க்கை.

உங்கட ஆரம்ப கால வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த மோசமான துயரங்கள் இருக்கலாம், எதிர்கொண்ட பலத்த நெருக்கடிகள் இருக்கலாம், அவற்றை எவ்வாறு தாண்டி வந்தீர்கள்?

தமிழ்க்கவி: நான் வாழ்ந்துகொண்டிருக்கிற காலத்தை விட, பிறந்து வளர்ந்த காலத்தை பற்றிக் கதைக்கலாம் என நினைக்கிறேன்.

எங்களுடைய கிராமத்திலேயே மிதி வண்டிகள் இல்லாத காலப்பகுதியில நான் மிதி வண்டி ஓடியதே ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. இது கூட எனது சமுதாயத்தை எதிர்த்துச் செய்த காரியம்.

ரலிசைக்கிள் மிகப் பாரமானது. அந்த சைக்கிளுக்கு பலகையில் கரியல் போட்டு, நல்ல பலமான ஸ்ரான்ட் அடித்திருப்பார்கள். சைக்கிள் உருட்டும் பொழுது அந்த ஸ்ரான்ட் எழும்பி படக் என அடிக்கும். அந்த சைக்கிளை தள்ளும் போது அடித்து விழுந்திருக்கிறோம். அப்பா சைக்கிள உருட்டும் பொழுது பின்னுக்கு நிண்டு ஸ்ரான்ட் அடிச்சு காயப் பட்டிருக்கிறேன்.
சின்னப் பராயம். வெய்யில்ல நிண்ட சைக்கிள உருட்டி வைக்கிறத்துக்கு அடுத்த வீட்டில இருந்து ஒரு ஆம்பிளப் பிள்ளைய கூப்பிடச் சொல்லி அம்மா சொன்ன போது எனக்கு ஒரு ஆவல் வந்தது.

ஏன் ஆம்பிளை வந்து உருட்டி வைக்கோணும், நான் உருட்டி வைச்சா என்ன, என்று நான் சைக்கிள உருட்டப் போன போது அம்மா வெளியால வந்து 'எடியேய்" எனச் சத்தம் போட நான் சைக்கிள தடுமாறி கீழ போட அந்த சைக்கிள உருட்ட வந்தவர் தலையில நறுக்கெண்டு குட்டு வைச்சு "பெட்டச்சிக்கு ஏன் இந்த வேலை" எனக் கேட்டுட்டேர்.

எனக்கு பெட்டச்சி என்ற வார்த்தை அப்பவே சுட்டிற்று. அப்ப நான் ஓடவேண்டும் என்ற அந்த விரதத்தை வைச்சிருந்து, மிகக் குறுகிய காலத்தில கொழும்பில இருந்து வந்த எனது மைத்துனரிடம் அவர் இப்போது அக்காவின் கணவராக இருக்கிறார். அவருடைய ஆதரவோடுதான் "இந்தச் சைக்கிள உருட்டக் காட்டித் தாங்கோ" என்று கேட்டனான்.

அவர் சொன்னார் 'கொழும்பில பெண்கள் சைக்கிள் ஓடுகிறார்கள். நான் ஓடவே உனக்குக் காட்டித்தாறன்" அவர் காட்டித் தந்தார். ஒரு மூன்று தின நிலவில வீட்டில உள்ள அங்கத்தவர்கள் யாருக்கும் தெரியாமல் அந்தச் சைக்கிளை ஓடக் கற்றுக் கொண்டு, வீதியில அந்தச் சைக்கிள் ஓட்டத்தை நடத்திய போது முதல் முறையாக என்னுடைய தாயார் தற்கொலைக்கே தயாராகி விட்டார்.

'இப்படி ஒரு அடங்காப்பிடாரியை பெற்றதற்கு சாகலாம்" என்று சொல்லி.
இப்ப கேட்கும் போது நகைச்சுவையாக இருக்கிறது. பக்கத்து வீட்டுப் பெண்களெல்லாம் வந்து அம்மாவுக்குப் சரியான பேச்சு. "என்ன பிள்ளை பெத்து வைச்சிருக்கிற நீ , இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு செத்துப்போகலாம்" அம்மாட்ட இப்படி ஒரு கோபம் இருந்தது. இதை வந்து அப்பாவுக்குச் சொல்லப்போறா. அப்பா அடிக்கப் போறார். அப்பாட்ட அந்த நேரம் சவுள் அடி வாங்குவன். சரியான குழப்படியும்தான் நான்.
"அவள் தன்ர காலால, தன்ர உடம்பால செய்யிறத நீ ஏன் தடுக்கிற, அதைப் பற்றி உங்களுக்கென்ன" என்று கேட்டுப் போட்டார்.

அந்த வயதில தந்தையை தொட்டுப் பேசுகிற வழக்கம் பெண் பிள்ளைகளிடம் இல்லை. இப்ப இருக்கு. ஆனால் அந்த நேரம் நான் அப்பாவை ஓடிப்போய் கட்டிப் பிடித்தன். அதுக்கு அடுத்த பேச்சு விழுந்தது. 'பொம்பிளப் பிள்ள இந்த வயசில போய் ஏன் அப்பாவை கட்டிப்பிடிக்கிறது" பொம்பிளப் பிள்ளை எட்ட நிண்டு கதைக்கோணும், ஆம்பிளப் பிள்ளை கிட்ட நிண்டு கதைக்கலாம். நான் அப்புவோட அப்படிப் பழகேல்ல. இரண்டு வாரத்துக்குள்ளேயே அப்பு எனக்கு வேலைகள் தரத் தொடங்கி விட்டார். "பிள்ளை கொஞ்சம் எட்டப் போய் வயலுக்குள்ள மாடு நிக்கா எண்டு பார்த்துக் கொண்டோடியா. சைக்கிளக் கொண்டோடு".

நான் கொண்டுபோவன். என்னை உதாரணம் காட்டி பெண்ணின் மகள் இரண்டு வருடத்தில் சைக்கிள் ரேசில் கப்பெடுத்தவா. அப்ப காலம் மாறி விட்டது. முதல் மாற்றத்தை நான் செய்தன்.

அதே போல படிக்கவேண்டும் என்று சரியான ஆர்வம். ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் கதையை எல்லா இடமும் பேசினார்கள். வழக்குகளை உடைக்கிற விசயம் பற்றி பேசினார்கள். நான் இதைச் சொல்லியே ஆகவேணும் ஏனெண்டு சொன்னால் எனக்கு ஒரு சட்டவாளராக வரவேண்டும் என்று அப்பவே ஆசை. நானும் ஒரு கறுப்புக் கோட்டணிந்து நீதிவானுக்கு முன்னால பேசவேண்டும் என்று ஆசை இருந்தது. கல்வி வந்து எனக்கு இடையிலேயே நிறுத்தப்பட்டு போய் விட்டது.

என்ன பிரச்சனை என்று சொன்னால் ராணுவம் வந்து எங்களுடைய கிராமங்களை அண்டி நிலைப் படுத்திக் கொண்டார்கள். 1961ம் ஆண்டு சிறிமாவோவினுடைய இராணுவம் வடபகுதிக்கு அனுப்பப்பட்ட போது எங்களுடைய கிராமத்துக்கு அண்மையிலதான் யோசப்காம் இருக்கிற இடம்.
அந்த இடத்தில தான் முகாம் அமைச்சு நிறைய இராணுவத்தை தங்க வைச்சிருந்தார்கள். அந்தப் பகுதியைத் தாண்டித்தான் பாடசாலைக்குப் போகவேண்டும்.

இதுக்கு முதலே இனக்கலவரம் 1958ம் ஆண்டு நடந்த போது ஒரு பன்னிரண்டு வயசுப் பெண் பிள்ளை எங்களுக்கு மூப்பு, அந்தப் பிள்ளையை எங்கட வீட்டில அந்தக் குடும்பத்தைப் பிரிச்சு குடியேற்றின பொழுது முதல் கொண்டு வந்து சங்கத்துக்காகக் கட்டப்பட்ட ஸ்ரோரில கட்டிடத்தில அகதியாக வைச்சிருந்தார்கள்.

பிறகு பிரிச்சு வீடு வீடா கேட்டு இரண்டு குடும்பங்களை ஒவ்வொரு வீட்டிலையும் விட்டிச்சினம். அப்ப எங்கட வீட்டுக்கு வந்த குடும்பத்தில ஒரு பிள்ளை அவாவுக்கு பன்னிரண்டு வயசிருக்கும். அந்தப் பிள்ளையை விளையாடுறத்துக்கு கூப்பிட்டா, அவாட அம்மா வந்து மோசமாப் பேசுவா. அந்தப் பிள்iயைப் பேசுவா.

