Monday, October 25, 2004

பேநசீர் புட்டோ

ஒரு முஸ்லீம் நாட்டிலும், பெண் பிரதமாராக முடியும் என்று காட்டியவர்

இப்போதுகூட இந்தப் பிரச்னைகள் பேநசீருக்கு முற்றிலும் விலகிவிடவில்லை. இன்னும்கூட சொந்த நாட்டுக்குள் நுழைந்தால் எதிரிகளால் கைது செய்யப்பட்டோ, கொல்லப்பட்டோ விடுவோம் என்ற சூழ்நிலையால், தனது குழந்தைகளுடன் லண்டனில் தலைமறைவாக வசித்து வருகிறார் பேநசீர். கணவரோ இன்னும் சிறைவாசத்தில்!

ஒரு இஸ்லாமிய நாட்டுக்கு முதன்முதலாக ஒரு பெண், பிரதமராக பதவி ஏற்றதற்குப் பின்னே நிகழ்ந்த அந்தச் சோதனைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. இதோ அவரது கதை...

பேநசீரின் அப்பா புட்டோ, பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதே அவருக்குத் திருமணமாகிவிட்டது. முதலில் புட்டோ தனது திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. காரணம் அவருக்குப் பார்த்திருந்த பெண் அவரைவிட எட்டு வயது பெரியவர்! பந்து, மட்டை, ஸ்டம்புகள் அடங்கிய ‘கிரிக்கெட் செட்’ ஒன்றைக் கொடுப்பதாக அவர் அப்பா ஆசை காட்டியதும்தான் புட்டோ அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தாராம். அந்தத் தம்பதிக்குப் பிறந்த முதல் மகள்தான் பேநசீர்.
51 வருடங்களுக்கு முன்பு பேநசீர் பிறந்த போது, அவர் அம்மா நுஸ்ரத், தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவியாக இருந்தார். கராச்சியில் சொந்தமாக ஒரு கார் வாங்கி அதை ஓட்டவும் செய்த முதல் பெண்மணியும் அவர் அம்மாதான்.

‘‘என்ன இது?!.. பெண்கள் காரோட்டலாமா? இது பெÊரும் தவறு!’ என்று எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் காரசாரமாக விமர்சித்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு தொடர்ந்து காரோட்டினார் என் அம்மா. இந்தப் புரட்சியைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. ஆனால் அதே சமயம், திருமணத்தைப் பொறுத்தவரை ரொம்பத் தீர்மானமான மரபு சார்ந்த கருத்துதான் அம்மாவுக்கு. என் எதிரிலேயே அப்பாவிடம் ‘எதற்கு இவளைப் படிக்க வைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்? அப்புறம் எவன் இவளை மணந்துகொள்ள ஆசைப்படுவான்?, என்று சொல்வார்’’_ இப்படித் தனது நூலில் குறிப்பிடுகிறார் பேநசீர்.

பேநசீர்தான் மூத்த பெண். மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் அவருக்கு. பேநசீரைக் கான்வென்ட் பள்ளியில் சேர்த்தார் புட்டோ. நுனிநாக்கு ஆங்கிலமும் உலக அறிவும் பேநசீருக்கு சுலபமாக வந்தது.
சின்ன வயதிலிருந்தே பேநசீருக்கு சரித்திரக் கதைகளையும், வி.ஐ.பி.க்களின் சுயசரிதைகளையும் படிப்பதற்கு ரொம்பப் பிடிக்கும். சாதனை புரிபவர்கள்மீது ஒரு தனி பிரமிப்பே உண்டு!

படிப்பைப் பொறுத்தவரை மகன்களையும் மகள்களையும் சமமாகவே நடத்தினார் புட்டோ. ஆனால் துப்பாக்கிப் பயிற்சி மகன்களுக்கு மட்டும்தான். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை பேநசீர் விவரிக்கும்போது அது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

‘‘தம்பிக்கு அப்பாவே துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தார். அப்போது ஒரு சமயம் நானும் அருகில் இருந்தேன். தம்பி குறிபார்த்துச் சுட்டான். என் காலடியில் ரத்தம் பொங்க வந்து விழுந்தது ஒரு கிளி. ‘ஐயோ...’ வென்று அலறி நான் துடிதுடித்துப் போய்விட்டேன். பலவருடங்களுக்குப் பிறகு என் அப்பாவுக்கு அரசியல் எதிரிகளால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பைக் கேட்டதும் அவர் ‘ஒரு கிளிக்காக சிறு வயதில் என் மகள் துடித்த துடிப்பு எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இந்தச் செய்தியைக் கேட்டால் அவள் எப்படித் துடிப்பாளோ!’ என்றுதான் சொன்னாராம்!...’’
புட்டோ ஒரு பிரபல வழக்கறிஞராக விளங்கினார். நிறைய நிலங்களுக்குச் சொந்தக்காரர்.

அரசியலிலும் நன்கு வளர்ந்தார் புட்டோ. பங்களாதேஷ் உருவான சமயம் அது. பாகிஸ்தானின் வல்லமை படைத்த ஜனாதிபதியாக விளங்கினார் புட்டோ. 1967_ல் ‘பாகிஸ்தான் மக்கள் கட்சி’யைத் தொடங்கி ஆறே வருடங்களில் ஆட்சியைப் பிடித்தார்.

பேநசீருக்குப் பதினாறு வயதானதும் அவரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி படிக்கவைத்தார் புட்டோ. அங்கேதான் பேநசீரின் பல எண்ணங்கள் விரிவடைந்தன.

அப்போது அமெரிக்காவில் பெண் விடுதலை இயக்கம் கொடிகட்டிப் பறந்தது. ‘ஏற்கனவே இங்குள்ள பெண்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருக்கிறது. ஆனாலும்கூட முழு சமத்துவத்துக்காகப் போரிடுகிறார்கள். ஆனால் நம் பாகிஸ்தானிலோ பெண்களின் நிலை கொஞ்சம் கூடத் திருப்திகரமானதாக இல்லையே! இதை மாற்றவேண்டாமா?’ என்பது போன்ற எண்ணங்கள் அப்போதுதான் அவரிடம் உண்டாயின்.

அப்போது வியட்நாம் போர் உச்சநிலையை அடைந்திருந்தது. தன் கூடப் படித்த அமெரிக்க மாணவர்களேகூட, அமெரிக்க அரசைக் கடுமையாக சாடியதைப் பார்த்ததும் பேநசீருக்கு ஆச்சர்யம். ‘தவறாக நடந்துகொண்டால் ஆளும்கட்சியை விமர்சிக்கலாம் போலிருக்கிறதே..’ என்ற எண்ணம் அவருக்குள் விதை ஊன்றியது.

போதாக்குறைக்கு வாட்டர்கேட் அத்துமீறலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் நிக்ஸன் பதவி விலகும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ‘அட! தப்பு செய்த ஜனாதிபதிகளைக்கூட மாற்றலாம் போல இருக்கிறதே...’ என்ற எண்ணமும் பேநசீருக்கு வந்தது.

அதேசமயம் இங்கே பாகிஸ்தானில் பிரதமரான கையோடு புட்டோ நவீன சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். பெரும் நிலப்பிரபுக்கள் அதிக வரிகட்டும் வகையில் சட்டத்தை இவர் மாற்றியமைக்க, இனத் தீவிரவாதிகளுக்கு இவரைப் பிடிக்காமல் போனது.

இந்த சூழ்நிலையில், தனது அப்பா பாகிஸ்தானின் அதிபரான நான்கு வருடங்களில் படிப்பை முடித்துவிட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பினார் பேநசீர். ஆனால் அதற்குள் காட்சிகள் மாறத் தொடங்கியிருந்தன.

தளபதி ஜியா உல் ஹக் ஆட்சியைக் கைப்பற்றினார். புட்டோ கட்சியைச் சேர்ந்த கஸீரி என்பவர் எதிரணிக்கு மாறிவிட, அவரை துரோகி என்று வர்ணித்திருந்தார் புட்டோ. அதைத் தொடர்ந்து அந்த கஸீரி, குடும்பத்தோடு பயணம் செல்லும்போது ஒரு தாக்குதல் நடக்க, அதில் அவரது அப்பா இறந்தார். இது புட்டோவின் சதித் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறிய ஜியா அவரைக் கைது செய்து சிறையிலடைத்தார். அரசு புட்டோ மீது வழக்கு தொடர்ந்தது.

அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது பாகிஸ்தான் அரசியலில் முழு மூச்சுடன் இறங்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருந்தார் பேநசீர். இப்போது தன் தந்தையே அநியாயமான முறையில் சிறையிலடைக்கப்பட....... தீவிரப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார் பேநசீர். ‘‘நமக்கு ராணுவ ஆட்சி வேண்டாம்.. நம் நாட்டுக்கு ஜனநாயகம் மட்டுமே ஏற்றது’’ என்று வேறு அவர் கூறத் தொடங்க, ராணுவ ஆட்சிக்கு பேநசீர் மேல் இருமடங்கு கோபமாயிற்று. விளைவு? பேநசீருக்கு அடிக்கடி சிறைவாசம். கொலை சதி வழக்கிலும் புட்டோவுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. புட்டோ தூக்கிலிடப்பட்டார்.

புட்டோவுக்குப் பிறகு அவர் மனைவி நுஸ்ரத், கட்சியின் தலைவியாகவும் வருங்காலப் பிரதமராகவும் ஆவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்தது. உடல் நலமின்றிப் படுக்கையில் விழுந்தார் பேநசீரின் அம்மா. நுரையீரல் புற்றுநோய்.

தவிர, நாளடைவில் மூளையின் உயிரணுக்களைப் பாதிக்கும் அல்சைமர் வியாதி வேறு. (தலையில் அடிபட்டுக் கொண்டு தன் அம்மா விழுந்த காலகட்டத்தில், அவரை வெளிநாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப மறுத்தது ஜியாவின் ராணுவ ஆட்சி. அப்படி அனுப்பியிருந்தால் தன் அம்மா பின்னாளில் ‘அல்சைமர்’ நோயினால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார் என்பது பேநசீரின் எண்ணம்).

ஒருவழியாக மறுபடி தேர்தல் நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் பேநசீரை வீட்டுச்சிறை வைத்து சந்தோஷப்பட்டது ராணுவம். ஆனால் புட்டோவுக்கு இருந்த புகழும், ராணுவ ஆட்சியின்மீது எழுந்த வெறுப்புமாகச் சேர்ந்து கொண்டு, பேநசீரின் கட்சி அதிரடி வெற்றி பெற... தன் விருப்பப்படியே பிரதமரானார் பேநசீர்!

ஆனால் இருபது மாதங்கள் மட்டுமே அவரை பதவியில் விட்டு வைத்தார்கள் அரசியல் எதிரிகள்! பாகிஸ்தானில் ராணுவம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் பிரதமரானார். ஆனால் அவர் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து மறுபடி தேர்தல் நடக்க, இம்முறை பேநசீரின் கட்சி வென்றது. மீண்டும் பிரதமரானார் பேநசீர்.
மிக இளம் வளதில் பிரதமரானவர் என்பதைத் தவிர, வேறொரு பெருமையும் பேநசீருக்கு உண்டு. பதவியிலிருந்தபோதே குழந்தை பெற்றுக்கொண்டே ஒரே பிரதமரும் அவர்தான்! ஆனால், அதற்காக அவர் சந்தித்த குத்தல் பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

பேநசீரின் ஆட்சியே நிலைக்குமா? நிலைக்காதா? என்று கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், இவருக்கு இரண்டாவது குழந்தை தேவையா? என்றெல்லாம் குத்தலும் கிண்டலுமாகப் பேசி மகிழ்ந்தார்கள்.
பேநசீர் தன் ஆட்சிக் காலத்தைப் பயன்படுத்தி அதிகம் சொத்துக்களைக் குவித்தார் என்று அவர் பேரில் குற்றச்சாட்டும் எழுந்தது. தவிர, பேநசீரே தனது தம்பி ஷா நாவாஸைக் கொன்றதாகவும் அவரது அரசியல் எதிரிகள் குற்றம் சுமத்தினார்கள். ‘‘கிடையவே கிடையாது! என் குடும்ப எதிரிகள் திட்டமிட்டு இப்படி என்னையும் சேர்த்து ஒழிக்கப் பார்க்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால், பிரான்ஸில் தங்கியிருந்தபோது, என் தம்பி ஷா நவாஸ் எப்போதும் விஷத்தைத் தன்னோட வைத்திருந்தான். எப்போதாவது எதிரிகள் அவனை பாகிஸ்தானுக்குக் கடத்திச்சென்று விட்டால், உடனே அதைக் குடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்திருந்தான்’’ என்கிறார் பேநசீர்.
அது உடனடியாகக் கொல்லும் விஷம் என்பதை அறியாமல் அதைத் தண்ணீரில் கலந்து அவர்கள் கொடுத்ததினால் அவனால் உடனடியாக சாக முடியாமல் மெல்ல மெல்லத்தான் இறந்திருக்கிறான். இறந்து கொண்டிருந்த ஒருவருக்கு உதவாமல் போனதற்காக அவன் மனைவி ரெஹனாவுக்கு பிரெஞ்சு நீதிமன்றம் தண்டனையே அளித்தது.

மற்றொரு தம்பி முர்தஸாவும் படுகொலை செய்யப்பட்டார். பேநசீரை எதிர்த்துத் தேர்தலில் நின்றவர் இவர். ‘‘இந்தக் கொலைப்பழியையும் கூட என் தலையில்தான் போடப் பார்த்தார் ஜியா. புட்டோவின் வாரிசு அவன்தான் என்று எனக்கெதிராகக் கொம்புசீவி தேர்தலிலும் அவனை நிறுத்தினார்கள் ஜியாவின் ஆட்கள். அவன் ஜெயித்தாலும் அவனை ஒரு நாள் பிரதமராகக் கூட இருக்கவிடமாட்டார்கள் என்பது பாவம் அவனுக்குப் புரியவில்லை. எங்கள் இருவரையுமே ஒழித்துக்கட்ட செய்யப்பட்ட ஏற்பாடுதான் அது. கடைசியில் எங்களுக்கான போட்டியில் நவாஸ் ஷெரிப் தான் லாபம் பார்த்தார்.’’ என்கிறார் பேநசீர் அந்த முர்தஸாவையும் பேநசீரின் கணவர்தான் கொன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

‘அரசு காரியங்களைச் செய்து தருவதற்காக கமிஷன் அடித்தார்’ என்றும் பேநசீரின் கணவரை குற்றம் சாட்டினார்கள். அவருக்கும் பேநசிருக்கும் பிரச்னை என்றும், பிரிந்து விட்டார்கள் என்றும் கிசுகிசுத்தார்கள்.
‘‘இதெல்லாம் வீண்பேச்சு. என் கணவரும் நானும் மிக நெருக்கமாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறோம். ஆண்களின் மேலாதிக்கம் மிகவும் அதிகமாக உள்ள பாகிஸ்தானில், ஒரு பெண் பிரதமரின் கணவராக ஒருவர் இருப்பது மிகச்சிரமம்!

என்னைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே என் கணவர் பணக்காரர். சொந்தமாக போலோ குழு வைத்திருந்தார். தனியாக ஒரு டிஸ்கோதே க்ளப்புக்கும் சொந்தக்காரர். இன்சூரன்ஸ், ஹோட்டல் பிசினஸ் என்று செழித்த வாழ்க்கை அவருடையது. எனவே கமிஷன் பெற்றுத்தான் சொத்து சேர்க்கவேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை.

எங்கள் பதினாறு வருடத் திருமÊணவாழ்வில் பத்து வருடங்களை சிறையில் கழித்திருக்கிறார். ‘பேநசீரை விவாகரத்து மட்டும் செய்து விடுங்கள்... உடனே விடுதலை செய்கிறோம்’ என்று பேரம் பேசப்பட்டும், எனக்கு ஆதரவாக இருந்தவர் என் கணவர்’’ என்று தன் கணவர் ஜர்தாரியைப் பற்றி நெகிழ்வாக குறிப்பிடுகிறார் பேநசீர்.

இவ்வளவு தடைக்கற்கள் இருந்தாலும் சின்னச் சின்ன ஆசைகள் யாரைவிட்டது? பேநசீருக்கு இரவில் வானத்தில் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும். சாக்லெட்டுகள் பிடிக்கும். தயிர்வடையிலிருந்து கார வெண்டைக்காய் வரை பிடிக்கும். ஆனால் ரத்தக்கொதிப்பு அதிகம் உண்டு என்பதால் டயட்டில் இருக்க வேண்டிய கட்டாயம்.

தவிர, ‘ஆரோக்கியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருப்பது எப்படி?’ என்று புத்தகம் எழுதவும் ஆசை பேநசீருக்கு. ‘‘ஆனால் இதெல்லாம் கட்சியின் இமேஜை வளர்க்க உதவாது. ஒரு அரசியல் தலைவி என்கிற எனது இமேஜூம் அடிபடும் என்கிறார்கள் என் கட்சித் தலைவர்கள்’’ என்கிறார் பெருமூச்சுடன்.

அன்புக் கணவரைப் பிரிந்து, தன் நாட்டைப் பிரிந்து வாழும் சூழ்நிலையில் குழந்தைகளின் படிப்புக்கு உதவும் அம்மாவாக இருந்து கொண்டிருக்கிறார் பேநசீர்_ திருப்பங்கள் மீண்டும் நல்லவிதமாக ஏற்படும் என்ற நம்பிக்கையுடன்!

Quelle - KUMUTHAM

Monday, October 18, 2004

வங்கரி மாதாய் (Wangary Maathaai)

நோபல் பரிசு பெறும் முதலாவது ஆபிரிக்கப் பெண்மணி!
சூழல் பாதுகாப்புக்காகப் போராடுபவர்!

இம்முறை சமாதானத்துக்கான நோபல் பரிசு ஆபிரிக்காவின் பெண்ணொருத்திக்குக் கிடைத்துள்ளது. நோபல் விருதினைப் பெறும் முதலாவது ஆபிரிக்க தேசத்துப் பெண் என்ற பெருமையினைப் பெற்றிருக்கின்றார் கென்யாவைச் சேர்ந்த வங்கரி மாதாய் (Wangary Maathaai). சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் அமைதி போன்றவற்றுக்கு இவர் ஆற்றிய, ஆற்றிவரும் சேவைக்காக இவர் இம்முறை இவ்விருதினைப் பெறுகின்றார்.

