மொழி நிலத்தை தேடும் குரல்
மரியா ரெய்மோன்தெஸ்னுடன் ஓரு நேர்காணல்
சந்திப்பு: மாலதி மைத்ரி
சாயலில் வட இந்தியப் பெண்ணைப் போல் தோற்றமளிக்கும் மரியா ரெய்மோன்தெஸ் மெய்லன் 1975ல் லுகோவில் பிறந்தவர். இலக்கியம் மற்றும் உரையாடல்களை மொழிபெயர்க்கும் பணியில் உள்ளார். இவரது தாய்மொழி கலிஷியா. இந்தியாவில் இருக்கும்போது இந்திய உடைகளை அணிவது பிடித்திருப்பதாக கூறுகிறார். இவரது முதல் தொகுதி மோடா கலியா (கலிசியன் ஃபேஷன்) நுகர் பொருள் கலாச்சாரம், கலிசிய பண்பாடு, பெண் உடல் மற்றும் பால்நிலை பற்றிய கவிதைகளைக் கொண்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு இவரது காடர்னோ தே பிட்டகோரா (Ships’s log) என்ற நாவலுக்கு Mullers Progresistas விருது வழங்கப்பட்டது. இந்நாவல் போலி விஞ்ஞான கற்பனையை அடிப்படையாகக் கொண்டது. மனித உறவுகள், தனிமை மற்றும் காதல் பற்றிய சிக்கலைப் பேசுகிறது.
‘உஷா’ என்ற இவரது நாவல் கலிசியாவிலும் கர்னாடகாவிலும் வாழ நேர்ந்த ஒரு இளம் பெண்ணின் கதையைக் கூறுகிறது. இந்நாவலுக்கு 2005 இல் ‘பிரைமோ மெர்லின் தே விட்டராட்டுரா இன்ஃபான்டில்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. பின்னல் தொழிலில் ஈடுபடும் ஆறு வேறுபட்ட பெண்களைப் பற்றிய கதையைக்கூறும் “ஓ கிளப் தா கல்சிடா” நாவல் 2005 ஆம் ஆண்டில் ‘Premio Xerais’ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்நாவல் இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
விரைவில் ஸ்பானிஷிலும் வெளிவர உள்ளது. இக்கதை திரைப்படமாக்கப்பட்டுள்ளது. மரியா செய்தித்தாள்களிலும் எழுதி வருகிறார். விகோ பல்கலைக்கழகத்தின் பெண்ணிய ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார். கலிஷியன் மொழியில் மொழியாக்கம் செய்ப்பட்ட தமிழ் பெண்கவிஞர்களின் நூல் இந்தமாதம் வெளிவர இருப்பதாக குறிப்பிட்டார். ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி வந்த இவருடைய குழுவுடன் “கடற்காகம்” உணவுவிடுதியில் மூன்றுமணிநேரம் உரையாடினேன். மணிமேகலை மூலம் இவர் நேர்காணலை முடிப்பது என்று திட்டமிடப்பட்டு பிறகு முடியாமல், மின்னஞ்சல் மூலம் ஸ்பெனிலிருந்து இப்பேட்டியை அனுப்பிவைத்தார்.
உங்களைப் பற்றி சொல்லுங்க?
மரியா: எனக்கு முப்பத்திரண்டு வயதாகிறது. கலீஷியாவில் உள்ள லூக்கோவில் நான் பிறந்தேன். எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே நான் எழுதத் தொடங்கினேன். அவ்வாறு எழுதுவதென்பது நான் இந்த உலகில் இருப்பதற்கான இயற்கையான வழியாக எனக்கு எப்போதும் மனதில் பட்டது. என் இளம் வயதிலிருந்தே ஆண்கள் மற்றும் பெண்கள் இடையிலான அசமத்துவங்கள் பற்றியும், வடக்கு மற்றும் தெற்கு இடையிலான அசமத்துவங்கள் பற்றியும் தெரிந்திருந்தது.
மேலும், வாழ்க்கையின் மிக இளம் பருவத்திலிருந்தே, அதாவது எனக்கு பதினெட்டு வயதாய் இருக்கும் போதே, நான் இந்த உலகை மாற்ற வேண்டுமெனத் தீர்மானித்திருந்தேன். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, ஒரு வளர்ச்சித் திட்டத்தில் பணியாற்றுவதற்காக இந்தியாவிற்கு வந்தேன். அதன்பிறகு, 1998-ல் நான் ஒரு கலீஷியன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினேன். தற்போது அது இந்தியாவிலும் எத்தியோப்பியாவிலும் நடைபெறும் திட்டப் பணிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மேலும் வெறும் மேம்போக்காக அன்றி, உண்மையாகவே வறுமையின் சூழ்நிலையில் வாழும் என் நாட்டு மக்களின் வாழ்முறையை மாற்றுவதற்காக, அது முயன்று வருகிறது.