"அதில ஏண்டி உக்காந்திருக்கிற, அதில ஏண்டி சிரிக்கிற, அவங்களை ஏண்டி பார்க்கிற." அந்தப் பிள்ளை அழுதுக்கொண்டே தான் இருக்கும்.

என்ன நடக்கிறது எண்டு எங்களுக்குத் தெரியாது. ஒரு நாள் எல்லாருக்கும் அந்தப் பிள்ளேல ஒரு அனுதாபம் இருந்தது.
கிணத்தடிக்குக் குளிக்கப் போச்சுது. நாங்களும் கூடப் போனோம் தண்ணி அள்ளி ஊத்த. என்னுடைய நாவலிலையும் குறிச்சிருந்தன் அந்த சம்பவத்தை. அப்பதான் பார்த்தன் அந்த பிள்ளையினுடைய உடையை, நீரில் அலம்பி வெளியால எடுக்கேக்குள்ள இந்தத் தண்ணி சிவப்பா மாறிவிட்டது. போட்டிருந்த உடுப்பு பச்சை நிறம். அந்தப் பிள்ளையினுடைய உடையை அலம்பி எடுக்கும் பொழுது சிவப்பா வருது தண்ணி.

அப்ப பச்சைத் துணியில எப்படி சிவப்பச் சாயம் வரும், நான் போய் எங்கட வயசுக் காரரோட கதைக்க, அந்தக் கதை அம்மாவுக்கு எட்ட, அம்மா போய் அந்த அம்மாவக் கூப்பிட்டுப் பேச, 'என்ன அந்த பிள்ளை பெருசாகிட்டுதா, ஒளிச்சு வைச்சிருக்கிறேயா?" தீட்டுத் தொடக்கெல்லாம் பெருசாப் பார்க்கிற காலம் கிணத்தடியெல்லாம் கண்டபடி பழகிருவினம். அதுக்குப் பிறகு தான் அந்த அம்மா அழுது கொண்டே சொல்றா 'தன்னுடைய பிள்ளையை ஒரு நாலு சிங்களவர் சேர்ந்து...." பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர் என்ற சம்பவம் வருகுது.

அப்ப அந்த இனக்கலவர நேரம் எங்க ஊருக்கு ஒரு வானொலி பெட்டி இருந்தது. அது இடம் பெயர்ந்த வந்த ஒருவருடையது. இரவு அந்த வானொலிப் பெட்டியில் செய்திகள் கேட்கிறதுக்கு அயல் எல்லாம் கூடும். அன்றைக்கு அந்த அயலெல்லாம் கூடினது செய்தி கேட்க அல்ல, அந்தச் செய்தியை பரிமாறிக் கொள்ள. அந்தச் சம்பவத்தைச் சொல்லி அந்த நேரம் எங்களுக்கு விளக்கம் அளிக்கேல்ல. பாடசாலைக்கு நான் போகேக்குள்ள ஒன்பதாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தன். ஒன்பதாம் ஆண்டு பரீட்சை எழுதிப்போட்டு அடுத்த வகுப்புக்கான பாடசாலைக்குப் போகும் போது 'இராணுவம் வந்து நிற்கிறான். "இந்தப் பாதையால இனி பள்ளிக்குப் போகேலாது. நீ பள்ளிக்கூடத்துக்குப் போனாய் எண்டா உனக்குத் தெரியும் தானே பூவாய்க்கு நடந்த விசயம்."

பூவாய்க்கு என்ன நடந்தது என்ற விசயத்தை அம்மா எனக்குச் சொல்றா.
நாக்கு அண்ணத்தில ஒட்ட அப்படியே ஆவென்று கேட்டுக் கொண்டு இருக்கிறோம். விளங்கியும் விளங்காத வயசு. இந்தக் கதையை கேட்ட எனக்கு பன்னிரண்டு வயசு. அப்ப நாலு வருசத்துக்குப் பிறகுதான் எனக்கு விளக்கம் சொல்றா. அந்தக் கேள்வியோடையே என்னுடைய படிப்பு முடிஞ்சுது.

பாடசாலையால நிண்ட பிறகு சட்டவாளராகிற கனவு, ஆசிரியராகிற கனவு அல்லது சங்கீதம் பாடுகிற ஒரு கனவு எல்லாம் அதோட முடிஞ்சுது. பிறகு, எங்கட குடும்பத்தில மூத்த ஆம்பிளப் பிள்ளை இல்லை. நாங்கள் முன்னுக்குப் பிறந்தது மூன்று பேரும் பொம்பிளப் பிள்ளையள். அதுக்குப் பிறகு பின்னுக்குப் பிறந்தது ஆம்பிளப்பிள்ளையள். ஒட்டு மொத்தமா எங்கட அம்மா பதினொரு பிள்ளைகளைப் பெத்தா. அப்பவுக்கு நான் சைக்கிளும் ஓடப் பழகிட்டேன் தானே.

அதால கலப்பை கொண்டு போறது வயலுக்கு,மாடு கொண்டு போறது உழுகிறது.... அப்பா வயலில தனியப்பாடு படுவேர். கூலியாள் போட மாட்டேர்.

அப்ப நாங்கள் தேத்தண்ணி கொண்டு போய் கொடுக்கேக்குள்ள மாடு பூட்டோட நிண்டா கொஞ்சம் கலைப்பம். கலைச்சு உழுதா அவருக்கு உதவியா இருக்கும். திருப்பி மேட்டு வயல் திருத்துகிற நேரமெல்லாம் அவர் மண்ணைக் குத்தித் தர நாங்கள் பலகையை இழுப்பம்.

காணி திருத்தித் திருத்தி வேலை செய்றது, கட்டைகளுக்கு நெருப்பு வைக்கிறது, வெட்டும் போதெல்லாம் ஒரடி இரண்டடி சுற்றுமரங்களை அப்பா பிரிச்சு தந்திடுவேர்.

அதுக்குரிய கோடாலியும் தருவார். அம்மா "நீ மத்தியானத்துக்குள்ள இந்த மரத்த விழுத்திப் போட்டையெண்டா உனக்கு ஒரு பாவடை வேண்டித் தருவேன்". பாவடையெண்டா நீங்க பெருசா எதிர்பார்க்காதீங்க சீத்தைப் பாவடை. இன்னொரு மரம் தங்கச்சிக்குக் கொடுப்பார்.அவாவுக்குக் கொஞ்சம் குறைவு. அப்படி கைப்பருமன் உள்ள மரங்களை பிரிச்சுப் பிரிச்சு எங்களிட்ட தந்து போட்டு மற்ற பெரிய மரங்களை அவர் எப்படியோ தான் தறிச்சுக் கிறிச்சுப் போடுவார்.

எல்லா வேலைகளிலேயுமே நாங்கள் அப்புவோட பங்குபற்றி வருவோம்.
வீட்ட வர அம்மா தொடங்குவா. 'ஒரு வெங்காயம் உரிக்கத் தெரியாது, ஒரு பச்சை மிளகாய் வெட்டத் தெரியாது, தேத்தண்ணி ஊத்தத் தெரியாது, கொண்டு திரியிறீங்க பின்னால,கொண்டு திரியிறீங்க பின்னால, நாளைக்கு வாறவனிட்ட குத்துப்படப் போறாள்!" அம்மா நெடுகப் பேசிக் கொண்டே இருப்பா. அப்பு சொல்லுவேர் 'எணைய் நீ பேசாமல் இரு பேசாமல் இரு, பொம்பிளப்பிள்ளை எண்டு பார்க்கக்கூடாது."

அப்ப தமிழரசுக் கட்சி ஊர்வலத்துக்கெல்லாம் என்னை தோளில தூக்கிக் கொண்டு போகேக்குள்ள அதத்தான் சொல்லுவார். 'விடுதலை என்பது பொம்பிளையளுக்கும் வேணும் அது நீ எண்ணிப் பாக்கத்தான் வேணும்" விளங்குதோ விளங்கேல்லையோ சொல்லிக்கொண்டு இருப்பார்.
மேடைகளில பேசுற கூட்டங்களில தமிழ் பெண்களுக்கென்று ஒரு நாள் நடந்தது.

இப்ப இருக்கிற சைவப்பிரகாச வித்தியாசாலையில், அப்ப கட்டிக் குறை, அதுக்கதான் நடந்தது, அந்த மாநாட்டில போய் அப்ப ஏழெட்டு வயசுதான், 47ம் ஆண்டு பிறந்தனான், 57ம் ஆண்டு அந்த மாநாடு நடக்குது, மாநாட்டில அந்தப் பெண்கள் ஆக்கிரோசமாப் பேசினம். நானும் ஒருக்கா எழும்பி ஆக்கிரோசமாப் பேசவேணும். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் எனக்கு இருந்தது.