1940இல் பிறந்த கிழக்காபிரிக்காவின் முதலாவது பெண் கலாநிதி, கென்யாவின் பல்கலைக் கழகமொன்றின் இலாகாவொன்றின் முதலாவது பெண் தலைவர் என்ற பெருமைகளையும் ஏற்கனவே பெற்றுள்ள இவர் கென்யா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும், சூழல் மற்றும் இயற்கை/வன வளத்துறைக்குரிய இணை அமைச்சராகவும் விளங்கி வருகின்றார். இவர் உயிரியற் துறையில் பட்டப்படிப்பினை கன்சாஸிலுள்ள மவுண்ட். செயின்ற் ஸ்கொஸ்டிகா காலேஜிலும், பிட்ஸ்பார்க் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் (Masters) பட்டத்தினையும் பெற்றவர். அதன் பின்னர் கென்யா திரும்பிய இவர் நைரோபிய பல்கலைக் கழகத்தில் மிருக வைத்தியத் துறையில் ஆய்விலீடுபட்டுக் கலாநிதி பட்டம் பெற்றவர். சக ஆண்களின் அவநம்பிக்கையினையும், எதிர்ப்பினையும் சமாளித்து இவர் இப்பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அப்பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி மிருக வைத்தியத் துறைக்கான தலைவராக பதவி உயர்வு பெற்ரறுச் சாதனை புரிந்தார்.

வாங்கரி மாதாய் 1977இல் 'The Green Belt' இயக்கத்தினை ஆரம்பித்தார். இவரது இவ்வமைப்பு இதுவரையில் 10 மில்லியனுக்கும் மேலாக மரங்களை நட்டுச் சாதனை புரிந்துள்ளது. மண்ணரிப்பைத் தடுக்கும் அதே சமயம் சமைப்பதற்குரிய எரிபொருளான விறகுகளையும் பெறுவதே இதன் நோக்கம். சூழற் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தியாக இது அமைகின்றது (Sustainable Development). இந்த அமைப்பின் செயற்பாடுகள் யாவும் கென்யாக் கிராமங்களில் வாழும் பெண்களாலேயே பெரும்பாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சூழலைப் பாதுகாப்பதுடன் மரம் நடுவதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கும் இவரது அமைப்பு அதன் மூலம் பெண்கள் தங்களது குழந்தைகளைப் பராமரிக்கவும், அவர்களது எதிர்காலததை வளமாக்கவும் உதவி புரிகிறது.

1998இல் கென்யாவின் அன்றைய ஜனாதிபதியின் டானியல் அரப் மாய் (Daniel Arap Moi) ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆடம்பர வீடமைப்புத் திட்டத்துக்காக நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் மரங்கள் அழிக்கப்பட்டன. அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட இவரை அரசு கைதுசெய்து சிறையிலடைத்தது. பின்னர் சர்வதேச மன்னிப்புச் சபையின் தலையீட்டினால் இவர் விடுதலை செய்யப்பட்டார். 1999இல் நைரோபியின் கருரா பொதுப் பூங்காவில் மரங்களை நாட்டிக் கொண்டிருந்த பொழுது பலமாகத் தாக்கப்பட்டுத் தலையில் பலத்த காயங்களைப் பெற்றார். கென்யாவின் முன்னைய அரசினால் பல தடவைகள் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வறிய மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்காகவும் பலமாகவும் குரல் கொடுக்கும் இவர் ஒரு முறை நிர்வாணப் பெண்களின் ஆர்ப்பாட்டமொன்றினையும் தலைமை தாங்கி நடத்தியவர்.

1980இல் இவரை விவாகரத்துச் செய்த இவரது முன்னாள் கணவர் அதற்குக் கூறிய காரணங்கள்: "இவர் மிகவும் அதிகமாகப் படித்தவர், மிகவும் வலிமையானவர், மிகவும் வெற்றிகரமானவர், மிகவும் பிடிவாதமானவர், கையாளுவதற்கு மிகவும் கடினமானவர்" என்பதே. மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், ஜனநாயகம், அமைதி, சூழல் பாதுகாப்பு, சூழழ் பாதுகாப்புடன் கூடிய அபிவிருத்தி ஆகியவற்றில் இவரது அளப்பரிய பங்களிப்பினைக் கெளரவிக்கும் முகமாகவே இம்முறை இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. சில சமயஙக்ளில் விருதுகள் பெருமையுறும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. இது அத்தகைய சந்தர்ப்பங்களிலொன்று.

- ஊர்க்குருவி -
நன்றி - பதிவுகள்.கொம்

Sunday, September 12, 2004

இளவரசி டயானா (Diana)

உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது.

அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது!

பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர்களின் செல்லப் பெண்ணாகிவிட்டார்.

டயானா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, மென்மை சுபாவம் கொண்ட, அந்த அழகான இளம் பெண் மக்களுக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை...

லண்டனில் இருந்த ஒரு நர்சரி பள்ளிக்கூடம் அது..

வெளியே இருந்து வந்த இரைச்சலான குரல்கள் கேட்டு அந்தப் பள்ளியின் பிரின்சிபால் திகைத்துப் போய் வெளியே வந்தார்.

வெளியே...

பள்ளியை ஃபோகஸ் பண்ணியபடி கேமராக்கள்.. கேமிராக்கள்... கேமிராக்கள்.

ரிப்போர்ட்டர்கள், டி.வி. மைக்குகள் என்று சுற்றிலும் ஜே ஜேவென பெரும் இரைச்சல்!

‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ கேட்டார் அந்த பிரின்ஸிபால்.

‘‘உங்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் இளம் பெண்ணான டயானாவைப் பார்க்க வந்திருக்கிறோம். அவரை தயவு செய்து வெளியே வரச் சொல்லுங்கள்..’’ கோரஸாக குரல் வந்தது.

பிரின்ஸிபால் திகைப்புடனே நிற்க...

‘‘இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக டயானா ஆகவிருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? இந்த இளம் பெண் டயானாவும், இளவரசர் சார்லஸ§ம் காதலிக்கிறார்கள். டயானா எப்படியிருப்பார்? அவர் முகத்தை நாங்களும் பார்க்க வேண்டும்.. படமெடுக்க வேண்டும்.. அவரை வெளியே வரச் சொல்லுங்கள்!’’

என்று கூட்டம் திமிற...

ஒரு சிறிய குழந்தையைக் கையில் தூக்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா ‘மிஸ்’ தயக்கத்துடன் வெளியே வந்தாள்.

தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர..

அவ்வளவுதான்... அத்தனை காமெராக்களும் தங்கள் ஆசை தீர டயானாவின் உருவத்தை விழுங்கிக் கொண்டன. அவளைப் பெருமிதத்துடன் ‘‘இவள்தான் எங்கள் இளவரசி!’’ என்று உலகம் முழுக்க அறிமுகப்படுத்தின.

அன்று தொடங்கிய காமெராக்கள்தான்.. அப்புறம் டயானாவின் வாழ்க்கையில் அவரைத் துரத்தித் துரத்தி படமெடுக்கத் தொடங்கின. கடைசியில் கூட காமெராவுக்கு பயந்தேதான் அந்த அழகான இளம் பெண்ணின் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்ததும் நடந்தது.

டயானா சார்லஸ் காதல் ஆரம்பமானது ஒரு விழாவில்தான்!

எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச் சொல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.

எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான இளம்பெண்ணை, இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.

ஒன்று மாற்றி மற்றொன்று என இளம் பெண்கள், பல ஆண்களோடு டேட்டிங் போவது வெளிநாட்டில் சகஜமாக இருந்தாலும், டயானா அந்த மாதிரி எந்த ஆணுடனும் பழகியதில்லை. அவள் வாழ்க்கையில் முதன்முதலாக டேட்டிங் செய்ததே சார்லஸோடுதான்!

டயானாவின் அழகு, நடத்தை, மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் _ டயானாவுடையதுதான்!

டயானா படம் பத்திரி கைகளில் வந்தவுடனேயே, இங்கி லாந்தில் ‘டயானா ஜுரம்’ வெகு வேகமாகப் பரவத் தொடங் கியது. ‘டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்?’ எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னறே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.

தேவதைக் கதைகளில் வருவதுபோல் டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பியது பி.பி.சி தொலைக்காட்சி. உலகமே அதை ஆவலுடன் ரசித்துப் பார்த்தது.

அரச குடும்பத்தின் மருமகளாகி விட்ட நிலையில் தன் கடமைகளைச் செய்வதில் மிகக் கவனமாக இருந்தார் டயானா. அரச குடும்பத்தினர் பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு... ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால், நர்சரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார். ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. சார்லஸ் கூட ஒரு முறை ‘‘இப்போதெல்லாம் டயானாவுக்குக் கொடுக்கப்படும் பூங்கொத்துக்களைக் கலெக்ட் செய்வதே எனக்குப் பெரிய வேலையாகிவிட்டது!’’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார்.

மாமியார் ராணி எலிஸபெத்துக்கு டயானாவின் மேல் தனிப்பாசம். டயானாவும் மாமியாரிடம் பிரியமாகப் பழகுவார். பிற்காலத்தில் மனசுக்கு சங்கடமான சில நேரங்களில், மாமியாருடன் சென்று பேசிக் கொண்டு இருந்ததுதான் டயானாவின் மனசுக்கு நிம்மதியளித்திருக்கிறது.

அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது. அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவதுதான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வரிசை மாறாமல் பேப்பரில் வர ஆரம்பிக்க, அரண்மனைக்குள் மெல்ல சூடு கிளம்ப ஆரம்பித்தது.

மகாராணியே வேறு வழியில்லாமல் அனைத்து பத்திரிக்கைகளின் எடிட்டர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து, இனி டயானாவை போகுமிடமெல்லாம் படமெடுத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எல்லாம் ஒரு சில நாட்கள்தான்! மறுபடி பழைய கதைதான்.

திருமணம் ஆன மறு வருடத்திலேயே முதல் மகன் வில்லியம் பிறந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த குழந்தை _ ஹென்றி.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள்தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. அவர்கள் பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.

கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ... கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸ§க்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது... அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது.

தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.

அப்படித்தான் ஒரு முறை, எய்ட்ஸ் நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்கிய புகைப்படம் பிரிட்டிஷ் நாளிதழ்களில் முதல் பக்கத்தைப் பிடித்தது! எÊய்ட்ஸ் என்பது தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் வியாதி என்று பலரால் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இளவரசியே இப்படி நடந்துகொண்டது, எய்ட்ஸ் குறித்த பல தவறான பயங்கள் நீங்க வழி வகுத்தது. இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது.

குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் _ டயானா விரிசல் பகிரங்கமானது.

தன்மேல் தவறில்லை என்பதுபோல் சார்லஸ் பி.பி.சி.யில் பேட்டிகூட அளித்தார். தொடர்ந்து டயனாவையும் பேட்டி கண்டார்கள். ‘‘அரசராகும் எண்ணம் சார்லஸ§க்கு இல்லை..’’ என்று, டயானா தன் பேட்டியில் பல விஷயங்களை பகிரங்கப்படுத்த அது, இங்கிலாந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூடவே ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்... ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல... மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..’’ என்று டயானா கூறியது மக்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது. காரணம் உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.

இருவரின் தொலைக்காட்சிப் பேட்டிகளும் ஒலிபரப்பான உடனே ‘மக்கள் யார் பக்கம்?’ என்று வேறொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ‘‘தொலைக்காட்சி பேட்டிக்குப் பிறகு நாங்கள் டயானாவை மேலும் விரும்புகிறோம்!’’ என்று எண்பத்துமூன்று சதவிகிதத்தினர் பதிலளித்து அசத்தினர்.

மக்கள் ஆதரவு டயானாவுக்குதான் என்பதை அறிந்தவுடன், பக்கிங்காஹாம் அரண்மனையும் டயானாவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்தது. கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் சார்லஸ்.

டயானாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்காமலில்லை. டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை. ஆனால் ‘‘அவர் எனது மிக அரிய நண்பராக விளங்கியவர். அதுவும் சோதனையான ஒரு கட்டத்தில்... அவரது அந்த நூல் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அவர். ‘என் புத்தகத்தில் நீங்கள் கவலைப்படும்படியாக நான் எதையும் எழுதவில்லை’ என்றார். நானும் முட்டாள்தனமாக அதை நம்பினேன்...’’ என்று உடைந்துபோய்ச் சொன்னார் டயானா.

சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.

டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார்.

அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக் கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.

டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.

பாரீஸின் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். இரண்டு நர்சுகள் வாயிலெடுத்து விட்டனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.

பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது!

ஆதர்ஷ்
நன்றி - குமுதம் சினேகிதி

Sunday, August 22, 2004

தில்லையாடி வள்ளியம்மை

தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண்

1898 - 22.2.1914

வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத் தேடினர். அங்கிருந்த தென்னாப்பிரிக்க நீக்ரோ தொழிலாளர்களோ அடிக்கடி வெள்ளை முதலாளிகளோடு முரட்டுத்தனமாக சண்டையிட்டனர். அதனால் தங்களது ஆதிக்கத்தில் இருந்த இந்தியா போன்ற பிற காலனி நாடுகளிலிருந்து பண்ணைத் தொழிலுக்கேற்ற கூலிகளை இறக்குமதி செய்துகொண்டனர்.

அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்திலிருந்து கப்பலேறி தென்னாப்பிரிக்காவிற்கு தன் மனைவி மங்களத்துடன் சென்றவர்தான் முனுசாமி.

முனுசாமிக்கு தென்னாப்பிரிக்காவில் 1898_ஆம் ஆண்டு பிறந்தவள் வள்ளியம்மை.

எதிர்கால இன்பக் கனவுகளோடு சென்ற இந்தியத் தொழிலாளர்கள் அங்கே வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்தியர் ஒவ்வொருவரும் அங்கே வாழ 3 பவுன் தலைவரி கட்ட வேண்டும். வாக்குரிமை கிடையாது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழையக்கூடாது. வெள்ளையர் பள்ளிகளில் படிக்கமுடியாது. வெள்ளையர்களுடன் சமமாக அமர்ந்து பயணம் செய்யக்கூடாது. இவ்வாறெல்லாம் ஒடுக்கப்பட்ட இந்தியக்குடிகள் வாழும் பகுதிகள் சேரிகளாகப்பட்டன. சுகாதார வசதியின்றி நோய்களும் பரவின.

இந்தச் சூழலில்தான் 1893_ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு வந்தார். தாதா அப்துல்லா கம்பெனிக்கான வழக்குகளை ஓராண்டிற்குள் முடித்துத் திரும்பும் எண்ணத்துடன் வந்தவர், அங்கே இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறினார். அதை எதிர்த்துப் போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார். ஓராண்டல்ல; ஈராண்டல்ல; _ இருபத்தியிரண்டு ஆண்டுகள் (நடுவில் 2 ஆண்டுகள் நீங்கலாக) தென்னாப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார்.

இந்தியர்கள் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கிளர்ச்சியைத் துவக்கினார். அப்போது தென்னாப்பிரிக்க ‘கேப்’ உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பு கொடுத்தார். அந்த நாட்டில் இனி ‘கிறிஸ்தவ சடங்குப்படியும், திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும். மற்ற எந்தத் திருமணமும் செல்லாது’ என்பதே அந்தத் தீர்ப்பு.

இதனால் அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் அனைத்தும் செல்லாது என்றும், அவர்கள் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமை இல்லை என்றும் ஆயிற்று.

இத்தீர்ப்பினைக் கண்டு இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்கினர். காந்திஜி இவர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, போராட்டத்தை வளர்த்தார்.

அந்தச் சமயத்தில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட எல்லா பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மை சென்று வந்தாள். காந்தியின் சொற்பொழிவுகள் வள்ளியம்மை நெஞ்சில் ஆழப்பதிந்தன. விடுதலைக் கனலை விரைந்து மூட்டின.

புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இது வள்ளியம்மையின் தன்மான உணர்வைத் தாக்கியது.

வெள்ளையரின் நிறவெறியை எதிர்த்து அண்ணல் காந்தியின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் வள்ளியம்மை, அப்போது அவளுக்கு வயது பதினாறுதான்!

அதுவரை, போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து வந்த காந்திஜி, இந்தப் போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். ஏனெனில், ‘‘இந்த திருமணச்சட்டம் பெண்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கட்டிய மனைவியையே அங்கீகாரமில்லாத நிலைக்கு ஆளாக்கி, குழந்தைகளின் வாழ்வுரிமையையும் பறிக்கும் வன்கொடுமைச் சட்டம் இது!’’ என்றார் காந்தி.

1913 _ ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. ஆவேச முழக்கத்துடன் ஆங்கில அரசின் நிறவெறித் திமிருக்கு எதிராக அணி திரண்டு கிளம்பியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் _ கஸ்தூரிபா, வள்ளியம்மை, வள்ளியம்மையின் தாயார்.

‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்!’ என்று வள்ளியம்மை முன் வரிசையில் நின்று முழங்கிய முழக்கம் ஏனைய சத்தியாகிரகிகளை எழுச்சிகொள்ளச் செய்தது! ‘எங்கள் தேசத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை’ என்று பிரிட்டிஷ் அரசு பேசி வந்த ஆணவத்திற்கு அன்றுதான் அஸ்தமனம் தொடங்கியது! காலனி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் அழுந்திக் கிடந்த ஒரு சமூகம் அன்றுதான் வீறிட்டெழுந்தது!

ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன் முன்னேறியது.

நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோது, தன் இளவயது காரணமாக ஓடியாடி, தன் உடன் வந்த சத்தியாகிரகிகளுக்கு வள்ளியம்மைதான் இயன்றவரை தொண்டு செய்தாள்.

நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு முழங்கினார் காந்தி. உடனடியாக வேலை நிறுத்தம் செய்தனர். தமது தமிழ்மக்களின் ஒத்துழைப்பைக் கண்டு மேலும் உற்சாகமானாள் வள்ளியம்மை.

போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் நகர எல்லைக்குள் நுழைந்தபோது, எல்லோரும் கைது செய்யப்பட்டனர்.

மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பதினாறு வயது வள்ளியம்மையும் கடுங்காவல் தண்டனையை ஏற்று சிறை ஏகினாள். ஆனால் சிறை அதிகாரிகளோ அவளிடம் கடுமையாக வேலை வாங்கினார்கள். சிறையிலே சுகாதாரக் கேடான சூழ்நிலை. சிறை அறையில் தலைமாட்டிலே ஒரு மண்சட்டி, அதற்கொரு மூடி, அதிலேதான் மலஜலம் கழித்துக்கொள்ள வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் அதைக்கொண்டு போய் போட்டுவிட்டு, சட்டியைச் சுத்தம் செய்துகொண்டு வரவேண்டும். தகுந்த மருத்துவ வசதியும் இல்லை.

மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை நோய்க்கு ஆளானாள். உடல்நலம் பாதிக்கப்பட்டாள். ‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’ என்றான் வெள்ளைக்கார சிறை அதிகாரி.

‘‘அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டாள் வள்ளியம்மை.