முதல் படைப்பு எப்போது வெளியானது? உங்கள் படைப்பாக்கங்களின் கதைத்தளம் என்ன?
மரியா: எனது முதல் புத்தகம் Moda Galega 2002-ல் வெளியானது. அதுவொரு கவிதைத் தொகுதி. இதுவரை இரண்டு நாவல்களும், சிறுவர்களுக்கான ஒரு நாவலும், அவர்களுக்கான 6 சித்திர புத்தகங்களும் மற்றும் பிற ஆசியர்களோடு சேர்ந்து சில படைப்புகள் வெளியாகியுள்ளன.
கலீஷியா என்பது ஸ்பானிஷின் வட்டார மொழியா அல்லது மலையாளம் போன்று கிளை மொழியா?
மரியா: கலீஷியன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள், லத்தீன் மொழியிலிருந்தே வளர்ச்சியுற்றன. எப்படி போர்ச்சுகீசு, இத்தாலி, ஃபிரென்ச் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சி பெற்றதோ அது போலவே. 14ம் நூற்றாண்டுவரை கலீஷியனும் போர்ச்சுகீசும் ஒரே மொழியாக இருந்தது. அதன்பிறகு அரசு பிளவுண்டு கலீஷியா, ‘கஸ்டில்’லின் பகுதியானது (கஸ்டில் - பிற்கால ஸ்பெயின் நாடு) மற்றும் போர்ச்சுகல் தனிநாடாக ஆனது. கலீஷியன் மொழி நான்கு நூற்றாண்டுகளுக்குத் தடைசெய்யப்பட்டது. அக்காலக்கட்டம் முழுவதற்கும் எந்த ஒரு எழுத்துப்பிரதியும் இல்லை. கிட்டத்தட்ட இந்த மொழி வாய்மொழியாகவே பிழைத்திருந்தது, ஒரு அற்புத மகிமை என்றே சொல்ல வேண்டும்.
1939-ல் நடந்த அரசியல் கிளர்ச்சி மற்றும் உள்நாட்டுப் போர் தொடங்கி 1975 வரை வந்த சர்வாதிகார ஆட்சிவரையில் கலீஷியன் மொழி மீண்டும் தடை செய்யப்பட்டு தங்களின் சொந்த மொழியை பேசியதற்காகவும், பேசுவதற்கு உரிமையுள்ளதென உரிமை கொண்டாடியதற்காவும் பல கலீஷிய ஆண்களும் பெண்களும் கொல்லப்பட்டனர். கலீஷியன் மொழியானது போர்ச்சுகீசிய மொழிக்கு மிகவும் நெருக்கமானது மற்றும் போர்ச்சுகீசிய மொழிக்குத் தாயாகவும் கருதப்படுகிறது.
ஸ்பெயினில் பெண்படைப்பாளிகள் சுதந்திரமாக இயங்க முடிகிறதா? எழுத்தின் மீதான தணிகையும் கண்டனத்தையும் எதிர்கொள்ள நேர்கிறதா?
மரியா: கலீஷியாவில் பெண்ணிய எழுத்தாளர்கள் நிறைய பேர் இல்லை. அப்படிப்பட்ட எழுத்தாளர்களாக பாவித்துக்கொண்டு எழுதும் எங்களைப் போன்றவர்களை எங்களின் கருத்துக்காகவும், அறிக்கைகளுக்காகவும் மற்றும் படைப்புக்காகவும் எப்போதும் விமர்ச்சிக்கப்படுகிறோம். எந்தவொரு தெளிவான அரசியல் கடப்பாடு கூட இல்லாமல் எழுதும் பிற பெண் எழுத்தாளர்கள்கூட எப்போதும் வெளிப்படையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.
உங்கள் நாட்டு பெண்ணிய இயக்கம் சமீபத்தில் குறிப்பிடும்படியாக என்ன பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியது. நீங்கள் பெண்ணிய இயக்கங்களுடன் இணைந்து இயங்குகிறீர்களா?
மரியா: எங்களுக்கு, பெண்ணியம் என்பது தனிநபர் எதிர்ப்புரைகள் அல்ல. மாறாக, அன்றாட விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுதலும் அவற்றை மாற்றுதலும் என்ற பொருண்மை கொண்ட ஒன்று. சமீபத்தில் ‘வீகோ’வில் பெண்கள் உலகப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக கலீஷியா தேசம் முழுவதும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் மாதம் 25-ம் தேதியை பெண்களுக்கு நிகழ்ந்தப்படும் வன்முறைக்கு எதிரான அனைத்துலக நாளாக நினைவு கூர்வதன் பொருட்டு, நவம்பர் 25-ம் தேதியன்று பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படுகிறது. மேலும், ஒரு பெண் பாலின வன்முறையால் கொல்லப்படும் போதெல்லாம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்துகின்றனர். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இத்தகைய ஆர்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை அடிக்கடி நடத்த வேண்டியுள்ளது.