அப்பா ஆரம்பத்தில குடிகாரனா இருக்கேல்ல. நாங்கள் வளரும் போது பிறகு அவர் நண்பர்களோட சேர்ந்து குடியைப் பழகிக் கொண்டேர். சுபாவமா இருந்தாலும் சரி, குடி பழகின பிறகும் சரி அவர் எப்பொழுதும் அவருடைய பொழுது போக்கு நாட்டார் பாடல்கள் தான். அரிவு வெட்டத் இறங்கினாலும் பாட்டுத்தான். சூடடிக்கத் தொடங்கினாலும் பாட்டுத்தான். இதுகள்ள கூத்துகளும் இடைக்கிடையில போடுவினம். அரிவு வெட்டுக்காலம் முடியேக்குள்ள போடுவினம். இதில கிருஷ்ணருக்கு வேஷம் கட்டி நடிக்கிறவர் இருக்கிறார். அவருக்கு சரியான தொந்தி. அவர் கிருஷ்ணருக்கு வேஷம் கட்டேக்குள்ள தொந்தி தெரியாம இறுக்கி வரிஞ்சு கட்டுவேர்.
முதல் இளக்கையித்தால வரிஞ்சு கட்டி, கமுக மடல்களை வைச்சு மூடி அதுக்கு மேல மேக்கப் போட்டுத்தான் நடிப்பேர். பாடுவேர், துள்ளி ஆடுவேர் ஆனால் கொஞ்சம் தொந்தி. இதெல்லாம் நாங்க கிட்ட நிண்டு பார்க்கிறது. அப்படி ஒவ்வொருத்தருக்கு வேஷத்துக்கு தக்கமாதிரி நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்குபெற்றுவோம்.

இந்த நிகழ்சிகளிலெல்லாம் கவரப்பட்டு என்னிட்ட பாடுற ஆற்றல் தனியாவே இருந்தது. எங்கட வீட்டில எல்லாரும் வெள்ளையும் அழகும், நான் தான் கறுப்பு. தோற்றமும் பொலிவில்லாத தோற்றம். அப்ப சின்னனிலேயே ஒரு தாழ்வு உண்ர்ச்சி என்னிடம் இருந்தது. அயலவர்கள் கூப்பிடுறதே "கறுப்பி" எண்டுதான். இதை விட இன்னொரு கிழவன் சொல்லிக்கொண்டே இருப்பார் "உன்னை தவிட்டுக்கு விலைக்கு வாங்கினது" என்று .இந்த தாழ்வு உணர்ச்சி எல்லாம் என்னிட்ட இருந்தது. அப்ப இதோட வந்து படிப்பிலையும் வந்து "ஆமிக்காரன் வந்து நீ படிக்கப் போனா உன்னை ஏதும் செய்திருவான் பிறகு உன்னை ஒருத்தரும் சீண்டமாட்டான்" என்ற கதை வந்து என்னை பயப் படுத்திப் போட்டு.

அதை போலதான் பேச்சாளரா வரோணும், பாட்டாளரா வரோணும் எனக்குள்ளேயே பிறந்து எனக்குள்ளேயே மடிஞ்சிட்டு. நான் இப்படி ஒரு இடத்திற்கு வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை.

அப்ப சின்ன வயசிலேயே பாட்டுக்காக எனது ஊரிலேயே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்குப் போறதுக்குக் கள்ளம். அப்பா பள்ளிக்கூட வாசல் வரைக்கும் அடித்துக் கொண்டு போய் விடுவேர். கொண்டு போய் பள்ளிக்கூட வாசலில இறக்கி விட்டிற்றுப் போவேர். சரியெண்டு அவர் கடைத்தெருவுக்குப் போக பள்ளிக்கூடத்தின்ர பின் கேற்றால விழுந்து காட்டுக்கால விழுந்து வீட்ட போயிருவன்.

அப்பா வீட்ட வாறதுக்குள்ள நான் வீட்ட நிப்பன். பிறகு மாமரத்தில கட்டி தலைகீழா தொங்க விடுவார். தொங்க விடேக்குள்ள 'என்னைக் கீழ இறக்கி விடுங்கோ நான் பள்ளிக்கூடத்துக்குப் போறன்" எண்டு சொல்லுவன். இறக்கிவிட்டப் பிறகு "நான் நாளைக்குப் பள்ளிக்குப் போறன்" என்று சொல்லுவன். இப்படிக் களவில படிச்சனான்.

பக்கத்து வீட்டில இருக்கிற ஒருவர் அப்புட அடியில இருந்து காப்பாத்துறதுக்காக கூட்டிக் கொண்டு ஒழிக்கிறதுக்கு கேட்ப்பேர் 'அப்ப நீ என்னை கல்யாணம் கட்டினி எண்டா வா உன்னை ஒழிச்சு வைக்கிறன் நான் காட்டமாட்டன்".

அப்ப ஒரு நாள் அவர் அப்படிச் சொன்னதை வைச்சு அப்புட்ட இருந்து தப்புறத்துக்காக அப்படியே சொல்லிக் கொண்டு அவருட்ட ஒழிச்சிட்டன். அப்பு வயலுக்குப் போயிருவேர். நாங்கள் விளையாடத் தொடங்கி விடுவோம். அடுத்த நாள் பள்ளிக்குக் களவடிக்கோணும் எண்டு சொன்னா "வடிவேல் அண்ணே நான் உன்ன கல்யாணம் கட்டுறன்" எண்டு சொல்றது. சொன்னா அவர் ஒழிச்சு வைப்பேர். அவர் எத்தின நாளைக்கு ஒழிப்பேர் அவர் எங்களுக்கு விளையாட்டுக் காட்டுறார் என்று எங்களுக்கும் விளங்காதுதானே.

நாங்க நினைக்கிறம் அவர் சொன்னா ஒழிச்சுவைப்பார் என்று. இப்படியே அப்பாட்ட அடிபட்டு கடசியா படிச்ச அந்த படிப்பு தமிழ்தான் என்று சொன்னா எங்களிட்ட ஒரு மாஸ்ரர் இருந்தவர் அவர் பெயர் சுப்ரமணியம். இயல்பாகவே இந்த அறிவு வரக் காரணம் என்னவென்றால் வாசிக்கக் கூடிய ஆக்கள் எங்கட ஊருக்க இருக்கேல்ல.

மாலையில எவ்வளவுதான் வயல் வேலை முடிச்சிட்டு வந்தாலும் அப்பு வரேக்க முன்னமே ஏழட்டு வயசுபோன ஆக்கள் வந்து கூடியிருவினம்.
அப்பு வரேக்குள்ள வெண்கலக் கைவிளக்கோட மதன காமராயன், விக்ரமாதித்தன், ஐகதலப் பிரதாபன், மகாபாரதம், போன்ற புத்தகங்களை அவர்களே திரட்டிக் கொண்டு வருவார்கள். தெரிஞ்ச இடத்தில ஒரு புத்தகம் கண்டா ஆரோ ஒரு கிழடு தூக்கிக் கொண்டு வரும், தூக்கிக் கொண்டு வந்து கந்தப்பு இந்தப் புத்தகத்தை இண்டைக்குப் படிக்கோணும்.

அது தொடர்கதை. அப்ப அவர் விளக்க கைய்யில இப்படி பிடிச்சுக் கொண்டுதான் படிப்பார். விளக்கு புத்தகத்துக்குக் கிட்ட பிடிச்சுக்கொண்டு துவங்கும்

"ஆ....ஆ..... த...ச...ர...த..ன் ஆனவன்... வே....ட்டைக்குப்.... புறப்பட்டு போகையிலே...." அங்கிருந்த முற்றும் தரிப்பொன்றும் இருக்காது அந்த எழுத்தில. ராகத்திலதான் படிச்சுக்கொண்டு போகோணும். அப்ப இவர் இருந்து படிக்க 25, 30 பேர் இருந்து கேப்பினம். அப்ப கதாநாயகன் காந்தரோபாயன். நான் இருந்து படிக்கோணும் 48 பேர் கேட்கோணும். அந்தக் கனவுகளைச் சொல்கிறன். அப்பா படிச்சிற்றுப் போகேக்குள்ள தம்பியாக்கள் சின்னன். இவற்ற ராகம் தம்பி அவங்களுக்கு விளங்காது. திருப்பி அவங்களுக்கு இப்ப உள்ள வசன நடையில நாங்களே அதுக்குள்ள முற்றுப்புள்ளிகளைப் போட்டு போட்டு திருப்பி படிக்கோணும்.