அடுத்த சில நாட்களில் அவளது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவள் கவலைக்கிடமான நிலைமைக்கு ஆளாகி விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். அதனால், தண்டனைக் காலம் முடியும் முன்பே, அவசரம் அவசரமாக வள்ளியம்மை 1914_பிப்ரவரி 11_ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

மிகவும் பலவீனமான நிலையில் இருந்த அவளை ஒரு ஜமுக்காளத்தில் கிடத்தி வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.

வீட்டில் கந்தல் துணி போலக் கிடத்தப்பட்ட வள்ளியம்மை அடுத்த பத்து நாட்களில் 22.2.1914 அன்று இறந்து போனாள்.

வள்ளியம்மையின் மரணம் காந்தியின் உள்ளத்தை உலுக்கிவிட்டது.

‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் காந்தி ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய _ துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’ என்று மனமுருகி எழுதினார்.

ஆம். அந்தப் போராட்டத்தின் காரணமாக இந்தியர்களின் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்பட்டது. எல்லாத் திருமணங்களும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன.

ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்தி.

தனது சுயசரிதையில் பல இடங்களில் வள்ளியம்மையை நினைவுகூர்ந்து துக்கம் தாங்காமல் எழுதுகிறார் காந்தி.

தன் உயிரைக் காத்த வள்ளியம்மையை காந்தியால் எப்படி மறக்கமுடியும்? ஆம்! ஒருமுறை சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, வெறிபிடித்த வெள்ளையன் ஒருவன் காந்திஜியைச் சுட துப்பாக்கியை உயர்த்திய போது, வள்ளியம்மை திடீரென்று ஓடிவந்து காந்தியின் முன்னால் நின்று கொண்டு, ‘‘இப்போது காந்தியைச் சுடு, பார்க்கலாம்!’’ என்றாள் ஆவேசமாக! அவளது நெஞ்சுரம் கண்டு அந்த வெள்ளையனே திகைத்துப்போனான்; திரும்பிப் போனான்.

காந்திஜி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எல்லாக் கூட்டங்களிலும் வள்ளியம்மையின் தியாகத்தைக் குறித்துப் பேசினார். அவள் பிறந்த தில்லையாடி கிராமத்திற்குச் சென்று, அவளது உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.

‘‘தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன் எதிர்நின்று அன்று தன்னைக் காப்பாற்றிய வள்ளியம்மை _ இன்று இந்தியன் கோட்ஸே சுட்டுக் கொல்லும்போது _ குறுக்கே பாய்ந்து காப்பாற்ற நம்மருகே இல்லையே....!’’ என்று காந்தி தனது கடைசி மூச்சின்போது நினைத்திருப்பாரோ...?

1997_ல், வள்ளியம்மையின் நூற்றாண்டின்போது ஜோகன்ஸ்பர்க் நகரில் நெல்சன் மண்டேலா முயற்சியால் வள்ளியம்மையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு, விழா எடுக்கப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது நமக்கு மற்றொரு பெருமைதானே!

nantri-kumutham

Friday, July 09, 2004

மயூரி மனோகரன்

கனடா ரொறன்ரோவில் Rogers வெளியீட்டகத்தினால் வெளியிடப்படும் FLARE சஞ்சிகையின் 8வது வருடாந்த விருது வழங்கும் வைபவத்தில் தமிழ் மாணவி செல்வி மயூரி மனோகரன் தொண்டர் விருதினைப் பெற்றுள்ளார்.

கனடாவில் நாடளாவிய ரீதியில் வருடாந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட ஆறு பேரில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவியான மயூரி மனோகரனும் ஒருவராவார்.

சமூக அக்கறையுள்ள மயூரி கனடாவுக்கு புலம்பெயரும் புதிய தமிழ் மாணவிகளுக்கு உதவி செய்வதில் பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளார்.

தனது ஆறாம் வகுப்பிலிருந்து தன்னாலான உதவிகளை, பல தடவைகளில் தனது வயதையும் மீறி செய்து வந்துள்ள மயூரி 2003ம் ஆண்டு மொத்தம் 620 மணித்தியாலங்கள் சமூக சேவை செய்துள்ளார்.

தான் வசித்துவரும் பகுதியில் TamilFEM என்ற தமிழ் மாணவிகளுக்கான சமூக அமைப்பொன்றை உருவாக்கி அதன் இணைப்பாளராகவும் மயூரி கடமையாற்றி வருகின்றார். இந்த அமைப்பின் மூலம் கனடாவுக்கு புதிதாக புலம் பெயரும் பெண்கள் குறிப்பாக மாணவிகள் எதிர்நோக்கும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு உதவி செய்வதே தனது நோக்கம் என மயூரி தெரிவித்துள்ளார்.

தற்போது ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் முழுநேர மாணவியான மயூரி, எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வர வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Saturday, June 19, 2004

அன்னி பெசன்ட் அம்மையார்


1847-1933

‘இன்று உலகின் எந்தப் பகுதியை நோக்கினாலும் அங்கெல்லாம் தனியரசு காணவேண்டுமென்கிற தவிப்பும், துடிப்பும் அதற்கான போராட்டங்கÊளும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. எந்த நாடும், அது எவ்வளவு சிறிதானாலும் இன்னொருவரின் ஆதிக்கத்தின்கீழ் இருக்க விரும்பாமல் உள்ள உரம் பெற்று, தங்கள் நாட்டின் பரப்புக் குறைவையோ_ பலத்தின் மெலிவையோ எண்ணி ஏங்கிக்கொண்டிராமல், உறுதியுடன் போராடி வெற்றியும் பெற்று வருகின்றன.

அப்படி அன்னியரின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்தி, வெற்றி கண்டு, உலகிற்கே வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது இந்தியத் திருநாடு. நம்மைத் தொடர்ந்தே பற்பல நாடுகளும் தங்களைப் பிறரின் அதிகாரப் பிடியிலிருந்தும் அடிமைத்தளையிலிருந்தும் விடுவித்துக் கொண்டன _ தொடர்ச்சியான கிளர்ச்சிகளால்!

இந்திய விடுதலைக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்துகொண்ட, உழைப்பையும் உதிரத்தையும், ஏன் தங்களின் இன்னுயிரையும் ஈந்த வீரர்கள் எத்தனை எத்தனை பேர்! இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காகக் களமிறங்கிப் போராடியதில் வியப்பில்லை. அது அவர்களின் கடமை; தேவை; கட்டாயம்! ஆனால் எங்கிருந்தோ அன்னிய மண்ணிலிருந்து இங்கே வந்து குடியேறி, சுதந்திரக் காற்றை சுவாசிக்க இயலாமல் அடிமை இருளில் அவதிப்பட்டுக் கிடந்த நமது மக்களை, ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவும், அவர்களின் குடைகவிழ்ந்து, கோல் சாய்ந்து, கொடியும் வீழ்ந்து, கோட்டை கொத்தளங்களை விட்டுத் தங்கள் குடிபடைகளோடு நாட்டைவிட்டு வெளியேறச் செய்த போராளிகளும் உண்டு.

அப்படி அயர்லாந்து நாட்டிலிருந்து இந்திய மக்களுக்குத் தொண்டு செய்ய வந்து, நமது நாட்டு விடுதலைக்கும், இந்தியப் பெண்களின் வீட்டு விடுதலைக்கும் துணைநின்ற மாதரசிகளில் ஒருவர் _ அன்னிபெசன்ட் அம்மையார்!

அன்னி பிறந்தது லண்டனில், 1.10.1847_ல்! ‘‘நான் முக்கால் ஐரிஷ்காரி, கால்வாசி இங்கிலீஷ்காரி’’ என்பார். தாய் ஐரிஷ்; தந்தையைப் பெற்ற பாட்டி ஐரிஷ். தந்தை இங்கிலீஷ்காரர். முன்னோர்களில் ஒருவர் மந்திரியாகவும், இன்னொருவர் லண்டன் மேயராகவும் இருந்திருக்கிறார்கள்.

ஏழைகளுக்குக் கட்டணமில்லாமல் வழக்காடி வந்த வக்கீல் ராபர்ட்ஸ், ‘‘ஏழைகளே வேலை செய்யும் தேனீக்கள். செல்வத்தை உற்பத்தி செய்கிறவர்கள். நியாயம் கோர அவர்களுக்கு உரிமை உண்டு. கருணையின்பேரில் தானம் தரவேண்டியதில்லை’’ என்று சொல்லிவந்த உபதேசம், இளம் வயதிலேயே அன்னியின் மனதில் ஆழப் பதிந்தது.

Êஏழைகளுக்கு எவ்வழியிலேனும் தொண்டாற்றத் துடித்த அன்னியை, அவரது அழகில் மயங்கிய பிராஸ்பர்ட் பெசன்ட் என்ற பாதிரியார் காதலித்தார். பாதிரியின் மனைவியானால் அவர் துணையோடு எளியோர்க்கு சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்கள். அன்னியும் அவரை மணக்கச் சம்மதித்தார்.

ஆனால், மணவாழ்க்கையோ அவரது சொந்த வாழ்க்கையிலும் சோகத்தை நிரப்பியது. அன்னிக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள்.

மகள், கக்குவான் என்கிற தொடர் இருமலால் துவண்டாள். எத்தனையோ மருத்துவங்கள் செய்தும் குழந்தைக்கு அந்த நோய் குணமானபாடில்லை. மகள்படும் அவதியைக் கண்டு அன்னி தினம் தினம் ரத்தக் கண்ணீர் வடித்தார்.

‘குழந்தை என்ன பாவம் செய்தது? ஏன் இந்தத் துன்பம்? கடவுள் இந்தக் கொடுமையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாரா? அப்படியானால் அவருக்குக் கருணை என்பதே இல்லையா? ஒருவேளை கடவுள் என்பதெல்லாம் நமது கற்பனைதானா? அப்படி ஒருவர் கிடையவே கிடையாதா?’ _ இப்படியெல்லாம் எண்ண அலைகள் அவர் இதயத்தில் ஆர்ப்பரித்தன. உள்ளம் கடவுள் சிந்தனையில் ஒருமுகப்பட மறுத்தது.

இந்தத் துன்பங்களோடு ஒருநாள் கணவனின் தூஷணையும் துணைசேர்ந்தது. விரக்தியும், வெறுப்பும் அன்னியை வாழ்க்கையின் விளிம்பிற்கே விரட்டின...

உடம்பிலிருந்து உயிருக்கு விடுதலை... அது ஒன்றுதான் இந்த உலகியல் துன்பங்களிலிருந்து நிரந்தரமாக விடுபட ஒரேவழி என்கிற விபரீத முடிவிற்கு வந்தார் அன்னி! ஆம்... தற்கொலைக்குத் துணிந்தார்!

கொடிய தூக்க மருந்தான குளோரோஃபார்ம் சீசாவை எடுத்தார். அதை முகர்ந்து முழுதாக மூச்சை இரண்டுமுறை உள்ளிழுத்தால் போதும்... மீளாத் தூக்கம் தூக்கம்தான்...

சீசாவையும் திறந்துவிட்டார்... ஆனால் அவரது அந்தராத்மா இடித்துரைத்தது. ‘அன்னி! ஏனிந்த கோழைத்தனம்! உனது சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள நெஞ்சில் உரமற்ற நீயா, ஏழைகளின் துன்பத்தைத் துடைக்க ஆசைப்பட்டாய்? முடியுமா உன்னால்...?’ எள்ளலும் ஏகடியமுமாக அவரை Êஏசியது அந்த மனக்குரல்.

சீசாவை வீசி எறிந்தார் வெளியே!

வாழ்க்கைப் பாதையில் இனி தன் பயணத்தைப் பாதியில் நிறுத்துவதில்லை என்று உறுதிகொண்டார்.

ஆனாலும் இத்தனை நாள் கொண்டிருந்த இறை நம்பிக்கையின் மீது அவருக்கு சந்தேகம் மேலும் மேலும் வலுத்தது...

கிறிஸ்தவ மதத்தில் தனக்கு ஏற்பட்ட அவநம்பிக்கையை புத்தகமாக எழுதினார். அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் அதில் தனது பெயரைப் போட்டுக்கொள்ளவில்லை.

புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லண்டன் நகர பாதிரியார்கள் பதறினர்... ‘யார் செய்த வேலை இது?’ என்று ஆளைத் தேடும் முயற்சியில் அலைந்தனர்.

இறுதியில் இது அன்னியின் கைங்கர்யம்தான் என்பதைக் கண்டுபிடித்தபோது, கணவரான பாதிரியார் வெகுண்டார். ‘‘வீட்டை விட்டு வெளியே போ’’ என்று அன்னியை விரட்டினார்...

தன் இரு குழந்தைகளோடு வெளியேறிய அன்னி, குடும்பம் நடத்தவும் குழந்தைகளை வளர்க்கவும் படாதபாடுபட்டார்.

கைப்பொருளை விற்றார். தையல் வேலை செய்தார்... சமையல்காரியாக இருந்தார்... ஒரு மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்தார். அப்போது அவருக்கு வயது 26தான்.

பல புத்தகங்களை அவர் எழுதியும், அடிமை நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பேசியும் வந்த நாட்களில், ‘நேஷனல் ரீஃபார்மர்’ என்ற பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போதுதான் பிரம்மஞான சங்கத்தின் தலைவி பிளாவட்ஸ்கி அம்மையாரின் அறிமுகம் கிடைத்தது. அந்த சங்கத்தில் சேர்ந்து, பின்னாளில் அந்த இயக்கத்தின் தலைமைப்பொறுப்பையும் அன்னி ஏற்றார்.

1893_ல் அவர் இந்தியாவுக்கு முதன்முதலாக வந்தபோது, ‘‘புண்ணிய பூமிக்கு வந்தேன்’’ என்றார்.

கங்கையில் நீராடி, தனது ஐரோப்பிய உடையைத் துறந்துவிட்டு, அன்று முதல் புடவை உடுத்தலானார். ‘‘பழைய வேதத்தையும், இந்து மதக் கோட்பாடுகளையும் மீண்டும் இந்திய மக்கள் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா பழைய மகோன்னத நிலையை அடையும்’’ என்றார் இந்த ஐரோப்பியப் பெண்மணி.

அன்னி ஈடுபட்ட நான்கு துறைகள்: மதம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி, சமூகசீர்திருத்தம், அரசியல்.

1898_ல் காசியில் அவர் துவக்கிய மத்திய ஹிந்து கல்லூரிக்கு காசி மன்னர் மனை வழங்கினார். 1904_ல் பெண்கள் பள்ளியைத் துவக்கினார். சென்னை அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார்.

பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்), ‘ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன். பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன். பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்’ ஆகிய விதிகளை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைவிதித்தார்.

இந்தியாவுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்துக்குள் சுயாட்சி வேண்டும் என்று கிளர்ச்சி நடத்தினார். அதற்காக ‘ஹோம் ரூல் லீக்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, தனது ஆங்கில நாளேடு ‘நியூ இந்தியா’வில் காரசாரமாக எழுதி வந்தார்.

இது ஆங்கிலேய அதிகாரிகளை ஆத்திரமூட்டியது. இதன் விளைவாக, ‘ஊட்டி(உதகை)யை விட்டு வெளியேறக் கூடாது’ என்று அன்னிக்கு உத்தரவிட்டார்கள் 1917_ல்!

அப்போதைய நீதிபதி மணி ஐயர், ‘‘இந்த அநீதியைக் கண்டிக்க உலகில் யாருமில்லையா?’’ என்று அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்குக் கடிதம் எழுதினார்.

வில்சன், பிரிட்டன் பிரதம மந்திரியை இது சம்பந்தமாகக் கேட்க, அவர் அதிகாரிகளைக் கூப்பிட்டு, அன்னி மீதிருந்த தடை உத்தரவை நீக்க உத்தரவிட்டார்.

அடுத்த ஆண்டில் நடந்த கல்கத்தா காங்கிரசுக்கு அன்னிபெசன்ட் தான் தலைமை ஏற்றார்.

மகாத்மா காந்தியும் நேருவும் ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியபோது, அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டு அன்னிபெசன்ட் காங்கிரசிலிருந்து வெளியேறினார். ‘பரிபூரண சுதந்திரம் என்பது மாயை! கானல்நீர்! பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டுறவுமே நாட்டு வளர்ச்சிக்கு நல்லது’ என்றார். அவர் விருப்பம்போலவே இந்தியா இப்போதும் காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.

ஐம்பது ஆண்டுகள் இந்திய மக்களுக்காகவே உழைத்த அன்னிபெசன்ட், 20.9.1933 அன்று இயற்கை எய்தினார்.

ஒரு தீர்க்கதரிசியைப் போல அவர் சொல்லிய பல திட்டங்கள் இன்று அமலில் உள்ளதைக் காண்கிறோம்.

ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இலவச உணவு அளித்து மருத்துவ வசதியும் செய்துதர வேண்டும். பசித்த குழந்தைகளுக்கு பாடம் மட்டும் சொல்லித்தருவது பயனற்றது. வயிற்றுக்கும் சோறிடல் வேண்டும்’ என்று வலியுறுத்தியது அவர்தான்.

ஆனால் அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்துத்தான் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கிராமப் பஞ்சாயத்துகள் தோன்றி, பள்ளிகள், கிராமத் தொழிற்கூடங்கள், துப்புரவு, மருத்துவம், சிவில் துறைகளில் நீதி வழங்குவது போன்றவற்றை அவை நிர்வகிக்க வேண்டும் என்று அவர் அன்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தார். பின்னாளில் கிராமப் பஞ்சாயத்து போர்டுகள் தொடங்கப்பட்டன.

அன்னிபெசன்ட் மறைந்தபோது மகாத்மா காந்தி...

‘‘1888_க்குப் பிறகு, நான் லண்டனில் படித்துக்கொண்டிருந்தபோது, மற்ற பலரைப்போல நானும் பிராட்லாவையும் அன்னிபெசன்ட்டையும் போற்றிப் புகழ்ந்தேன். அப்போது நான் யாருக்குமே தெரியாத சாதாரணப் பையன். பிளாவட்ஸ்கி, அன்னிபெசன்ட் ஆகியோரின் பக்கத்தில் நான் நிற்பதையே பெரும் பாக்கியமாகக் கருதியிருந்தேன்.

அவர் இந்தியா வந்து இந்திய மக்களின் இதயங்களில் இடம்பெற்றதும் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடினேன். எங்களுக்குள் அரசியல் வேற்றுமைகள் இருந்தபோதிலும்கூட அவரிடம் எனக்கிருந்த மரியாதை ஒருபோதும் குறைந்ததில்லை’’ என்றார்.

