Sunday, March 21, 2004

பத்மாவதி நாக கனக ஸ்ரீவல்லி

இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். நடக்கிறதைப் பார்!


அந்த ஆறு வயதுக் குழந்தை மாடியின் மேல் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவளின் கை மின் கம்பத்தின் வயர்களின் மேல் பட்டது. கணத்தில் ஒரு கை, இரண்டு கால்கள் எரிந்து கறுகிப் போயின. பெற்றோர் அவளை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் பலன் இல்லாமல் போனது. இரண்டு கால், ஒரு கையைப் பறிகொடுத்து வீடு திரும்பிய அவளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கை ஊற்றி வளர்க்கத் தொடங்கினார்கள். அதனால்தான் உடல் ஊனமுற்றாலும் வைராக்யம் கொண்ட மனதுடன் வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவிக்கிறார் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சார்ந்த இருபத்து இரண்டு வயதுள்ள துடிப்புமிக்கப் பெண் பத்மாவதி நாக கனக ஸ்ரீவல்லி.

ஆம். அன்றைய ஆறு வயதுக் குழந்தை, தற்போது ஒரு கையினால் கம்ப்யூட்டரில் கீபோர்டில் மடமடவென்று டைப் செய்வாள். கால்கள் இல்லையென்றாலும் செயற்கை உறுப்புகளை அமர்த்தி பள்ளிக்கு அனுப்பினார் பத்மாவதியின் தந்தை மல்லிகார்ஜுன ராவ். “இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். இருக்கிறதை வைத்து எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியுமென்பது பற்றி யோசி” என்று எங்க அப்பா அடிக்கடிச் சொல்வாரென்று சொல்லும் பத்மாவதி, தந்தையின் சொல்லே வேத வாக்காக செயல்பட்டு பட்டப்படிப்பை முடித்தார். அப்புறம் தன்னுடைய தோழிகளில் பல பேர் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டிருக்க தானும் கற்றுக்கொள்ள முயன்றார் பத்மாவதி. இதைப் பார்த்து சில பேர் கேலி செய்ததுண்டு. ஆனால் சாஃப்ட்வேர் லாங்வேஜ்ஜைக் கற்றுக்கொண்ட பத்மாவதி, ஹார்ட்வேரையும் கற்றுக்கொள்கிறார்.

இதற்கிடையில் பத்மாவதி ஹோம் கார்ட் வேலைக்கு விண்ணப்பித்தார். எல்லாத் தகுதிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் அவருக்கு வேலை கிடைத்தது. தற்போது பத்மாவதி விஜயவாடா போலீஸ் கண்ட்ரோல் ரூமில் டிராபிக் பிரிவு கம்ப்யூட்டர் செக்ஷனில் வேலை பார்க்கிறார். படு சுறுசுறுப்பாக இருக்கும் பத்மாவதியைப் பார்த்து சக ஊழியர்கள் “தன்னம்பிக்கையின் முழு உருவம்தான் பத்மாவதி” என்று புகழ்கிறார்கள். விடைபெறும்போது “என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டதற்கு “எங்கப்பா சொன்னதுதான். இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். நடக்கிறதைப் பார்” என்று சொன்னார் பத்மாவதி.

- மூர்த்தி -
Quelle - Kumudham