படிக்கேக்குள்ள இப்ப உள்ள இந்தப் புராணம், நாட்டிலக்கியம், மேற்கோள் காட்டுகிற வசனங்கள் இதுகள் எல்லாம் நான் அப்ப படிச்சதுதான். அப்ப நாங்கள் தம்பி ஆக்களுக்காக வேண்டி படிக்கிறம். வீட்டில எப்பவும் கல்கி, குமுதம், ஆனந்த விகடன்,வீரகேசரி பத்துச்சதம் கலைமகள் இருபதுசதம் எண்டா வாங்கிறேல்ல. அது எங்கட அப்பாவின்ர அம்மா வாங்குவா. அப்பு வந்து கல்கியும், குமுதமும், ஆனந்த விகடனும், பேப்பரும் அவர் வாங்குவேர். வீரகேசரியில் உதயணனின்ர கன்னித் தீவு, கிருஷ்ணா அவதாரம், இதுகள் தொடராக வருகுது. நாலாமாண்டு படிக்கேக்குள்ளே தொடர்கதை படிக்கோணும். தொடர்கதை படிச்சிட்டு அடுத்த கிழமை வர வர அந்தக் கதைகளைப் படிச்சு, இந்தக் கிழமை இந்த அத்தியாயம் முடிய அடுத்த அத்தியாயம் பள்ளிக்கூடத்தில இருக்கிற சக மாணவிகள் எல்லாருக்கும் நான் தான் அந்த கதை சொல்லி. எல்லாருக்கும் கதை தெரியும் பேப்பர் எடுக்கினமோ எடுக்கேல்லையோ கதை தெரியும். அப்படிக் கதை சொல்லிக் கொண்டு வந்தா அப்ப ஒரு யோசனை எனக்கு வகுப்பில மாஸ்ரர் எழும்பிச் சொல்லுவேர். ஒரு பாடத்தை விளங்கப்படுத்தும் போது சரித்திரப் புத்தகம்,
பூமி சாத்திரப் புத்தகம், ஒராள் வாசிங்க எண்டு சொல்லிப் போட்டு எல்லாருக்கும் விளங்கப் படுத்துவேர். சில நேரம் நான் எழும்பி நிண்டு வாசிப்பன். புதுசா எங்களுக்கு வந்தவர் அந்த ஆசிரியர் ஐந்தாம் ஆண்டு அரசாங்கச் சோதனை ஒன்பது வயசு எனக்கு அப்ப வகுப்பில சாதாரணமா கெட்டிக்காரியா இருந்தனான். இப்ப உள்ளது போல எனக்கு உணரத் தெரியேல்ல. அந்தப் பரீட்சையில மூன்று பாடம் வைப்பினம். ஆங்கிலம், கணிதம், தமிழ், பொதறிவு. ஆங்கிலப் பாடத்தில மாகாணத்தில முதல் மாணவி என்ற விருது எங்கட பாடசாலைக்கு வந்தது. அந்த முதல் மாணவி யாரெண்டா அப்ப எங்களுக்குத் தெரியாது. லீவு முடிஞ்சும் போன பிறகு அந்த வகுப்பிலேயே கடசி வாங்கில இருக்கிற ஆள் நான்தான். ஏனென்றால் முன் வாங்கெல்லாம் உத்தியோகத்தருடைய பிள்ளைகளுக்கு இரண்டாம் வாங்கு கொஞ்சம் வர்த்தகர் காசுக்காரருடைய பிள்ளைகளுக்கு. அடுத்த வாங்கு அதையும் விட கொஞ்சம் கார் வைச்சிருக்கிறவேக்கு, சைக்கிள் வைச்சிருக்கிறவேக்கு. சைக்கிள் வைச்சிருக்கிறவனும் அப்ப பணக்காரன் தான்.

பின் வாங்கில உண்மையிலே பிச்சை எடுக்கிறக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் இருந்தது.எங்களை அந்தப் பிள்ளைகளோட தள்ளி விட்டிருவினம். ஏனென்றால் நான் கறுப்பு. தாழ்வுணர்ச்சியை நான் அங்கிருந்து பொறுக்கிறன். பின் வாங்கில தள்ளி விட்டிருவினம். அப்ப வகுப்பில நான் ஒரு முன்னணிக்குரிய ஆள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. நான் அப்படி நினைக்கவும் இல்லை. ஏதோ படிச்சுக் கொண்டிருக்கிறன். அப்ப 'மாகாணத்துக்குள்ள முதல் மாணவி எங்கட வகுப்பில வந்திருக்காம்" எண்டு ஆசிரியர் சொல்றேர். யாரெண்டு சொல்லேல்ல. அப்ப எல்லாரையும் கூப்பட்டாச்சு மேடைய குவிச்சாச்சு ரீச்சர்ரெல்லாம் வந்தாச்சா, வந்தோண்ண இவர் சொன்னேர் மாஸ்ரர் இல்லத்தானே. வாத்தியார், வாத்தியாரம்மா, பெரிய வாத்தியார் தலைமை வாத்தியார் பெரிய வாத்தியார் மற்ற எல்லாரும் வாத்தியார். அப்ப வாத்தியார் வந்து சொல்றேர் 'எங்கட வகுப்பில இருக்கிற பிள்ளைக்கு பரிசு கிடைச்சிருக்காம் எல்லாரையும் வரட்டாம். எல்லாரும் போனோம் சின்ன வகுப்புக்காரர் முன்னுக்கு. மற்ற எல்லாரும் பின்னுக்கு. கூப்பிட்டார் மாஸ்ட்டர் 'எழும்பு" என்ர பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார் 'எழும்பு" எண்டு அப்பவும் அந்த நேரமும் பக்கத்தில இருந்த மாணவிக்குக் கிள்ளி போட்டன். கிள்ளிப் போட்டுத்தான் இருக்கிறன் என்னை நெருக்கிப் போட்டாள் எண்டு.

இவர் எழும்பு எண்டோன்ன எனக்கு விறைச்சுப் போச்சு. இவர் நுள்ளினதைக் கண்டுட்டேரெண்டு. அவர் அரக்காக் கோலி மேடையில ஏத்திப் போட்டுச் சொன்னேர் 'இவள் தான் அவள்" எனக்கு விடிஞ்சதும் தெரியாது ஒன்பது வயது எங்களுக்கு என்ன விளங்கும் இவள் தான் அவள் என்று.

அந்த ஆசிரியரைக் கூப்பிட்டேர் ஆங்கிலம் படிப்பிச்ச மனுசி ஒரு பறங்கி மனுசி. இந்த வெள்ளைக்காரரெல்லாம் வெளியேறின போது போகாமல் அங்கு நிண்ட ஒரு பறங்கி மனுசிதான் எங்களுக்குப் படிப்பிச்சவா. அப்ப அவாவ கூப்பிட்டிட்டு இந்தப் பிள்ளை இந்த பாடத்திலும் கெட்டிக்காரி அந்தப் பாடத்திலையும் நல்ல புள்ளி எடுத்திருக்கிறாள் இந்த பாடத்திலையும் புள்ளி எடுத்திருக்கிறாள் 'ஏன் ஒருத்தரும் இனங்கானாமல் வைச்சிருந்தனீங்கள்" எண்டு அந்த மேடையில் பேசும் போது அவர் கேட்கிறேர். அப்ப இரண்டாம் ஆண்டு படிப்பிச்ச ஒரு ஆசிரியர் சொன்னா "அவள் அப்பவே கெட்டிக்காறிதான்" ஒரு நாளும் அந்த ஆசிரியர் என்னைப் பார்த்துக் கெட்டிக்காறி என்று சொல்லேல்ல. அவாட்ட அடியண்டா நாளாந்தம் வாங்கியிருக்கிறன்.

அப்படிபட்ட அடி வாங்கியிருக்கிறன் அந்த வாத்திமார் எல்லாருட்டையும்.
ஒருத்தரும் கூட என்னை நெத்திக்கு நேர நீ கெட்டிக்காறி என்று சொன்னதே கிடையாது. அப்படி நேர சொல்லியிருந்தால் நான் இன்னும் படிச்சிருப்பன்.
அப்போ உள்ள கொள்ளை என்னெண்டு சொன்னால் நேரடியா பாராட்டின பிள்ளை விழுந்து போகும்.