ஐரோப்பிய பெண்ணிய இயக்கங்கள் மூன்றாம் உலகப் பெண்களின் உரிமைக்காகவும், அவர்களின் மீதான சுரண்டலுக்கெதிராகவும் என்ன மாதிரியான செயல்திட்டங்களை வைத்துள்ளன? இல்லை ஐரோப்பிய பெண்ணியவாதிகளுக்கு மூன்றாம் உலக பெண்களின் பிரச்சனைகள் மீது அறியாமையுடன் இருப்பதாக நினைக்கிறீர்களா?
மரியா: தற்போது ஐரோப்பிய பெண்ணியவாதிகள், உலகம் முழுவதிலுமுள்ள சூழ்நிலையை அலட்சியப்படுத்த முடியாது. உண்மையாகவே, சில சிக்கல்கள் வெறும் உள்ளூர் மட்டத்திற்கானதாய், அவை கலீஷியா அல்லது ஐரோப்பிய வட்டத்தில் மட்டும் பொருந்தக்கூடியதாய் மற்ற சூழ்நிலைக்கு பொருத்தமற்றும் இருக்கக்கூடும். (உதாரணமாக, எங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. இங்கே பெண்ணினம் மைய நீரோட்டத்திற்கு வருதல் ஒரு முக்கிய கருத்தாகியிருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகளில் மக்கள் நல அரசுகள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளதால், ஐரோப்பாவின் பலபகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு கடுமையான பின்விளைவுகள் ஏற்படும்.) ஆனால் ஐரோப்பாவிற்கு மூன்றாம் உலக நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களும் விவாதங்களில் இடம் பெறுகிறார்கள். இது விவாதங்களை செழுமைப்படுத்துகிறது. இது போன்ற ஏதோ ஒன்று இந்தியாவில் குறைவதாக எனக்குப்படுகிறது. இங்கே வெறும் இந்தியாவிற்கு உரிய கருத்துக்களே விவாதங்களாக சுற்றிவருகின்றன. மற்றும் உலகின் பிற பகுதிகளான லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா அல்லது கரீபியன் போன்ற நாட்டுப் பெண்கள் பிரச்சினைகள் பற்றிய மெல்லிய தொடர்புடன்.
கல்வி, வேலை வாய்ப்பு, அரசதிகாரம் போன்ற துறைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உரிய முறையில் கிடைக்கிறதா? இன்னும் நீங்கள் போராடி பெறும் சூழலில் இருக்கிறீர்களா?
மரியா: கலீஷியாவில் கல்வியைப் பொருத்த மட்டும், பல்கலைக்கழக அளவில்கூட ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கை மிகுதியாக இருப்பினும், பெண்கள் இன்னும் அதிகமாக போராட வேண்டியுள்ளது. 100 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்கள். ஆனால் வேலை வாய்ப்புச் சந்தையைப் பொருத்தவரை, ஆண்களே அதிகாரப் பதவிகளில் உள்ளனர். அரசியல் பங்கெடுப்பை எடுத்துக் கொண்டால் இந்த நிலை இன்னும் மோசம். கடந்த ஆட்சி மாற்றத்தில்தான் கலீஷிய மற்றும் ஸ்பானிஷ் அரசியலில் 50 சதவீத அமைச்சர்களாக பெண்கள் அமர்த்தப்பட்டனர்.
வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். இது அதிகாரத்திற்கு வந்த சோஷலிச கட்சியின் அரசியல் முடிவால் நிகழ்ந்தது. அப்படி இல்லையென்றால் அரசியலில் பெண்களின் பங்கெடுப்பும் அதிகார பகிர்வும் மிகவும் குறைவாக இருந்திருக்கும். ஆண்கள் செய்யும் அதே பணிகளுக்கு கூட பெண்கள் மிகக்குறைந்த ஊதியத்தையே பெறுகிறார்கள். இன்றும் பெண்கள் சமூக ரீதியாக வீட்டுக்கும் குடும்பத்திற்கும் மட்டுமே பொறுப்பானவர்கள் என்று கருதப்படுவதால், அவர்கள் ஆண்களைக் காட்டிலும் இருமடங்கு அல்லது மும்மடங்கு உழைக்க வேண்டியிருக்கிறது.
