Sunday, March 07, 2004

நசீம் பானு!


பாரதம் தந்த புதுமைப் பெண்!

ஒரு தாயின் கண் முன்னாலேயே அவளது வயது வந்த 13 வயது மகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டால் எப்படியிருக்கும்? மகளது மானத்தைக் காப்பாற்ற முனைந்த அவளது அன்புக் கணவனைக் கண் முன்னாலேயே படுகொலை செய்ததோடு மட்டுமல்ல அவளது மாமா, மாமி என அவளது உறவினர்கள் 24 பேரைப் படுகொலை செய்து ஆற்றினுள் வீசினால் எப்படியிருக்கும்? உங்களில் பலருக்கு 1983இல் நடைபெற்ற இலங்கை இனக்கலவரத்தின் நினைவு உடனடியாக ஞாபகத்தில் வரும். இது போன்ற பல நிகழ்வுகள் அக்கலவரத்தில் நடைபெற்று இலங்கை அரசியல் வரலாற்றினையே அடியோடு மாற்றி வைத்து விட்டன. ஆனால் அது போன்ற பயங்கர நிகழ்வுகளை இந்தத் தாய் இரு வருடங்களுக்கு முன்னர் கோத்ராவில் முஸ்லீம் வெறியர்களால் இந்துக்கள் பயணித்த புகையிரதம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் இந்து வெறியர்களால் அப்பாவி முஸ்லீம் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட இனக்கலவரத்தில் அனுபவித்திருக்கின்றாள். இன்று இவளுக்குகென்றிருக்கும் உறவுகள் இவளது 13 வயது மகனும், மைத்துனியொருத்தியுமே. இந்தப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது இவள் ஆஸ்பத்திரியிலிருந்ததால் உயிர் தப்பித்துக் கொண்டாள். ஆனால் ஆஸ்பத்திரியிலிருந்த இவளைப் பார்ப்பதற்காக வந்த இவளது உறவினர்களில் மைத்துனியொருத்தியைத் தவிர அனைவரும் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவியான மைத்துனியோ பலரால் பலர் முன்னிலையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டாள். இன்று அவள் பிழைத்திருந்தாலும் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். இவ்வளவும் நடந்து முடிந்திருக்கின்றது குஹராத்தைச் சேர்ந்த நசீம் பானுவின் வாழ்வில்.

இவ்வளவு நடந்தும் நசீம்பானு தன் துணிவினை இழந்துவிடவில்லை. இன்று அவள் நடந்து முடிந்த கொடும் செயல்களுக்காக நீதி வேண்டித் தனது போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றாள். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான சமூக விரோதிகளைச் சட்டம் தண்டிக்கும் வரையில் இவளது போராட்டம் ஓய்ந்து விடப்போவதில்லை. படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் வெளியில் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கும் பொழுது அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதால் எந்தவிதப் பயனுமில்லை. சட்டத்தின் தண்டிப்புக்குப் பின்னால் மட்டுமே அரசின் வருத்தத்துக்கு அர்த்தமிருக்க முடியும் எனக் கூறும் நசீம் பானு இன்று பாரதத்தின் நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து நீதியினை நாடி வழக்குத் தொடர்ந்திருக்கின்றாள். இவள் தனது வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் இவளது மகனைக் கடத்தப் போவதாகச் சமூகவிரோதிகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நசீம் பானு தன் உறுதியினை இழந்து விடவில்லை. அவளால் இழப்பதற்கு இனியென்ன இருக்க முடியும்? தனக்கு நீதி கிடைக்குக் வரையில் தான் ஓய்ந்து விடப்போவதில்லை என்று வைராக்கியத்துடன் இருக்கும் நசீம் பானு கடந்த இரு வருடங்களாக பெண்களுக்காகப் பாடுபடும் அரசு சார்பற்ற , இலாப நோக்கற்று இயங்கும் ஸ்தாபனமொன்றில் இணைந்து பாதிக்கப் பட்ட பெண்களின் உரிமைக் குரலாக விளங்கி வருகின்றாள். இவளது போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் தர்மத்துக்காக நடைபெறும் போராட்டங்கள் இறுதியில் என்றுமே வெற்றியினைத் தான் அடைந்து விடுகின்றன என்பதுதான் வரலாறு நமக்குக் கூறும் பாடம்!

நந்திவர்மன்
மூலம்: இந்து
nantri - Pathivukal