என்னுடைய தந்தையைப் பற்றி நான் சொல்ல வேண்டும் எங்கட அப்புட்ட போய் நீங்க சொல்லுங்க 'அப்பு நான்இண்டைக்கு சங்கீதத்தில் முதல் பரிசு வாங்கியிருக்கிறன்" 'ஆ" எண்டிற்று போயிருவேர். திரும்பிப் பார்க்க மாட்டேர்.
"அப்ப நான் கணக்கில நூற்றுக்கு நூறு எல்லாம் எடுத்திருக்கிறன்." 'ஆ" எண்டிற்று போயிடுவேர். சில நேரம் கேக்காமலேயே போயிடும் அந்த ஆள். ஒரு நாள் என்னை பாராட்டுறத்துக்கு வரேல்ல என்னத்துக்கென்று தெரியேல்ல. எங்கட வளவுக்க நிண்ட மாடு அறுத்துக் கொண்டு பாய்ஞ்சிட்டுது.

அறுத்துக்கொண்டு பாய்ஞ்சா .எல்லாரும் தானே திரிஞ்சு பார்த்திச்சினம். ஒருத்தருக்கும் அம்பிடேல்ல அது. கடசியா நான் தான் மடக்கி பள்ளிக்கூடத்தால வந்து உடுப்பு களட்டேல்ல. அப்ப இவர் சொல்றார் 'எத்தும் எத்தும்" எண்டு .

நான் மட்டுமல்ல விவசாயக் குடும்பத்தில பத்து வயசில பிள்ளை மாடு சாய்க்கும். இப்பவும் நீங்கள் பார்க்கலாம் மலையக பிள்ளைகள் சமைக்குது. ஒன்பது வயது பிள்ளை சமைக்குது. என்ர மகளும் சமைத்தவள். தகப்பனுக்கு பின்னால தடி கொண்டு போவினம்.

அப்ப நான் மட்டும் எண்டில்லை பொதுவா பின்தங்கிய கிராமங்களுக்குப் போய் பார்த்தீர்கள் என்றா தெரியும். 'பாலன் பஞ்சம் பத்து வருசம்" பத்து வயசு வந்தா பிள்ளை தகப்பனுக்குப் பின்னால தடி கொண்டு போகும் மாடு சாய்க்க.
அதாலதான் அந்த முதுமொழியே வந்தது. அப்ப எங்கட வீட்ட ஆம்பிளப் பிள்ளையே இல்லை. நான் தான் அந்த மூத்த மகள். மூத்த மகள் என்ற செல்வாக்கிலே நிழலில் வளர்ந்தனான். இரண்டாவது நான் தான். அடுத்தது நான் வந்து காடேறிதான்.

அப்ப அந்த நிலைமையில திரிஞ்சபடியா நான் அந்த வேலைகளுக்கெல்லாம் போகத் தொடங்கிட்டன். பாடசாலை கல்வி என்றது அங்க முக்கியமாக கருதப்படேல்ல.

அப்ப அம்மாவுக்கு உதவி செய்கிறது முத்துக்குப் பிறந்த பிள்ளைதான். என்னுடைய மகளே ஒன்பது வயசில நான் அஸ்ப்பத்திரிக்குள்ள இருக்கேக்க எனக்கு சமைச்சு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவாள்.

ஆனால் இப்ப என்னுடைய பேத்தி 20 வயசு அவள் செய்யமாட்டாள். கால மாற்றம் என்றது அங்குதான் வருது.

அப்ப அந்தமாதிரியான காலப்பகுதியிலதான் இந்த மாட அவுட்டுக்கொண்டு காலேல தவுடு வைக்கிறது எல்லாம் என்ர வேலை. எனக்கு விடிய எழும்பினா வீட்டோட உள்ள வேலை, விடிய எழும்பின உடன பல்லுல கரியப் போட்டுக் கொண்டு ஒரு தண்ணி குடம் இருக்கு அதைத் தூக்கிக் கொண்டு கிணத்தடிக்குப் போவன். அள்ளிக் கொண்டு வாறது அங்கு தண்ணில தவுடு குளைச்சு மாட்டுக்கு வைக்கிறதோட அங்க தேத்தண்ணி ரெடியா இருக்கும்.

வீட்டில எல்லாரும் தரையிலதான் படுப்பினம். எனக்கு ஒரு சாக்குக் கட்டிலிருக்கு. ஏனெண்டா ஆம்பிள வேலை செய்யிற ஆள். உழைக்கிற பிள்ளை என்றதுக்காக அந்த ஒரு செல்வாக்கு இருந்தது. இந்த மாடு அறுத்துக் கொண்டு திரிய எல்லோரும் ஓடி கடைசியா ஏலாம களைச்சுப் போய் இருக்கினம். நாங்கள் அப்ப இரண்டு நேர பள்ளிக்கூடம்.காலமை சாப்பாடு 25 இடியப்பம் வாங்கிக் கட்டிக்கொண்டு போறது. அத சாப்பிட்டிட்டு மூன்றரைக்குத்தான் பள்ளியால வருவம்.

பள்ளியால எண்டா - இப்போ இதில இருக்கிற ரியூசன் கிளாசுக்குச் சைக்கிள் கேட்குது எங்கட பிள்ளைகள். இரண்டரை மைல் நடந்து போய் நடந்து வரோணும். அதுவும் வீட்டில வேலை செய்துபோட்டு ஓட்டமும் நடையுமாத்தான் போவம்.

இப்போ உள்ள பிள்ளைகள் வீட்டில வெள்ளன குளிச்சுப்போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகுதுகள். எப்பவும் நாங்க - இன்றைக்குக்கூட காலையில பேத்திய அனுப்பேக்குள்ள நான் நினைச்சன். பாடசாலை துவங்குவதற்கு முன் பத்து நிமிசம் ஆவது பள்ளிக்கூடத்தில முன்னுக்கு நிக்க வேணும் என்ற ஆசை எனக்கு வெகு நாட்களா இருந்தது.

பள்ளிக்கூடம் துவங்குறதுக்கு பத்து நிமிசத்துக்கு முதலாவது நான் பள்ளிக்கூடத்திற்கு போகவேண்டும்.

ஆனால் எப்பவும் நாங்கள் போறது பள்ளிக்கூடம் துவங்கி இரண்டு நிமிசம் கழிஞ்ச பிறகு. ஓடோடெண்டு ஓடினாலும் பிரார்த்தனை துவங்கி விடும்.
பள்ளிக்கூடத் தட்டிக்குக் கீழாழ புத்தகத்தை உள்ளுக்கத் தள்ளிபோட்டு பிராத்தனையில நிண்டுட்டு வாற மாதிரி போவம்.

அப்படித்தான் வகுப்புக்குப் போயிருக்கிறன். நான் பள்ளிக்கூடம் மூன்றரையால வர இந்த மாடு வாலக் கிழப்பிக் கொண்டு ஒடுது. நாலு தறையும் ஓடித் திரியிது அந்த இரண்டு ஏக்கர் காணியையும் ஒரு ஏக்கரையும் தாண்டுது.

அப்ப அப்பு சொல்றேர். 'போகாத பிள்ளை போகாத மாடு தாறுமாறா பாயுது"
என்று.

அப்ப நான் சொன்னன் 'நான் பிடிச்சுத் தாறன்" எண்டு. பின்ன அவர் ஒன்றும் கதைக்கேல்ல. நான் மாட்டையே பார்க்கேல்ல. வாளி எடுத்துக்கொண்டு கிணத்தடிக்குப் போனன். அவர் ஓடிக் களைச்சு நிண்டவர் தானே வாளிய கண்டவுடன தண்ணிக்கு வந்தேர்.

வழக்கமா நான்தானே தண்ணி வைக்கிறனான். தண்ணிய அள்ளி வைச்சன் குடிச்சுது. அப்படியே எட்டி நாணயக் கயித்தில பிடிச்சன். கட்டிப்போட்டன்.

அப்பு சொன்னேர் 'நான் அவளத்தாண்டி என்ர பிள்ளையெண்டு இருக்கிறன் அவள் தான் நாளைக்கு எண்ட பெயர் சொல்லப்போறவள்" எண்டேர்

அம்மாவுக்கு இண்டைக்கு அவற்றப் பெயர்தான் சொல்றன்.

அப்ப அம்மா என்ன சொன்னா எண்டு தெரியுமா "பொம்பிளப்பிள்ளை சொல்லாதப்பா அது ஒருத்தனுக்குப் பின்னால போறது." என்று சொன்னா.

இப்படித்தான் எங்கட கால மாற்றமும் சூழலும். பொம்பிளப்பிளையள் கல்யாணம் செய்தா புருசன்ர பெயரத்தான் சொல்லுவினம். இன்றைக்கு நான் அப்புட பெயரைத்தான் சொல்லுவன். இண்டைக்கு இந்த வளர்ச்சிக்கு அடிநாதமா நின்றவர் அவர் தான்.