திருமணம், குழந்தை பெறுதல், கருக்கலைப்பு, சொத்துரிமை ஆகியவற்றுக்கான சமூக வழக்கங்களும் பெண் உரிமைகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகள் என்ன? பெண்கள் தங்கள் உரிமைகளை பெற சட்டரீதியான பாதுகாப்புள்ளதா?
மரியா: எங்கள் சமூகத்தில் சட்டத்தின் முன்பாக பெண்கள் ஆண்களும் சமமானவர்கள். பெண்களின் உரிமைகளை சீர்குலைப்பதான, வரதட்சணை போன்ற, சமூக பழக்கங்கள் இல்லை. ஆனாலும் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்கப்படும் மரபார்ந்த கல்விமுறை பெண்கள் வீட்டு பொறுப்புக்கே உரியவர்கள் என்றே கருதுகிறது. அவர்களின் நடத்தைகள் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம் பெண்கள் பார்ப்பதற்கு லட்சணமாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிள்ளைகளை வளர்க்கவும், வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உழைக்கவும் வேண்டுமென்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. குடும்பத்திற்குள் வன்முறை என்பது சதாரணமானதாக இருக்கிறது. சமூகத்தில் சட்ட பாதுகாப்பு சிறிதளவு ஆதரவு பெண்களுக்கு கிடைத்தாலும் பழமைவாதிகள் இதுபோன்றவற்றை பொதுவில் விவாதிக்கக்கூடாது என நினக்கின்றனர். எனவே ஏதேனும் வன்முறையைப் பெண்கள் சந்திப்பார்களானால் அதற்கு அவர்களே பொறுப்பு எனக் கருதுகின்றனர்.
பெண் மீதான வன்முறைக்கெதிரான சட்ட பாதுகாப்பாவது உங்கள் பெண்களுக்கு பூரணமாக கிடைக்கிறதா? வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்களா?
மரியா: வெறும் 4 கோடி மக்களே உள்ள ஸ்பெயின் நாட்டில், ஆண்டு தோறும் 100க்கு மேலான பெண்கள் தங்களின் கணவர்கள் அல்லது முன்னாள் கணவர்களால் கொல்லப்படுகிறார்கள். “ஆண்களும் வீட்டுப் பணிகளை பெண்களோடுப் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்ற கருத்து கொள்கையளவிலேயே உள்ளது. நடைமுறையில் பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கு வாழ்க்கை துணை அமைந்தபிறகு வீட்டுவேலை போன்ற அற்ப விஷயங்களை பெண்களே செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். என் சொந்த குடும்பத்தில் என் மாமன் அடுப்படி வேலை எதையும் தொட மாட்டார்.
சாப்பிட்டத் தட்டைக்கூட கழுவ மாட்டார். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். என் அத்தைக்கு ஒரு கடை உண்டு. தினமும் 1 கிலோ மீட்டர் நடந்து சென்று அவரது பெற்றோருக்கு சமைக்க வேண்டும். அவர்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமல்ல. என் மாமனின் வயதான அம்மாவையும் கவனித்துக்கொள்ள வேண்டும். கடையையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
போதாக்குறைக்கு வீட்டு வேலைகளை செய்வதல்லாமல் அடிக்கடி விருந்துக்கு வரும் மாமனின் நண்பர்களுக்கும் சேர்த்து சமைக்க வேண்டும். என் அத்தை மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா பெண்களுக்கும் இது பொதுவானது.
தனித்து வாழும் பெண்களை குறித்த இன்றைய சமூக, அரசியல் கண்ணோட்டம் என்ன? அவர்கள் உண்மையிலேயே தளைகள் அற்று வாழ்வதாக உணருகிறார்களா? குடும்பப் பெண்களை விட தனித்து வாழும் பெண்கள் வித்தியாசப்பட்டவர்களாகவும் தனியாளுமையுடன் இருப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளதா?
மரியா: எங்கள் சமூகத்தில் திருமணம் ஒரு கட்டாயம் அல்ல. நிறைய பெண்களும் ஆண்களும் தனித்து வாழ்கின்றனர் அல்லது சேர்ந்து வாழ்கின்றனர். இன்று இது சர்வசாதாரணமான ஒன்று. ஆனால், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கத்தோலிக்க சமூகத்தில் பெண்ணும் ஆணும் திருமணமின்றி சேர்ந்து வாழ்வது பெரும் பாவமாக கருதப்பட்டது. தனிப் பெண்கள் போராடுவதிலிருந்து விடுபடவில்லை. ஆண்கள் தங்களுக்கு சமமானவர்களாகப் பெண்களை ஏற்றுக்கொள்வதில்லை. பல பெண்கள் ஆணின் இந்நிலைப்பாட்டை ஒத்துக் கொள்வதில்லை. இதனால் அவர்களுக்கு காதல் கிடைக்காமல் போகிறது. மற்றொரு புறத்தில் பல ஆண்கள் பெண்களை ஏதோ முழுமை பெறாத மனித உயிர்களாகவே காண்கின்றனர். இப்போதெல்லாம் பெண்கள் கணவன் இல்லாமலே பெற்று வளர்க்கும் விருப்ப உமைகள் உள்ளன. (இது ஒரு நகர்புற நடுத்தர வகுப்புப் பெண்களின் வாய்ப்பு மட்டுமே) ஆனால் சமுதாயமோ பெண்கள் பிள்ளை பெற்றுத்தர வேண்டுமென ஒரு அழுத்தத்தை உண்டாக்குகிறது. அப்படி நடந்துக்கொள்ள மறுப்பவர்களை அசாதரணமான பெண்களாக கருதுகிறது.