அன்னி பெசன்ட் அம்மையார்

ஆர்.வி.சம்பத்
nantri-Kumutham Junction

Wednesday, June 09, 2004

கவிஞர் சல்மா


ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர். அப்பா சம்சுதீன். அம்மா சர்புன்னிசா. 37 வயதாகும் சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா பீவி. கணவர் மாலிக். வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் கூறும் சல்மாவின் கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களாக மட்டுமே நிற்காமல், பெண்களின் பொதுவான துயரங்களாக விரிகின்றன. இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) பேரூராட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார். சில கதைகளும் எழுதியுள்ள இவர் இப்போது ஒரு நாவல் எழுதியுள்ளார். "இரண்டாம் ஜாமங்களின் கதை" என்ற அந்த நாவல் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வர உள்ளது. உதவி ஆசிரியர் பெ. அய்யனார் துவரங்குறிச்சியில் சல்மாவின் வீட்டில் அவரை சந்தித்து உரையாடினார். கவிதை, வாழ்க்கை, அவரது இலங்கைப் பயணம் என்று பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கியமான பகுதிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. "பல ஆண்டுகளுக்கு முன்பு நகுலனைத் திருவனந்தபுரத்தில் சந்தித்து "புதிய பார்வை" இதழுக்காக நேர்கண்டபோது எனக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பை சல்மாவுடன் உரையாடியபோது உணர்ந்தேன்." என்கிறார் அய்யனார்.


"எழுத்துதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம்."
"பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்"
"ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான்
பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது"

நேர்காணல் - கவிஞர் சல்மா


சந்திப்பு - பெ.அய்யனார்

இஸ்லாமியப் பெண்களுக்கான அடையாளம் மட்டும்தானே உங்கள் கவிதைகளில் உள்ளது?

எனக்குத் தெரிந்த எத்தனையோ இந்துக் குடும்பங்களில் என்னைப் போன்று அடக்கிவைக்கப்படும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். வீட்டிலிருந்து வெளியில் வராமல் எவ்வளவே பேர் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்து-முஸ்லீம் என்ற வேறுபாடில்லாமல் பெண்களுக்கான சிரமம் என்பது ஒன்றாகவே இருக்கிறது.இதை என் இந்துத் தோழிகள் மூலமாக அனுபவப்பூர்வமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அப்போதுதான் எல்லாப் பெண்களுக்குமான பிரச்சினையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். 'இஸ்லாமியப் பெண்' என்ற தனிப்பட்ட அடையாளம் எனக்கு வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். என் தனிப்பட்ட அடையாளம் மட்டும்தான் என் கவிதைகளில் இருக்கிறது என்றால் எல்லாத்தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கவிதைகளாக அவை இருந்திருக்காது. ஜாதி மத வேறுபாடுகளைத் தாண்டிய, எல்லாப் பெண்களின் அனுபவமாகத்தான் என் கவிதைகளைப் பார்க்கிறேன்.

மதம் என்பது ஒரு வாழ்க்கை முறைதான். இஸ்லாமிய மத ஈடுபாடு உங்களுக்கு உண்டா?

ஆரம்பத்தில் மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை எனக்கிருந்தது. பின்பு ருஷ்ய இலக்கியம், மார்க்சியம், லெனின் பற்றி நிறைய வாசிக்க ஆரம்பித்த பின்பு எனது 16, 17 வயதுகளில் மதத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது. அந்த நம்பிக்கை இல்லை என்று காட்டிக்கொண்டதாலேயே நிறையப் பிரச்சினைகளை எதிர்கொண்டேன்.

குரான் ஓதுவதற்கான போட்டியில் பள்ளிவாசலில் நிறையப் பரிசுகள் எல்லாம் பெற்றுள்ளேன். அப்படியான ஒருத்தி திடீரென்று தொழுகை செய்வதை நிறுத்திவிட்டவுடன் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தானாகவே வருகிறது. மற்ற விஷயங்களில் என்னை ஏற்றுக்கொண்ட பெற்றோர்கள்கூட என்னைப் பற்றி அதிகக் கவலைகொள்ளத் தொடங்கினர். யாருக்காகவும் என்னை இதுவரை மாற்றிக் கொண்டதில்லை. ஒரு நம்பிக்கை போய்விட்டது. அதை மனதின்றிப் பிறருக்காகச் செய்வதில் விருப்பமில்லை. அப்போது பல நாள் வெறுமனே நின்றுகொண்டு இருந்திருக்கிறேன். அம்மா பிடிவாதமாகத் தொழச் சொல்லி அழுவார்கள். காலப்போக்கில் அவர்களுக்கும் சலிப்பு வந்து விட்டுவிட்டார்கள். இப்போது இங்குள்ள எல்லோருக்கும் நான் ஒரு 'காஃபிர்'. அதாவது இந்து. ஆனால் ஆரம்பத்தில் பெரிதாகப் பேசப்படும் விஷயங்கள் பின்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. சென்னைக்கு வந்து லண்டன் TTN என்ற தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருந்தேன். சென்னைக்கு வந்தால் முஸ்லீமாக என்னை அடையாளம் காட்டவேண்டிய அவசியம் கிடையாது. பேட்டி கொடுத்தபோது ஃபுர்கா அணியாது சாதாரணமாகப் பேசிவிட்டு வந்தேன். அந்தப் பேட்டி ஐரோப்பாக் கண்டத்தில் மட்டும்தான் தெரியும் என்றார்கள். ஆனால் சவூதி முழுக்கவும் அந்த ஒளிபரப்புத் தெரிந்திருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து சென்று சவூதியில் வேலை பார்ப்பவர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து, பதிவுசெய்து அதை எங்கள் ஊருக்கு (துவரங்குறிச்சி) அனுப்பி வைத்துவிட்டார்கள். ஊர் முழுக்கப் பரவி, நான் ஏதோ தவறு செய்துவிட்டதுபோல எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள். வீட்டிலிருந்து வெளியில் தலைகாட்ட முடியவில்லை. அதனால் எனக்கு ஏற்பட்ட மன வருத்தத்தைச் சொல்வது சிரமம்.

ஒவ்வொருவரும் கேட்ட கற்பனையான கேள்விகளை நினைத்தே பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, "ஒரு ஆண் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய், அவன் உன் கையைப் பிடித்து இழுத்தால் நீ என்ன செய்ய முடியும்?" அதற்கு "தெருவில் நான் போகும்போது எவனாவது கையைப் பிடித்து இழுத்தால் என்ன செய்வது" என்று நான் சொல்லி கேள்வி கேட்பவர்களை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. அப்போது கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். ஹமீது கூட சேர்ந்துதான் இப்படி ஆகிவிட்டாள். இனி அவனைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினார்கள். முஸ்லீம் மதத்தில் பிறந்தவள் கடவுள் மறுப்புப் பற்றிப் பேசுவதை அவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இப்படியான கேள்விகளுக்குப் பதில் சொல்லி சக்தியை வீணாக்க வேண்டாம் என்று தொடர்ந்து பத்து நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தேன். வீட்டிற்குள்ளும் கடுமையான பிரச்சினை வந்தது. "இனிமேல் எந்தப் பேட்டியும் கொடுக்கக்கூடாது" என்று அப்பா, அம்மாவிலிருந்து கணவர்வரை எல்லோருமே சொன்னார்கள். தீராத அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் வருத்தம் கொண்டார்கள். அவர்களிடம் "இனிமேல் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்" என்று சொல்லி சமாதானப்படுத்தினேன். அந்த விஷயம் ஆரம்பத்தில் பரபரப்பாக இருந்ததே தவிர, இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்தவிகடன், தினமணி என்று பல பேட்டிகள் வந்து எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

உள்ளூர் ஜமாத்தாரிடமிருந்து ஏதும் எதிர்ப்பு வரவில்லையா?

இல்லை. அதற்கு முக்கிய காரணம் இதுவரை முஸ்லீம் சமூகத்தைப் பற்றி எதையும் எழுதவில்லை. அதைப் பற்றிய விமர்சனம் எனக்கு இருந்தாலும் அதை எழுத்தாக்கப் பயமாக இருக்கிறது. விமர்சனபூர்வமான கருத்துக்களைச் சொல்ல இங்கு இடமேயில்லை. சிறுபான்மையினர் மதமான இஸ்லாமை அந்த மதத்தில் பிறந்த ஒருவராலேயே விமர்சனம் செய்ய முடியாது. அப்படிச் செய்யும்போது நம்மைத் தண்டிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்குவார்கள். உண்மையிலேயே என்ன சொல்ல வருகிறோம் என்பதைக்கூடப் பார்க்க மாட்டார்கள். அதில் அக்கறையும் இருக்காது.

சமீபத்தில் இலங்கை சென்றிருந்தபோதுகூட நான் பேசிய விஷயம் ஒன்று சர்ச்சைக்குள்ளானது. முற்போக்கு இலக்கிய அமைப்பு சார்பாக ஒரு சந்திப்புக்கு டொமினிக் ஜீவா ஏற்பாடு செய்திருந்தார். நானும் அம்பையும் அந்தக் கூட்டத்திற்க சென்றோம். குரானில் பெண்களக்கு சாதகமாக உள்ள விஷயங்களையும் பாதகமாக உள்ளதாகச் சொல்லப்படுகிற விஷயங்கள் பற்றியும் பேசலாம் என்றேன். ஒரு சம்பவ நிகழ்விற்கு சாட்சி வைக்க வேண்டும் என்றால் அந்தச் சாட்சி பெண்ணாக இருந்தால் இரண்டு பெண்கள் தேவை என்றும் ஆணாக இருந்தால் ஒருவர் மட்டுமே போதுமானது என்றும் குரானில் வருகிறது. முல்லாக்கள் ஹஜரத்துகள் போன்ற மதத் தலைவர்கள் இதை மட்டும்தான் அளவுகோலாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவார்கள். தங்களுக்கு சாதகமாக உள்ள மேலோட்டமான விஷயங்களை மட்டுமே கணக்கில் கொள்வார்கள். அதே விஷயத்தில் பெண்களுக்குச் சாதகமானவையும் குரானில் இருக்கும். எட்டுவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் அதில் உள்ள ஒரே விஷயத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். இதேபோலத்தான் பெண்களைத் "தலாக்" செய்வதிலும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான முறை இருக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசி விவாதத்தை உருவாக்கினால்தான் 'இஸ்லாம்' குறித்த தவறான அபிப்பிராயங்கள் மற்றவர்களுக்கு உருவாகாது என்று அந்தக் கூட்டத்தில் சொன்னேன். உடனே, அங்கிருந்த முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர் - அங்கு அவர் முக்கியமான கவிஞராம் - "இஸ்லாம் ஒரு முழுமையடைந்த ஒரு மதம். குரானும் முழுமையடைந்த வேதம். அதைப்பற்றி இங்கு யாரும் பேசக்கூடாது. விவாதிப்பது என்ற வார்த்தையே சொல்லக்கூடாது. நீங்கள் பேசியது தவறு" என்று மிகக் கடுமையான கோபத்துடன் பேசினார்.

தமிழகத்திலிருந்து எங்களை இலங்கைக்கு அழைத்திருந்தவர்கள் "Muslim Women's Research and Action Forum" என்ற அமைப்பை நடத்தும் ஐந்து முஸ்லீம் பெண்கள். முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள். அவர்களுக்குக் கொஞ்சம் தர்மசங்கடமாகிவிட்டது. இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சொல்லி முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். எதிராகப் பேசியவர்களின் குணம் தெரிந்து அப்படிச் செய்தார்கள். எதிராகப் பேசிய அந்தக் கவிஞர் என் தம்பியிடம் என்னைப் பற்றித் தவறாகப் பேசியிருக்கிறார். "இதை நான் சாதாரணமாக விடமாட்டேன்" என்றும் மிரட்டல் தொனியில் சொல்லியிருக்கிறார்.

இஸ்லாமிய மத ரீதியான நம்பிக்கை தமிழகத்தைவிட இலங்கையில் அதிகமாக உள்ளதோ?

இலங்கையில் நம் ஊரில் இருப்பதைவிடத் தீவிரமாகவே உள்ளது. தாங்கள் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்திக் கொள்ள மிகுந்த ஆர்வமாக உள்ளார்கள். அதற்கு முக்கியமான காரணம் அவர்களது வாழ்க்கைநிலை. தமிழ் முஸ்லீம் என்ற அடையாளத்தை விரும்பியே வகுத்துக் கொள்கிறார்கள்.

"நான் தமிழனல்ல. முஸ்லீம். புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவர்கள் வேறு ஆட்கள். அவர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள்தான் போராடுகிறார்கள். நாங்கள் போராடவில்லை" என்பதை சிங்கள ராணுவத்திற்கும் அரசிற்கும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் புலிகளினால் அதிகமான கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதனால் தங்களைத் தனிச் சமூகமாகக் காட்டிக்கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள். புலிகளின் மீதான வெறுப்பை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மத அடையாளத்தைக் காட்டிக்கொண்டு தங்களின் உயிரையும் சொத்தையும் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இனப்பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பெல்லாம் பெண்கள் வெளியில் செல்லும்போது ஃபுர்கா அணிந்து செல்ல மாட்டார்களாம். ஆனால் இப்போதெல்லாம் ஃபுர்கா அணியாமல் முஸ்லீம் பெண்கள் வெளியில் செல்வதே இல்லை. அதனால் தனி ஒரு இனமாகக் காட்டிக் கொள்கிறார்கள். வீட்டிற்குள் இருக்கும் போது எப்படியிருந்தாலும் வெளியில் வரும்போது முஸ்லீம் என்ற அடையாளத்துடன்தான் வருகிறார்கள். "தமிழர்களல்ல நாங்கள். முஸ்லீம்கள்" என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் தாய்மொழி தமிழ்தான். "புலிகள்மீது எங்களுக்குச் சிறிதளவும் நம்பிக்கையில்லை. அவர்களிமிடருந்து தனித்து நிற்கவே விரும்புகிறோம்" என்பதே அவர்கள் நிலை.

நான் அங்கு இருந்த சமயத்தில்கூட கிளிநொச்சியில் கலவரம் நடந்தது. அதைக்கூட உதாரணமாகக் காட்டி அவர்கள் எப்போதுமே இப்படித்தான் நம்மை அவமானப் படுத்துகிறார்கள் என்று கோபமாகச் சொன்னார்கள். புலிகளின் தலைமை முஸ்லீம்களுடன் சமாதானத்தை விரும்பினாலும்கூட மாவட்டப் பிரதிநிதிகளின் முஸ்லீம் வெறுப்பு அதைச் சாதிக்கவிடாது என்றே பெரும்பான்மையோர் சொன்னார்கள். ஒரு சில விஷயங்களை அவர்கள் சொன்னபோது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது.

தமிழகத்திலுள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகத்திற்கும் இடையே என்னவிதமான வேறுபாடுகளை உணர்ந்தீர்கள்?

அங்குள்ளவர்கள் கலாச்சாரரீதியாக மிகுந்த சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நம்முடைய கலாச்சாரம் எல்லாப் பெண்களுக்கும் ஒருவித மனத்தடையை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் வீட்டில் இருக்கும்வரை முஸ்லீம்கள் என்ற அடையாளத்தைப் பார்க்க முடியவேயில்லை. முஸ்லீம் பெண்கள் இந்த அளவிற்குச் சுதந்திரமாக இருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. உடைகளிலிருந்து பேசுவதுவரை நிறைய வித்தியாசத்தைப் பார்த்தேன். பெண்களுக்கு நல்ல கல்வி கிடைத்திருக்கிறது. வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப் பல விஷயங்கள் அங்கு சாத்தியமாகி இருக்கிறது. தமிழகத்தில் அந்த அளவிற்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.

நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?

நான் ஒன்பதாவது வகுப்பை முழுமையாக முடிக்கவில்லை. ஒன்பதாவது படிக்கும் சமயத்தில் எங்கள் ஊரான துவரங்குறிச்சி தியேட்டரில் ஏதோ ஒரு படம் போட்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் திரைப்படம் என்பது ஒரு அதிசயமானது. நூலகத்திற்குத்தான் நான் போனேன். அதற்கு அருகில்தான் திரையரங்கு. திரைப்படப் பாடல்களின் ஓசை கேட்டுக்கொண்டே இருக்கிறது. சனி ஞாயிறு மட்டும்தான் பகல்காட்சி நடைபெறும். திரைப்படப் பாடல்கள் காதில் தொடர்ந்து விழுந்துகொண்டிருக்க நாமும் ஏன் சினிமாவிற்குச் செல்லக்கூடாது என்று எனக்கும் என்னுடன் நூலகத்தில் இருந்த இரண்டு தோழிகளுக்கும் தோன்றியது. எங்கள் கையிலும் காசிருந்ததால் உடனே திரையரங்குக்குள் போய்விட்டோம். என்ன படம் என்றெல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. உள்ளே போனால் பெண்கள் யாரும் இல்லை. எல்லாம் ஆண்கள். மதிய நேரத்தில் பெண்கள் யாரும் படத்திற்கு வரமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டோம். படம் பார்க்க வந்த ஆண்கள் எல்லோரும் எங்களையே அதிசயமாகப் பார்க்கிறார்கள். எங்கள் முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை. படம் திரையில் ஒட ஆரம்பித்ததும்தான் அதிர்ச்சியடைந்தோம்.

அது ஒரு மலையாள 'ஏ' படம். ஆண்கள் பகுதியில் கூட்டம் நிரம்பியுள்ளது. அதில் என் தம்பியும் இருப்பதைப் பார்க்கிறேன். பெண்கள் பகுதியில் நாங்கள் நாலே நாலு பெண்கள் மட்டும்தான். ஆண்கள் யாரும் திரையில் நடப்பதைப் பார்க்காமல் எங்களையே கண்கொட்டாமல் பார்க்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் உடலே நடுங்குகிறது. பெருத்த அவமானமாக உணர்கிறோம். வீட்டிற்குத் தெரிந்தால் வெட்டிக் கொன்றுவிடுவார்கள். படத்தை நாங்கள் பார்க்காமல் தரையைப் பார்த்தபடியே இருக்கிறோம். படம் முடிந்து எல்லோரும் வெளியே போய் அரை மணி நேரத்திற்குப் பின்பு உள்ளேயே உட்கார்ந்திருக்கிறோம். பயத்திலும் அதிர்ச்சியிலும் எங்களுக்கு வியர்த்துக் கொட்டுகிறது. தயக்கத்துடன் நாங்கள் வெளியில் சென்றால் எல்லா ஆண்களும் திரையரங்கு வாசலைப் பார்த்துக்கொண்டே நிற்கிறார்கள். நாங்கள் யாராக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் போவோம் என்பதைப்போல் எல்லோருமே நிற்கிறார்கள். வீட்டிற்குப் போவதற்கு முன்பே அம்மாவிற்குத் தகவல் போய்விட்டது. அன்றிலிருந்து பள்ளிக்குப் போகவில்லை. அப்போதே தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். தம்பி அதே படத்தைப் பார்க்கிறான். அவன் அடுத்த நாளிலிருந்து பள்ளிக்குப் போகவே செய்கிறான்; எந்தத் தண்டனையுமின்றி. அந்தச் சமயத்தில்தான் நான் வேறு அவன் வேறு என்ற பாகுபாடை உணரச் செய்தார்கள். பெண் என்ற ஒரே காரணத்திற்காக என் படிப்பு பறிக்கப்படுகிறது.