அந்தக் காலப்பகுதிலேயே ஒரு விடிவுப்போக்கத் தந்து வளர்த்தவர் என்ற முறையில நான் வந்து அதைச் சொல்லுவன். அண்டைக்குத்தான் அவர் என்னை பாராட்டினது. வேற விஷயங்களுக்குப் பாராட்ட மாட்டேர்.

ஒருக்கா வயல் கிணத்துக்குள்ள ஒரு பிள்ளை விழுந்திற்று. எனக்கு நீச்சல் தெரியும். ஆனால் விழுந்த பிள்ளைய எப்படி காப்பாத்துவது என்று தெரியாது. சில வேளை எங்களையும் சேர்த்து இழுத்துப் போடுவினம்தானே.

அப்ப நான் வயல் கிணத்துக்குள்ள குதிக்க எண்டு முயற்சி பண்ணிப் போட்டும் பிறகு நான் ஏனோ ஒரு நினைவில என்ன செய்தனான் எண்டு சொன்னா ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த தும்பியை இறக்கிவிட்டன்.
இறக்கின உடனே அந்தப் பிள்ளை அந்தத் தும்பியப் பிடிச்சிட்டு. தும்பிய பிடிச்ச பிறகுதான் நான் சத்தம் வைச்சு மற்ற ஆக்களைக் கூப்பிட்டன். அந்தப் பிள்ளையைக் காப்பாற்றிற்றம்.

காப்பாற்றினதுக்குமே அந்த இரண்டாவது பாராட்டை எனக்கு அப்பு தாறேர்.
பாராட்டை தார அண்டைக்கும் சொல்றேர் 'அவள் மூளையைப் பாவிச்ச படியால் குதிக்காமல் விட்டால், குதிச்சிருந்தா இரண்டு பேரும் செத்திருப்பினம்". அதுக்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரியும் தண்ணிக்குள்ள விழுந்தவள குதிச்சுக் காப்பாற்றக் கூடாது எண்டு.

குதிச்சிருப்பன் அந்த நேரம் உயிருக்குப் பயம் எனக்கு. நான் விழுந்து செத்தாலும் எண்டுதான் தும்பிய விட்டனான். அவர் அதை நினைக்கேல்ல. ஏனெண்டா சமயோசிதமான ஒரு சிந்தனையை போட்டன் என்றதைத்தான் அவர் நினைத்தார்.

இப்படி என்ர வாழ்க்கையில நினைச்சு எதிர்பார்த்திருந்து அந்தச் சம்பவங்கள் எல்லாம் கரைந்தே போயிற்றுது.

இனி இல்லை என்று நினைச்சுக்கொண்டிருந்தனான். 11 வயது 12 வயது கல்விய முடிச்சிட்டன். 12 வயது ஆரம்பத்திலேயே ஒன்பதாவது வகுப்பு.
ஏனென்றால் அப்ப கதைக்கத் தெரிஞ்சா பள்ளிககூடத்திற்கு போகாமல் விடலாம்.

இப்ப மாதிரி அப்ப வயது கட்டுப்பாடில்லை. நாலு வயசில கதைக்கத் தொடங்கிட்டன். நாலு வயசில அரிவரி. ஐஞ்சு வயசில முதலாம் ஆண்டு.
இப்டியே முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று ஏறிவந்தேன். ஒன்பதாம் ஆண்டு நான் படிக்கேக்க எனக்கு 12 வயது. அடுத்த வருசம் நான் ஓ-எல் எடுக்கவேணும் எண்டேக்க எங்கட ஆசிரியர் அதைத்தான் சொன்னவா.
'நீ பத்தாம் ஆண்டு படித்தாக் கூட உன்னை விடேலாது. வயது கட்டுப்பாடு வந்திட்டு. 14 வயசு வராமல் பரீட்ச எழுதமுடியாது என்று அவா சொல்லிட்டா. நீ படிச்சுக்கொண்டு வரலாம். அது பிரச்சனை இல்லை. இந்த வயசில என்னெண்டு இந்த வகுப்புக்கு வந்தாய்". எண்ட கேள்வியும் அவா போடுவா.

அப்ப எங்களுக்கு ஒண்டும் விளக்கம் இல்லாத காலம் நாங்கள் கதைக்க மாட்டம். ஆனால் ஒன்பதாம் வகுப்போடையே என்னுடைய கல்வி முடிஞ்சுது. பிறகு நான் வெள்ளைக் கவுண் ஒண்டு போட்டுக் கொண்டு ஒரு சிவப்பு ரை ஒண்டு கட்டிக்கொண்டு காலுக்கு வெள்ளைச் சப்பாத்துப் போட்டுக் கொண்டு பெரிய நடப்பா அந்த ரோட்டால நடந்து போகோணும் எண்டு சரியான ஆசை. அந்த ஆசைக்குக் கூட ஒரு கவுண் போட்டதில்லை.

ஏனெண்டா அப்ப சீருடை வழக்கில இருக்கேல்ல. எங்கட அம்மா பொம்பிளப்பிளைக்கு கண்டக்கால் தெரியக் கூடாது எண்டு சொல்லி முழுப் பாவடை தைச்சு தான் பாடசாலைக்கு அனுப்புவா.

அப்ப என்னுடைய அந்த வகுப்பு எட்டாம் ஆண்டு முடிஞ்சு ஒன்பதாம் ஆண்டு வந்து பத்தாம் ஆண்டுக்குப் போகும் போது வேற பாடசாலைக்குப் போகோணும்.

அந்தப் பாடசாலை சீருடை நடைமுறைக்க இருந்தது. அப்ப நான் அந்தப் பாடசாலைக்கும் போகும் போது வெள்ளைக் கவுண் போட்டுக் கொண்டு போவேனே எண்டு ஆசை ஆசையாக் காத்துக் கொண்டிருந்தனான்.

ஆனால் அது ஒரு நாளும் நடக்கேல்ல. அதும் கனவோடையே போயிற்று.
இண்டைக்குக் கூட எனக்கு அந்த தாக்கம் இருக்குது. நான் ஒரு வெள்ளைக் கவுண் போட்டுக் கொண்டு ஒரு பள்ளிக்கூடம் போகவில்லையே என்ற தாக்கம் எனக்கு இருக்கு.

அதுக்குப்பிறகு எதிர்பாராத விதமாக 14 வயசிலேயே எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. நிச்சயப் படுத்தப் பட்டது என்றும் சொல்லேலாது.
எங்கட அப்பு நல்லா குடி பழகிட்டேர். அப்புவினுடைய நண்பர்களும் அப்புவும் சேர்ந்து குடிச்சார்கள். எங்கட அக்காவை திருமணம் செய்தவரும் இருந்து குடிச்சார்.

அவருடைய நண்பர்களும் குடிச்சார்கள். எல்லாரும் கூடிக் குடிச்சு சாராயப் போத்தலோட ஒரு தீர்மானம் எடுத்தார்கள். தீர்மானம் ஆகியது அந்த கல்யாண வீடு. ஒரு நத்தார் தினத்துக்கு முதல் தீர்மானம் செய்திச்சினம். இந்தப் பொம்பிளைய அவருக்குக் கட்டிக் கொடுக்கிறது என்று.

அவர் யார்? எவர்? என்ற விசாரனை ஒன்றும் இல்லை. அந்த முடிவை எடுத்ததுக்குப் பிறகு பொங்கலுக்கு மறுநாள் திருமணம் முடிஞ்சுது.

நத்தார் 25ம் திகதி.
4ம் திகதி பேச்சு.
பொம்பிளை பார்த்தது 16ம் திகதி.
17 திகதி கல்யாணம் வீடு.

அந்த திருமணம் நடந்ததுக்குப் பிறகு ஏறக் குறைய 14 வருடஙகள் அந்நியாச வாசம் எண்டு சொல்லோணும். அந்தப் 14 வருடங்களின் இடைக்குள்ள என்னுடைய குடும்ப நிலையினுடைய மிக மோசமான கட்டங்களை எல்லாம் நான் சந்திச்சன்.

என்னுடைய பகையாளிக்குக்கூட அந்தத் துயரங்கள் வரக்கூடாது. எனக்கொரு பகையாளி எண்டு இப்ப ஒருத்தரும் இல்லை சுட்டிக் காட்டக் கூடியதாக இல்லையென்று சொன்னாலும் கூட அந்த மொழிக்காக நான் சொல்றன். என்னுடைய எதிரிக்குக்கூட அந்த நிலை வரக்கூடாது என்று நான் நினைக்கிற மாதிரியான மோசமான துயரங்களை, மோசமான ஒடுக்கு முறைகளை,மோசமான சித்திரவதைகளை எல்லாம் நான் அதுக்குள்ளே அனுபவிச்சு ஆறு குழந்தைகளையும் பெற்றன்.