உலகெங்கிலும் பெண் எழுத்துக்கான வாசக தளமும் சந்தையும் எப்படி உள்ளது? பதிப்பகம் மற்றும் ஏஜென்டுகள் பெண் படைப்புகளை வெளியிட ஆர்வம் காட்டுகிறார்களா?
மரியா: உலகளவில் பல பதிப்பகத்தார்கள் பெண்களின் எழுத்துகளுக்கு ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்கள். மேலும் சில சந்தர்பங்களில் நமது படைப்புகள் வியாபாரப் பண்டங்களாகிவிடுகின்றன. கலீஷிய இலக்கியத்தை பொருத்தமட்டில் பெண் எழுத்தாளர்களால் செய்யப்பட வேண்டிய வேலை நிறைய உள்ளது. பெண்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் மிகக்குறைவு.
லத்தீன் அமெரிக்க இலக்கியம் உலகெங்கிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் இதை எப்படி பார்க்கிறீர்கள். வேறொரு கண்டத்தின் இலக்கியமாக வாசிக்கப்படுகிறதா?
மரியா: நான் ஸ்பானிஷ் மொழியில் எழுதுவதில்லை. எனவே, எனக்கு அந்த மொழியுடன் அதன் இலக்கியத்துடன் தொடர்பில்லை. இன்னும் கூட ஸ்பானிஷ் மொழியானது எங்கள் மேல் திணிக்கப்படுவதால், இது எனக்கானதோர் அரசியல் நிலைப்பாடாகவும் உள்ளது
இன்று மேஜிகல் யாலிசம் என்ற உத்தி பெரிய வகைமையாக உருவெடுத்துள்ளது. தமிழில் இந்த நரேட்டிவ் பாணியில்தான் பெரும்பாலான படைப்புகள் வெளிவருகின்றன. இம்மாற்றம் ஸ்பெயினில் நடந்ததா? போர்ஹேவும், மார்க்வெஸும் தமிழ் இலக்கிய கடவுளர்களாக மாறிவிட்டனர்.
மரியா: உண்மையாகவே மாய எதார்த்தவாத கதை சொல்லும் முறையை கலீஷிய எழுத்தாளரான ‘ஆல்வரோ கன்கய்ரோ’ (Alvaro cunqueiro) போர்ஹே, மார்க்வெஸ் போன்றோர்க்கு முன்பே உருவாக்கியவர். மேலும், அவரின் எழுத்துக்கள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. எனவே, மேற்கூறிய இரண்டு பேரும் அவர்களின் பெருமைமிக்க கருத்துக்களை ஸ்பானிஷ் மொழியில் வந்த மொழிபெயர்ப்புகளை கற்றபின் பெற்றிருப்பார்கள் என நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.
தமிழ் நாட்டுக்கு முதலில் வந்தது எப்போது? இங்கு உங்கள் பணி மற்றும் செயல்பாடுகள் என்ன?
மரியா: கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் முன்பு. அதற்கும் முன்பாக நான் கர்நாடகாவில் கொஞ்சம் காலத்திற்கு பணியாற்றிக்கொண்டிருந்தேன். நான் நினைவு கூரக்கூடிய அளவிற்கு எதுவும் தனித்த சிறப்புடைய செய்திகள் இல்லை. நான் தமிழ்நாட்டைப் பற்றி நிறைய அறிந்துகொண்டது காலப்போக்கிலேதான்.
தமிழ் பெண் எழுத்துக்கள் மீது உங்கள் ஆர்வம் எப்படி உருவானது. உங்களுக்கு தமிழும் தெரியாது. மேலும் பெண்களின் எழுத்துகள் ஆங்கிலத்தில் கிடைப்பதில்லை. மணிமேகலை உங்களுக்கு உதவினார்களா?