அதேபோல பக்ரீத், ரம்ஜான் சமயத்தில் நல்ல உடை உடுத்தி வெளியில் சென்று எல்லா ஆண்களும் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்துவார்கள். ஆனால் பெண்கள் ஒன்று சேர முடியாது. அப்போது எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது. பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தொழுகை நடத்தினால் என்ன என்று தோன்றியிருக்கிறது. நம்மை மட்டும் ஏன் பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிப்பதில்லை, வீட்டிற்குள்ளேயே பெண்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். சொந்த வாழ்க்கை அனுபவம்தான் எல்லாவற்றையும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. வேறுவிதமான சிந்தனைகளுக்கும் இதுதான் காரணம் என்றும் நினைக்கிறேன். எவ்வளவு படிப்பிருந்தாலும் அனுபவம்தான் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திருந்தால் என்னால் எதுவும் எழுதியிருக்க முடியுமா என்று தெரியவில்லை.

அம்பையின் எழுத்துக்களில் வலிந்து சொல்லும் பெண்ணியக் கருத்துக்கள் தூக்கலாக இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள். உங்களின் எழுத்துக்களில் அப்படி இல்லை என்பதைப் பார்க்க முடிகிறது. இதை எப்படி அடைந்தீர்கள்?

எந்த அளவிற்கு அதிகமான அடக்குமுறைக்கு உள்ளாகிறோமோ அந்த அளவிற்குத் தீவிரமான வெளிப்பாடாக எழுத்துக்கள் வெளிவரும் என்றே நம்புகிறேன். இதை எனது படைப்புகளை முன்வைத்தே நிரூபிக்க முடியும். சிந்தனை ரீதியான புதிய விஷயங்களே அம்பையின் கதைகளில் தூக்கலாகத் தெரியும்.

சிந்தனை, வாசிப்பு அனுபவம் சார்ந்தே பெரும்பாலான கதைகளை அம்பை எழுதியிருக்கிறார். இதை அம்பையின் 'காட்டில் ஒரு மான்' கதைத் தொகுப்பைப் பற்றிய என் விமர்சனத்தில்கூட பதிவு செய்துள்ளேன். அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எனது எழுத்துக்கள் என் வாழ்பனுபவம் சார்ந்து இருப்பதால் யதார்த்தமாகவும் இருக்கிறது. பெண்ணியம் பற்றிய தீவிரமான கருத்துகளை பலபேர் குறைசொல்லிக் கேட்டிருக்கிறேன். தீவிரமாகப் பேசுவதாலோ பிறரோடு சண்டை போடுவதாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை. அமைதியாகவும் சிறிய வார்த்தைகள் மூலமாகவும் பெண்ணியக் கருத்துக்களைத் தீவிரமாகச் சொல்ல முடியும் என்றே நம்புகிறேன். அம்பையின் செயல்பாடுகள் அவரைப் பொறுத்தளவில் சரியானதுதான். அதை நான் குறையாகச் சொல்லவில்லை.

ஒரு பெண்ணாகப் பிறந்தவர்களுக்கு இங்கே என்ன நடக்கிறது என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்கிறேன். என் நிலைமைதான் இங்கு எல்லாப்பெண்களுக்கும்.

"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" தொகுப்பு முன்னுரையில் மொழியின் போதாமை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போதும் அப்படித்தான் நினைக்கிறீர்களா?

பெண்ணிற்கான மொழி இன்னும் வீரியத்துடன் வெளிப்பட வேண்டும் என்ற கருத்து எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், நம்மிடம் இருக்கும் மொழியை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளோமா என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டால் 'இல்லை' என்ற பதிலையே நான் இப்போதும் சொல்ல விரும்புகிறேன். ஆனால், அதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது என்ற நிறைவின்மை இருந்து கொண்டுதான் இருக்கிறது. பெண்களுக்கான மொழியை பெண்கள்தான் உருவாக்க வேண்டும். இன்றைய மொழி ஆணின் சிந்தனைக்கேற்ற மொழியாகத்தான் இருக்கிறது. பெண்கள் சிந்திப்பதுகூட ஆணின் சிந்தனை முறையை ஒட்டித்தான் வருகிறது.

பெண்மொழி என்பதற்கான வரையறை என்ன என்று சொல்ல முடியுமா?

ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான் பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது. இது தவறு என்ற யோசனையே இல்லாமல்தான் பெண்ணும் யோசிக்கிறாள். பெண்கள் தங்களுக்கென்று சுயமான சிந்தனையை வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையை வைத்துக்கூட இதை விளக்க முடியும். ஒரு ஆண் வரதட்சணை கேட்கும் அதே நேரம் பெண்ணும் கேட்கிறாள். மகனுக்குத் திருமணம் செய்விக்கும் அம்மா வரதட்சணை கேட்பதிலும் மகனுடன் போட்டிபோடுகிறாள். திருமணமான பின்பு அவள் இருக்கும்வரை அவளை வைத்துச் சாப்பாடு போடுகிறோம். காப்பாற்றுகிறோம். அதற்காகக் கொடுக்கப்படும் சிறிய தொகைதான் நீங்கள் கொடுப்பது என்றெல்லாம் ஒருபெண்தான் சொல்கிறாள். இப்படிப் பேச வைப்பது ஒரு ஆணின் சிந்தனைதான். இப்படியான சிந்தனைகளிலிருந்து வெளிவரும் போதுதான் பெண்ணிற்கான முழுமையான சிந்தனை வரும். யாரைப் பற்றி, யாருக்காகச் சிந்திக்கிறோம் என்றுகூட அறியாமல் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு ஆணின் பிரதிநிதியாக ஏன் செயல்பட வேண்டும் என்பதையும் யோசிப்பதில்லை.

பெண்களுக்காகப் படைப்புரீதியாகக் குரல்கொடுத்த அம்பை போன்றவர்கள் பெண் ஆண் என்று தீவிரமான வேறுபாடைச் சொன்னதில்லை. ஆனால் இப்போது குட்டிரேவதி, மாலதிமைத்ரி, நீங்கள் எல்லோரும் அப்படியான பாகுப்பாட்டை விரும்புவது ஏன்?

'அம்பை' தன்னைப் பெண் என்ற அடையாள வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதை விரும்பவும் மாட்டார்கள். ஆனால் எனக்கென்னவோ பெண், ஆண் என்ற பாகுபாடு அவசியமாகத்தான் தோன்றுகிறது. பெண் தன்னைப் பாகுப்படுத்திக் கொண்டு தன் விடுதலையை நோக்கியப் பயணத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது? அம்பையிடம் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர்களது தளம் அறிவுபூர்வமானது. அறிவும் உணர்வும் சேரும்போதுதான் சிறப்பான படைப்புகள் வெளிவரும். இப்போது எழுதியுள்ள என்னுடைய நாவலைக்கூட இப்படியானதாகத்தான் நினைக்கிறேன். என் அனுபவங்களை உணர்வுபூர்வமாக மட்டும் பார்க்கக் கூடாது. புதிய பார்வைகளை உருவாக்கும் விதமாக எழுதியிருக்கிறேன். என் அனுபவத்தை எல்லோருக்கும் பொதுவான விஷயமாக மாற்றுவதுதான் படைப்பின் வெற்றியாக நினைக்கிறேன். மேலும் உணர்வுகளை அறிவுரீதியாகச் சிந்தித்து படைப்பாக மாற்றுவதை விரும்புகிறேன்.

நவீனப் பெண் படைப்பாளிகள் பலர் பெண் உடலைக் கொண்டாடுவது பற்றிப் பல இடங்களில் பேசுகிறார்கள். பெண் உடலைக் கொண்டாடுவது என்றால் என்ன?

மற்றவர்கள் எதை உணர்த்த இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. பொதுவாக உடல் என்பதையே அருவருப்பான ஒன்றாகத்தான் பார்த்து வந்திருக்கிறோம். இதையொட்டி நம் மனம் முழுக்கக் குற்ற உணர்ச்சி நிரம்பி உள்ளது. இந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்த ஆண் பெண் பாகுபாடில்லாமல் சகலரும் மீள வேண்டிய தேவை உள்ளது. சினிமா, தொலைக்காட்சி மூலம் நம் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது என்ற புலம்பல்களுக்கும் காரணத்தைத் தேடினால் உடல் பற்றிய நம் அறியாமையும் கற்பனையும்தான் வெளிப்படும். (தமிழ் சினிமா இதற்கு விதிவிலக்கு.) உடல் என்பது அருவருக்கத் தக்கதல்ல என்பதை நிரூபித்துவிட்டாலே பல தேவையற்ற சிக்கல்களுக்கு விடை கிடைக்கும். இதைப் பற்றி பலவிதமாக யோசித்தாலும் எதிலிருந்தும் விடுபடமுடியாத தன்மைதான் தொடர்கிறது. மேலும் பெண் உடல் "தீட்டு", "பாவம்" என்று இன்றுவரை சொல்லப்பட்டுத்தானே வருகிறது. இதிலிருந்து முழுவதுமாக விடுபடவேண்டும் என்பதே என் எண்ணம். இதை என் கவிதையிலும் சொல்லியிருக்கிறேன்.

உங்கள் கவிதைகளில் வழியற்று ஒடுங்கிப்போன பெண்ணின் உணர்வுதான் மேலோங்கியிருக்கிறது. மீண்டு வர வேண்டும் என்றோ, மீற வேண்டும் என்றோ கவிதைகளில் காண முடியவில்லையே?

மீள வேண்டும். மீற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பமோ சூழலோ எனக்கில்லை. ஒரு வட்டத்திற்குள்தான் சுற்றிவருகிறேன். இந்த வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. எப்போதும் யாரையாவது சார்ந்து வாழ வேண்டும் என்பதே அவநம்பிக்கையையே ஏற்படுத்துகிறது. வெளி உலகம் பற்றிய பயம் சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம்தான். ஆனாலும் மீண்டுவிடுவேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நான் எழுதத் தொடங்கியதிலிருந்தே அதற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டேன் என்பதுதான் உண்மை.

உங்கள் ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்தவுடன் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளீர்கள். இது 'பெண்' என்ற ஒரே காரணத்திற்காகவா?

எனக்கு மட்டுமல்ல. சமீபத்தில் எழுதும் எல்லாப் பெண்களுக்குமே கவனம் கிடைத்திருக்கிறது. எத்தனையோ தொகுப்புக்கள் போட்ட ஆண்களைவிட குட்டிரேவதி, மாலதிமைத்ரி ஆகிய பெண் கவிஞர்களுக்கு நல்ல கவனம் கிடைத்திருக்கிறது. பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவுடன் மற்றவர்களைவிடக் கொஞ்சம் கூடுதலான கவனம் கிடைத்திருப்பது உண்மைதான். நவீன இலக்கிய ஆர்வமுள்ள ஒருவர் அரசியலுக்குள் வரும்போது இப்படியான கவனம் கிடைப்பதைத் தவிரக்க முடியாது.

மேலும் இப்போது எழுதும் என்னைப் போன்ற பல பெண்கள் புதுவிதமாக எழுதத் தொடங்கியிருகிறார்கள். தமிழில் இதுவரை இல்லாததைச் சொல்லும்போது பெண்களுக்குக் கிடைக்கும் கவனம் எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. "இப்படியான கவனம் இடதுஒதுக்கீடு போல" என்று ஒரு சிலர் இதைக் குறை கூறுவார்கள். நல்ல விஷயங்களுக்குக் கவனம் கிடைக்காத ஒரு சூழலில் கவனம் கிடைக்கும்போது அதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? இந்தக் கவனம் பிற பெண்களுக்கும் எழுதுவதற்கான ஆர்வத்தைத் தூண்டும் என்றே நினைக்கிறேன். அரசியலுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் எனக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இது மிகுந்த ஆறுதலாகவும் உள்ளது. உதாரணமாக பேரூராட்சி சார்ந்த அலுவலக விஷயமாகப் பல அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அரசு எந்த அளவுக்கு சீர்குலைந்து போயிருக்கிறது என்பதைப் பார்த்து உணர முடிகிறது. இந்த ஓராண்டிற்குள் சலிப்புத்தான் வந்திருக்கிறது. தேர்ந்தெடுத்த மக்களுக்கு எந்தவிதப் பயனுமின்றித்தான் செயல்படவேண்டுமோ என்றுகூடத் தோன்றும். பஞ்சாயத்துத் தலைவர்கள் எந்த அளவிற்கு அலைக்கழக்கப்படுகிறார்கள் என்பதையும் பார்க்கிறேன்.

ஒவ்வொரு அதிகாரியைச் சந்திக்கும்போது நான் எழுத்தாளர் என்று வேண்டுமென்றே அறிமுகம் செய்துகொள்வேன். அப்போது கொஞ்சம் பயப்படவே செய்கிறார்கள். 'விஷயம் தெரிந்த ஆள்' இவர்களை அலைக்கழிக்கக் கூடாது என்ற திடீரென்று அவர்களுக்கே தோன்றுகிறது. 'இந்தியன் எக்ஸ்பிரஸி'ல் வந்த என் பேட்டியை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காட்டினேன். அதை அவரிடம் காட்டிப் பெருமையடித்துக் கொள்வது என் நோக்கமல்ல. அதனால் ஒரு ஃபைல் நகர்கிறது.

இந்நிலையில் பொதுஜனங்களும் படிப்பறிவு குறைவான பஞ்சாயத்துக் தலைவரும் அரசு அதிகாரிகளை எப்படி அணுகுக முடியும் என்ற சிந்தனையும் எனக்குள் ஓடும்.

வீட்டிற்குள்ளேயே இருந்த நீங்கள், 'பஞ்சாயத்துத் தலைவி' என்ற பதவிக்காகப் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இப்போது. அந்த அனுபவம் கவிதைகளாக மாறுகிறதா?

அலுவலக விஷயமாகப் பல இடங்களுக்குப் போனாலும் களத்தில் இறங்கிப் பணிபுரியவில்லை. களத்தில் இறங்கிப் பணிபுரியும் சூழல் எனக்கு இல்லை. இதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன். எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது. ஆனாலும் முடியவில்லை. இப்போது நான் ஒரு ஊசிமுனையில் நின்றுகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள்தான் இருக்கிறேன். களத்தில் இறங்கிப் பணிபுரிவது தடுக்கப்பட்டுத்தான் வருகிறது. மக்களோடு சேர்ந்து பல காரியங்களைச் செய்ய யோசிக்கவே செய்கிறேன். ஆனாலும் அது முடியாமல்தான் உள்ளது. அப்படியான சூழலும் அனுபவமும் வாய்க்கும்போது அது என் படைப்பிலும் வெளிப்படும். இப்போது எனக்கிருக்கும் அரசியல் அனுபவத்தை வைத்துக் கட்டுரைகள் எழுதலாம். ஆனால் கதை, கவிதை போன்ற படைப்புகளாக அது வெளிப்பட வாய்ப்பில்லை.

நீங்கள் 'தினமணி' இதழில் எழுதிய கட்டுரை நன்றாக இருந்தது.

அந்தக் கட்டுரைக்குப் பலதரப்பினரிடமிருந்து பாராட்டுக் கிடைத்தது. எனக்கு அரசு யந்திரம் அரசுத் திட்டங்கள் சார்ந்து பல விமர்சனங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றாக மனதில் குவிந்துகொண்டே வருகின்றன. பின்னாட்களில் கட்டுரைகளாக அவைகளை எழுதுவேன். இப்போது எழுதினால் வேறுவிதமான எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரும். அரசைச் சார்ந்து செயல்படும் பணியில் இருந்துகொண்டு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன். பதவியில் இல்லாதபோது எழுதுவதுதான் சரியானது. உதாணரத்திற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். குமுதம் ஜங்ஷனில் வந்த பேட்டியைப் படித்த அதிகாரி ஒருவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து "நன்றாக இருந்தது" ஆனால் "நீங்கள் ஒரு எழுத்தாளர் என்பதற்காகத்தான் உங்களை உபசரிக்கிறோமா?" என்று வருத்தப்பட்டார். நான் சொன்னேன், "உங்களை நினைத்து அப்படிச் சொல்லவில்லை. மற்றவர்களிடம் உணர்ந்ததை அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறேன்" என்று சொன்னவுடன், அதை ஒத்துக் கொண்டார். பதவியில் இருப்பதால் வெளிப்படையாகப் பேசுவதில் உள்ள சிரமம் இதுதான்.

இதுவரை நீங்கள் படித்தவை மற்றும் எழுதியவை மூலம் "கவிதை என்றால் என்ன" என்ற வரையறையை அடைந்துள்ளீர்களா?

நாம் அன்றாடம் எவ்வளவோ விஷயங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்போது நமக்கு நெருக்கமான விஷயத்தைக் கவிதையில் கொண்டு வரும்போது அந்த விஷயம் எல்லோருக்கும் நெருக்கமான அனுபவமாக மாறுகிறது. அந்த அனுபவம் படிப்பவர்களின் உள்ளே எதாவது ஒன்றைத் திறக்க வேண்டும். எனக்குள் திறந்த விஷயம் இன்னொருவருக்கும் திறக்க வேண்டும். இதைத்தான் கவிதை என்று உணர்கிறேன். யாராவது ஒரு கவிஞனின் கவிதையை நான் படித்துக் கொண்டிருக்கும் போது எனக்குள் படிந்திருந்த ஏதோ ஒரு விஷயத்தைத் திடீரென்று ஞாபகப்படுத்தும். இதைத்தான் கவிதை என்று நினைக்கிறேன்.

கவிதை சத்தமாகப் பேச வேண்டும் என்றோ அது பலவிதமான வரையறைகளைக் கொண்டுள்ளது என்றோ நான் நினைக்கவில்லை. எப்படியான அனுபவத்தையும் சாதாரண வார்த்தைகளில் சொல்ல முடியும். ஹமீதின் (மனுஷ்ய புத்திரன்) சமீபத்திய கவிதைகள் எல்லாமே எளிய வார்த்தைகளைக் கொண்டவை. பெரிய பெரிய படிமங்களோ விஷயங்களோ கொண்டவை அல்ல. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள விஷயங்களைத் திறந்து விட்டிருக்கிறது. அப்படித்தான் கவிதை இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு நானும் எளிய சொற்களைக் கொண்டுதான் எழுதிவருகிறேன். குறுக்கே வரும் பெரிய படிமங்களைக்கூடத் தூக்கி எறிந்திருக்கிறேன். சட்டென்று ஒருவரிடம் திறப்பைக் கொண்டுவர வேண்டும். ழாக் ப்ரெவரின் கவிதைகளைப் படித்தபோது இதை உணர்ந்தேன். மிகச் சாதாரண வார்த்தைகளில், மனதுக்குள் உறைந்திருந்த ஒளிந்திருந்த விஷயங்களைத் துருவி எடுக்கிறது. நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரெஞ்சு கவிஞனின் எண்ணமும் நம் எண்ணமும் எப்படி ஒரே அலைவரிசையில் வருகிறது? கவிதை என்ற மொழிதான் இதை சாத்தியப் படுத்துகிறது.