ஆறு குழந்தைகளும் பிறந்து இந்த இடைக்காலப் பகுதியில் என்னுடைய
மூன்றாவது குழந்தை பிறந்த காலப் பகுதியில ஒரு பண்டிதரைச் சந்தித்தனான். அவர் இறந்துட்டார். அந்தப் பண்டிதர் என்னுடைய தமிழில் அவருக்கு ஆவல். தமிழ் செய்யுள்களை நான் விளங்கப் படுத்திற விதம்.
அப்ப அவர் முதல்ல சொல்லுவேர் 'அவள் தமிழை உச்சரிக்கிற விதம் அவள் பேசுற விதம் அவளிட்ட ஒரு நளினம் இருக்கெண்டு".

அந்த நேரம் என்னுடைய பாடசாலை ஆசிரியர் என்னுடைய கட்டுரைகளை வாங்கி பாராட்டினார். ஒரு கட்டுரை எழுதினேன் எண்டா அந்தக் கட்டுரையை அவர் எல்லா ஆசிரியர்களுக்கும் அனுப்புவார். 'என்னுடைய வகுப்பு மாணவி ஒருகட்டுரை எழுதியிருக்கிறா பாருங்கோ" எண்டு சொல்லி.

அந்தக் கட்டுரை எழுதுற ஆற்றல் எல்லாம் எனக்கு இந்தக் கல்கி, குமுதம் இநதப் புத்தகங்களால் வந்தது. அப்ப எட்டாம் ஆண்டில நான் எழுதுற கட்டுரை எல்லாம் எல்லா வகுப்புகளுக்கும் போய் வரும்.
கட்டுரைப் போட்டியில பரிசு எடுத்திருக்கிறன். பேச்சுப் போட்டியில பரிசு எடுத்திருக்கிறன். ஓட்டப் போட்டிகளில பரிசு எடுத்திருக்கிறன்.

அந்த நேரம் நாடகப் போட்டிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கேக்க ஒரு நாடகத்தில நடிகர்களைச் சேர்த்து இருந்திச்சினம். அதில இயல்பாக தலைமை ஆசிரியருடைய மகள் இன்னொரு ஆசிரியருடைய மகன் அப்படி அந்தக் கொஞ்சம் கண்ணுக்கு பூசனனை உள்ள ஆக்களை பிடிச்சு நாடகத்தில சேர்த்திருந்தார்கள்.

நாடகத்தைப் பழக்கும் போது நாங்கள் வேடிக்கை பார்ப்போம். சுத்தி நிண்டு அப்ப அந்த ஆசிரியர் சொல்லுவா 'கனபேர் நிக்க நடிச்சா கூச்சம் இருக்காது மேடையில செய்யேக்க" எண்டு கூப்பிட்டு எல்லாரையும் விட்டிற்றுதான் நடிக்கப் பழக்கிறது.

அப்படி நடிச்சுக் கொண்டிருக்கேக்குள்ள ஒரு பாத்திரம் ஒரு அம்மா பாத்திரம் அந்தப் பாத்திரம் நடித்த விதம் ஆசிரியருக்கு திருப்தி தரேல்ல. திருப்பி திருப்பி ஆசிரியர் சொல்லிக் கொண்டிருக்க சரிவரேல்ல. நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனான் உள்ளுக்குள்ள போய் இப்படிச் செய்யலாமே எண்டு சொல்லி இந்த விருந்தினர்கள் வரேக்க எப்படி வரவேக்கிறது எண்டுறதை 'ஆ வாங்கோ இருங்கோ எப்படிச் சுகம்" என்ற ஒன்று மட்டும் தான் கேட்டன்.

அந்த ஆசிரியருக்குப் அது பிடிச்சுப் போட்டு. சரியெண்டு அந்தப் பாத்திரத்தை மாத்தி 'நீயே செய்"என்று என்னைக் கூப்பிட்டு விட்டார். என்னை கூப்பிட்டு விட்டா அதே சமயம் அந்த பாடசாலையில் நடக்கிற நிகழ்ச்சி அத்தனைக்கும் நான் பின்னணி பாடுவன்.

ஆனால் முன்னணிக்கு வரேலாது. ஏனென்றால் கறுப்பு. அவே கறுப்பெண்டு ஒதுக்கிச்சினமோ என்னமோ தெரியாது நான் கருதுறது அப்படித்தான் என்னுக்குள்ள.

எல்லாப் பிள்ளைகளும் வடிவான பிள்ளைகளா இருக்கு. நான் கறுப்பு ஆனபடியா நான் பின்னுக்கு இருந்து பாடுவன். இந்தச் சம்பவம் வந்து எங்கட அப்புவுக்குக் கொஞ்சம் பிடிக்காது. அப்பு சொல்லுவார் 'அதென்ன பின்னணி பாடுறது முன்னுக்கு விடாம" எண்டு.

அப்ப நான் நாடகத்தில சேர்ந்திருக்கிறன் எண்டு அவருக்கு நல்ல சந்தோசம் ஆனால் அந்த நாடகத்துக்கான உடையை அது இதெல்லாம் வேண்டிக் கொடுக்க மாட்டினம் வசதி இல்லை.

அந்த ஆசிரியர் தன்னுடைய உடைகளைத்தான் தந்து என்னை நடிக்கும் படி சொல்லி உற்சாகப் படுத்தினார். அந்த நாடகமும் பரிசு பெற்ற நாடகம் தான்.
அதே நேரம் இன்னுமொரு நாடகத்திலையும் என்னைச் சேர்த்திருச்சினம். சேர்த்துப் போட்டு பிறகு என்னை எடுத்துப் போட்டினம். வேறையொரு ஆளைப் போட்டு செய்திச்சினம்.

அப்ப இந்த நாடகத்தை நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை வந்து அந்த மாணவியைக் கூப்பிட்டக் கேட்கிறா 'முதல் தமயந்திய போட்டிருந்தததல்லோ அந்த நாடகத்தில நாங்கள் நாடகத்தை வெள்ளண்ண பழக்கிப் போட்டம்தானே ஏன் ஆவாவ விட்டுப்போட்டு வேற ஆளமாத்தினது" என்று சொல்லி

அப்ப அதில இருந்த பிள்ளை சொல்லிச்சிது 'அவா வடிவில்லையாம்".

அந்த ஆசிரியர் அங்க கதைச்சத அந்தப் பிள்ளை அதுக்குச் சொல்லக் கூடாது என்றது தெரியேல்ல அதிலேயே வைச்சு சொல்லுது. 'அவா வடிவில்லையாம் அதான் வேற ஆள மாத்தினதாம்".

அப்ப அந்த ஆசிரியர் வந்து அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு 'நீ இப்படிச் சொல்லக்கூடாது சொல்லியிருந்தாலும் நீ இதில வைச்சுச் சொல்லக் கூடாது அவாவுக்கு" ஆனால் எனக்கு தைக்கேல்ல. ஏனென்றால் இதெல்லாம் சின்னல்ல இருந்து கேட்டுக்கொண்டு வாறதால தைக்கேல்ல.

ஆனால் அந்த ஆசிரியர் கனக்க மனம் வருத்தினார். இந்தக் கதையை எனக்கு முன்னால வந்து சொல்லிப் போட்டாளே எண்டு. அப்ப இந்த உறைப்புகள் எல்லாம் எனக்கு வரக்கூடிய காலம் எப்ப வந்தது என்று சொன்னால் திருமணத்திற்குப் பிறகுதான்.

தமிழ் கட்டுரையை கொண்டு வந்து அவரவர் எழுதிய கட்டுரையை வாசிங்கோ எண்டேக்குள்ள நான் கட்டுரையை வாசிக்க இந்த வாசிப்பைகக் கேட்டுப் போட்டு அந்த தலைமை ஆசிரியர் பெரிய வாத்தியார் அவர் சொன்னார்" 'நீ ஒரு காலத்தில வானொலி அறிவிப்பாளரா வரவேண்டிய தகுதி இருக்கு. உனக்கு அவ்வளவு செழுமையான வாசிப்பெண்டு."

செய்யுள் படிச்சாலும் அப்படித்தான். செய்யுளும் அந்தமாதிரித்தான் வாசிப்பன்.
அந்த மாதிரித்தான் கருத்துச் சொல்லுவன். படிக்காட்டியும் பாஸ்பண்ணிடுவன். நல்ல புள்ளி எடுப்பன். அவர் சொன்னார் "நீ ஒரு வானொலி அறிவிப்பாளரா வரவேண்டிய ஒரு தகுதி இருக்கு உனக்கு"எண்டு சொல்லி.