மரியா: ஆங்கில மொழியில் எழுதப்படும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் எனக்கு மிகவும் பரீட்சியமானவை. பிற இந்திய மொழிகளில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளையும் விரும்பி படிப்பேன். அதிர்ஷ்டவசமாக ‘கதா’ போன்ற நல்ல பதிப்பகங்கள் இது போன்று மொழியாக்கப் பணிகளை செய்து வருகின்றனர். கவிதையில் ஆர்வம் இருந்ததால் எனக்கு தமிழில் உள்ள பெண்கவிஞர்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைத்தது. நான் இணையதளத்தில் ஒருமுறை அலசும்போது சி.எஸ்.லஷ்மியின் கட்டுரையைக் கண்டேன். அதன் வழி குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி, மாலதி மைத்ரி மற்றும் பிற பெண்கவிஞர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. திருச்சியில் உள்ள எனது குடும்ப நண்பர்களான டாக்டர் மணிமேகலை மற்றும் அம்பலவாணன் அவர்களிடம் இக்கவிஞர்களைத் தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டேன்.
எத்தனை பெண் கவிஞர்களின் கவிதைகளை கலீஷியாவில் மொழியாக்கம் செய்தீங்க? அந்த அனுபவத்தை சொல்லுங்கள்?
மரியா: நான் நிறுவியுள்ள தொண்டு நிறுவனத்தின் வழியாக, மிகவும் ஆர்வமுடன் நாங்கள் செய்யும் பணி; இன்று மேற்கு உலகத்தில் தனது சொந்த நலனுக்காக உருவாக்கப்பட்டு உலவ விடும், வளரும் நாடுகளைப் பற்றிய பொய்களை (மக்கள் வறுமையில் இருந்தாலும், ஆனந்தமாக இருக்கிறார்கள்; வளரும் நாடுகளில் உள்ள பெண்கள் இணக்கமான பலிகடாக்கள். அவர்களுக்கு பாதுகாப்பு தேவை.) அடித்து தரைமட்டமாக்குவதே எங்கள் செயல்பாடாகும். எங்களின் கலீஷிய கலாச்சாரத்திற்கு மிக நெருக்கமான, அனைத்து கலாச்சாரங்களின் நல்ல அம்சங்களை கொண்டு வர நாங்கள் முயற்சிக்கிறோம். மேலும் பெண்கள் மேல்தான் எங்கள் கவனம் குவிக்கப்படுகிறது. எங்களின் புத்தகமான வணக்கம்/பென்விதாஸ் (Benvidas) இன் கருத்தானது, கலீஷிய மற்றும் தமிழ் பெண்கவிஞர்களின் படைப்புகளை சேகரிப்பதாகும்.
ஆண்டாளின் ஒரு பாடலை நாங்கள் கலீஷியனில் மொழியாக்கம் செய்தோம். அதேபோல், முன்பு குறிப்பிட்ட தமிழ் பெண் கவிஞர்களின் கவிதைகளையும் மொழியாக்கம் செய்துள்ளோம். அந்நூல் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த மொழியாக்க அனுபவமானது என்னை மிகவும் செழுமைப்படுத்தியது. ஏனெனில் அவர்களின் அதிசயத்தக்க கவிதைகளைப் படித்தது என்னை நெகிழ வைத்தது. எழுச்சியுற வைத்தது. நான் நிச்சயமாக நம்புகிறேன்... அவை கலீஷியாவில் உள்ள பிறருக்கும் நெகிழ்ச்சியையும் எழுச்சியையும் தரும் என்று.
இந்த நூலில் பங்குகொண்ட சில கலீஷிய பெண்கவிஞர்களும் தங்களது பாராட்டுகளை தெவித்துள்ளனர். தமிழ் கவிதைகளின் வழியாக பிறநாட்டு பெண்கவிஞர்களின் வெளிகளை இதுவரை கேள்விப்பட்டிராத வெளிகளை நம் நாட்டு பெண்கள் பகிர்ந்து கொள்வதை நான் ஒரு பெருமையாக கருதுகிறேன். எனது கலாச்சாரத்திற்கு உலகத்தின் பிற பகுதிகளில் வாழும் பெண்களின் குரல்களுக்கான வெளிகள் திறப்பதனால், எனது மக்கள் மேலும் சிறப்படைவர். வறுமையின் வேர்களை களைந்து எறிவதற்கும் அது துணைபுரியும் என நான் மெய்யாகவே நம்புகிறேன்.