பெண்களுக்காகப் படைப்புரீதியாகக் குரல்கொடுத்த அம்பை போன்றவர்கள் பெண் ஆண் என்று தீவிரமான வேறுபாடைச் சொன்னதில்லை. ஆனால் இப்போது குட்டிரேவதி, மாலதிமைத்ரி, நீங்கள் எல்லோரும் அப்படியான பாகுப்பாட்டை விரும்புவது ஏன்?

'அம்பை' தன்னைப் பெண் என்ற அடையாள வட்டத்துக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதை விரும்பவும் மாட்டார்கள். ஆனால் எனக்கென்னவோ பெண், ஆண் என்ற பாகுபாடு அவசியமாகத்தான் தோன்றுகிறது. பெண் தன்னைப் பாகுப்படுத்திக்கொண்டு தன் விடுதலையை நோக்கியப் பயணத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது? அம்பையிடம் கூட இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர்களது தளம் அறிவுபூர்வமானது. அறிவும் உணர்வும் சேரும்போதுதான் சிறப்பான படைப்புகள் வெளிவரும். இப்போது எழுதியுள்ள என்னுடைய நாவலைக்கூட இப்படியானதாகத்தான் நினைக்கிறேன். என் அனுபவங்களை உணர்வுபூர்வமாக மட்டும் பார்க்கக்கூடாது. புதிய பார்வைகளை உருவாக்கும் விதமாக எழுதியிருக்கிறேன். என் அனுபவத்தை எல்லோருக்கும் பொதுவான விஷயமாக மாற்றுவதுதான் படைப்பின் வெற்றியாக நினைக்கிறேன். மேலும் உணர்வுகளை அறிவுரீதியாகச் சிந்தித்து படைப்பாக மாற்றுவதை விரும்புகிறேன்.

உங்களைப் பற்றிய சுயமதிப்பீடு?

நம்மைப் பற்றிய மிகையான மதிப்பீட்டை வைத்துக்கொள்வது தேவையற்றது என்றே நினைக்கிறேன். பல சமயங்களில் என் கவிதைகளில் நான் சொல்ல நினைத்ததைச் சொல்லவில்லையோ என்றே தோன்றும். படைப்புரீதியான நிறைவு எப்போதும் வந்துவிடக் கூடாது. நிறைவின்மை, போதாமை இருந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லாப் படைப்பாளிகளுக்குமே இப்படித்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. தேவையற்ற பிரமைகளை ஏற்படுத்திக்கொள்வது நம்மை வளர்த்தெடுக்காது. மிகையான சுய மதிப்பீட்டை எப்போதும் நான் வைத்துக் கொண்டதில்லை. ஆனாலும் என் படைப்புகளுக்குக் கூடுதலான கவனத்தை எல்லோரும் கொடுக்கிறார்கள். இது நல்லதுதான். என் பொறுப்பை அதிகப்படுத்தவே இது பயன்படுகிறது.

இதுவரை எதுவுமே நான் சொல்ல ஆரம்பிக்கவில்லை. ஆனால் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது போல மற்றவர்கள் உணர்வதுதான் ஆச்சர்யமளிக்கிறது.

ஆரம்ப காலத்தில் நீங்கள் படித்த புத்தகத்திலிருந்து இன்று வரையிலான படிநிலைகளைச் சொல்லுங்கள்.

ஆரம்பத்தில், கிடைத்த புத்தகத்தை எல்லாம் படித்தேன். அப்போது இந்தப் புத்தகம்தான் கிடைக்கும் என்று தேர்வு செய்து படிக்கும் நிலை இருந்ததில்லை. ரஷ்ய இலக்கியங்கள் நிறையக் கிடைத்தன. வேறு எந்தத் தெடர்பும் இருந்ததில்லை. மார்க்சியம் சார்ந்த விஷயங்களில் ரொம்ப ஆழமான தேடலும் ஆர்வமும் இருந்தது. ரஷ்ய இலக்கியங்கள் ரஷ்யாவைச் சொர்க்க பூமியாகக் காட்டின. வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தப் பூமியை மிதிக்க வேண்டும் என்று இப்போதும் நினைத்துக் கொள்கிறேன். ரஷ்யா என் கனவுபூமியாக இருந்துகொண்டே இருக்கிறது. ரஷ்யாவின் வீழ்ச்சியைப் படித்தபோது என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. அந்த அளவிற்கு ரஷ்ய இலக்கியத்தின் மீதும் ரஷ்ய நகரங்கள் மீதும் அதீதக் காதல் இருந்தது.

பின்பு கவிதைகள் சார்ந்த விஷயங்களை வாசிக்க ஆரம்பித்தேன். நாவல், சிறுகதை என்று பின்னால் விரிந்தது. நண்பர்கள் நல்ல புத்தகங்கள் என்று சொல்வதை வாங்கிப் படித்தேன்.

இதுதான் படிக்க வேண்டும் இதெல்லாம் படிக்கக்கூடாது என்று எப்போதும் நினைத்ததில்லை. அரசியலோ, கவிதை, சிறுகதையோ, கட்டுரையோ எந்த வகையான நூலாக இருந்தாலும் படிப்பதில் ஆழமான ஆர்வம் உண்டு. பெரியாரைப் பற்றிய நூல்களையும் முன்பே படித்துள்ளேன்.

மதுரை சோகோ டிரஸ்டின் சட்டங்கள், சுற்றுச்சூழல் பற்றிய நூல்களை இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஹமீதைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் மூலமாக அம்மா வந்தாள், மரப்பசு, ஆத்மாநாம் கவிதைகள், ஜெயகாந்தன் படைப்புகள், அசோகமித்திரன் இப்படிப் பலரின் நூல்களும் படிக்கக் கிடைத்திருக்கின்றன. தேடிப்போய் வாங்கத் தெரியாது. உள்ளூர் நூலகத்தில் தேடிப் படிப்பது உண்டு.

86 ஆம் ஆண்டு வாக்கிலேயே ஜே.ஜே. சில குறிப்புகள் கோயம்புத்தூரிலிருந்து வந்த ஜோசப் என்ற நண்பர் மூலம் கிடைத்தது. எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எஸ்.வி.ஆர். எழுதியிருந்த புத்தகம் மூலமாக 'இஸங்கள்' பற்றிய அறிமுகம் கிடைத்தது. 90களின் தொடக்கத்தில் எஸ்.வி.ஆரின் தொடர்பு கிடைத்ததின் மூலம் 'ரஷ்யப் புரட்சி - இலக்கிய சாட்சியம்' நூலை அனுப்பிவைத்திருக்கிறார். அவர் மூலமாகவே அன்னா அக்மதேவா கவிதைகள், கிராம்ஷி எல்லாம் கிடைத்தது. எல்லாமே படித்திருந்தாலும் 'இஸங்கள்' மீது பெரிய அளவில் ஈடுபாடில்லை. ரஷ்ய இலக்கியம் பின்பு விடுபட்டுப்போயிற்று.

சுந்தர ராமசாமியின் அறிமுகம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

என்னுடைய கவிதைகள், ஹமீதின் கவிதைகளைப் படித்துவிட்டு லல்லி எங்களைப் பார்க்க வந்திருந்தார். அப்போது எனக்குத் திருமணமாயிருந்த சமயம். இந்தியன் எக்ஸ்பிரஸில் அப்போது சுந்தர ராமசாமியின் கதை படித்திருந்தேன். 'சன்னல்' என்ற கதை. அந்தக் கதை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஜே.ஜே. சில குறிப்புகள், புளியமரத்தின் கதை எல்லாம் படித்திருந்தேன். சுந்தர ராமசாமி மீது அப்போதே பெரிய அளவில் எனக்கு மதிப்பு உருவாகியிருந்தது.

அவரை இளைஞராக நினைத்துக்கொண்டிருந்தேன். ஜே.ஜே. சில குறிப்புகளில் வரும் இளமையும் உற்சாகமும் அப்படி நினைக்கத் தோன்றியது.லல்லி தொண்ணூற்றி ஒன்றாம் ஆண்டில் அவரைச் சந்தித்திருந்தார். அப்போதுதான் அவர் எங்களைச் சந்திக்க வருகிறார். "சுந்தர ராமசாமியின் ஜவுளிக் கடைக்கு இன்ஸ்பெக்ஷனுக்குப் போயிருந்தேன். அவரிடம் பேசினேன். வயதானவர்" என்றெல்லாம் லல்லி சொன்னார். வயதானவர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைப் பற்றிய பிம்பம் உடைந்ததைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

'ஜே. ஜே. சில குறிப்புகள்' போன்ற ஒரு எழுத்தைத் தமிழில் படித்ததே இல்லை. மொழிபெயர்ப்புக் கதைகள். எல்லாம் எனக்கு அதிகம் அறிமுகமாகத் தருணம் அது. ஜே.ஜே. சில குறிப்புகள் நடை, ஸ்டைல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின்பு லல்லி, ஹமீதும் அடிக்கடி நாகர்கோவில் சென்று சுந்தர ராமசாமியைப் பார்ப்பார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். ஹமீதுக்கு அப்போது வெளியுலகு புதிதுதான். ஆனாலும் எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. நாங்கள் இருவரும் ஒரே இடத்தில்தான் இருப்போம். அவர் ஆண் என்பதால் சில விஷயங்கள் அவருக்கு சாத்தியமாகி உள்ளது. எஸ்.வி. ஆரைப் பார்க்கப் போவார்கள். கீதாவைப் பார்க்கப் போவார்கள். இப்படிப் பலரையும் பார்த்ததைப் பற்றி அவர்கள் வந்து சொல்வதைக் கேட்டுக்கொண்டு மட்டுமே இருப்பேன். நான் வெளியில் செல்வதற்கான வாய்ப்பு இருந்ததில்லை.

சுந்தர ராமசாமி என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னதும், நாகர்கோவிலுக்கு ஒரு டூர் செல்வது போலச் சென்றோம். வீட்டில் சுந்தர ராமசாமியைப் பார்க்கப் போகிறேன் என்றால் அனுப்பமாட்டார்கள். ஹமீது, லல்லி, ஹமீதின் சகோதரிகளுடன் என் அம்மா, நானும் ஒரு வேனில் சென்றோம். அப்போதுதான் அவரை முதன் முதலாகச் சந்திக்கிறேன். 1995ஆம் ஆண்டு அது. அதற்குப் பின்பு கடிதம் மூலம் தொடர்புகொண்டேன். ரொம்ப மனதொடிந்துபோய் கடிதம் எழுதுவேன்.

"நீங்கள் இவ்வளவு சோர்வடைவதற்கு ஒன்றுமே இல்லை. வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு செய்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் உள்ளளன. இருக்கும் இடத்திலிருந்தே மேலே போகலாம்" என்று என் மனதில் உறைக்கும் வண்ணம் தெளிவாகக் கடிதம் எழுதி இருந்தார். "நல்லாப் படிக்கவில்லையே, வெளி உலகம் தெரியவில்லையே, என்று தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை" என்பதையும் மனதில் தைக்கும்படி எழுதியிருந்தார்.

பின்புதான் அதிக உத்வேகத்துடன் எழுத ஆரம்பித்தேன். நாவல் எழுதத் தூண்டுகோலாக இருந்ததும் அவர்தான். எவ்வளவோ நண்பர்கள் அப்போது இருந்திருந்தாலும் அடிக்கடி சுந்தர ராமசாமி எழுதிய கடிதம்தான் ஆறுதலாக இருந்தது. இவ்வளவு பெரிய எழுத்தாளர் நமக்கு இப்படிக் கடிதம் எழுதுகிறாரே என்ற ஆச்சர்யமும் பிரமிப்பும். இது எனக்குக் கூடுதலான நம்பிக்கையைக் கொடுத்தது. 'வீட்டை விட்டே போய்விடவேண்டும்' என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். அப்போது "அப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம். வெளியுலகமும் அப்படியொன்றும் பாதுகாப்பானதல்ல. உள்ளுக்குள்ளே இருந்துகொண்டு செயல்படுவதும் முக்கியம்தான்" என்று சுந்தர ராமசாமி அப்போது எனக்கு எழுதியதை நினைத்துப் பார்க்கும்போது இப்போது அது சரியென்றே படுகிறது.

'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவல் பற்றிய உங்கள் கடிதத்தை கணையாழி சுந்தர ராமசாமி சிறப்பிதழில் படித்தேன்.

'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் மனரீதியான பாதிப்பையும் உருவாக்கியது. அதைத்தான் கணையாழியில் வெளிவந்த கடிதத்தில் எழுதியிருந்தேன்.

'கலைகளுக்கு எதிரானது இஸ்லாம்' என்ற தோற்றம் உருவாகியுள்ளதே?

இஸ்லாமியப் புனித நூலான குரானில் அப்படியான கருத்து இல்லை. பல்வேறு துறைசார்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் இஸ்லாமிய மதத்தில் உள்ளார்கள். படே குலாம் அலிகான், ஜாகிர் உசேன் மாதிரியான உன்னதமான கலைஞர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். எங்கள் வீட்டில் ரம்ஜான் மாதமானால் தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு ஓரமாக வைத்து விடுவார்கள். அதைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக. போதை மருந்துக்குச் சமமானதாகப் பேசுவார்கள் இசையைக் கேட்பதை. மனதைக் கிறங்கடித்து சந்தோஷத்தில் ஆழ்த்தி கெட்ட செய்கைகளுக்குத் தூண்டும் என்பார்கள்.

கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும்கூட இஸ்லாமியக் கோட்பாடு என்ற பெயரில் பல பழக்க வழக்கங்கள் ஆழமாக மனதில் பதிவதாகத்தானே உள்ளது?

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தாற்போல பழக்க வழக்கங்கள் மாறிவிடுகின்றன. இதெல்லாம் குழந்தைகளிடம்கூடப் பார்க்க முடிகிறதே, அதைத்தான் என்னால் சகிக்கவே முடியவில்லை.

எங்கள் வீட்டில் என் கணவரும் தொழுகை செய்யமாட்டார். நானும் அப்படித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருப்போம். முஸ்லீம் என்ற அடையாளமே எங்களுக்கில்லை. என் கணவர் தி.மு.க. இயக்கத்தில் இருந்தவர்.

பள்ளிக்குச் செல்லும் எங்கள் பையன்கள் எல்லா விசயத்தையும் அங்கிருந்து கொண்டு வருகிறார்கள். 'சாமி' கட்சிப் பையன்கள். 'அல்லா' கட்சிப் பையன்கள் என்ற பிரிவினை இப்போதே அவர்களுக்கு வந்துவிட்டது. எங்கள் இளைய பையன் வீட்டில் ஏதாவது இந்துச் சாமிப் படம் இருந்தால் பெரும் ஆத்திரத்தோடு அதைக் குத்திக் கிழித்து விடுவான்..

என் தோழி ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் போகும்போது வீட்டில் ஸ்டிக்கர் பொட்டை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதைக் கண்ணாடி முன்பு நின்று என் நெற்றியில் வைத்துப் பார்த்தேன். அதைப் பார்த்து என் பையனுக்குப் பயங்கரக் கோபம் வருகிறது. அழுது அடம்பிடிக்கிறான். "நீ என்ன சாமி கட்சிக்குப் போகப் போகிறாயா" என்கிறான். சின்னப் பையனும் அழுகிறான். பெரிய பையனும் அழுகிறான். நமது குழந்தைகளை வேறுவிதமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது சுத்தமாக அடிபட்டு போய்விட்டது. பள்ளிக்கூடம்தான் குழந்தைகளை உருவாக்குகிறது. மார்க்ஸ் சொன்னதுபோல சூழல்தான் மனிதனை உருவாக்குகிறது. இது முழுக்க உண்மை என்றே நம்புகிறேன்.

இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது. நான் இலங்கைக்குப் புறப்படும்போது "எந்த அம்மா இப்படி வீட்டை விட்டு வெளியிடங்களுக்குச் செல்கிறார்கள்" என்ற கேள்வியை எழுப்பி, ஏதோ தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதைப்போல நினைத்துப் பேசுகிறான். சின்னப் பையன்களைக்கூட திசை திருப்புவதாக நம் சமூகச் சூழல் இருக்கிறது. நாளை யாரோ ஒரு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது "நீ ஏன் அவருடன் பேசுகிறாய்" என்ற கேள்வியை அவன் எழுப்புவதற்கான எல்லாச் சாத்தியங்களும் உள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து பிள்ளைகளை வேறு எங்காவது விடுதியில் தங்கவைத்துப் படிக்க வைக்க நினைத்துள்ளோம்.

கவிதையிலிருந்து நாவல் எழுத எப்படித் தோன்றியது?

சின்ன வயதில் நடந்த பல்வேறு விஷயங்கள் மனதுக்குள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த விஷயங்களை நாம் ஏன் எழுதக்கூடாது என்று நினைத்தேன். சிறுகதையாக எழுதி முடிக்க முடியாது. மனதில் பதிந்த விஷயங்கள் எல்லாமே பெண்கள் சார்ந்த விஷயங்கள். இந்த விஷயங்களை நாவலாக எழுதலாமே என நினைத்தேன். அப்படி நினைத்தது மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. லல்லிதான் இரண்டு நோட்டுக்களை வாங்கிக் கொடுத்தார். வீட்டில் கேட்டால் கிடைக்காது. ஐம்பது பக்கம்வரை எழுதியிருப்பேன். என் கணவர் அதைப் படித்துவிட்டார் (அந்தச் சமயத்தில் 'நான் எழுதக்கூடாது' என்ற சண்டை நடந்து கொண்டே இருக்கும்) நாவலின் தொடக்கம். வேறு சில கவிதைகள் எல்லாவற்றையும் ஒளித்து வைத்து விட்டார். 'இனிமேல் எழுதினால் கையை ஒடிப்பேன்' என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

நாவலை உற்சாகத்தோடு எழுத ஆரம்பித்துத் தடைபட்டு விட்டது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். மனதுக்குள் இருப்பதை எப்போது வேண்டுமானாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. பின்பு ஓராண்டுக்குப் பின்பு பெரிய அளவில் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சினை இல்லாதபோது பீரோவைத் திறந்து பார்த்தேன். அப்படியே இருந்தது. கீதா, சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்கள் எல்லாம் அதில் இருந்தது. மற்றவற்றைவிடக் கடிதங்களைக் கிழித்து எறிந்திருப்பாரோ என்பதுதான் அதிகத் துயரத்தைத் தருவதாய் இருந்தது.