அப்ப வானொலி அங்க அப்ப இலங்கை வானொலிதானே. இதையெல்லாம் யார் நினைச்சது எங்களுக்கு ஒரு வானொலி வரப்போகுது நாங்களும் அதுக்க நிப்பம் எண்டோ அல்லது நான் இருந்த நிலைக்க நான் இப்படி வருவேன் எண்டோ எதிர்ப்பார்க்கேல்லத்தானே.

அப்ப நான் சொல்லும் அந்தக் கனவு எனக்குள்ள. நல்லா பாடிக் கொண்டிருந்தன். சும்மா சினிமாப் பாடல்கள் தான். பாடுறதைக் கேட்டிற்று ஒரு நுளம்பெண்ணை அடிக்க வந்த ஒரு உத்தியோகத்தர் நான் பிள்ளை தாலாட்டுறதுக்குப் பாடிக் கொண்டிருந்த பாட்டைக் கேட்டிற்றுச் சொன்னார் 'நீர் நல்லா பாடுறீர் ஒருக்காப் பாடும் பாப்பம் நான் பாட்டுக் கேட்க"எண்டு சொல்லி. அப்ப நான் 'சமரசம் உலாவும் இடமே" எண்ட பாட்டு அதைத்தான் பாடினன்.

இப்பக் கொஞ்சம் குரல் உரலாப் போய்ச்சுது. அந்தப் பாட்டைக் கேட்டிற்று சொன்னர் 'சூ! என்ன மாதிரி பாடுது இந்தப் பிள்ளை நீ சங்கீதம் படிக்கிறீரா?"
'இல்லை" எங்கட வவுனியா மாவட்டத்துக்கே சங்கீதப் பாடம் இல்லை. ஆக மகாவித்தியாலத்தில ஒரு மாஸ்ரர் இருப்பார் இந்தத் தமிழ் தினப் போட்டி மாதிரி எதும் போட்டி வந்தால் அந்த ஒரு ஆசிரியர் எல்லாப் பாடசாலைக்கும் நிகழ்ச்சி நடத்துவார் போய். ச ரி க ம ப த நி ஸ ஸ நி த ப ம க ரி ஸ என்ற அந்த சுரங்களைக் கூட நாங்கள் எங்கையோ படிச்சப் பிள்ளைகளிட்டக் கேட்டுப் பார்த்ததுதான் ஒளிய அதில சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு வராது.

சினிமாப் பாட்டக் கேட்டிங்களண்டா 'வராத மழைதனிலே வரு ஜோரான கௌதாரி இரண்டு" இந்தப் பாட்டு ஒரு பிரபலமான விருப்பமான பாட்டு 'பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே" தோக்கு தூக்கில வந்த ஒரு பழைய பாட்டு இந்தப் பாட்டப் படிக்கச் சொல்லிக் கேக்கிறாங்கள் ஆம்பிளையள். எனக்கு விவரம் தெரியாது நான் நல்லாப் பாடுவன் 'ஒய்யாரக் கொண்டையிலே தாளம் பூவா அதனுள்ளே இருக்கிறது ஈரும் பேனாம். இளமையா உணர்ந்தவனே புத்திமானாம் மேனி மினுக்கும் பெண்டுகள பார்த்திடானா பெண்களை நம்பாதே கண்களே" எண்டு அப்படியே போகும் அந்த வரி நாங்களே பாடுவோம்.

இந்தப் பாட்டக் கேக்கறதுக்காகக் கொஞ்சம் ரசிகர் கூட்டம். கிராம அடிப்படையிலேயே, மற்றும் கடிதம் எழுதுறது. எல்லா வீட்டுக்கும் நாங்க தான் கடிதம் கொடுக்கோணும். இப்ப சொன்னாலே நெஞ்சு விறைக்குது.
ஆசிரியர் காப்பாற்றினது ஐந்தாம் ஆண்டு படிக்கேக்குள்ள கடிதம் எழுதினா '.....வந்திட்டுப் போகட்டாம்" அங்கப் போனாச் சொல்லுவேர் 'ஒரு எம்பலப்பும், கடிதாசியும் வைச்சுக் கொண்டு இன்றும் .....மகன் அறிவது" என்ற ஒரு கடிதம்
அவர் சொல்லச் சொல்ல நான் எழுதி அதைக் கொடுக்கிறது.

எங்களுடைய அப்பா சொன்னார் ஐஞ்சாம் வகுப்பில 'பிள்ளை நீ இப்ப காகிதம் எல்லாம் எழுதுவாய் தானே, பிள்ளைக்கு எழுதப் படிக்க எல்லாம் தெரியும்தானே, சீனா அண்ணேக்கெல்லாம் எழுதிக் கொடுத்தனியாம், இனிக் காணும் அம்மா பிள்ளை நில்லுங்கோ குரங்குக் காவலுக்கு ஆளில்லை. குரங்கு காவலுக்குப் போகோணும். ஆனபடியா படிச்சது காணும். பிள்ளைக்கு எனி எழுதப் படிக்கத் தெரியும் தானே. இனி பிள்ளை கதைப் புத்தகம் எல்லாம் படிக்கும் வயதுதானே.

எண்டோன்ன நான் ஓம் அப்பு. அப்பு சொன்னாச் சரி. சாகும் வரைக்கும் அப்பு போன வருசம் தான் செத்தவர். சாகும் வரைக்கும் அப்பு சொன்னா அந்த கோட்டத் தாண்டமாட்டன் நான். சரி எண்டுட்டன். நிண்டாச்சு பள்ளிக்கூடாத்தாலையும் நிண்டாச்சு. நிண்ட பிறகு மாஸ்ரர் ஓடிவந்துட்டேர். வீட்ட வந்து கேட்டார் 'ஏன் இவள் பள்ளிக்கு வரேல்ல" எண்டு

அப்பு சொன்னேர் 'குரங்குக் காவலுக்கு ஆளில்லை மாஸ்ரர், பள்ளிக்கூடத்துக்கு விட்டு நாங்க என்ன செய்றது மாஸ்ரர்,நாங்கள் ஏழைக் குடும்பம் அதைச் செய்து முன்னேறினால் தானே - நாங்களும் சாப்பாட்டுக்கு விளைச்ச பயிர குரங்குக்கு விட்டிற்று என்ன செய்றது. பிள்ளைய குரங்குக்குக் காவல் விட்டிருக்கு"

'பேமனிசா குரங்குக் காவல் முடிய அவள அனுப்பு. பழுதாக்கிப் போடாத அவள் மாவட்டப் பரிசு வாங்கினவள். மாகாணப் பரிசு வாங்கினவள். நீ இப்படி விசர் கதை பறையாத அனுப்பிப்போடு" என்று.

அது போலதான் இந்த நுளம்பண்ண அடிக்க வந்த அந்த அதிகாரி தன்ர வேலையா விட்டிற்று வந்து அப்புவோட கதைக்கிறார்

'இந்தப் பிள்ளைய எனக்குத் தாருங்கோ நான் கொண்டே சங்கீதம் பழக்கிறன்" அவர் அருணா செல்லத்துரையினுடைய மாமனார்.. அவர் வந்து கேட்கிறார்.

அப்பு சொல்லிப்போட்டேர் 'அவள விட்டிற்று நான் ஐஞ்சு நிமிசம் இருக்க மாட்டன்" பாடசாலையில சுற்றுலா போங்கள் சனம் பிள்ளைகள் எல்லாம் போங்கள் ஒரு இரண்டு ரூபா காசு தந்து என்னையும் அனுப்பு அப்பு எண்டா அது விடாது

'உன்னை விட்டிற்று நான் என்னெண்டு இருக்கிறது" எண்டு. ஒரு காலத்திலும் நான் ஒரு சுற்றுலாவுக்கும் போனதில்லை. எங்கட பாடசாலையில இருந்து அந்த பாடசாலை வளவைத்தாண்டிக் கொஞ்சம் தள்ளி அங்கால விளையாட்டுப் போட்டி எண்டா கூட அனுப்பமாட்டேர்.

யார நம்பி பிள்ளைய விடலாம் விடேலாது. அது நான் தான் வரவேணும். வாத்தியார நான் என்னெண்டு நம்பிறது. எண்டு எனக்குச் சொல்லி சமாளிச்சுப் போடுவார். இப்படியே என்ர வாழ்வு இருளுக்க இருந்தது.

தொடரும்

நேர்கண்டவர்: தமிழன்பன் (ஐவான்)
Quelle - Erimalai