Wednesday, May 11, 2005

சம்பூர்ணம்மாள்(பூரணி)

தன்னுடன் பல்லாங்குழி ஆடிய தன் வயது தோழி திடீரென்று ஒரு நாள் வந்து ‘‘இனிமேல் நீ தான் என் சித்தி... என் அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக உன்னைத்தான் கல்யாணம் பண்ணப் போறாங்களாம்!’’ என்று சொன்னால் ஒரு பன்னிரண்டு வயது சிறுமிக்கு எப்படி இருக்கும்?

சம்பூரணியும் அதிர்ந்துதான் போனாள்.

‘‘முடியாது... நான் நாப்பது வயசுள்ள ஒருத்தரைக் கட்டிக்க மாட்டேன்!’’ என்று அழுதிருக்கிறாள். அவளுடைய தந்தையால் அதிகம் பணம் செலவழித்து, நல்ல இடத்தில், இளைஞனாக மாப்பிள்ளை பார்த்து தன் மகளுக்குத் திருமணம் செய்து தர முடியவில்லை.

ஆனால், அந்தப் பால் வடியும் சிறுமியின் அழுகையும், அந்த மனஉறுதியும் அவளுடைய அப்பாவை உலுக்கியெடுக்க, நல்ல வேளையாக அந்தத் திருமணத்தை நிறுத்தி தன் மகளுக்கு நிம்மதி தந்தார் அந்தத் தந்தை!...

இது நடந்தது கிட்டத்தட்ட எண்பது வருடங்களுக்கு முன்பு... அந்தச் சிறுமிதான் இன்று கவிஞராகவும், எழுத்தாளராகவும் உருவாகி, தன்னுடைய தொண்ணூறு வயதில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த பூரணி என்று அறியப்படும் சம்பூர்ணம்மாள்.

அப்பாவின் தமிழ்ப் புலமை, மகள் சம்பூரணியையும் தொற்றிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை. அதனால்தான் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த சம்பூர்ணம்மாளுக்கு மரபுக் கவிதைகள் எழுதும் அளவிற்குப் புலமை வந்திருக்கிறது.

பதினைந்து வயதில் வேறொரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொண்டு புகுந்தவீடு சென்ற சம்பூரணம்மாளுக்கு அந்த வீட்டின் வித்தியாசமான சூழலே முதன் முதலில் பாட்டெழுத வைத்ததாம்..!

‘‘புகுந்த வீடு ஒரு வியாபாரக் குடும்பம். ஆண்கள் காலையில் கடைக்குச் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார்கள். என் ஓர்ப்படிகள் வீட்டு வேலை, பகல் தூக்கம், அக்கம்பக்கத்தாரோடு அரட்டை என்று பொழுதைக் கழித்தார்கள். நான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் சென்று நான்கு சுவர்களையும் பார்த்துக் கொண்டு ஜடம் போல வீற்றிருப்பது ரொம்பத் துயரமாக இருந்தது.

அப்போதுதான் பாட்டெழுதிப் பார்க்கலாமே என்ற எண்ணம் உதித்தது. நான் பாட்டின் மூலம் என் மன உளைச்சலையும், வேதனையையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. என் மனதை ஈர்த்த நல்ல விஷயங்களைப் பாட்டாக்கினேன். தடங்கலின்றி வார்த்தைகள் வெளிப்பட்டு, பிசிர் இல்லாத மரபுக் கவிதைகளாக எழுத ஆரம்பித்தேன்’’ என்கிறார் சம்பூரணம்மாள்.

இவருடைய ஆர்வத்தைப் பார்த்த கணவர், நூலகத்திலிருந்து பல அரிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்து அவரை உற்சாகப் படுத்தியிருக்கிறார்.