ஏற்கெனவே எழுதிய நாவலை 'இனி எங்கே எழுதமுடியும்' என்ற தயக்கத்தில் கொஞ்ச நாட்கள் வைத்திருந்தேன். நாவல் தொடங்கிய விஷயம் லல்லி மூலமாகக் கண்ணனுக்குத் தெரியும். அவர் அடிக்கடி 'ஏன் எழுதவில்லை' என்று தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டே இருப்பார். தயக்கத்தில்தான் இருந்தேன். சுந்தர ராமசாமியும் கடிதத்தில் இதைப் பற்றிக் கேட்பார். என் நாவலைப் பற்றிய சு.ரா., கண்ணன் இருவரின் அக்கறையான நினைவுறுத்தல்கள் இல்லையென்றால் நான் எழுதியிருக்கவே மாட்டேன்.

நாவல் எதைப் பற்றியது?

நாவல் முழுக்கவே "பெண்களை இந்தச் சமூகம்" எப்படி வைத்துள்ளது என்பதைப் பற்றித்தான் பேசுகிறது. அதை எந்தவித விமர்சனமும் இல்லாமல் சொல்லி உள்ளேன். மூன்று காலகட்டமாகப் பிரித்து எழுதியிருக்கிறேன். 1948இல் நடப்பது, 1970இல் நடப்பது ஆகியவற்றைத் தாண்டி 83ல் நடந்த இலங்கை இனக் கலவரம் வரையான காலகட்டத்துடன் நாவல் முடிகிறது. மூன்று காலகட்டமும் பெண்கள் சார்ந்ததுதான்.

ஒவ்வொரு காலகட்டத்திலுமே பெண்கள் என்பவர்கள் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆகவே தெரிகிறார்கள். பொம்மைகளின் வாழ்க்கை. எப்படிப் பொருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்,

அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், அதற்குத் தகுந்தாற்போல் எப்படித் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் நாவலில் வரும். அதில் என்னுடைய விமர்சனம் எதுவும் நேரடியாக இல்லாமல் யதார்த்தமாக எழுதியுள்ளேன். "இது ஒரு யதார்த்தவாத நாவல்" என்று எளிதாக விமர்சகர்கள் ஒதுக்கித் தள்ள முடியாத விஷயங்களை என் நாவலில் எழுதியுள்ளேன்.
தமிழ்க் கலாச்சாரம் என்றால் உன்னதமானது. அதைவிட ஒழுக்கமானது இஸ்லாமியக் கலாச்சாரம் என்றெலல்லாம் பேசுவது நடைமுறை சார்ந்த உண்மை இல்லை. யாருடைய வாழ்க்கையும் அப்படி இல்லை. கற்பனையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சந்தர்ப்பம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. மற்றவர்களுக்குத் தெரியாதவரை எல்லாம் சரியானதுதான். பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மையில் நடக்கும் ஒழுக்கமற்ற(?!) விஷயங்களை இல்லை, இல்லை என்று ஏன் சொல்லவேண்டும்.

சிறுவயதில் பெற்றோர்களாலும் திருமணமான பின்பு கணவனாலும் இப்போது பையன்களாலும் கட்டுப்படுத்தப்படுவதாக நினைக்கிறீர்களா?

என்னுடைய வாழ்க்கை மட்டுமல்ல; எல்லாப் பெண்களின் வாழ்க்கையும் அப்படித்தான் உள்ளது. ஏதோ ஒரு இடத்தில் தொங்கவிடப்பட்டுள்ள அலங்கார பொம்மைகளாகத்தான் இருக்கிறோம். என்ன சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளதோ அதன்படி நடக்கிறோம். எந்த ஸ்தானத்தில் கொண்டுபோய் நிறுத்துகிறார்களோ அதற்குரிய வேலையைச் செய்கிறோம். மனைவி எனும்போது அதற்குரிய வேலைகள், குழந்தைகள் பெற்ற பின்பு அதற்குரிய ஸ்தானம் கொடுக்கப்பட்டு அதற்குரிய வேலைகள். பெண்களுடைய வாழ்க்கையே அப்படித்தானே இருக்கிறது.

சமீபத்தில் பெண்கள் பலர் கவிதை எழுதுகிறார்கள். அவர்களுடைய கவிதைகள் பற்றிச் சொல்லுங்கள்.

பெரும்பாலான கவிஞர்கள் பெண் சம்மந்தப்பட்ட விஷயங்களை எழுதுகிறார்கள். பெண் உடல், பெண் சுதந்திரம் இப்படியான கருத்துக்கள் கவிதைகளின் பொதுவான போக்காக உள்ளது. இப்படி எழுதுவது ஒரு ஜிக்ஷீமீஸீபீ ஆக மாறிவருகிறது. திடீரென்று எல்லாப் பெண் கவிஞர்களுக்கும் இதுபற்றிய ஆர்வமும் உண்டாகி இருக்கலாம். இப்படி எழுதுவதற்கான தேவையும் இருக்கத்தான் செய்கிறது. எத்தனைபேர் எழுதினாலும் பெண்கள் சம்மந்தமான எவ்வளவோ விஷயங்கள் எழுதுவதற்காகக் காத்திருக்கின்றன.

பல பெண்கள் யோனி, முலைகள் என்ற சொற்களைப் போட்டுக் கவிதை எழுதுவது படிப்பவர்களை அதிர்ச்சியூட்டத்தானா?

வெறும் அதிர்ச்சியூட்டலுக்காகவே என்று சொல்ல முடியாது. அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதால் அந்தக் கவிதையின் அர்த்தத் தளம் தீவிரமாக நம்மைப் பாதிக்கிறதா என்பதுதான் முக்கியம். படிப்பவர்களை அதிர்ச்சியூட்ட மட்டுமே சொற்களைப் பயன்படுத்தினால் அதனால் எதுவும் பயனில்லை. எனது 'நகரம்' என்ற கவிதையில்கூட அப்படியான சொற்களைப் பயன்படுத்தியிருப்பேன். அது அவ்வளவாகப் பொருந்தவில்லை என்பதைப் பிரசுரமானவுடன்தான் கவனித்தேன். என்னுடைய கவிதைத் தொகுப்பில் அப்படியான சொற்கள் தீவிரமான தளங்களில் இயங்குகிறது.

"எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி"

என்ற என் கவிதை வரிகளைப் படித்த வாசகர் ஒருவர் "ஏன் இப்படி இவ்வளவு ஆபாசமாக எழுதுகிறீர்கள்" என்று கேட்டார். "நான் அவசியமானால் எழுதித்தான் தீருவேன்" என்றேன். இந்த இடத்தில் ஆபாசம் என்று சொல்லி ஒதுக்கித்தள்ள முடியாது. அதிர்ச்சி மட்டும் இல்லை. அனுபவம் சார்ந்து வார்த்தைகளைப் போடும்போதுதான் படிப்பவர்களுக்கும் புதிய அனுபவம் தரக்கூடியதாக மாறும்.

குட்டி ரேவதியின் "முலைகள்" என்ற தொகுப்பின் தலைப்பை வைக்கும்போது அது படிப்பவர்களை அதிர்ச்சியூட்டவே செய்யும். பத்திரிகைகளின் கவனம்பெறும். அதிகமானோர் புத்தகம் வாங்கிப் படிக்க விரும்புவார்கள். குட்டிரேவதி எந்த நோக்கத்திற்காக அந்தத் தலைப்பை வைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எல்லோரிடமும் ஒரு பரபரப்பை உருவாக்கி உள்ளார். அவரது கவிதையின் பலம் பற்றி எனக்கு உடனே சொல்ல முடியவில்லை.

என்னுடைய நாவலுக்கு இப்படி ஏதாவது ஒரு தலைப்பை வைத்தால் அதிகமான கவனம் கிடைக்கும். அப்படிச் செய்யவேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். நான் எழுதியுள்ள விஷயங்களால் எனக்குக் கவனம் வந்தால் போதுமானது.

கவிஞர் மனுஷ்ய புத்திரனைச் சந்திக்கப் பல ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை துவரங்குறிச்சிக்கு வந்திருக்கிறேன். அப்போது உங்களையும் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். ஆனால் அப்போது இவ்வளவு வீச்சோடு எழுதுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. வாசக நிலையிலிருந்து எப்படிப் படைப்பாளியானீர்கள்?

நான் படிக்கும்போதே எழுதத் தொடங்கி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் பார்த்த சமயத்திலும் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். 15, 16 வயதில் ஹமீது (மனுஷ்ய புத்திரன்) என்ன செய்து கொண்டிருந்தாரோ அதையெல்லாம் நானும் செய்துகொண்டுதான் இருந்தேன். இருவரும் சேர்ந்து நிறையப் புத்தகங்களை வாசித்திருக்கிறோம். ஆனால் அவருக்கு முன்பே என் 12 வயதில் கதை ஒன்று எழுதியிருக்கிறேன்.

எழுத வேண்டும் என்ற ஆர்வம் அப்போதிலிருந்தே இருக்கிறது. சின்ன வயதில் குமுதம், ராணி போன்ற இதழ்களை வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. அப்போது அதுதான் கிடைத்தது. ஏழாம் வகுப்பு படித்தபோது எழுதிய அந்தக் கதை இப்போதுகூட நினைவில் இருக்கிறது. அந்தச் சமயத்தில் பள்ளிக்கூட ஆசிரியைகள் எல்லா மாணவர்களிடமும் கேட்கும் சம்பிரதாயக் கேள்வி: "படித்து முடித்த பின்பு என்னவாகப் போகிறீர்கள்?" என்பது. ஒவ்வொருவரும் டாக்டர், இஞ்சினியர் இப்படி வழக்கமான பதிலைச் சொன்னபோது நான் மட்டும், "எழுத்தாளர் ஆவேன்" என்றேன். எல்லோருக்கும் ஒரே சிரிப்பாகி விட்டது. அதில் ஒரே ஒரு ஆசிரியருக்கு மட்டும் அதிர்ச்சியாகி விட்டது. "எல்லோரும் ஒன்றைச் சொன்னால், நீ மட்டும் புதிதாய் என்ன சொல்கிறாய்?" என்று ஆச்சர்யப்பட்டுக் கேட்டார். "அதில்தான் எனக்கு ஆர்வமிருக்கிறது" என்று சொன்னேன்.

நிறைய வாசிக்க வாசிக்க நமக்குள் இருக்கும் உணர்வுகளை எழுத வேண்டும் என்ற தவிப்பு இயல்பாகவே வந்து விட்டது. எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்ததற்கு முக்கியக் காரணம் ஹமீதோடு சேர்ந்து நிறையப் படித்தது. அவர் என்ன செய்வாரோ அதையெல்லாம் நானும் செய்வேன். அதற்கு முன்பே நான் எழுத ஆரம்பித்தாலும் அவர் கவிதை எழுத ஆரம்பித்த பிறகுதான் நானும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்தே செயல்படுகிறோம் என்ற உணர்வு இருக்கும். தனது கவிதைகளை அவர் அனுப்பும் இதழ்களுக்கு நானும் என் கவிதைகளை அனுப்புவேன். திருச்சியிலிருந்து சின்னச் சின்னக் கையெழுத்துப் பிரதிகள் வந்து கொண்டிருக்கும். என் பதினாறு வயதிலிருந்து அது போன்ற இதழ்களில் என் கவிதைகள் வெளிவந்துள்ளன. அதை இப்போது கவிதை என்று என்னால்கூட ஏற்க முடியாதுதான். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அப்போதும் பெண்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன் என்று தெரிகிறது. ஹமீது அப்போது ஒரு தொகுப்பு கொண்டுவரும் அளவிற்கு எழுதியிருந்தார். நான் குறைவாகவே எழுதியிருந்தேன். பெண்களின் விழிப்புணர்வு எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போதே எழுதியிருக்கிறேன்.

ஹமீதைப் பார்க்கப் பல இலக்கிய நண்பர்கள் அடிக்கடி வருவார்கள். யார் வந்தாலும் அவர்களுடன் பேசிப் பல விஷயங்களை அவரால் பகிர்ந்துகொள்ள முடியும். பக்கத்து வீட்டில்தான் நான் இருப்பேன். ஆனால் எனக்கு யாரையும் பார்க்க அனுமதி கிடையாது. அவர் ஆண் என்பதால் ஆண் நண்பர்களுடன் பேச முடியும். பெண் நண்பர்களுடனும் பேச முடியும். எல்லோரிடமும் பேச அவருக்கு வாய்ப்பு இருந்தது. நான் ஒரு பெண் என்ற ஒரே காரணத்திற்காக அப்படியான வாய்ப்பு மறுக்கப்பட்டது. அந்தச் சமயங்களில் மிகவும் கவலைப் படுவேன். பெண்ணாய்ப் பிறந்ததால் வீட்டிற்குள்ளேயேதான் இருக்க வேண்டுமா? இப்படியான சூழ்நிலைதான் என்னை எழுத வைத்தது. நிறைய வாசித்ததன் மூலமாக எனக்கான ஒரு மொழியைக் கண்டடைந்தேன் என்றுதான் நினைக்கிறேன்.

"அக்கினிப் பரீட்சை" என்ற ருஷ்ய மொழிபெயர்ப்பு நாவலின் மூன்று பாகங்களை இரண்டே மாதத்தில் வாசித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்போது அவ்வளவு நேரமும் இருந்தது. வேகமும் இருந்தது. இப்போது அப்படிப்பட்ட நிலை இல்லை.

கவிஞர் மனுஷ்ய புத்திரன் தனிப்பட்ட முறையிலும் படைப்புரீதியாகவும் எந்த அளவிற்கு உதவியாய் இருந்திருக்கிறார்?

அவர் என்ன யோசிப்பாரோ அதையே நான் யோசித்திருக்கிறேன். யோசிப்பதற்கும் பகிர்ந்துகொள்வதற்கும் எங்கள் இருவருக்குமே ஒரேவிதமான எண்ணங்கள் இருந்தன. அவருடைய படைப்புரீதியான உணர்வுகளை நெருக்கமாக நான் உணர்வேன். அதேபோல என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்து கொள்வார். ஒத்த உணர்வுடையவர்களாக இருந்தோம். நான் எழுத வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாய் இருந்து ஊக்குவித்திருக்கிறார். நமது சமூகத்தில் யாரும் இப்படி எழுதியதில்லை. தொடர்ந்து நீ எழுத வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். நான் ஒரு கவிதையை எழுதியவுடன் அவரிடம்தான் கொடுப்பேன். வெளியுலகிற்கு அவற்றை அனுப்பிப் பிரசுரம் செய்வதற்குக் காரணமாய் இருந்தவர் அவர்தான். அவரில்லாமல் நான் இந்த அளவிற்கு அறிமுகம் பெற்றிருக்க முடியாது. அவர் இல்லாதிருந்தால் என் உணர்வுகள் என் மனதிலேயே கருகிப்போயிருக்கும். கவிதைகளாக உருப்பெற்றிருக்காது.

திருமணத்திற்குப் பின்னால் என் இலக்கிய ஈடுபாடுகள் எல்லாம் விட்டுப் போய்விடும் என்று என் பெற்றோர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்ததும் சரியானதுதான். ஹமீது இல்லையென்றால் எனக்கும் அப்படித்தான் ஆகியிருக்கும். அவர் ஊரில் இருந்தது என்னை வளர்த்தெடுக்க மிகவும் உதவியது. இன்றுவரை அவர் இல்லையென்றால் நான் இல்லை என்பதுதான் உண்மை.

திருமணத்திற்கு முன்பு உங்கள் அப்பா, அம்மா இருவரும் உங்கள் இலக்கிய ஈடுபாட்டை எப்படி எதிர்கொண்டார்கள்?

என் அப்பா, அம்மா இருவருமே ரொம்ப உதவியாய் இருந்திருக்கிறார்கள். நான் என்ன செய்தாலும் அதற்கு ஆதரவாய் இருந்திருக்கிறார்கள். எனக்கு எவ்வளவோ கடிதங்கள் யார் யாரிடமிருந்தோ வரும். என் கவிதைகளைப் படித்துவிட்டு ஆண்களும் கடிதம் எழுதுவார்கள். நானும் பதில் எழுதுவேன்.

எங்கள் ஊரில் எங்கள் சமூகத்தில் கல்யாணமாகாத ஒரு பெண்ணுக்கு முகம் தெரியாதவர்களிடமிருந்து கடிதம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது. அந்தச் சூழ்நிலையிலும் என் பெற்றோர் என்னைப் புரிந்துகொண்டு அதற்கான சுதந்திரத்தை எனக்குக் கொடுத்திருந்தார்கள். என் பெற்றோர் "எனக்குச் செல்லம் கொடுத்துக் கெடுத்துவிட்டதாக" என் கணவர் இப்போதும் சொல்வார்.

சமயத்தில் மதுரைக்குக் கூட்டிச்சென்று நியூ செஞ்சுரி புக் ஹவுசில் எனக்குப் பிடித்தமான புத்தகங்களை எல்லாம் அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறார். துவரங்குறிச்சியில் அதுவும் முஸ்லீம் சமூகத்தில் இதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இப்படியான வாயப்புகள் யாருக்கும் கிடைத்திருக்காது. ஆனால் எனக்குக் கிடைத்தது. எங்கள் ஊரில் இருக்கும் பெண்கள் என்னைப் போல யோசித்தாலும் அதற்குரிய வாய்ப்புக்களை யாரும் ஏற்படுத்தித் தர மாட்டார்கள். என் வீட்டில் உற்சாகப்படுத்தினார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் என் செயல்பாடுகள் எதையும் தடுத்ததில்லை.

தமிழினி 2000 நடந்தபோதுதான் உங்களது கவிதைத் தொகுப்பு "ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" வெளியிடப்பட்டது. அந்த வெளியீட்டு அழைப்பிதழில் பல எழுத்தாளர்களின் புகைப்படங்களும் இருந்தன; உங்களது புகைப்படம் தவிர. உங்கள் முகத்தைக்கூட வெளியுலகத்திற்குக் காட்ட முடியாத நிலை இருந்ததா?