நாம் சமதையானவர்கள் என்ற எண்ணத்தோடு செயல்படவும், நாம் சமதையானவர்கள் என்ற அக்கறையோடு ஒருவருக்கு ஒருவர் பிரச்சினைகளை செவிமடுக்கவும் வேண்டும். இதுவரை நான் சந்தித்த தமிழ் பெண்கவிஞர்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். குறிப்பாக அவர்களின் துணிச்சலுக்காக. நான் நீண்ட காலமாக இங்கு வசித்து வருவதால், கிட்டத்தட்ட ஏற்கனவே பாதி தமிழச்சியாகிவிட்டேன். அதனாலேயே இந்த மாபெரும் சாதனைகளை இந்த பெண்கள் நிகழ்த்தியுள்ளதை நான் புரிந்து கொள்கிறேன். முறையாக பாராட்டவும் செய்கிறேன். எதிர்கால மனிதகுலத்தைப் பற்றிய நல்ல நம்பிக்கையை இவர்கள் எனக்கு அளிக்கின்றனர்.
ஐரோப்பிய பெண்ணின் வாழ்நிலைக்கும் தமிழ் பெண்ணின் வாழ்நிலைக்கும் இடையில் என்ன விதமான வித்தியாசங்களும் பாரபட்சங்களும் இருப்பதாக அவதானிக்க முடிந்தது?
மரியா: சில விஷயங்களில் மட்டும் வேறுபாடுகள் காணப்படுக்கின்றன. ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடுகள், வெவ்வேறு சமூகத்திலும் வெவ்வேறு வகையில் வெளிப்படுவதாகும். நான் மிகவும் எரிச்சல் அடைவது. இங்கு தமிழ்நாட்டில் உள்ளவர்களின் பொத்தாம் பொதுவான, மேலைநாட்டு பெண்கள் வாழ்க்கை முறைகளைப் பற்றிய மன அவசங்களைக் கேட்கும்போதுதான். ஏதோ மேலைநாட்டுப் பெண்கள் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்வது போலவும், இங்கு மட்டும் இல்லை என்பது போலவும் கொண்டுள்ள மனக் கருத்துகள் எனக்கு எரிச்சல் ஊட்டுகின்றன. நாம் எப்போதும் மறக்கக்கூடாத ஒன்று, எத்தகைய உரிமைகளை நாங்கள் மேற்கில் பெற்றிருந்தாலும், அது உடைகளை உடுத்திக் கொள்வதற்கான உரிமையாக இருந்தாலும்கூட- இவற்றை போராடியே பெற்றிருக்கிறோம்.
மேற்குலகில் பெண்கள் ‘பேண்டு’ அணிந்ததற்காக அடிக்கவும், கொல்லவும் பட்டார்கள் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. மேற்கில், பெண்கள் தங்களின் வாழ்க்கை விதி வசப்பட்ட ஒன்று என்பதை ஒப்புக்கொள்ளாமல் அதனை எதிர்த்துப் போராடினர். பலர் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். பொது சமூகத்தில் ஏளனத்தை எதிர் கொண்டனர். ஆனால் இன்று நாங்கள் அவர்களால் தான் மிகவும் கூடுதலான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். நாம் - கடந்த காலத்தில் நமக்கு முன்பாக பெண்களின் உரிமைகளுக்காய் போராடிய பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடம் பெறவேண்டும். அவர்களிடத்திலிருந்து துணிச்சல் பெற வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கும் எதிரான உறுதிகொண்ட ஒற்றுமைக்கான தொடர்புக் கண்ணிகளை உருவாக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருப்பதனால் மட்டுமே, நாம் சூழ்நிலையை மாற்ற முடியும்.
இருக்கும் நிலையை எதிர்ப்பதன் மூலம்தான் - குடும்பம், நண்பர்கள், சமூகம் ஆகியவற்றிற்கு எதிராக நடக்க வேண்டியிருப்பினும் நம்மால் தற்போதைய உலகை மாற்ற முடியும். தமிழ் பெண்கள் பெருன்பான்மையோர் தங்களது வாழ்க்கையை விதிப்படி ஆகட்டும் என்று ஒத்துக்கொள்வதை, நான் பல சந்தர்ப்பங்களில் பார்த்து வருகிறேன். நமது வாழ்க்கையின் விதியை நாம் தான் உருவாக்குகிறோம். தியாகங்களாலும் கண்ணீராலும். ஆனால் அதே சமயத்தில் நம்மைப் போன்று சிந்திப்பவர்களின் ஆதரவோடும் அது உருவாக்கப்படுகிறது. எதிர்கால தலைமுறை பெண்கள் இன்னும் உயர்வடைவர் என்ற நம்பிக்கையோடு சிந்திப்பவர்களால் தான் பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும்.
சமீபத்தில் தஸ்லீமா நஸ்ரின் ஹைதராபாத்தில் மத அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டார். உங்கள் நாட்டில் நீங்கள் கிருஸ்துவ மதத்தை விமர்சித்து படைப்புகளை வெளியிட முடியுமா? படைப்புச் சுதந்திரம் மறுக்கப்படுவது குறித்து உங்கள் கருத்தென்ன?