எதேச்சையாக இவருடைய கவிதைகளைப் படித்த இவருடைய அண்ணன், தன்னுடைய மேடை நாடகங்களுக்கும் சம்பூரணம்மாளைப் பாட்டெழுத வைத்திருக்கிறார். அந்தப் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அதன்பிறகு சம்பூர்ணம்மாளுக்கு காங்கிரஸின் மீதும் காந்தியக் கொள்கைகளிலும் ஈடுபாடு அதிகம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் குடும்பமும், குழந்தைகளும் இருந்ததால் வீதியில் இறங்கி சுதந்திரத்துக்காகப் போராட முடியாத சம்பூர்ணம்மாள், தனது கருத்துக்களைப் பாட்டுகளாக இயற்றி, ஆண்களும் பெண்களும் கூடும் திருமணங்களின்போது பாட வைத்தார். வெறும் வாய் மொழியாக, அச்சில் ஏறாத நிலையிலிருந்த அந்தப் பாடல்கள் தமிழகம் முழுவதும் திருமணங்களின்போது அப்போதெல்லாம் பாடப்பட்டனவாம். இவை தவிர பல வில்லுப்பாட்டு வசனமும்கூட எழுதிக் கொடுத்திருக்கிறார் சம்பூரணம்மாள்.

பாரத மாதா மாதர் சங்கத்திற்குப் பணம் தேவைப்பட்டபோது இவரே முன்னின்று நாடகம் போட்டு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வசூலித்துக் கொடுத்திருக்கிறார். அந்தக்காலத்தில் இது ஒரு மிகப்பெரிய தொகை.

இதற்கிடையில் தான், தன்னுடைய ஒன்பது குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார் சம்பூர்ணம்மாள். ‘சித்தன்’, ‘பாரத ஜோதி’ போன்ற இதழ்களிலும்கூட இவருடைய கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன.

வீட்டு வேலை முடிந்தவுடன் எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பாராம். ஆனால் எழுதியவற்றை தபாலில் அனுப்பவோ, பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்க்கவோ, பிறரின் உதவி தேவைப்பட்டதால் எழுதிய படைப்புகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டு விடுவாராம்.

அவரது படைப்புகள் புத்தகமாக வெளிவந்தது அவருடைய தொண்ணூறாவது வயதில்தான். ‘பூரணி கவிதைகள்’ என்ற பெயர் கொண்ட அற்புதமான கவிதைத் தொகுப்பு அது!

சம்பூர்ணம்மாள் பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், ஒரு சீர்திருத்தவாதியாகவே வாழ்ந்துள்ளார். அவரிடம் இந்தி கற்க வந்த ஒரு விதவைப் பெண்ணுக்குப் பூ வைத்துக் கொள்வதில் மிகுந்த ஆசை உண்டாம். அதை அறிந்த சம்பூர்ணம்மாள் தனிமையில் அந்தப் பெண்ணுக்குப் பூச்சூட்டி மகிழ்வித்திருக்கிறார்.

தன்னுடைய மகன் காதலித்த பெண் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் என்ற போதும் பயப்படாமல் திருமணத்தை நடத்திக் காட்டியவர் இவர்.

இன்னொரு விஷயம் தெரியுமா...? சம்பூரணம்மாளின் மகள்தான் கவிஞர் கிருஷாங்கிணி.

‘‘வாழ்க்கையில் எத்தனையோ கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும், முடியாது என்ற வார்த்தை அம்மா வாயில் இன்றுவரை வந்ததே கிடையாது. முடிந்தவரை முயற்சி செய்வோம் என்பதுதான் அவரின் கொள்கை’’ என்று அம்மாவை பற்றிப் பெருமிதத்துடன் சொல்கிறார் கிருஷாங்கிணி.

இந்த மன உறுதிதான் அவரை தொண்ணூறு வயதிலும் துணி துவைப்பது, தானே குளித்துக் கொள்வது என்று தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளும் அளவிற்கு வைத்திருக்கிறது.

சம்பூரணம்மாளின் புத்தகம், இலக்கிய உலகில் பலரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அவரின் படைப்புகள் அத்தனையும் அடுத்தடுத்து இன்னும் பலப் புத்தகங்களாக வெளிவர இருக்கின்றன.

மு.வி. நந்தினி
Quelle - Kumutham-sinehithi