புகைப்படமா? நான் எழுதுவதுகூட அப்போது என் கணவருக்குத் தெரியாது. திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டில் யாருக்கும் தெரியாமல்தான் எழுதிக் கொண்டிருந்தேன். வெளிப்படையாக என்னைக் காட்டிக் கொண்டு எழுதக்கூடிய சின்ன வெளிகூட அங்கு இல்லை. நான் எழுதக் கூடாது என்பதற்கு என்னென்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் என் கணவர் வீட்டில் செய்தார்கள். எழுதுவது என்பதை என் இருத்தல் சார்ந்த விஷயமாக நினைத்தேன். என் உரிமை சார்ந்த விஷயமாகவும் அதைப் பார்த்தேன். யாரோ ஒருவர் என்னை எழுதக் கூடாது என்று சொல்வதால் என்னால் எழுதாமல் இருக்க முடியாது. என் அடையாளத்தை எழுத்தின் மூலம்தான் காட்ட முடியும். என் குடும்ப வாழ்க்கையுடன் என்னைத் தொலைத்துவிட வேண்டும் என்று நினைக்கவில்லை. குடும்ப வாழ்க்கை மட்டுமே முக்கியம் என்றும் நினைக்கவில்லை. என் தேடல்களுக்குக் குறுக்காக யாரும் நிற்கக் கூடாது என்றும் நினைத்தேன். இப்படிப்பட்ட சூழல்தான் என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. கல்யாணமான புதிதில் "தலாக்" பற்றி ஒரு கவிதை எழுதினேன். அப்போது ராஜாத்தி என்ற பெயரில்தான் கவிதைகள் வெளிவந்தன. 'தலாக்' கவிதை இப்போது என்னிடம் இல்லை. அதைக் கிழித்தெறிந்து விட்டேன். இதுபோலப் பல கவிதைகளைக் கிழித்துப் போட்டிருக்கிறேன்.

ஏன் அப்படிக் கிழித்துப்போட வேண்டும்? பின்னால் தவறாக ஏதும் உணர்ந்தீர்களா?

தவறாய் ஒன்றும் இல்லை. அச்சுறுத்தல், பயம்தான் முக்கியக் காரணம். 'தலாக்' கவிதையை ஹமீதிடம் காட்டினேன். அவரும் நன்றாயுள்ளதாகச் சொன்னார். வெளியிடலாம் என்றார். எனக்குப் பிரசுரம் பண்ணுவதில் தயக்கம் வந்தது. வீட்டில் எழுத வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே இப்படிப்பட்ட கவிதை வெளிவந்தால் பிரச்சினை வரும் என்று நினைத்துப் பயந்தேன். அப்போது ஹமீதுதான் சொன்னார், இனிமேல் எழுதும் கவிதைகளைப் புனைபெயரில் பிரசுரிக்கலாம் என்று. எனக்கு அந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு வீம்பு வந்தது. யாருக்கும் பயந்து என் பெயரை மாற்றிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். அப்படியென்றால் நான் எழுதாமலே இருந்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியம் இல்லை என்பதையும் உணரவே செய்தேன். வீம்பு செய்யும் அளவிற்கு வாழ்க்கை பாதுகாப்பாய் இல்லை என்பதையும் விளங்கிக் கொள்பவளாகவே இருந்தேன். அந்தச் சமயத்தில் நிறையக் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். வீட்டில் உள்ள பிரச்சினையால் ரொம்ப வெறுமையாக உணர்ந்தபோது எல்லாக் கவிதைகளையும் கிழித்துப் போட்டிருக்கிறேன். பயந்து பயந்து எழுதுவதை வீட்டில் வைத்துக் கொள்ளவும் முடியாமல் பிரசுரிக்கவும் முடியாமல் சிக்கலான நிலைமையாக இருந்தது. எழுதாமலும் இருக்க முடியவில்லை. அதற்குப் பின்புதான் புனைபெயரில் எழுத ஆரம்பித்தேன். புனைபெயர் என்பது சௌகரியமான ஒன்றாக இருந்தது. 'சல்மா' என்ற புனைபெயரை அப்போதுதான் வைத்துக் கொண்டேன். அதுவரை எழுதவே முடியாமல் இருந்த விஷயங்களை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். ஏற்கெனவே அறிமுகமான அடையாளப் பெயரின் மனத்தடையால் மனதின் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்தவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். புனைபெயரில் நிறையக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பிரசுரமும் ஆயின. இது எல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது. நான் எழுதுவதை நிறுத்திவிட்டதாக நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

கடிதங்களும் நேரடியாக எனக்கு வராமல் ஹமீது முகவரிக்கு வரும். அங்கிருந்து நான் எடுத்துக் கொள்வேன். இப்படித்தான் பல ஆண்டுகள் நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் சி. மோகன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஜி. நாகராஜன் படைப்புகள் பற்றி ஒரு கட்டுரைத் தொகுப்பு கொண்டுவர உள்ள விஷயம் குறித்த அந்தக் கடித்தில் 'அன்புள்ள சல்மா'விற்கு என்று எழுதியிந்தது. அதை ஹமீதுவிடமிருந்து வாங்கிப் படித்துவிட்டு என் வீட்டில் எங்கோ வைத்து விட்டேன். என் கணவர் கண்ணில் பட்ட அந்தக் கடிதத்தால் ஏகப்பட்ட பிரச்சினைகள். "எவனோ ஒருத்தன் உனக்கு அன்புள்ள சல்மாவிற்கு என்று எழுதியிருக்கிறான். எழுதக்கூடாது என்று சொன்னதையும் மீறி 'சல்மா' என்ற பெயரில் எழுதுகிறாயே" என்று திரும்ப பிரச்சினைகள் உருவாயிற்று. அப்போது நான் வாய்மூடி மௌனியாக இருக்கவில்லை. அதற்குச் சரியான பதில் சொன்னேன். என்னால் எழுதாமல் இருக்க முடியாது என்று தைரியமாகச் சொன்னேன். அதற்குப் பின்புதான் என் வீட்டில் விட்டு விட்டார்கள். முன்பே  கூட என்னால் தைரியமாகப் பேசியிருக்க முடியும். ஆனால் அதையொட்டி வரும் வீண் பிரச்சினைகளால் நான் நிம்மதியாக இருக்க முடியாது. அதனால்தான் முதலில் எழுதவில்லை என்று சொல்லி, வீட்டுக்குத் தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.

கவிதைத் தொகுப்பு வெளிவருவது தெரியக் கூடாது என்று நினைத்தேன். ஏனென்றால் வீட்டில் உள்ளவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாத அளவிற்குப் பல கவிதைகள் தொகுப்பில் இருந்தன. ஏற்கெனவே நான் எழுதிய கவிதைகள் ஆபாசம் என்றும் சொந்த வாழ்க்கையைப் பற்றிய கவிதைகள் என்றும் என் வீட்டில் நினைத்துக் கொண்டிருந்த கவிதைகள் புத்தகமாக வருகின்றன என்று தெரிந்தால் எவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று யோசித்து அதுபற்றி வீட்டில் சொல்லாமல் இருந்தேன்.

தொகுப்பில் இருக்கும் கவிதைகள் அடங்கிய டைரியை ஹமீதிடம் கொடுத்தேனேயொழிய அது எப்படிவரும் என்பது பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. புரூஃப்கூட நான் பார்க்கவில்லை. புத்தகம் வெளிவருவது வீட்டில் யாருக்கும் தெரியக் கூடாது என்பதில் அவ்வளவு கவனமாகவும் பயத்துடனும் இருந்தேன். ஹமீதுதான் எல்லாம் பார்த்துப் புத்தகமாக்கினார். புத்தகம் வெளிவரும் சமயத்தில்தான் "வெளியீட்டு விழா இருக்கிறது, வர முடியுமா?" என்று ஹமீது கேட்டபோது வீட்டில் என்ன சொல்லிவிட்டுச் செல்வது என்று தெரியாமல் இருந்தேன். உடல்நிலை சரியில்லை என்று சொல்லித்தான் எங்கள் வீட்டிற்குப் போனேன். பின்பு அம்மாவுடன் சென்னை சென்றேன். இப்படியான நிலையில் என் புகைப்படம் புத்தகத்திலோ அழைப்பிதழிலோ வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

புத்தக வெளியீட்டு விழாவின்போது சலபதி புத்தகத்தைக் கொண்டுவந்து கொடுத்தார். நிறையக் கவிதைகளின் தலைப்பு மற்றும் ஒருசில வரிகளில் வார்த்தைகள் எல்லாம் மாறியிருந்தன. புத்தகம் வருவதற்கு முன்பே நான் பார்த்திருந்தால் குறைகளாகத் தோன்றுவதை சரி செய்திருப்பேன். அந்தப் புத்தக உருவாக்கத்தில் என்னுடைய பங்கு எதுவுமேயில்லை.

அதுவரை புகைப்படத்தில்கூட என்னைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

இந்த நிலை எப்படி மாறியது?

சமீபத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் வந்தபோது எல்லாம் மாறிவிட்டது. எங்கள் பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன். மக்களிடம் நம் முகத்தை வெளிக் காட்டித்தான் ஓட்டுக் கேட்க முடியும். இவ்வளவு நாட்களாக என்னை மறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த எனக்கு, என்னை வெளிக்காட்டித்தான் ஓட்டுக் கேட்க முடியும் என்பதால் வீட்டில் அதற்கெல்லாம் தயாராகவே இருந்தார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் வேட்பாளர் என்ற பெயரில் என் புகைப்படம் வந்தது. ஓட்டுக் கேட்க பேரூராட்சித் தொகுதி முழுக்கப் போகவேண்டி வந்தது. இதனால் இதற்கு முன்பு இருந்த எல்லா விஷயங்களும் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. என் தனித்துவத்திற்காக நான் செய்ய வேண்டும் என்று நினைத்த விஷயங்களெல்லாம் குடும்பத்தில் ஒத்துக் கொள்ளப்படும்போதுதான் வெளிப்படையாக இயங்க முடிகிறது.

இதே தேர்தலில் நிற்பதை என் சொந்த விருப்பமாகச் சொல்லியிருந்தால் நிற்கச் சொல்லியிருக்க மாட்டார்கள். எப்போதுமே எனது சுயவிருப்பம் சார்ந்து இயங்க முடியாமல்தான் இருக்கிறது. தேர்தலில் நான் நிற்பது அவர்களுடைய தேவை சார்ந்தது. எனது விருப்பமாக மட்டுமே இருந்தால் அனுமதித்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மேடையாகக் கூட்டிப் போய்ப் பேச வைத்திருக்க மாட்டார்கள். வீட்டிற்கு வீடு அழைத்துப்போயிருக்க மாட்டார்கள்.

தேர்தலில் நான் நிற்பது அவர்களுடைய தேவை. பெண்களுக்கான தொகுதி என்பதால் என்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினார்கள். அதனால் உடனே இதைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது. ஆனால் எனக்கும் அது தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். என் பயத்தைப் போக்கிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் நிற்க ஒத்துக் கொண்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு என்றால் என்னை யாரும் வீட்டில் வந்து பார்க்கவோ பேட்டி எடுக்கவோ முடியாது. அதற்கான இடமே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது பேரூராட்சித் தலைவர் என்ற முறையில் அலுவலகரீதியாகப் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என்று யார்யாரோ பார்க்க வருகிறார்கள். அதற்கு வீட்டில் எந்த எதிர்ப்பும் கிடையாது. அப்போது அவர்கள் வேறு நான் வேறு என்றில்லாமல் போகிறது. தடுக்கவும் முடியாது. இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்கிறேன். தேர்தல் வேண்டாம் என்று விட்டு விட்டிருந்தாலும் இப்போதைய சுதந்திரம் கிடைக்காமல் போயிருக்கும். இப்போது எல்லாக் கதவுகளும் திறந்தபடியே இருக்கின்றன.

திருமணத்திற்கு முன்பும் அதற்குப் பின்பும் வீட்டுச் சூழல் எப்படி இருந்தது?

வீட்டுச்சூழல் என்று பார்த்தால் அம்மாவுடன் எப்போதும் பாதுகாப்பான உணர்வுடன் இருக்க முடியும். என் ஒவ்வொரு செயல்பாட்டையும் பெற்றோர்கள் அங்கீகரித்தார்கள். ஏற்றுக் கொண்டார்கள். திருமணம் ஆனவுடன் சிறையில் இருப்பதைப் போல உணர ஆரம்பித்தேன். சின்ன அளவில்கூட சுதந்திரமற்று இருந்தேன். அப்போது அதிக அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆட்பட்டேன். ஹமீது துவரங்குறிச்சியில்தான் இருந்தார். என் கணவர் வீடு ஹமீது வீட்டிற்குப் பக்கத்துத் தெருதான். ஆனால் அவரை மாதத்திற்கு ஒருமுறைதான் பார்க்க முடியும். அருகிலேயே அவர் இருந்தாலும் அவரைப் பார்க்க ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். எனது மன உணர்வுகளை கவலைகளைப் பகிர்ந்துகொள்ள உடனுக்குடன் முடியாது. பெண்ணாகப் பிறந்ததால்தானே இப்படி என்று மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானேன். இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று எங்காவது போய்விடலாம் என்றுகூட நினைத்தேன். கிராமத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் நினைப்பதுகூட சிரமம்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ அல்லது சமூகம் என்ன நினைக்குமோ என்று பயந்துதான் வாழ வேண்டியுள்ளது. நமக்காக வாழவே முடியாது. நமக்கென்று ஒரு முகம் உண்டு. அடையாளம் உண்டு. அதையொட்டியேதான் வாழ முடியும். அதனால் நமக்கு விதிக்கப்பட்டதற்குள் நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் எழுதுவதுதான் ஒரே வழி. தீவிர உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளை அப்போதுதான் எழுதினேன். பின்பு கொஞ்ச நாளில் எழுதுவதிலும் ஆர்வம் இல்லாமல் போனது. "வாழ்க்கையே முடிந்து போனது, பிறகு எதற்கு எழுத வேண்டும்?" என்று நினைக்கும்படியான மனச்சோர்வுக்கு உள்ளானேன். மூன்று ஆண்டுகள்வரை எழுதவே இல்லை.

முதல் குழந்தைக்காகக் கர்ப்பம் ஆனவுடனே மனசுடைந்து போனேன். வாழ்வின் முடிவிற்கே வந்துவிட்டதுபோல இருந்தது. இனிமேல் எதுவும் வாழ்வை மாற்றப்போவது இல்லை. இதுதான் தலைவிதி. சாகும்வரை இப்படித்தான். எழுதுவது நம்மை எந்த விதத்தில் மீட்டெடுக்கப் போகிறது, இதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயம் என்ற அப்போதைய மனநிலையில் எழுதுவதையே நிறுத்தி விட்டேன். சராசரியான எல்லாப் பெண்களுக்குமே திருமணமாகி ஒரு குழந்தை பெற்றுவிட்டாலே தங்களது உடலைப் பற்றிய கவலை போய்விடும். எல்லாம் முடிந்துபோனது. இனிமேல் அதைக் குறித்த கவலை எதற்கு என்பதான மனப்போக்குத்தான் ஏற்படும். இதே மனநிலைதான் எனக்கும் இருந்தது. பிற பெண்கள் நினைப்பதற்கும் நான் நினைப்பதற்கும் என்ன வேறுபாடு? பிற பெண்கள் மாதிரியல்லாது வேறுவிதமான சிந்தனைகள் கொண்டதாக நான் நினைத்துக் கொண்டிருப்பது பொய்யா? இப்படியெல்லாம் என் மனதில் நினைவுகள் முட்டி மோதின. அப்போதுதான், கல்யாணத்திற்குப் பிறகும் எவ்வளவோ செய்ய முடியும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவதன் மூலம் நம் அடையாளத்தைக் காட்ட முடியும்,. நாம் ஒன்றுமில்லாமல் போய்விடக் கூடாது என்ற வீம்பு திரும்ப வந்தபின்புதான் எழுதத் தொடங்கினேன். இன்றைய நிலையில் முதலில்போல மனச்சோர்வுதரும் விஷயங்கள் எதுவும் இல்லை. நம்பிக்கையுடனே இருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் என் கவிதைத் தொகுப்பு வெளிவந்ததுதான். அப்போதுகூட என் கவிதைகள் புத்தகமாய் வர வேண்டாம் என்றே ஹமீதிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். புத்தகமாய் வந்து என்னை என்ன செய்யப்போகிறது என்ற அவநம்பிக்கைதான் முதலில் இருந்தது. அந்த அவநம்பிக்கை 2002வரை தொடரவே செய்தது. கவிதைகள் புத்தகமாய் வெளிவந்தது அதிகப்படியான நம்பிக்கையே அளித்தது. எழுத்தின் மூலமாய்க் கிடைத்த பலன் பல முக்கியமான நண்பர்கள் அறிமுகமானதுதான். அதுதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம். எழுத்து புதிய வாழ்க்கையைக் கொடுக்கா விட்டாலும் நட்பைக் கொடுத்தது. இது ஒன்றே போதுமானது என்றே நினைக்கிறேன்.

மனச்சோர்வுதான் உங்களை எழுதத் தூண்டுகிறதா?

ஆமாம். மனதிற்குள் உள்ளதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வழியில்லாமல்தான் எழுதினேன். அதை எழுதும்போது யாரிடமோ பகிர்ந்து  கொள்கிறோம் என்ற எண்ணமே மேலும் மேலும் எழுதத் தூண்டுகிறது. எழுதியவுடன் கிடைக்கும் மனத் திருப்தி மனச்சோர்விலிருந்து விடுபடுவது போன்ற உணர்வைத் தரும்.

உங்களுடைய கவிதைகள் உங்கள் சுயசரிதை போலவே தோன்றுகிறது. எல்லாப் பெண்களுக்குமான கவிதைகளாக உங்கள் கவிதைகளை உணர்கிறீர்களா?

என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளாக என் கவிதைகளை நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் நான் அப்படிப் பார்ப்பதில்லை. என்னுடைய அனுபவங்கள் அவை என்றாலும் எல்லாப் பெண்களுக்குமான பொதுவான உணர்வுகளாகவும் இருக்கின்றன. படிப்பவர்களுக்குப் பொதுவான தளத்திற்குச் செல்வதற்கு என் ஒவ்வொரு கவிதையும் இடம் தரவே செய்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நேராத பல விஷயங்களும் என் கவிதைகளில் இருக்கவே செய்கிறது. என் கவிதைகளின் குரல் தன்னுணர்ச்சி கொண்டதாக இருப்பதால் சுயசரிதைத்தன்மை கொண்டதாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த பல பெண்களின் வாழ்க்கையும் என் கவிதைகளில் இருக்கவே செய்கிறது. என் வாழ்க்கையைப் போன்றுதான் எங்கள் ஊரிலுள்ள எங்கள் சமூகப் பெண்களின் வாழ்க்கையும் இருக்கிறது. அதிகமும் அப்படித்தான் இருக்கிறது.

துவரங்குறிச்சியில் உங்களுக்குத் தெரிந்த பெண்கள் உங்கள் கவிதைகளைப் படித்திருக்கிறார்களா?

இங்குள்ள பெண்களுக்குக் கவிதை படிப்பதிலெல்லாம் விருப்பம் கிடையாது. அத்தோடு நான் எழுதியுள்ள விஷயங்களையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நிராகரிக்கவே செய்தார்கள். நான் எழுதுவதைத் தப்பான காரியமாகவே பார்த்தார்கள். இதை அவர்கள் ஊக்கப் படுத்தவும் முடியாது. ஆதரிக்கவும் முடியாது. எங்கள் சமூகத்தில்கூட இதுவரை யாரும் படித்துப் பாராட்டியதில்லை.