மரியா: எங்கள் சமூதாயத்தில் நாங்கள் கிருத்துவ மதத்தைப் பற்றி எதிராகக்கூட எழுத முடியும். இதற்கு அர்த்தம் கிருத்தவ மத நிறுவனம் இவற்றை விரும்பும் என்பதல்ல. ஆனால், நாங்கள் மதத்தின் கிடுக்கிப்பிடியில் இருந்து எங்களை விலக்கிக் கொண்டுள்ளதால், மதத்தினரிடமிருந்து எந்த ஒரு வல்லழுத்தமும் எங்களுக்கு இல்லை.
உலகமயமாதல், அதி நவீன நுகர்வு கலாச்சாரம் போன்றவைகளால் மேலும் மேலும் மூன்றாம் உலக மனிதர்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக ஐரோப்பிய அறிவுஜீவிகள் என்ன செய்கிறார்கள்?
மரியா: ஐரோப்பாவில் எங்கு பார்த்தாலும் வெகுமக்கள் நுகர்வு கலாச்சாரம் நிலவுகிறது. ஆனால் அதற்கு மாற்றான எதிர்ப்பு இயக்கங்களும் முக்கியமானவை. WHO விற்கு எதிரான ஆர்பாட்டங்களோ அல்லது உலகமயத்திற்கு எதிரான கூட்டங்களோ நிகழும்போது, அங்கே நிறைய ஐரோப்பிய மக்களை நாம் காண முடியும். பல விவாதக்குழுக்கள், ஆர்வலர் குழுக்கள் விவாதங்களை மேல் எடுப்பினும், அவை ஒரு பரந்துபட்ட சமுதாயத்தை எட்டுவதில்லை. ஆனால் இது ஏதோ புதிதான ஒன்றல்ல. எங்கும் காணக்கூடிய நிலைமைதான்.
எங்கள் நிலத்தில் கொள்ளையடிக்கப்படும் இயற்கை வளங்களும், கொல்லப்படும் நதிகளும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேப் போகிறது. வெள்ளையின மக்களின் ஆடம்பர நுகர்வு கலாச்சாரத்தை குறைத்துக்கொள்ள என்ன மாதியான நடவடிக்கை அரசியல் ரீதியாகவும் சட்ட பூர்வமாகவும் தேவைப்படுகிறது? இதில் உங்கள் பங்களிப்பு எந்த வகையில் உள்ளது?
மரியா: எந்த ஒரு கேள்விமுறையும் இல்லாமல், இன்று இந்தியாவில் நுகர்வு கலாச்சாரம் தழுவப்பட்டு வருகிறது. நுகர்வியக் கோட்பாடானது முதலாளியத்துவத்தோடு தொடர்புடைய ஒன்று. இதற்கான மாற்றை மக்கள்தான் உருவாக்க வேண்டும். மக்கள்தான் பன்னாட்டு முதலாளிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஐரோப்பாவில் முக்கியமான மக்கள் குழுக்கள் உள்ளன. மனிதர்களை சுரண்டும் நிறுவனங்களின் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதை தடுப்பர். ஆனால் இதுபோல ஒரு காட்சியை நான் இந்தியாவில் கண்டதேயில்லை. ஓர் உதாரணத்திற்காகக்கூட, குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஓட்டல்களில் உணவு அருந்தும் வழக்கத்தை தவிர்க்கும் மக்களை நான் பார்த்ததில்லை.
இத்தகைய ஒரு பழக்கத்தை தவிர்க்கும் போக்கை இங்கு உண்டாக்கி வலிமைப்படுத்த வேண்டும். இது போன்ற தலைப்புகளையே நான் எனது கவிதைகளில் கையாண்டு இது தொடர்பான ஓர்மையை வளர்த்தெடுக்க நான் முயன்று வருகிறேன். எனது ‘மோதா கலேதா’ கவிதைத் தொகுப்பில் நுகர்வு கலாச்சாரத்தை, பெண்களின் உடல்கள் அதற்கு பயன்படுத்தப்படுவதை, சுற்றுச்சூழலியத்தை மையக் கருத்தாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. மக்கள் முதலில் சிந்திக்க வேண்டும், பிறகு செயல்படவேண்டும். மேலும் நம்மைப் போன்ற பொதுவாழ்வு களத்தில் உள்ளவர்கள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி பிறர்க்கும் அத்தகைய எண்ணவோட்டங்கள் உருவாவதற்கு தூண்டுதலாக இருக்க வேண்டும். அதைத்தான் நான் என்னால் முடிந்தவரை முயன்று செய்து வருகிறேன்.
மாலதி மைத்ரி
உதவி: மணிமேகலை
தமிழில்: J. குப்புசாமி
Quelle- கீற்று Sep-Dec 2007
No comments:
Post a Comment